Wednesday 13 June 2018

பிறருடைய ATM அட்டையைப் பயன்படுத்தலாமா?

பகிரப்பட வேண்டிய செய்தி, கிரி அவர்களின் தளத்திலிருந்து ......

2013 ம் ஆண்டு பெங்களுருவில் ஒருவரின் மனைவி பிள்ளைப்பேறு நிலையில் இருந்ததால், அவரால் வெளியே சென்று பணம் எடுக்க முடியாததால் கணவனிடம் தன்னுடைய SBI ATM அட்டையைக் கொடுத்து 25,000 எடுக்கக் கூறி இருக்கிறார்.

கணவர் பணம் எடுக்கும் போது பணம் எடுக்கப்பட்டதாகச் சீட்டு மட்டும் வந்துள்ளது ஆனால், பணம் வரவில்லை. இவரும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்க, அவர்கள் தொழில்நுட்ப கோளாறாகி இருக்கும், இரு நாட்களில் வந்து விடும் என்று கூறி இருக்கிறார்கள்.

ஆனால் பணம் வராததால் வங்கியில் சென்று கேட்டதும், பணம் வழங்கப்பட்டது என்று கூற, இவர்கள் இருவரும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

நுகர்வோர் நீதிமன்றம்
பின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து CCTV யில் கணவர் பணம் எடுக்கும் போது பணம் வெளியே வராததையும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அந்த நாளில் 25,000 அதிகம் இருப்பு ஆகி உள்ளது என்பதை நிரூபித்தும் SBI ஒத்துக்கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக நடந்த வழக்கில்,
பணம் வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை (Log) SBI சமர்பித்து, சட்டப்படி ஒருவருடைய ATM அட்டையையும் PIN யையும் இன்னொருவரிடம் கொடுப்பது தவறு எனவே, எங்கள் வங்கி தவறுசெய்யவில்லை” என்று வாதிட்டது.

தன்னால் வெளியே செல்ல முடியவில்லை என்றால் “Self Cheque” அல்லது அனுமதிக் கடிதம் கொடுத்து மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கூறி விட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ATM அட்டையைச் சம்பந்தப்பட்டவர் தவிர வேறு யாரும் பயன்படுத்துவது சட்டப்படி தவறு எனவே, SBI வங்கி பணத்தைத் தரவேண்டியதில்லை என்று கூறி விட்டது  .
₹25,000 கண் முன்னாடி இருந்தும் சட்ட சிக்கலால் எடுக்க முடியாமல் போனது.

சரி இது போலச் சூழ்நிலை அமைந்தால் என்ன வழி?
காசோலை பயன்படுத்துவது நல்ல யோசனை தான் என்றாலும், ஒருவேளை அப்போது வங்கி திறந்து இருக்கவில்லை என்றால் பிரச்சனை.
எனவே, UPI பரிமாற்றமே சிறந்தது.

அதாவது உங்களுடைய கணக்குக்குச் சம்பந்தப்பட்டவரின் கணக்கில் இருந்து பணத்தை UPI (BHIM, PhonePe, Google Tez, WhatsApp) செயலிகள் மூலம் அனுப்பி உங்கள் சொந்த ATM அட்டையின் மூலமாகப் பணம் எடுத்துக் கொடுத்து விடலாம்.

இது போல அவசரத்துக்கு எடுக்கப்படும் பணம் அதிகபட்சம் 25,000 க்கு மேல் இருக்காது. எனவே, பிரச்சனைகள் இல்லை. UPI பரிவர்த்தனைக்கு கட்டணமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் நண்பர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்துங்கள், அவர்களையும்  எச்சரிக்கைப்படுத்துங்கள்.



Wednesday 6 June 2018

நாட்டு மாடு வளர்ப்பில், பால் விற்பனை இல்லாமலேயே நல்ல வருமானம் ஈட்டலாம்

நாட்டு மாடு வளர்ப்பில், பால் விற்பனை இல்லாமலேயே, வருமானம் ஈட்ட வழிக்கூறும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சம்பத்: சிறு வயது முதலே எனக்கு, நாட்டு மாடுகள் மேல் பிரியம். பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கி பயிற்சி மையத்தில், நாட்டு மாடு வளர்ப்பு பயிற்சி கொடுத்த போது, நகை தணிக்கையாளரான நானும் கலந்து கொண்டேன். மூன்றாண்டுக்கு முன், அந்த பயிற்சி மைய இயக்குனர், இரண்டு பசு மாடு, ஒரு காளை, ஒரு கன்றுக்குட்டி வாங்கி கொடுத்தார்.

'நாட்டு மாட்டு சாணத்தை மதிப்புக்கூட்டி விற்றால், பாலை விட அதிக வருமானம் கிடைக்கும்' என, 'கொங்கு கோசாலா குரூப்'பை சேர்ந்த சிவகுமார் கூறினார். அதையடுத்து, சாணத்தை மதிப்புக்கூட்டும் விதம், அதற்கான சந்தை வாய்ப்பை அறிந்து, விபூதி தயாரித்து, விற்பனை செய்கிறேன்.

இப்போது எங்கள் பண்ணையில், 60 மாடுகள் உள்ளன; பெரும்பாலானவை காங்கேயம் ரகம் தான். பண்ணையை பராமரிக்க, ஒரு குடும்பம் தங்கி இருக்கிறது. மாடுகள் சாணம் போட்டவுடனே, பசு மாட்டு சாணம் தனியாகவும், காளை மாட்டு சாணம் தனியாகவும் பிரித்து வைத்து விடுவர். மாடுகளின் சிறுநீர், வாய்க்கால் வழியாக தொட்டிக்கு செல்லும் விதமாக, இரண்டு கீழ்நிலை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது .
  • பசு மாட்டு சாணத்தில் விபூதி தயாரிப்போம்; 1 கிலோ விபூதி, 500 ரூபாய்க்கு வாங்கி கொள்கின்றனர். மாதம், 75 கிலோ விபூதி விற்றால், 37 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும்.
  • 1 லி., சிறுநீர், 50 ரூபாய் என, மாதம், 500 லி., வரை விற்பதால், 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 
  • கன்றுகுட்டி குடித்தது போக தினமும், 15 லிட்டர் பால் கறந்து, 1 லி., 80 ரூபாய் என, மாதம், 36 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. 
  • காளை மாட்டு சாணத்தை உரத்துக்கு பயன்படுத்துவோம்.  விபூதி தயாரித்தது போக, மீத சாணத்தை, ஆண்டுக்கு மூன்று முறை விவசாயிகளுக்கு விற்பதால், 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. 
  • இவ்வாறு, அனைத்தும் சேர்த்து, மாதம், 1.02 லட்சம் ரூபாய் வருமானமும், மாடுகளுக்கு தீவனம், வேலையாள் சம்பளம் என, செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் லாபமும் கிடைக்கிறது. 
அடுத்து, விபூதி உற்பத்தியை அதிகப்படுத்தவும், பஞ்ச கவ்யா தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளேன். உ.பி., மாநிலத்தில், மாட்டு சிறுநீரை, 'பிராசஸ்' செய்து, 'ஹெல்த் டிரிங்க்' என, 1 லி., 150 ரூபாய்க்கு விற்கின்றனர். அவ்வாறு செய்யும் யோசனை உள்ளது. நாட்டு மாடு வளர்ப்பதை, ஆத்மார்த்தமான செயலாகவே பார்க்கிறேன்; வருமானத்துக்கான தொழிலாக பார்க்கவில்லை.'தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு' என்பது போல், நாம் முறையாக பாதுகாத்து பராமரித்தால், கோமாதா கொட்டிக் கொடுக்கும். பாலை விட நாட்டு மாடுகளுடைய கழிவுகளுக்கு இன்று கிராக்கி உள்ளது. சாணத்தையும், சிறுநீரையும் வைத்தே, நல்ல லாபம் பார்க்க முடியும்.
தொடர்புக்கு: 73389 39369
-- தினமலர் நாளிதழிலிருந்து.

 தொடர்புடையவை:
விவசாயம் சாரா தொழிலில் 15 சதவீத வருமானம் கிடைக்கிறது!
கருங் கோழிக்குஞ்சி, முட்டையில் வருமானம்

 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...