Tuesday 25 January 2022

குழந்தைகளுக்கு ஏன் பொழுதுபோக்கு அவசியம்?

 பொழுதுபோக்கு என்பது வெறுமென நேரத்தை கடத்தவும், மகிழ்ச்சிக்கானது மட்டும் இல்லை. சிறந்த முறையில் மேற்கொள்ளப்படும் பொழுதுபோக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
புத்தகம் படித்தல், அரிய பொருட்களை சேகரித்தல், கைவினை பொருட்கள் உருவாக்குதல் என எதுவாகவும் இருக்கலாம். தனக்கென ஒரு பொழுதுபோக்கை கொண்டிருப்பது குழந்தைகளுக்கு, பள்ளியில் கற்காத சில மதிப்புமிக்க வாழ்க்கை திறன்களை வளர்க்க உதவுகிறது.

மனஅழுத்தத்தை விரட்டும்

பொழுதுபோக்கில் ஈடுபடுவது மனதிற்கும், உடலுக்கும் தளர்வளித்து, தினசரி வாழ்க்கையின் அழுத்தங்களில் இருந்து விடுபட உதவுகிறது. இன்று பள்ளி செல்லும் குழந்தைகளும் பலவித மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். விருப்பமான பொழுதுபோக்கில் ஈடுபடுவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன், மனஅழுத்தத்தையும் விரட்டுகிறது.

படைப்பாற்றலை வளர்க்கிறது

பொழுதுபோக்கு ஒருவரின் படைப்பாற்றலை தட்டியெழுப்புகிறது. புதுமையான யோசனையை கொண்டு வர, ஒருவரின் மனதை பொழுதுபோக்கு துாண்டுகிறது என, ஆய்வுகள் தெரிவிக்கிறது. எந்த பொழுதுபோக்கை மேற்கொள்ளும்போது, குழந்தைகள் தங்கள் கற்பனை திறனை பயன்படுத்துகின்றன. இது, அவர்களிடம் மறைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர்கிறது.

தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை

பொழுதுபோக்கு குழந்தைகள் சிறப்பாக கவனம் செலுத்த உதவுகிறது. பகுத்தறிவு, பகுப்பாய்வு மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன்களை குழந்தைகள் வளர்த்துக் கொள்கின்றார்கள். தங்கள் பொழுதுபோக்கில் அடுத்தடுத்து முன்னேறிச் செல்லும்போது, ஒரு சாதனை உணர்வையும், தங்களை பற்றி நல்ல உணர்வையும் கொடுக்கிறது. இது, குழந்தைகளை தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை மிக்கவர்களாக மாற்றுகிறது.

அறிவாற்றல் விரிவடைகிறது

ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடும்போது, அதைப்பற்றி நிறைய தகவல்களை குழந்தைகள் சேகரிக்க வேண்டும். உதாரணமாக, செடி வளர்க்க வேண்டும் என்றால், மண், விதை, தாவரம், உரம் ஆகியவற்றை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். தாங்களே தேடி அறிந்துகொள்ளும் தகவல்கள், குழந்தைகளின் அறிவையும், சிந்திக்கும் ஆற்றலையும் வளர்க்கிறது.
இதுமட்டுமின்றி, சவால்களை எதிர்கொள்ள, மனம் மற்றும் உடல் ஆரோக்கியம், நேர மேலாண்மை, பொறுமை மற்றும் பொறுப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, சுயஒழுக்க பண்புகள் வளர்தல் என பல்வேறு நன்மைகளுடன், குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமையை பொழுதுபோக்கு மேம்படுத்துகிறது.

பெற்றோர் பங்களிப்பு

*குழந்தைகள் இயல்பாகவே தங்களுக்கென ஒரு பொழுதுபோக்கை கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால், மற்ற குழந்தைகளுக்கு இது கடினமான விஷயமாக இருக்கும். பெற்றோர்களின் உதவி, இச்சமயத்தில் தேவைப்படும்.
* குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்கள் குறித்து ஒரு பட்டியலை உருவாக்குங்கள். தொடர்ந்து புதிய, புதிய ஆக்டிவிட்டியை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
* ஒரு பொழுதுபோக்கு குழந்தைக்கு பொருத்தமாக தோன்றினாலும், முழுமையாக இல்லாமல், இரண்டு வாரங்களுக்கு முயற்சி செய்ய வைக்கலாம்.
* எந்த விதத்திலும் பெற்றோரின் தனிப்பட்ட விருப்பத்தை திணிக்கக்கூடாது. குழந்தைகளின் வழியை பின்பற்றி, அவர்கள் விரும்பும் பொழுதுபோக்கில் ஈடுபட உதவ வேண்டும்.
* குழந்தைகளின் சின்ன, சின்ன வெற்றிகளையும் பாராட்டுங்கள். தினமும் குறிப்பிட்ட நேரம் அவர்களது பொழுதுபோக்கில் ஈடுபட உற்சாகப்படுத்துங்கள்.

From Dinamalar Newspaper

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...