Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Sunday, 10 November 2019

புதன், சனியில் எண்ணெய் தேய்த்துஆண்கள் குளிக்கணும்!

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள்; எப்படி தேய்த்து குளிக்க வேண்டும்; குளித்த பின் என்ன செய்யக் கூடாது என்பது பற்றி, இயற்கை மருத்துவர் எஸ்.இந்திரா தேவி: நான்கு நாட்களுக்கு ஒரு முறை, தலை முதல் கால் வரை, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உடலில் தேய்த்து குளிக்கலாம். எண்ணெய் தேய்த்து குளித்தால், சளித் தொந்தரவு ஏற்படும் என எண்ணுவோர், எண்ணெயில் மிளகு, பூண்டு, சுக்கு, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, வடிகட்டி தேய்க்கலாம். எண்ணெய் தேய்ப்பதை, முதலில் உச்சந்தலையில் இருந்து துவங்க வேண்டும்; உள்ளங்காலில் முடிக்க வேண்டும். குறிப்பாக, கண்கள், நாசி துவாரங்கள், காது, வாய், தொப்புள், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்புகளில், எண்ணெய் நன்றாக படும்படி தேய்க்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்ததும், உடனே குளிக்கக் கூடாது. 10 முதல், 30 நிமிடங்கள் வரை ஊறிய பின், மிதமான சுடுநீரில், சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளிப்பதை, காலை, 7:30 மணிக்குள் முடித்து விட வேண்டும்.புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆண்களும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால், உடல் சருமத்தின் மேற்பரப்பில் வாழும், கண்ணுக்குத் தெரியாத நோய் அணுக்கள், பிராண வாயு கிடைக்காமல் இறந்து விடுகின்றன. இதனால், உடலில் நோய் தொற்றுவதில்லை. கண், மூக்கு, காது, நாக்கு, வாய் ஆகியவற்றில் பலமும், தெளிவும் கிடைக்கும்; உடலுக்கு வலிமை கிடைக்கும்.

தலையில் ரோம வளர்ச்சி அதிகரிக்கும்; ஆயுள் விருத்தி அடையும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நாற்றம் மறைந்து, மணம் கிடைக்கும். சருமத்தின் ஈரத்தன்மை பராமரிக்கப்படும். உயர் ரத்த அழுத்த நோய்கள் குணமாகும். எண்ணெய் குளியல் நல்லது தான் என்றாலும், மழைக்காலங்களில், மாலை, 6:00 மணிக்கு மேல்; காய்ச்சலின் போது; விரத நாட்களில்; மாதவிடாய் காலங்களில்; உடலுக்கு சுகம் இல்லாத நாட்களில் குளிக்கக் கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாட்களில், பகலில் உறக்கம் கூடாது. மது, மாமிசம், ஐஸ்கிரீம், இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்தவரை, மொச்சை, நீர் காய்கறிகளை உண்ணக் கூடாது. அந்த நாட்களில், உடலுறவை தவிர்க்க வேண்டும்!

--தினமலர் நாளிதழிலிருந்து

Thursday, 10 January 2019

கூந்தலை மணக்க செய்யும் மூலிகை பொடி

கூந்தலை மணக்க செய்யும் மூலிகை பொடி குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்: உடலுக்குக் கெடுதல் தரும், 'ஷாம்பு, சென்ட்' உள்ளிட்ட வேதிப்பொருட்கள் எதுவும் இல்லாமல், இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி, நம் கூந்தலின் மணத்தை அதிகரிக்கலாம்.முந்தைய காலத்தில் வெந்தயத்தை அரைத்து, தலைக்குக் குளிப்பர். கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் உள்ளிட்டவற்றை அரைத்து, தலையில் தேய்த்து, அரப்புப்பொடி, சிகைக்காய் தேய்த்துக் குளிப்பர். வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தலைக்குத் தேய்ப்பர். வடிகஞ்சித் தண்ணீரை தலைக்குத் தேய்த்துக் குளிப்பர். இப்போது இந்த முறைகளெல்லாம், வழக்கொழிந்து விட்டன.

முடக்கத்தான் கீரையை அரைத்து தலைக்குத் தேய்த்து குளிக்க, தலையில் உள்ள அழுக்கு போகும். இதன் பின், கீழ்கண்ட பொடிகளால் துாபமிட, கூந்தல் மணக்கும்.
  • வெட்டிவேர், லவங்கபத்திரி, அகரு கட்டை, திருவட்டப்பச்சை தலா ஒரு பங்கு, கற்கண்டு மற்றும் சாம்பிராணி தலா, 5 பங்கு, சந்தனத்துாள், 10 பங்கு என்ற விகிதத்தில் எடுத்து, பொடி செய்து, தலைக்குத் துாபமிட்டால், கபாலத்திற்கும், தலை முடிக்கும் மிகவும் நல்லது. 
  • சந்தனத்துாள், 72 கிராம், கிச்சிலிக் கிழங்கு, 55 கிராம், வெள்ளை குங்கிலியம், 33 கிராம், சாம்பிராணி, 55 கிராம், லவங்கம், ஜாதிக்காய், மட்டிப்பால் தலா, 15 கிராம், நாட்டுச்சர்க்கரை, 25 கிராம் எடுத்து, நன்றாகப் பொடி செய்து, தலைக்குத் துாபமிடலாம். 
  • சந்தனத்துாள், 120 கிராம், ஜடாமஞ்சி, தேவதாரு, அகருகட்டை, கிரந்திதகரம், சாம்பிராணி, திருவட்டப்பச்சை தலா, 72 கிராம் எடுத்து துாபமிடலாம்.
  • சந்தனம், இலாமிச்சை வேர், சாம்பிராணி தலா, 25 கிராம், கிச்சிலிக்கிழங்கு, கோரைக்கிழங்கு, தேவதாரு, குங்கிலியம், கொம்பரக்கு, ஏலம், லவங்கம், கொட்டம் தலா, 16 கிராம், அகில்கட்டை, 25 கிராம் எடுத்து, பொடி செய்து, பன்னீர் விட்டுப் பிசைந்து, சூரிய ஒளியில் காய வைக்கவும். பின் அதை நன்றாக பொடித்து, துாபமிட, குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பதால் உண்டாகும் தலை பாரம், சைனஸ், சளி, மூக்கில் நீர்வடிதல் மற்றும் துர்நாற்றம் உள்ளிட்டவை நீங்கும். 
  • ரோஜாப்பூ, 850 கிராம், கிச்சிலிக்கிழங்கு, இலந்தைப் பழத்தோல், அகில் கட்டை, சாம்பிராணி - ஜடாமஞ்சி, லவங்கபத்திரி, பெரு லவங்கப்பட்டை, உலர்ந்த நார்த்தம் தோல் தலா, 50 கிராம், கஸ்துாரி, 6 கிராம் ஆகியவற்றை பொடித்து, அதனுடன் பன்னீர் சேர்த்து அரைத்து காய வைக்கவும். இதை பொடி செய்து, துாபமிட, கூந்தலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி, அருமையான வாசனை உண்டாகும்!
--தினமலர் நாளிதழிலிருந்து

Thursday, 13 December 2018

தலை குளியல் முறைகள்

தலை குளியல் முறை குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்:  தலைக்கு, எண்ணெய் மற்றும் சீயக்காய் பொடி தேய்த்த பின், சாதாரண தண்ணீரால் தலையை அலசலாம். அதைவிட, மூலிகைகள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரில் அலசினால் நல்லது. தலைக்கு சுடு தண்ணீர் பயன்படுத்தினால், முடிக்கும், கபாலத்திற்கும் கேடு விளைவிக்கும். அதனால், குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரிலேயே, தலை குளிக்க வேண்டும்.
  • நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், அதிமதுரம், நெருஞ்சில், சிறிதளவு தேயிலைப் பொடி ஆகியவற்றை கஷாயம் போல் கொதிக்க வைத்து, தலை அலசினால், முடி மிருதுவாவதுடன், உதிர்வது நிற்கும்; பொடுகுத் தொல்லையும் நீங்கும். 
  • மருதப்பட்டை, வாகை மரப்பட்டையை கஷாயம் போல் காய்ச்சி, முடியை அலசினால், தலை அரிப்பு குணமாகும். 
  • நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், வசம்பை தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து அலசினால், புழுவெட்டு குணமாகும்.
  • மருதோன்றி இலையை கஷாயம் வைத்து அலசினால், முடி கறுமை நிறமடையும்; இளநரை நீங்கும். 
  • படிகாரத்தை தண்ணீரில் கரைத்து அல்லது கருந்துளசி கஷாயத்தால் அலசினால், பேன் தொந்தரவு நீங்கும். 
  • கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், ரோஜா இலை சேர்த்து காய்ச்சிய கஷாயத்தால் தலையை அலசினால், முடி நன்றாக வளரும். 
  • தேக்கு மர இலையில் கஷாயம் வைத்து அலசினால், முடி உதிருவது நிற்கும்; நன்கு செழித்து வளரும்.

'ஸ்நானம்' என்பது, உச்சி முதல் உள்ளங்கால் வரை, உடலைக் குளிர்வித்தல். இதுவே, 'குளித்தல்' என்று மாறிவிட்டது. தவிர, தினமும் தாராளமாக, தலைக்குக் குளிக்கலாம். ஆனால், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. பெண்களுக்கு அதிக முடி இருப்பதால், சளி தொந்தரவு ஏற்படும் என்பதாலேயே, தினமும் தலைக்குக் குளிக்கக் கூடாது என்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி, தினமும் குளிப்பது தான் சிறந்தது. தலைக்கு குளிக்கும்போது, உடலுக்கு வெதுவெதுப்பான நீரும், தலைக்கு குளிர்ச்சியான நீரும் ஊற்றிக் குளிக்கக்கூடாது.

தற்போதைய இளைய தலைமுறையினர், சரியாக தலையைத் துவட்டுவதில்லை. இப்படிபட்டவர்கள், 'ஹெல்மெட்'டால் வியர்வை ஏற்படும் நிலையில் உள்ளவர்கள், தலை அதிகமாக வியர்ப்பவர்கள், தலையில் நீர்கோர்த்து இருப்பவர்கள், சாம்பிராணி புகை போடலாம். இது, தலையில் நீர் கோர்த்துக் கொள்வதைத் தடுக்கும்.தவிர, நம் முன்னோர், கோவில் குளம், நீர்நிலைகளில் குளித்த பின், நெற்றி நிறைய திருநீற்றால் பட்டை அடிப்பர். அந்த திருநீறானது, தலையில் உள்ள நீரை முற்றிலுமாக இறக்கிவிடும். இப்போதைய தலைமுறையினர், இந்த வழிமுறையைப் பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். அதனால், இதற்கு மாற்றாக, தலையை துவட்டிய பின், 'ராஸ்னாதிக்' என்ற பொடியை, உச்சியில் சிறிதளவு வைத்துக் கொண்டால், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது!
--தினமலர் நாளிதழிலிருந்து

Saturday, 24 November 2018

தினமும் கீரை சாப்பிடுவது நல்லது!

ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகரிக்கும் உணவு முறை குறித்து கூறும், மருத்துவர், வி.ஜமுனா: தினமும் காலையில், கைப்பிடியளவு கொத்துமல்லித் தழையை, சுடு தண்ணீரில் கழுவி, மென்று சாப்பிட வேண்டும். காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும், மண்பாண்ட சமையலை சாப்பிட வேண்டும்.இது, ஆண்களுக்கு விதைப்பையை குளிர்ச்சியாக்கும்; விந்து உற்பத்தியைப் பெருக்கும்; உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கும் கூட, சினை முட்டை வெளியேறுவதை ஊக்குவிக்கும், வெள்ளைப்படுதலை குறைக்கும். பெண்ணுறுப்பின் நுழைவாயிலில், ஈரத்தன்மையை நிலைநிறுத்தும். தவிர, தம்பதியின் தாம்பத்திய விருப்பத்தை கூட்டும்.

சர்க்கரை வியாதி இல்லை என்றால், கருணைக்கிழங்கை, வாரம் இருமுறை, சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மதிய உணவில், 2 - 3 நார்ச்சத்து காய்கறிகள். குறிப்பாக, அவரைக்காய், நாட்டு அவரைக்காய், பீன்ஸ், புரோக்கோலி, காலிபிளவர், முருங்கைக்காய் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.மதிய உணவில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை என, ஒவ்வொரு நாளும் ஒரு கீரை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். முருங்கைக்கீரையில், முட்டையை உடைத்து ஊற்றி பொரியலாக சமைத்து, வாரம், இருமுறை சாப்பிட்டு வரலாம்.முருங்கைப்பூக்களை சூடான பாலில் போட்டு சாப்பிட்டு வருவதும் நல்லது. முருங்கைப் பூக்களை நெய்யில் வறுத்து, மதியம் சாதத்துடன் முதல் கவளமாக, பிசைந்துச் சாப்பிடலாம்.

உளுந்தில் செய்த பதார்த்தங்களை, சாப்பிடுவது நல்லது.அசைவப் பிரியர்கள், வாரம் இரண்டு முறை, ஆட்டுக்கறி சாப்பிடலாம். சித்த மருத்துவ சிகிச்சைக்கு முன், மீன் சாப்பிடலாம். மாலை நேரத்தில் பழங்கள் சாப்பிடலாம். தினமும், ஒரு ஆப்பிள் அல்லது ஒரு மாதுளை அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.எடை குறைவானவர்கள், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிடலாம். அக்ரூட், பிஸ்தா சாப்பிடலாம். ஓரளவு எடை கூடியபின், இதன் அளவைக் குறைத்து விடலாம். ஓட்டல் உணவுகள், துரித உணவுகள், பாட்டில் குளிர்பானங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.நைசான களிமண்ணை சுடுநீரில் குழைத்து, ஆறியதும், அடிவயிறு, விதைப்பையில் பூசி வரலாம். வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

இறுக்கமான உடைகளை அணியாமல், தளர்வான துாய பருத்தி ஆடைகளை அணியலாம். காலை மற்றும் மாலை, அரை மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.மது, சிகரெட் பழக்கம் இருந்தால், அடியோடு நிறுத்த வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால், உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், நல்ல உயிர்துடிப்பும், உயிரோட்டமும் உள்ள அணுக்களாக மாறும்.
--தினமலர் நாளிதழிலிருந்து

Tuesday, 16 October 2018

தியானம்:

தியானம்,   நமக்குள் நம்மை கூட்டிச்செல்லும் ஒரு அற்புத பயணம். புறம் நோக்கி ஓடும் ஆற்றலை தடுத்து அகம் நோக்கி திருப்பி, உலகத்தில் நம்மை ஆட்டுவிக்கின்ற சலனங்களிலிருந்து நம்மை பாதுகாத்து, நமது நோக்கத்தை தெளிவுபடுத்தி நம்மை உற்சாகத்துடன் பயணிக்க வைக்க உதவும் சக்தியை  தருவது தியானம்.


 நமது உடலானது காற்று, நீர், உணவு மற்றும் உறக்கம் ஆகியவற்றின் மூலமாக ஆற்றலை பெறுகின்றது. இப்படி பெறப்பட்ட ஆற்றலை நாம் எப்படி செலவிடுகிறோம்?.....இந்த செலவிடும் தன்மை எதை பொறுத்தது?

ஆற்றலை செலவிடும் தன்மை அவரவர் மனதை பொறுத்தது. மனம் ஒரு நிலையில் இல்லையென்றால் ஆற்றல் விரயம் அதிகமாக இருக்கும், நோக்கத்தில் தெளிவு இருக்காது, செய்யும் செயல்கள் முழுமை பெறாது முடிவாக சலிப்பே எஞ்சி நிற்கும்.

ரூபமான பொருள் போல கண்களுக்கு புலப்பட்டால், மனதை நாம் கட்டுப்படுத்தும் சாத்தியம் உண்டு. ஆனால் மனமோ அரூபமானது, கட்டுக்குள் வராதது, அடங்காதது, நிலையில்லாதது, சக்தி வாய்ந்தது, எதையும் தரவல்லது, இறைவனையும் காட்ட வல்லது.....கொடூரத்தின் உச்சத்தையும் காட்ட வல்லது....இவ்வளவு ஏன் நம்மை ஏமாற்றியவர்களின் பட்டியலை தயாரித்தால் அடுத்தவர்களை எல்லாம் பின்னுக்கு அல்ல.....பாதாளத்திற்கே  தள்ளி முதலிடம் பிடிப்பது நமது மனம் தான்.

இப்படிப்பட்ட அளவற்ற சக்தியை கொண்ட மனதை அடக்க அல்லது நமது நோக்கத்திற்கு பயன்படுத்தி நம்மை முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல ஒரு சக்தி உண்டென்றால் அது தியானம் மட்டும்தான்.

மனதை செப்பனிட்டால் அது ஒரு வடிவம் பெறுகிறது, நாம் பெற்ற ஆற்றலை முறையாகவும், விழிப்புணர்வுடனும் செலவிட மனம் ஒரு கருவியாக மாறும். நேரடியாக மனதை வென்றுவிட முடியுமா?... முடியாது; தியானம்தான் நம் மனதை நாம் விரும்பியபடி அழைத்து செல்ல உதவும் ஒரு ஒப்பற்ற கருவி; மாட்டின் மூக்கில் போடும் மூக்கு கயிறு போல....

நாள் முழுதும் எண்ண சிதறல்களோடு வேலைசெய்து, நாளின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ எண்ணத்தை குவித்து தியானம் செய்வதின் பலன் மிக குறைவே. ஜென் தத்துவம் போல.... ஒவ்வொரு செயலிலும் தியானத்தில் ஈடுபடுவதுபோல் ஈடுபட்டால் பிறகு வாழ்க்கை ஆனந்தமயமாகிவிடும்.

தியானத்தின் பயன்களாக இவற்றை குறிப்பிடுகிறார் பாரதியார் .....

* தியானம் செய்தால் நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.

* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி தியானத்திற்கு இருக்கிறது.

* புதரில் பற்றிய தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது.

* கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் தியானம் செய்வதால் வாழ்வில் முன்னேற்றத்தைப் பெற முடியும்.

* மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக் கூடாது.

Unwavering Focus | Dandapani | TEDxReno
Dhiyanam (Tamil) Paperback – 2008 by K S Ilamathi (Author)
தியானம் செய்யும்போது தடைகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தியானம் செய்வது எப்படி ஒரு எளிமையான விளக்கம்:
முதன் முதலான தியானம் செய்யும் போது மனதில் ஏற்படும் மாற்றங்கள்
தியானம் செய்தால் என்ன கிடைக்கும்?



ஹோம்மேட் டூத் பெளடர் தயாரிக்கலாமா?

ஒவ்வொருநாளும், தினமும் காலையில் எழுந்ததும் நாம் செய்யக்கூடிய முதல் வேலை பல் துலக்குவதாகத் தான் இருக்கும். நாமே சொந்தமாக டூத் பெளடர் தயாரித்து அதைப் பயன்படுத்தி பார்த்தால் என்ன?



தேவையான பொருட்கள்...

நெல்லிக்காய் பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்

வேப்பிலைப் பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்

கிராம்பு பெளடர் - 1 டேபிள் ஸ்பூன்

லவங்கப்பட்டை - 1 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா/சமையல் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

பிங்க் இமாலயன் சால்ட் - 1 டேபிள் ஸ்பூன்

டீ ட்ரி ஆயில் - சில துளிகள்

புதினா இலை பெளடர் - 1 டீஸ்பூன்

செய்முறை: மேலே கூறப்பட்டுள்ள பெளடர்கள் அனைத்துமே சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். ஒருவேளை கிடைக்காவிட்டாலும் கவலையில்லை. இவை அனைத்துமே சமையற்கட்டில் பயன்பாட்டில் உள்ள பொருட்கள் தான், எனவே அவற்றை எடுத்துக் காய வைத்து அரைத்துப் பொடி செய்து கொள்ளலாம். அப்படிப் பொடி செய்தவற்றை மேலே சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு ஒரு பெளலில் இட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். இப்போது நீங்கள் விரும்பும் உங்களது டூத் பெளடர் தயார். 

இந்தப் பெளடரைப் பயன்படுத்தி தினமும் இருவேளை பல் துலக்கி வந்தீர்களானால் உங்களது பல் பளீரிடும் என்பதோடு டூத் பேஸ்டுகளால் விளையும் பக்க விளைவுகளையும் தவிர்க்கலாம். ஏனெனில் இப்போது மார்கெட்டுகளில் கிடைக்கும் டூத்பேஸ்டுகளில் அதிக அளவில் கலந்துள்ள ஃப்ளோரைடு எனும் வேதிப்பொருள் உடல் நலனுக்கு உகந்ததல்ல. கமர்சியல் டூத் பேஸ்டுகளில் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய சோடியல் லாரைல் சல்ஃபேட், ப்ரொப்பிலீன் கிளைக்கால், ஃபுளோரைடு மற்றும் செயற்கை இனிப்பூட்டி ரசாயனங்கள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. அவற்றினால் விளையும் பக்க விளையும் மிக மோசமானவை. அந்த ஆபத்தில் இருந்து நமது பற்களை காத்துக் கொள்ள வேண்டுமெனில் நாம் இனிவரும் காலங்களில் நமக்குத் தேவையான பற்பொடிகளை மேற்கூறிய விதத்தில் நாமே தயாரித்துக் கொண்டால் நல்லது.

மேற்கண்ட பொருட்களின் சிறப்புகள்...

நெல்லிக்காயில் விட்டமின் சி நிறைந்துள்ளது. இது பல் மற்றும் வாயின் உட்புறக்காயங்களை எளிதில் ஆற்றக்கூடியது. அதுமட்டுமல்ல இதன் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி மைக்ரோபியல் குணங்களால் பற்குழிகள் வராமல் காக்கும்.

வேப்பிலைப் பெளடரில் இருக்கும் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி வைரல் தன்மையானது வாய்க்குள் இருக்கும் பாக்ட்டீரியாக்களை அழிக்கக் கூடிய திறன் கொண்டது.

அடுத்ததாக கிராம்பு மற்றும் லவங்கப் பட்ட இரண்டையும் நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தத் தேவையில்லை. பற்பொடி தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம். இரண்டுமே பற்களுக்கு மிகவும் நன்மை செய்யக்கூடியவை. கிராம்பு பல்வலி மற்றும் ஈறுகளில் வலி ஏற்பட்டால் அதைத் தீர்க்கும் திறன் கொண்டது. அதோடு அதன் ஆண்ட்டி செப்டிக் திறன் காரணமாக வாய்க்குள் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை களையும் சக்தியும் இதற்கு உண்டு.

லவங்கப் பட்டைக்கு பற்சொத்தை மற்றும் வாய்துர்நாற்றத்தை அகற்றும் திறன் உண்டு. அது மட்டுமல்ல இதன் இனிப்புச் சுவை குழந்தைகளுக்கு இந்தப் பற்பொடியை விரும்பத் தக்கதாக மாற்றும்.

பேக்கிங் சோடா வாயினுள் உமிழ்நீரில் இருக்கும் அமிலத்தன்மையைக் குறைத்து வாய்துர்நாற்றத்தை அகற்றும் என்பதோடு பற்களில் படிந்துள்ள கறையை நீக்கி வெண்மையாக்கவும் உதவும்.

உப்பு, வாயினுள் காயங்கள் இருப்பின் அதை ஆற்றும் திறன் கொண்டது. சிலர்... உப்பு தேவையில்லை என்று நினைத்தால் அதைத் தவிர்த்து விடலாம்.
--தினமணி நாளிதழிலிருந்து

Sunday, 30 September 2018

முதியோரின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்து!

முதியோர் நலனுக்காக, silvertalkies.com என்ற இணையதளம் துவங்கியுள்ள நிதி சாவ்லா மற்றும் ரேஷ்மி: டில்லியை சேர்ந்தவள் நான்; என் கணவரின் சொந்த ஊர், சென்னை. இப்போது நாங்கள், பெங்களூரில் வசித்து வருகிறோம். வயதான காலத்தில், என் பெற்றோர் எதிர் கொள்ளும் அவஸ்தைகளை பார்த்தவள் நான். தங்கள் வாழ்நாள் அனுபவங்களையும், சுக துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள, யாருமற்ற தனிமை தரும் மன அழுத்தமே, அவர்களை வாட்டும், முதல் நோய். அவர்களின் மனப்புண்ணை அகற்றும் மாமருந்தாக, தங்கள் வயதினருடன் உரையாட, சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தான் என, உணர்ந்தேன்.

கடந்த, 2014ல், புனேயில் வசிக்கும் என் தோழி, ரேஷ்மியுடன் இணைந்து, பெற்றோருடனான எங்கள் அனுபவங்களை, மற்றவர்களுக்கும் உதவும் வகையில் தொகுத்து, வலைப்பதிவில் பதிவிட ஆரம்பித்தோம். அதைப் படித்த பலரும், பயனுள்ளதாக இருந்ததாக மனதாரப் பாராட்டியதுடன், சீனியர் சிட்டிசன்களின் நலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்படி கேட்டனர். அந்தப் பணிகளை ஒருங்கிணைக்க, இணையதளத்தை துவங்கினோம். அதன் மூலம், தனிமையில் தவிக்கும் சீனியர்களை ஒன்றிணைத்து, நண்பர்கள் குழுக்களை ஆரம்பித்தோம். அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஓரிடத்தில் கூடி, தங்கள் உணர்வுகளைப் பகிரவும், பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவும் வழி செய்தோம்.

'ரோட்டரி கிளப்'புக்கு சொந்தமான நுாலகம், கணிப்பொறி மற்றும் விளையாட்டுச் சாதனங்களை, சீனியர்கள் பயன்படுத்தவும் அனுமதி பெற்றோம். இப்படி, அவர்களின் தனிமைத் துயரத்தை விரட்டும் வழிகளைக் கண்டறிந்து, செயல்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றோம். உயில் எழுதுதல், வருமானவரித் தாக்கல் முதல், உடல், மன உபாதைகள் வரை, முதியோரின் அனைத்துப் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கிடைக்கும் வகையில், கலந்துரையாடல்களை நடத்துகிறோம். அதில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் வழிகாட்டுகின்றனர். இணையத்தில் முதியோர் நலன் சார்ந்த பல்வேறு செய்திகளை வெளியிடுகிறோம். இமயம் முதல் குமரி வரை, 8,000க்கும் மேற்பட்டோர், இவற்றைப் படிக்கின்றனர். உறுப்பினர் சந்தாவாக, ஆண்டிற்கு, 2,500 ரூபாய் வசூலிக்கிறோம். இந்த பணத்தை, இலவச சேவைகளுக்காக பயன்படுத்தி கொள்கிறோம்.

சென்னை உட்பட, பல நகரங்களில் எங்கள் அமைப்பை நிறுவ எண்ணி உள்ளோம். எங்கள் பாதையைப் பின்பற்றி, இப்போது பெண் தொழில்முனைவோர் பலர், முதியவர்களுக்கான சர்வீஸ்களைச் செய்யக் களமிறங்கி இருக்கின்றனர்; இது, எங்களுக்குக் கூடுதல் சந்தோஷம்.
--தினமலர் நாளிதழிலிருந்து


தொடர்புடைய பதிவுகள்:
புயலாகும் முதுமை பூங்காற்றாக வீச...
உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!--மாடித் தோட்டத்தால்....
வேலை செய்து வந்தால்.....

Tuesday, 4 September 2018

புயலாகும் முதுமை பூங்காற்றாக வீச...

வயதான காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, சில வழிமுறைகள் கூறும், மருத்துவர், வி.எஸ்.நடராஜன்: நடுத்தர வயதிலிருந்தே, தன் தேவைகளை தானே செய்து பழக வேண்டும். ஏனெனில், திடீரென கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், பின்னாளில் சிரமம் ஏற்படாததுடன், மற்றவர்களை சார்ந்திருக்காமல், தனியாக வாழும் தைரியத்தையும் ஏற்படுத்தும்.வயது ஆக ஆக, மனதளவில் பந்த பாசங்களை குறைத்து வாழ, முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும், முதிய மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தாமரை இலை மேல் இருக்கும் தண்ணீர் போல, வாழக் கற்றுக் கொள்வது நல்லது.

வீட்டுக்கு வருவோரிடம், உங்கள் புராணத்தை பாடாமல், அவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அது, அவர்களை உற்சாகப்படுத்தி, உங்களை அடிக்கடி காண வரச் செய்யும். பிரச்னை இல்லாத மனிதர்கள், உலகில் யாருமே இல்லை. எனவே, 'நான் என்ன பாவம் செய்தேனோ; எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்...' என, மற்றவர்களிடம் புலம்புவதை தவிர்க்க வேண்டும்.சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும், முதுமைக் காலத்தில் அவசியம். முடிந்த அளவுக்கு, சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.

குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்களை, உயிருக்கு உயிராக நேசியுங்கள். உறவு கள் கைவிட்ட காலத்தில், நட்பு கைகொடுக்கும். உடலுக்கு ஏதாவது தொல்லை வந்துவிட்டால், பெரிதாக கற்பனை செய்து, அலட்டவும் கூடாது; அதே சமயம், அலட்சியப்படுத்தவும் கூடாது. மேலும், எந்த ஒரு டாக்டரிடமும் முழு நம்பிக்கை வைக்காமல், இவரிடமிருந்து அவர், அவரிடமிருந்து இவர் என மாறாதீர். தன் மறைவுக்குப் பின், யார் யாருக்கு, சொத்து போய்ச் சேர வேண்டும் என்பதை தெளிவாக, சாட்சிகள் முன்னிலையில் எழுதி வைப்பது மிக அவசியம். இதனால், பிற்காலத்தில் பிள்ளை கள், அவர்களின் துணை மற்றும் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் மோதல் தொல்லைகளைத் தவிர்க்கலாம்.

முதுமை காலத்தில் வசிக்கப் போகும் இடம், வீடு பற்றி ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளுங்கள். நல்ல உடல்நலம், தினமும் செய்யும் உடற்பயிற்சி, சத்தான உணவு, மன உறுதி, ஆன்மிக ஈடுபாடு, தொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றோடு கொஞ்சம் பணமும் இருந்தால் போதும்... பலருக்கு புயலாக வரும் முதுமைக்காலம், உங்களுக்குப் பூங்காற்றாக வீசும்! 
--தினமலர் நாளிதழிலிருந்து 
 
"நீங்கள் அடுத்தவரிடமிருந்து என்ன எதிர்பார்கிறீர்களோ.. அதை அவருக்கு நீங்கள் கொடுங்கள் வாழ்க்கை இனிமையாகிவிடும்" 

Sunday, 12 August 2018

குடிநீரை இயற்கை முறையில் சுத்தப்படுத்தும் வழிமுறைகள்:

மழை காலத்தில் குடிநீரை இயற்கை முறையில் சுத்தப்படுத்த வழி கூறும், இயற்கை நல மருத்துவர், ஒய்.தீபா, ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன், எக்ஸ்னோரா நிர்மல்: இன்றைய, 'வாட்டர் பியூரி பையர்'களும், 'மினரல் வாட்டர் கேன்' களின் ஆட்சியும் இல்லாத போது, நம் முன்னோர் சில இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தினர்.

தேத்தாங்கொட்டை:
சமையலுக்கு உபயோகிக்க கூடிய தண்ணீரிலோ அல்லது குடிக்கும் தண்ணீரிலோ, தேற்றன் கொட்டையைப் பொடியாக்கிப் போட்டால், தண்ணீரில் இருக்க கூடிய நுண்கிருமி மற்றும் பாக்டீரியாக்களை, பாத்திரத்தின் அடியில் படிய வைக்கும். மேல் உள்ள தண்ணீரைக் குடிப்பதால், கண் மற்றும் தோல் நோய், வயிற்றுப்போக்கு, பசியின்மை, சிறுநீரகக் கல் உள்ளிட்டவை குணமாகும். கேன் வாட்டரிலும் தேற்றன் கொட்டையை போட்டு பயன்படுத்தலாம். நீர்த் தேக்க தொட்டியிலும் கூட, உடைத்த தேற்றன் கொட்டையை மெல்லிய துணியில் முடிந்து போடலாம்.

முருங்கை இலை மற்றும் விதை:
அதேபோல், முருங்கை விதை மற்றும் இலையைப் பொடித்து, மெல்லிய துணியில் கட்டி, சம்ப் மற்றும் நீர் தேக்க தொட்டியில் போட்டு, அரை மணி நேரம் கழித்து எடுத்து விடலாம். வீட்டு உபயோகத்துக்கான பானைகளிலும் போடலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஓரிரண்டு முருங்கை விதை மற்றும் ஒரு கைப்பிடி அளவு இலை சேர்த்து, 20 நிமிடங்கள் கழித்து வடிகட்டிக் குடிக்கலாம். முருங்கை சிறந்த கிருமிநாசினியாக செயல்படும்.

மிளகு:
ஒரு பாத்திரத்தில், ஐந்து மிளகு மற்றும் தண்ணீர் சேர்த்து, இரவு முழுவதும் ஊற விட்டு, காலையில் வடிகட்டி குடிப்பது நல்லது. மிளகு, தண்ணீரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை உறிஞ்சிக் கொள்ளும். அரை லி., தண்ணீருக்கு, 5 - 6 மிளகு போடலாம். தவிர, ஒரு நாள் இரவு ஊறிய தண்ணீரை, மறுநாளே பயன்படுத்தி விடுவது நல்லது.

காந்தம்:
ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி, 15 - 30 நிமிடம் வரை, அதனுள் காந்தத்தை போட்டு வைத்தால், காந்த சக்தி கிடைக்கும். இதுதவிர, நம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தையும் தரும். பொதுவாகவே தண்ணீர் தோன்றும் பகுதி, அது கடந்து வரும் பாதையைப் பொறுத்து, அதன் தன்மை, சத்து மாறுபடும். இந்த காந்த முறையைப் பயன்படுத்தும் போது, அது தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறு, மினரல்சை அதிகப்படுத்தும். அதனால், நம் உடலில் உள்ள உணவுக் கழிவு மற்றும் வளர்சிதைக் கழிவுகள் அனைத்தும் சேர்ந்த, வெளியேற்றப்பட வேண்டிய நச்சான, 'பிரி ரேடிக்கல்ஸ்' வெளியேறும் தன்மையையும் அதிகரிக்கும்.

இவை நம் உடலில் தங்கியிருந்தால், ஒவ்வொரு செல்லுக்கும் சேர வேண்டிய ஆக்சிஜனின் அளவை குறைத்து, செல்லை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இது, நாளடைவில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகையால், காந்த முறையில், ஹைட்ரஜன் அதிகமான தண்ணீரைக் குடிக்கும் போது, இவை அனைத்தையும் சரிசெய்யும்.பயணம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
-- தினமலர் நாளிதழிலிருந்து.

தொடர்புடைய வலைதளங்கள் .
தேத்தான் கொட்டை
உடலுக்கு பலம் தரும் தேத்தான் கொட்டை
குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!
தேத்தாங்கொட்டை
தேற்றா மரக் கொட்டையின் மருத்துவப் பயன்கள்
கிழக்கில் விரியும் கிளைகள்: நீருக்குச் சுவை தரும் தேத்தாங்கொட்டை
கலங்கிய நீரையும் தெளிவாக்கும் தேற்றா மரக் கொட்டை
மெலிந்தவனையும் வலியவனாக்கும் `தேற்றான்கொட்டை’ என்கிற மகா மருந்து!


Thursday, 19 July 2018

கிராமத்து உணவுகளுக்கு மதிப்பு அதிகம்! - தொக்கு வகைகள்

ஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை, தொக்கு வகை செய்து லாபம் ஈட்டி வரும், சென்னை, கேளம்பாக்கத்தை சேர்ந்த நிவேதா: 

தொக்கு: ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்படும் உணவு முறை; மாங்காய், தக்காளி போன்றவற்றை எண்ணெயில் வதக்கிக் காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தொடுகறி.‘மாங்காய்த் தொக்கு’,‘தக்காளித் தொக்கு’.


                                                       (தக்காளி வெங்காய தொக்கு)

நான், கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறேன். இன்ஜினியரிங் படித் தும், புகுந்த வீட்டில் வேலைக்கு போக வேண்டிய தேவை ஏற்படவில்லை.ஆறாவது முதல் காலேஜ் வரை, ஹாஸ்டலில் தான் படித்தேன்; சாப்பாடு சரியாக இருக்காது. விடுமுறைக்குவீட்டுக்கு வரும் போதெல்லாம் அழு வேன். அதனால் அம்மா, விதவிமான தொக்கு செய்து கொடுப்பார்; 20 நாள் வைத்து சாப்பிடலாம்; கெட்டுப் போகாது.

என் அம்மா மாதிரியே, மாமியாரும் தொக்கு ஸ்பெஷலிட்ஸ். மாமனாருக்கு நீரிழிவை கட்டுப்படுத்த, ஆவாரம் பூவில் தொக்கு செய்வார். வீட்டில் யாருக்காவது மூட்டுவலி எனில், முடக்கத்தான் தொக்கு செய்வார்.எங்கள் வீட்டில் ஒருவேளைக்கு, 15 - 20 பேருக்கு சமையல் நடக்கும். சொந்தமாக வயல் உள்ளதால், இயற்கை விவசாயம் செய்கிறோம். செக்கு நல்லெண்ணெய் தான் பயன்படுத்துகிறோம். எந்த கெமிக்கலும் இல்லாமல், இயற்கையான முறையில் தொக்கு செய்வது, எங்கள் வீட்டு ஸ்பெஷல் அடையாளமாவே மாறிவிட்டது. வீட்டுக்கு வந்து யார் சாப்பிட்டாலும், பாராட்டத் தவறியதே இல்லை. 'விலைக்கு தருவீங்களா?' என கேட்க ஆரம்பித்த பின் தான், இதை பிசினசாக செய்யும் யோசனை வந்து, உறவின பெண் சத்யாவும் சேர்ந்து ஆரம்பித்தோம்.

ஆவாரம்பூ, முடக்கத்தான், பாகற்காய், தக்காளி, புதினா, பூண்டு, பிரண்டை, புளித்த கீரை, துாதுவளை, வல்லாரை என, தொக்கு வகைகள் செய்து, ஆரோக்கியமான உணவு தயாரிப்பையே, பிசினசாக மாற்றவிரும்புவோருக்கும் வழிகாட்டுகிறோம். 

ஒவ்வொரு தொக்கும், 1 கிலோ அளவு தயாரிக்க, 200 - 300 ரூபாய் வரை தேவை. 10 வகை தொக்கும், தலா, 1 கிலோ செய்ய, குறைந்தபட்சம், 1,200 ரூபாய் முதலீடு போதும்.கிராமத்து உணவுகளுக்கு, நகரத்தில் எப்போதும் மதிப்பு அதிகம். இந்த தொக்கு வகைகளை இட்லி, தோசை, சப்பாத்தி என, டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்; சூடான சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். ஊறுகாய்க்கு நல்ல மாற்றும் கூட. மேலும், 300 கிராம்தொக்கு, 90 ரூபாய்க்கு விற்கலாம்.

ஐந்து நாட்கள் வரை வெளியிலேயே வைத்திருந்து பயன்படுத்தலாம்; பின், பிரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம். வேலைக்கு செல்பவர், பேச்சிலர், ஹாஸ்டலில் இருப்பவர் தான்வாடிக்கையாளர்கள். கடைகளில் வாங்கும் தொக்கு பெரும்பாலும் ஒரே சுவையில் இருக்கும்; ஆனால், இவை ஒவ்வொன்றும் அதன் மூலப்பொருளின் சுவைக்கேற்ப மாறுபடும் என்பதால், தினமும் சாப்பிட்டாலும் அலுப்புத் தட்டாது; 50 சதவீத லாபம் நிச்சயம்.

ஒரு நாள் பயிற்சியாக, 750 ரூபாயில், 10 வகையான தொக்குகளை கற்றுக் கொள்ளலாம்.தொடர்புக்கு: 9962146742, 9962114104.
--தினமலர் நாளிதழிலிருந்து.

Saturday, 12 May 2018

ஞாபக சக்தி வலுப்பெறுகிறது "ஓய்வினால்" - ஆராய்ச்சி முடிவுகள்.

நாம் மிக விரும்பி செய்தாலொழிய, சில செயல்கள் (படித்தது, பார்த்தது, கேட்டது, பேசியது, கற்றுக்கொண்டது) செய்த சிறிது நேரத்திற்குப் பிறகு அதிலிருந்து சில விஷயங்கள்தான் நம் நினைவில் இருக்கும், ஆனால் திரும்ப திரும்ப ஒரு செயலை செய்வதன் மூலமும் ஞாபக சக்தியை வலுப்படுத்த முடியும், இது இயல்பானதுதான்.

ஹெரியோட்-வாட் (Heriot-Watt) பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கிறதென்றால், "ஏதாவது கற்றுக்கொண்ட  பிறகு தொடர் இயக்கத்தில் (busy) இல்லாமல் சிறிது நேர அமைதி அல்லது ஓய்வு எடுப்பது சிறு சிறு தகவல்களையும் ஞாபகத்தில் வைத்து கொள்ளும் திறனை அதிகப்படுத்துமாம்".

ஓய்வு:
புதிதாக ஏதாவது கற்றுக்கொண்ட பிறகு பத்திலிருந்து பதினைந்து (10-15) நிமிடங்கள் ஓய்வு எடுப்பது நமது ஞாபக திறனை வளர்ப்பதோடு எளிதில் ஞாபகத்திலிருந்து நினைவு கூறவும் மற்றும் நுணுக்கமான தகவல்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர். இளைஞர்களை வைத்து நடத்திய "புகைப்படங்களின் வித்தியாசத்தை கண்டறியும் சோதனை"யின் முடிவே மேற்சொன்ன தகவல்.

சோதனை:
இளைஞர்களை இரண்டு பிரிவாக பிரித்து, ஒரே புகைப்படத்தை காண்பித்து ஒரு பிரிவு இளைஞர்களை பதினைந்து (15) நிமிடம் ஓய்வு எடுக்கச் சொல்லியும் மற்றொரு பிரிவினரை வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் படியும் செய்து மீண்டும் அவர்களிடம் பழைய புகைப்படத்தை ஒத்துள்ள, ஆனால் நுண்ணிய வேறுபாடுகள் கொண்ட புதிய புகைப்படம் காட்டப்பட்டு வேறுபாடுகளை கண்டறியம் சோதனை நடந்தது.

முடிவு:
புகைப்படத்தைப் பார்த்த பிறகு வழக்கமான பணிகளை மேற்கொண்டவர்களை விட புகைப்படத்தைப் பார்த்த பிறகு ஓய்வெடுத்தவர்கள் புகைப்படங்களின் வேறுபாடுகளை நன்கு கண்டறிந்து கூறினர். "இதன் மூலம் நுணுக்கமான செய்திகளையும் ஞாபகத்தில் வைக்கும் திறன் ஓய்வினால் அதிகரிக்கிறது என்ற சான்று கிடைத்திருக்கிறது. ஓய்வு நேரத்தில் மூலையில் என்ன நிகழ்கிறது? என்ன ரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது? என்பதே எங்களது அடுத்த கட்ட ஆய்வு" என்று கூறுகின்றனர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட Dr Craig மற்றும் Dr Michaela Dewar.
--The Assam Tribune நாளிதழிலிருந்து.
--medicalxpress.com


திருப்பராய்த்துறை (திருச்சி)  தபோவனம், பள்ளி மற்றும் சோழவந்தான் (மதுரை) விவேகானந்தா கல்லூரியின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் மொழிகளுள் ஒன்று "சுகமாக கண்களை மூடியிருப்பது மட்டும் ஓய்வல்ல, ஒரு செயலிலிருந்து இன்னொரு மாற்று செயல் செய்வதும் ஓய்வுதான் (Change of Work is Rest)". மிகவும் பிடித்த வரிகளுள் ஒன்று இது.

குழந்தைகளை படிப்பை மட்டுமே ப(பி)டித்துக்கொண்டிருக்கும்படி
செய்யாமல் விளையாட்டு, உடற்பயிற்சி, செய்முறை பயிற்சி, பாட்டு பாடுதல், ஓவியம் அல்லது இரண்டு மணி நேரம் அவர்கள் விரும்பி அதிக ஆர்வத்துடன் ஈடுபடும் ஏதாவது ஒன்றில் (mobile phone, video game மற்றும் TV தவிர) ஈடுபட அனுமதிப்பது குழந்தைகளின் செயல்திறனையும், கற்கும் திறனையும் அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை விளையாட்டு மற்றும் ஏதாவது செயல்களில் ஈடுபட வைத்திருப்பது அவர்களை மேம்படுத்தும்.

மேலும் இரவு எட்டு (8) மணி நேர உறக்கம் மாணவர்களுக்கு மிகவும் அவசியம், ஏனெனில் பகலில் (கவனமுடன்) படித்த பாடங்கள் நன்கு நினைவில் பதிய உறக்கம் அவசியம். மற்றவர்களுக்கும் கூட இது பொருந்தும், நல்ல இரவு உறக்கம் இருப்பவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும் வாய்ப்புகள் அதிகம். சிலர் சொல்வார்கள் "மனிதன் வாழ்நாளில் பாதி நேரத்தை தூங்கியே கழிக்கிறான்" என்று, மீதி பாதி வாழ்நாளில் திறம்படவும், ஆக்கபூர்வமாகவும் பயனுள்ள வேலைகளை செய்ய அந்த உறக்கம் அவசியம் தேவைதான்.

 

Wednesday, 11 April 2018

பேலியோ டயட்டும் (Paleo Diet) எடை குறைப்பும்: - 2

இதுவரை பேலியோ டயட் பற்றி படித்திருக்கிறேன், காணொளிகள் பார்த்திருக்கிறேன் ஆனால் நேரில் யாரையும் பார்த்ததில்லை. முதல் முறையாக பேலியோ டயட் பின்பற்றி எடை குறைந்த நண்பர் ஒருவரின் மாறுதல்களை பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அது முதல் அதை பற்றி தகவல்கள் சேகரித்து பதிவிட வேண்டும் என்ற அவா எழுந்தது, இதோ நண்பரின் தகவல்கள் இங்கே கேள்வி பதில் வடிவில்.

1) பேலியோ டயட் முறையை கடைபிடிக்க காரணம் என்ன?
          முக்கிய நோக்கம் எடை குறைப்புதான். குறைந்த உடலுழைப்பாலும், கார்போஹைடிரேட் நிறைந்த உணவுகளை எடுப்பதாலும் உடல் எடை கூடி விட்டது. மூச்சு வாங்குதல், விரைவில் சோர்வு ஏற்படுவது மற்றும் வியர்த்தல் ஆகியவை அதிக எடையின் அறிகுறிகளாக வெளிப்படடன, அதனால் எடை குறைக்கும் எண்ணம் தோன்றியது.

2) பேலியோ டயட் பற்றி எப்படி தெரிந்தது, எப்படி நம்பினீர்கள்?
          இந்த டயட் முறையைப் பற்றி தெரிந்திருந்தாலும் நண்பர் ஒருவர் இந்த முறையை பின்பற்றி எடையை குறைத்ததை பார்த்து நானும் பின்பற்ற துவங்கினேன். பேலியோ டயட் கடைப்பிடிக்க ஆரம்பித்த முதல் மாதத்திலேயே நண்பர் 7 கிலோ குறைந்தது மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது அதன் பிறகுதான் நான் ஆரம்பித்தேன்.

குறிப்பு: தானிய உணவுகள் உடலில் அதிகமாக நீர் சத்தை சேர்ப்பதுதான் உடல் எடைக்கு முக்கிய காரணம், தானியங்களை தவிர்த்து கொழுப்பு உணவுகளை உண்ணும் போது இந்த நீர் சத்தினால் உண்டாகும் எடை கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால்தான் முதல் மாதத்தில் அதிக எடை இழப்பு ஏற்படும்.

3) பேலியோ டயட் ஆரபிக்கும் முன் மருத்துவரை கலந்தாலோசித்தீர்களா?
           பேலியோ டயட் என்ற முடிவெடுத்தப்பின் இரத்தப் பரிசோதனை செய்து மருத்துவரை சந்தித்து பேலியோ டயட் முறையை பின்பற்ற உள்ளதாக தெரிவித்தேன் அவரும் சரி மேற்கொள்ளுங்கள் அவ்வப்போது வந்து உடல் நலத்தை சரிபார்த்து கொள்ளுங்கள் என்றார், மேலும் நண்பர் ஏற்கனவே ஒருமாதம் இந்த டயட் பின்பற்றுவதால் அவரது ஆலோசனைகளையும் பெற்ற பின்னரே துவங்கினேன்.

4) வேறு விதமான ஆலோசனை ஏதாவது?
          முக்கியமாக சொல்லியே ஆகவேண்டிய ஒரு துணை "Paleo LCHF Diet - India" என்ற Facebook பக்கம்தான். இங்கு பல லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர், அதில் குறிப்பிடத்தக்கவர்கள் இந்த facebook பக்கத்தின் நிறுவனரும் மற்றும் இந்த உணவு முறையை தொடர்ந்து பின்பற்றி மிகவும் பிரபலப்படுத்தியவருமான நியாண்டர் செல்வன் மற்றும் ஷங்கர் ஜி, தொடர்ந்து பல வருடங்களாக பேலியோ டயட் பின்பற்றுபவர்கள், என்னைப்போல பயனடைந்தவர்கள் மற்றும் ஆரம்ப நிலை பயனர்களும், மருத்துவர்களும் அடக்கம்.

5) Facebook பக்கம் எந்த விதத்தில் உதவியது?
       முதலில் இருந்தே மிக மிக உதவியாக இருந்தது என்றால் மேற்சொன்ன facebook பக்கம்தான்.
  • அந்த பக்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.
  • பின் நமது இரத்தப் பரிசோதனை தகவலை அங்கு பதிவிட்டால் நாம் மேற்கொள்ள வேண்டிய உணவு பழக்கம் பற்றி ஆலோசனை கிடைக்கும். (நமது சந்தேகங்களுக்கும்  விடை கிடைக்கும்)
  • என்னென்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் அவை எங்கெங்கு கிடைக்கும் போன்ற தகவல்களும் கிடைக்கும்.

6) இந்த உணவு முறையை ஆரம்பிக்கும் முன் ஏதாவது கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டுமா?
        ஆம், புகையிலை பழக்கமோ, குடிப்பழக்கமோ அல்லது புகைப்பழக்கமோ இருப்பின் முற்றிலுமாக அதை விட வேண்டும். உடனடியாக அரிசி உணவுகளை விடமுடியாதவர்கள் படிப்படியாக அதை குறைத்து பேலியோ டயட்டிற்கு மனதளவில் முதலில் தயாராக வேண்டும். Junk food, fast food மற்றும் packet food உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

7) சரி பேலியோ டயட் உணவு முறை பின்பற்ற ஆரம்பித்துவிடீர்கள் ஏதாவது மாறுதல் தெரிந்ததா?
       ஆம், ஆரம்பித்த இரண்டாவது நாள் எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது பிறகு படிப்படியாக சரியாகிவிட்டது.

8) பயமாக இல்லையா, உணவு முறையை நிறுத்தவில்லையா?
       இல்லை... பயமாக இல்லை, உணவு முறையையும் நிறுத்தவில்லை. ஏனெனில் ஆரம்பிக்கும் முன்பே இதை பபற்றி அறிந்திருந்தேன், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்ற தகவல் facebook பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற விளைவுகள் ஏற்படும் ஆனால் பயப்பட தேவையில்லை இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும்.

9) சமைக்கும் முறை என்ன, சமைப்பதற்கு ஏதாவது சிறப்பு பொருள் வேண்டுமா?
  • வழக்கமான சமையல் முறைதான் அதில் எந்த மாற்றமும் இல்லை.
  • கண்டிப்பாக மர செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய், வெண்ணை பயன்படுத்த வேண்டும், Refined oil, sunflower oil மற்றும் கடலெண்ணெய் பயன்படுத்தக்கூடாது.
  • அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள் மற்றும் சிறுதானியங்கள், பருப்பு இவைகளை தவிர்க்க வேண்டும். (நாம் விரும்பிய உடல் எடை குறையும் வரை, பிறகு மிக குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம்)
  • இரும்பு பாத்திரம் மற்றும் மண் பாண்டங்களை பயன்படுத்தலாம் nonstick pan பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

10)  எப்படி சாப்பிட வேண்டும், ஏதாவது முறை உள்ளதா?
           பேலியோ டயட்டில் நாள் ஒன்றுக்கு ஒருவர் 1200 முதல் 1500 கலோரி வரை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது, இந்த அளவிற்கு மேலும் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் குறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது (ஆற்றல் பற்றாக்குறை வந்துவிடும்). இந்த 1500 கலோரி அளவை மூன்றாக பிரித்து மூன்று வேலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 12 மணி நேர இடைவெளியில் 3 வேலை உணவையும் முடித்து விட வேண்டும். (9 மணிக்கு காலை உணவு என்றால் இரவு 9 மணிக்குள்ளாக இரவு உணவை முடித்து விட வேண்டும்). வாரம் ஒரே ஒரு முறை 40 கிராம் மட்டும் தானிய உணவு வகையில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்.

11) நீங்கள் சைவமா? அசைவமா?
         இரன்டும் கலந்த கலவையாகத்தான் எடுத்துக்கொண்டேன், ஆனால் சைவம்தான் அதிகமாக எடுத்துக்கொண்டேன். காலையில் 100 பாதாம் பருப்புகள் (20 மணிநேரம் ஊறவைத்தது) அல்லது முட்டை மஞ்சள் கருவுடன் சேர்த்து, மதியம் எண்ணெய் அல்லது நெய்யில் வதக்கிய காய்கறிகள், இரவு பன்னீர் அல்லது சிறிது மாமிசத்துடன் சேர்த்து காய்கறிகள்(மசாலாக்கள் சேர்த்துக்கொள்ளலாம்).

12) இந்த டயட் மேற்கொண்ட பிறகு என்ன மாற்றம் தெரிந்தது?
          முதல் மாதத்தில் 5 கிலோ எடை குறைந்தது, அடுத்தடுத்த 2 மாதங்களில் முறையே 4, 4 என 8 கிலோ குறைந்தது. ஆக 100 நாட்களில் தோராயமாக 15 கிலோ எடை குறைந்தது. மூச்சு வாங்குதல், விரைவில் சோர்வு ஏற்படுவது குறைந்துள்ளது. நான் நினைத்த அளவு எடை குறைத்துவிட்டேன் அடுத்த இரத்தப் பரிசோதனை எடுக்கப் போகிறேன், பிறகு ஒரே எடையை பராமரிக்க சிறிது மாறுதல்களுடன் பேலியோ டயட் பின்பற்ற வேண்டும்.

13)  இதை தவிர வேறு ஏதாவது பின்பற்றினீர்களா?
           ஆம், கொழுப்புணவுகளை(பன்னீர் மற்றும் மாமிசம்) எடுத்த பின், எப்போது எடுத்தாலும் சரி(மதியமோ அல்லது இரவோ) "பசுமஞ்சள்(1 inch), 10 மிளகு, ஒரு சின்ன வெங்காயம் மற்றும் 3-5 துளசி இலைகள்" இவைகளை சேர்த்து நன்கு அரைத்து அப்படியே சாப்பிட வேண்டும், பிறகு 20 நிமிடங்கள் கழித்து 2 பள்ளு வெள்ளைப்பூண்டு சாப்பிட வேண்டும் பேலியோ டயட் பின்பற்றாதவர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம். உறங்கச் செல்லும் முன் சிறிதளவு ஆப்பிள் ஸீட் வினிகர் அருந்த வேண்டும்.

14) நடை பயிற்சி:
கடைசியாக ஆனால் முக்கியமாக நாள் ஒன்றுக்கு 3000 அடி கண்டிப்பாக நடக்க வேண்டும். இதுவும் எடை குறையும் வரை கடைபிடிக்க வேண்டும்.

facebook பக்கத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளது, பலரது அனுபவங்களையும், அவர்கள் சந்தேகங்களுக்கு கிடைத்த  பதில்களையும் படித்தே நான் பல  விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

ஒரே ஒரு விஷயம் தான் நாம் செய்ய வேண்டும், அது என்னவெனில் தீர்மானமான முடிவு எடுத்து அதை பின்பற்ற உறுதி பூணுவது அவ்வளவே. பிறகு சகல விஷயங்களும் தானாக நடந்தேறும்.

என் அனுபவம் பிறருக்கு பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சி. வணக்கம்.

முனைவர் தாமோதரன் மற்றும் திரு விக்னேஷ் அவர்களுக்கு நன்றிகள்.

What is paleo diet ? brief explain in tamil by Shankar ji
ஆரோக்கியம் & நல்வாழ்வு (Facebook Tamil Paleo diet group)

தொடர்புடையவை
பேலியோ டயட்டும் (Paleo Diet) எடை குறைப்பும்: - 1 




Saturday, 7 April 2018

பேலியோ டயட்டும் (Paleo Diet) எடை குறைப்பும்: - 1

பேலியோ டயட் என்றால் என்ன?
      மனிதர்கள் வாழ்ந்த பேலியோலித்திக் (Paleolithic age) என்ற ஆதிகாலம் ஒன்று இருந்தது, அப்போது மனிதர்கள் பின்பற்றிய உணவு முறையை ஒத்து இருப்பதால் இதற்க்கு பேலியோ டயட் என்று பெயர். அதாவது முறையான விவசாய நடைமுறை  ஏற்படும் முன்னர் மக்கள் காடுகளில் வாழ்ந்து உணவை தேடியலைந்து, வேட்டையாடி சாப்பிட்டிருப்பார்கள் இல்லையா அதுபோன்றதொரு உணவுமுறையை பின்பற்ற முயற்சிப்பதனால்தான் இந்த பெயர்.

பேலியோ டயட் பயன்கள் என்ன?
       இந்த உணவு கட்டுப்பாட்டு முறை பிரபலமாக முக்கிய காரணம் "எடை குறைப்பு" தான் என்றாலும் பக்க விளைவுகள்(நல்ல) நிறைய. அதாவது இரத்த அழுத்தம், சர்க்கரை, இதைய நோய்கள் மற்றும் பல தொல்லைகள் நீங்குகிறது என்பதுதான் கூடுதல் காரணம். 

பேலியோ டயட் பிரபலமானது எப்படி?
       நேரடி அனுபவம்தான், பிறரின் அனுபவத்தை பார்த்து இதை பின்பற்றி பலரும் பயனடைந்து வருவதுதான் இந்த டயட் முறை பிரபலமடைய முக்கிய காரணம்.

எப்படி பின்பற்றுவது?
  • பேலியோ டயட்டை பின்பற்ற முடிவெடுத்த பின் முதலில் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். 
  • பிறகு இரத்தப் பரிசோதனை முடிவின் அடிப்படையில் facebook குழுவின் அறிவுரைப்படி மருத்துவரின் ஆலோசனையுடன் சைவ அல்லது அசைவ உணவு முறையை பின்பற்றலாம்.
  • குடிப்பதையும், புகைப்பதையும் மற்றும் குட்கா, பான்பராக் (பழக்கம் இருப்பின்) அடியோடு நிறுத்த வேண்டும்.
  • நமக்கு விருப்பமான அளவு எடை குறையும் வரை ஒரு வகையான உணவு முறையும் பிறகு எடையை ஒரே அளவுடன் பராமரிக்க ஒரு வகையான உணவு முறையையும் பின்பற்ற வேண்டும்.
  •  இந்த உணவு கட்டுப்பாடு ஆரம்பித்த 100 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு  முறை இரத்தப் பரிசோதனை செய்து அதற்க்கேற்றவாறு உணவு முறையில் மாறுதல் செய்து பின்பற்றலாம்.
  • மேலும் குழுவாக சேர்ந்து பின்பற்றுவது மிகுந்த பலனை தரும். 

முக்கியமான உணவுகள் என்னென்ன?
       கொழுப்பு சத்து உள்ள உணுவுகள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் (பன்னீர், வெண்ணெய், நெய்), கொழுப்புடன் கூடிய மாமிசம், மஞ்சள் கருவுடன் உள்ள முட்டை, பாதாம் பருப்பு, காய்கறிகள், மர செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணை, ஆலிவ் ஆயில்.

சமைக்கும் முறை:
      வழக்கமாக சமைப்பது போலத்தான் ஆனால் எண்ணெய், சமையல் உபகரணம்(இரும்பு அல்லது மண் பாண்டங்களை உபயோகிப்பது நல்லது) மற்றும் தானிய உணவுகள்,சிறுதானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை தவிர்த்தல் என்ற முறையில் வேறுபாடு உண்டு. வழக்கமாக பயன்படுத்தும் தூள் உப்பிற்கு பதிலாக  கல்லுப்பு அல்லது ராக் சால்ட் (Rock Salt) என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் உப்பை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

இது எப்படி ஆதிகாலத்து உணவு முறையாகும்?
     கார்போஹைடிரேட் உணவுகளை தவிர்த்து கொழுப்பு உணவு வகைகளை காய்கறிகளுடன் எடுத்துக்கொள்கிறோம் அதனால்தான்.

எவ்வளவு காலம் எடுக்க வேண்டும்?
    முக்கியமாக எடை குறைப்பிற்காக இந்த முறையை பின்பற்றலாம், விரும்பிய எடை குறைந்த பின் வழக்கமான உணவு முறையை பின்பற்றலாம். ஒரு முறை பட்டை தீட்டப்பட்ட அரிசி மற்றும் சிறுதானியங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது.

எவ்வளவு செலவாகும்?
     சற்றே செலவு வைக்கும் உணவு முறைதான், மாதம் ஒருவருக்கு 8000 முதல் 10000 ரூபாய் வரை செலவாகும், சைவ அசைவ உணவு முறையைப் பொருத்தும் செலவு வேறுபடலாம்.

தொடர்வோம்......... 

தொடர்புடையவை
பேலியோ டயட்டும் (Paleo Diet) எடை குறைப்பும்: - 2 




Sunday, 1 April 2018

'மைண்ட்சோன் (Mind Zone)' டீ அடிக் ஷன் மருத்துவமனை:

'மைண்ட்சோன் டீ அடிக் ஷன்' மருத்துவமனை மருத்துவர்களான சுனில் குமார் மற்றும் ஜெயசுதா காமராஜ்: 2002ல், 'தி சைக்காலஜி கிளினிக்' என்ற பெயரில் துவக்கி, மூன்றாண்டுகளுக்கு பின், 'மைண்ட்சோன்' என, இந்த மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டது.

குழந்தைகள் - இளைஞர்கள் பிரச்சனைகள்:
குழந்தைகள், விடலை பருவத்தினருக்கு சிகிச்சை அளிக்கிறோம். தைரியமாக பேச முடியாமல், மற்றவர்களுடன் பழக முடியாமல் இருப்பவர்களுக்கு, மன வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள், முரட்டுத்தனமாக இருப்பவர்கள், பொய் சொல்வது, அதீத பயம், தனிமை நடத்தையில் பிரச்னை, படிப்பில் கவனமின்மை உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெரியவர்கள் பிரச்சனைகள்:
பெரியவர்களை பொறுத்தவரை, மது, போதைக்கு அடிமையானவர், எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவர், பயம் மற்றும் தற்கொலை எண்ணம் கொண்டவர், வன்முறை நடத்தை உடையவர், வீட்டில் வைத்து சமாளிக்க முடியாமல், முரட்டுத்தனமாக நடப்பவர்...அதிக கோபம், உணர்ச்சிவசப்படுபவர், அதீத பாலியல் உணர்வுள்ளவர், துாக்கமின்றி தவிப்பவர், தொழில், வேலை, குடும்பம் தொடர்பான மன அழுத்தம் கொண்டவர், முதிய வயதில் மறதி, தனிமை, இறப்பு பயம் ஏற்பட்டு தவிப்பவர் என, அனைத்து வயதினருக்கும் சிகிச்சை தருகிறோம்.மனநல மருத்துவரிடம் சென்றால், மருந்து தருவார்; ஆனால், நாங்கள் இங்கே எந்த பிரச்னையையும் முதலில், சைக்கோ சோஷியல் முறையில் அணுகி, சிகிச்சை தருகிறோம்.


பிரச்சனைகள் ஆராய்தல்:
பிரச்னையுடன் வருபவர் வளர்ந்த சூழல், அவரது ஆசை, ஏமாற்றம், சுற்றி இருப்பவர்களின் அணுகு முறையை புரிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கிறோம். மருந்துகள் தரும் பயோ சைக்யாட்ரிக் சிகிச்சை உண்டென்றாலும், முதலில் உளவியல் ரீதியிலான சோதனைக்கு பின் தான் சிகிச்சை.

சிகிச்சைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு பயிற்சி:
எல்லா விதமான மனநோய்களுக்கும் கவுன்சலிங், சைக்கோதெரபி அளிக்கப்படுகின்றன. ஹிப்னாசிஸ், ரியாலிடி தெரபி, யோகா ஆகியவையும் சிகிச்சையின் சில பகுதிகளே.சமூகத்தில் நல்வாழ்க்கைக்கு தேவையான திறமைகளை வளர்க்க, தொழில் வேலை தொடர்பான திறமைகளை கையாள, வாழ்வை மேம்படுத்த, முக்கியமாக, குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க பெற்றோருக்கு என, பல பயிற்சி திட்டங்களை வைத்து உள்ளோம்.

டிஜிட்டல் டீ அடிக் ஷன்:
மருந்துகள், பயிற்சி, யோகா, கவுன்சிலிங் என, ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை முறை தான், இங்கு தரப்படுகிறது.இன்று சிறியவர், பெரியவர் அனைவருமே, மொபைலுக்கு அடிமையாகி இருப்பதால், இந்தியாவிலேயே முதன்முறையாக, 'டிஜிட்டல் டீ அடிக் ஷன் தெரபி'யை வெற்றிகரமாக செய்து வருகிறோம். 24 மணி நேரமும் இயங்கும், மனநல அவசர சிகிச்சை பிரிவு ஆரம்பித்துள்ளோம்.
--தினமலர் நாளிதழிலிருந்து

மன நலமும் உறவுகளும் (@ Doordarshan)

Mind Zone is a 70 bedded Psychiatric Hospital for Alcohol & Drug De-addiction, Psychiatric Emergencies (suicide and violent behavior) and other Behavioral issues. A speciality center for Psychology, Psychiatry and Social Work.


Friday, 26 January 2018

சரும ஆரோக்கியம்..... முழு ஆரோக்கியம்.

அழகுக்கலை நிபுணரும், அரோமாதெரபிஸ்டுமான கீதா அசோக்: 'அழகு என்பது ஆற்றல்; புன்னகை என்பது ஆயுதம்' என்றொரு பழமொழி உண்டு. இன்றைய சூழலில் அழகு என்பது ஆரோக்கியம். சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்த துவங்கினாலே, முழு ஆரோக்கியத்தை நோக்கி நாம் முன்னேறுவோம்.


முகம் பளிச்சிட:
  • வெதுவெதுப்பான பாலில், கசகசா ஒரு டீஸ்பூன், தோல் எடுத்த இரண்டு பாதாம் பருப்பை ஊற வைத்து, விழுதாக அரைத்து, முகத்தில் பூச, நிறம் மிளிரும். 
  • சிலருக்கு சருமம் உலர்ந்து, சொரசொரப்பாக இருக்கும். அவர்கள், மிகுந்த எண்ணெய் பசையுள்ள, 10 வால்நட்களை, சூடான பாலில் ஊற வைத்து விழுதாக அரைத்து, அதில், ரோஸ் ஆயில், 50 சொட்டு கலந்து, பிரிஜ்ஜில் சேமிக்கவும். இதை, சிறிது எடுத்து முகத்தில் தினமும், 'ஸ்கிரப்' செய்வது போல் தேய்த்தால், இறந்து உலர்ந்து போன செல்கள் நீங்கி, முகம் பளிச்சிடும்.
  • தலா இரண்டு உருளைக்கிழங்கு, பாகற்காயை துருவி, வெயிலில் சருகாக நன்கு காய்ந்ததும், மிக்சியில் பொடித்து சலிக்க வேண்டும். அதில், பாதி பங்கு அரிசி மாவு கலக்கவும். வாரம் இருமுறை, இந்த பொடியுடன் மோர் கலந்து முகத்தில், 'பேக்' போட்டு, 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமத்தின் கருமை நீங்கும்; சுருக்கங்கள் வராமல், சருமம் இறுகும். 
  • பன்னீர் திராட்சையை, கொட்டையுடன் மிக்சியில் அடித்து, காற்று புகாத டப்பாவில் வைத்து, அவ்வப்போது முகம், கழுத்தில் தேய்த்தால், சருமம் தகதகக்கும். 
  • கனிந்த வாழைப்பழ தோலில், சிறிதளவு சர்க்கரை துாவி முகத்தில் தேய்த்தால், 'பேஷியல்' செய்த மாதிரி சருமம் மின்னும். 
கைகளுக்கு...:
  • இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து, கைகளில் தடவி, 'மசாஜ்' செய்து குளித்து வந்தால், கைகளின் நிறம் மேம்படும். 
குழந்தையின் சருமத்திற்கு:
  • மஞ்சள் பூசணிக்காயின் சதைப்பகுதியுடன், பால் சேர்த்து அரைத்து, அதில், ஆவாரம்பூ பொடியை கலந்து, குழந்தையின் உடலில் பூசி, சிறிது நேரம் கழித்து தேய்த்து குளிப்பாட்டி விட, குழந்தையின் சருமம் பொலிவுறும்.
கண்கள் பளிச்சிட:
  • தாமரை இதழ்களை, விளக்கெண்ணெயுடன் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து, காற்று புகாத டப்பாவில் அடைத்து, பிரிஜ்ஜில் சேமிக்கவும். தினமும், இந்த விழுதை, கண்களை சுற்றித் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவினால், கண்கள் பளிச்சிடும்; கருமை மறையும்.
உதடு கருமைக்கு:
  • பீட்ரூட் சாற்றில் சிறிது கிளிசரின், தேன், எலுமிச்சை எண்ணெய் ஐந்து சொட்டு கலந்து, பஞ்சில் தொட்டு ஒற்றி எடுத்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
--தினமலர் நாளிதழிலிருந்து.

ஏழே நாளில் சருமம் ஜொலிக்கும்!

சருமத்தில் மாற்றத்திற்கு, 'டிப்ஸ்' கூறும், பியூட்டிஷியன், ஷீபா தேவி: அடிப்படையான சரும ஆரோக்கியமே, அழகுக்கு அஸ்திவாரம்.
முதல் நாள் காலை, வெறும் வயிற்றில் தேன் சேர்த்த எலுமிச்சை ஜூஸ், காலை உணவுக்கு பின், ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், இரண்டு கேரட் சேர்த்த ஜூஸ், மதிய உணவுடன், ஒரு ஆப்பிள், இரவு உணவுக்குப் பின், சர்க்கரை சேர்க்காத மாதுளை ஜூஸ் சாப்பிடலாம். தலா அரை டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவி துாங்கலாம்.
இரண்டாம் நாள் காலை, தேன் கலந்த கிரீன் டீ, உணவுக்குப் பின், தக்காளி ஜூஸ், மதியம், சோயா பீன்சை சுண்டல் அல்லது பொரியல், இரவு, சர்க்கரை சேர்க்காத பால் சாப்பிடலாம். அரிசி மாவு, தயிர் கலந்து முகத்தில் தடவி கழுவலாம்.
மூன்றாம் நாள் காலை, புதினா சேர்த்து கொதிக்க தண்ணீரை வடிகட்டி, அதில் எலுமிச்சைச்சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம். உணவுக்குப் பின், வாழைப்பழம், மதியம், கிவி ஜூஸ், இரவு, செவ்வாழைப்பழம் சாப்பிடலாம். வாழைப்பழம், ஊறவைத்த பாதாம் விழுது சேர்த்து, முகத்தில் தடவி கழுவலாம்.
நான்காம் நாள் காலை, கேரட், பாதாம், தேங்காய் பால் சேர்த்து அரைத்தும், உணவுக்குப் பின், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ், தேன் சேர்த்து குடிக்கலாம். மதியம், ஆரஞ்சுப் பழம். இரவு, பாதாம், குங்குமப்பூ, ரோஜா இதழ் சேர்த்து அரைத்து, பாலில் கலந்து குடிக்கலாம். பாலில், குங்குமப்பூவை கரைத்து, ஆலிவ் ஆயில் கலந்து தடவி கழுவலாம்.
முதல் நாள் இரவே, ஒரு கப் தண்ணீரில், அரை டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் கறுப்பு உலர் திராட்சை மற்றும் மூன்று ஆல்பகோடா பழம் ஊற வைத்ததை, ஐந்தாம் நாள் காலை குடிக்கலாம். உணவுடன் தக்காளியை பச்சையாகவும், மதியம், 'டார்க் சாக்லேட்' கொஞ்சம் சாப்பிடலாம். இரவு, பப்பாளி சாப்பிடலாம். கற்றாழை ஜெல்லுடன், கெமிக்கல் கலக்காத பன்னீர் கலந்து முகத்தில் தடவி கழுவலாம்.
ஆறாம் நாள் காலை, இனிப்பு சேர்க்காத தக்காளி ஜூஸ், உணவுடன் ஒரு கப் அன்னாசிப் பழம், மதியம், அரிசி உணவு தவிர்த்து கேழ்வரகு அல்லது ஓட்ஸ். இரவு, மாதுளம் சாப்பிடலாம். வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி கழுவலாம்.
ஏழாம் நாள் காலை, குங்குமப்பூ, தேன் சேர்த்த பால், உணவுக்குப் பின், பப்பாளி ஜூஸ், மதியம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, அவகாடோ ஜூஸ், இரவு, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் சாப்பிடலாம். முட்டை வெள்ளைக் கருவுடன், தேன், எலுமிச்சைச்சாறு சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவலாம். காபி, டீயை நிறுத்தி, வெறும் வயிற்றில் மற்றும் காலை, மதியம், இரவு உணவுக்கு பின், ஏழு நாட்களுக்கு இதைத் தொடர்ந்தால், சருமம் ஜொலிக்கும்.
--தினமலர் நாளிதழிலிருந்து.



Wednesday, 13 December 2017

காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்

தினமலர் இணையதளத்தில் எனக்கு பிடித்த இரண்டு பகுதிகள் இவை: (i) சொல்கிறார்கள் (ii) நிஜக்கதை. எனது பதிவுகளில் பாதி இதிலிருந்தோ அல்லது இந்த செய்தியை சார்ந்தோதான் இருக்கும். இந்த பதிவு நிஜக்கதை பகுதியிலிருந்து.

அதிகம் நெரிசல் இல்லாத அமைதியான காரைக்கால் கடற்கரையின் காலை வேளையில் ஒரு மாருதி கார் வந்து நிற்கிறது.காரை ஒட்டிவந்தவர் காரை நிறுத்திவிட்டு பின்பக்க கதவை திறக்கிறார் வரிசையாக பொருட்களை இறக்கிவைக்கிறார்.அடுத்த இருபதாவது நிமிடத்தில் இயற்கை மூலிகை பானங்கள் விற்கும் கடை ரெடி.
  • அருகம்புல், வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட், நெல்லிக்கனி சாறாகவும்(juice)
  • சுக்கு காபி, மூலிகை கீரை, முடக்கத்தான் கீரை ஆகியவை சூடான சூப்பாகவும்
  • கேழ்வரகு கஞ்சி, சிறுதானிய கஞ்சி, உளுந்தக்களி, முளைகட்டிய பயிறு ஆகியவை சாப்பிடவும் கிடைக்கிறது.
இவரது கடை எப்போது திறக்கும் என்று எதிர்பார்தவர்கள் போல கடற்கரையில் நடைப்பயிற்சி உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கடையை சுற்றி கூடி தங்களுக்கு வேண்டியதை வாங்கி சாப்பிடுகின்றனர்.

  
சிவ நடராஜன் இவர்தான் இந்த இயற்கை உணவகத்தின் தொழிலாளி முதலாளி எல்லாம். நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு வேலையை விரும்பும் இளைஞர்களில் இவரும் ஒருவராகத்தான் இருந்தார். மலேசியா,சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை பார்த்தவர் இவரது தந்தையும் இயற்கை மூலிகை உணவுப்பொருள் தயாரித்து விற்றுவந்தவருமான ஜெயச்சந்திரன் "கையில் நல்லதொரு ஆரோக்கியமான தொழில் இருக்கேப்பா இதை ஏன் செய்யக்கூடாது?" என்றதும் உடனே சரி என்று சொல்லி தொழிலில் இறங்கிவிட்டார். இவருக்கு பக்க பலமாக இருப்பது இவர் மனைவி லலிதா.

சுற்றுச்சுழல் ஆர்வலர் என்பதால் பிளாஸ்டிக் என்பது அறவே இல்லை.

ஓரு முறை வாடிக்கையாளர் உபயோகித்த ஸ்டீல் டம்ளரை மறுமுறை உபயோகிப்பது கிடையாது,வெந்நீரால் கழுவியபிறகு மறுநாள்தான் உபயோகிக்கிறார்.

காசு வருமே என்பதற்க்காக செயல்படுவதும் கிடையாது உதாரணமாக யாராவது அருகம்புல் சாப்பிட்டுவிட்டு உடனே கேப்பைக்கூழ் கேட்டால் அருகம்புல் சாறு சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது அப்போதுதான் அருகம்புல்லின் மருத்துவத்தன்மை உடம்புக்கு கிடைக்கும் என்று சொல்லி அவர் கேட்ட கேப்பைக்கூழை விற்கமாட்டார்.

வெளிநாடுகளில் வேலை பார்த்து பணம் சம்பாதித்தபோது இல்லாத மன நிறைவு இந்த இயற்கை உணவகத்தின் மூலம் கிடைக்கிறது, பண வரவு குறைவு ஆனால் மனநிறைவு அதிகம் எனக்கு மனநிறைவுதான் தேவை என்று சொல்லும் சிவ.நடராஜனுக்கு ஒரு கனவு உணடு, அது முழுக்க முழுக்க சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் இயற்கை உணவகம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற அவரது அந்தக்கனவு விரைவில் நனவாகட்டும்.

சிவ.நடராஜனுடன் பேசுவதற்கான எண்:9965970290.
காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்

Tuesday, 14 November 2017

கறிவேப்பிலையின் மருத்துவ நற்குணங்கள்:

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பயன் குறித்து கூறும், இயற்கை மருத்துவர், எஸ்.நந்தினி:

 

கருமுட்டை உற்பத்தி: கறிவேப்பிலையில் உள்ள, 'கார்பசோஸ்' என்ற ஆல்கலாய்டுகள், கருமுட்டை உற்பத்தியை துாண்டுகிறது.

பித்த மற்றும் கருப்பை சூடு: 20 கிராம் கறிவேப்பிலையுடன், 3 கிராம் சீரகம், 1 கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்து, காலையில், வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால், பித்த மற்றும் கருப்பை சூடு சரியாகும்.

கறிவேப்பிலை - 100 கிராம், மிளகு - 5 கிராம், சீரகம் - 5 கிராம், தோல் நீக்கிய சுக்கு - 2 கிராம், பெருங்காயம் - 2 கிராம் என, அனைத்து பொருட்களையும் தனித்தனியே இளம் வறுவலாக வறுத்து, உப்பு சேர்த்து அரைத்து துாள் செய்து கொள்ளவும்.
வயிற்றுப் பொருமல், மந்தம், அஜீரணம்:
தினமும் பகல், இரவு இரண்டு நேரமும் ஒரு தேக்கரண்டி அளவு உணவில் சேர்க்க, வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லை, பித்த வாயு, மந்தம், அஜீரணம் சரியாகும்.

 தழும்பு மறைய: சிறிதளவு கறிவேப்பிலையுடன் கஸ்துாரி மஞ்சள், கசகசா, பட்டை சேர்த்து அரைத்து, அம்மை நோயால் வந்த தழும்புகளில் தேய்த்து வந்தால், தழும்பு மறையும்.
  • இரும்பு சத்து, பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள கறிவேப்பிலை, ரத்த சோகையை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.
  • முடி கொட்டுவதைத் தவிர்க்க, செரியாமையைப் போக்க, 'அமீபியாசிஸ் 3' எனப்படும் ஒரு வகை வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த, இன்றியமையாத மூலிகை, கறிவேப்பிலை.
  • வயோதிகத்தில் வரும், 'அல்சைமர்' எனும் ஞாபக மறதியைக் குறைக்கும். 
  • உடலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தத்தின் அளவை சீர்படுத்தி, பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. 
  • கல்லீரல் மற்றும் கணையத்தை பலப்படுத்துகிறது.  கறிவேப்பிலை சாறு அருந்தி வர, கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
  • ரத்த சர்க்கரை அளவை, 42 சதவீதமும், ரத்தக் கொழுப்பை, 30 சதவீதமும் கறிவேப்பிலை குறைப்பதாக, சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 
  • கறிவேப்பிலையில் சிறிது நீர் சேர்த்து, சங்கால் அரைத்து முகப்பருவில் தடவினால், பருக்கள் மறையும்.
  • இளநரையை கறிவேப்பிலை தடுக்கிறது.
  • கறிவேப்பிலை மற்றும் மிளகு சேர்த்து, தினமும் மூன்று மாதங்கள் பருகி வர, இடுப்பு மற்றும் வயிற்றை சுற்றியுள்ள தளர்ந்த உடலை குறைத்து, அழகை மேம்படுத்தும்.
  • கறிவேப்பிலை பொடியுடன் சிறிது சர்க்கரைப் பொடி கலந்து, காலை, மாலை, ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, நீர்க்கோவை, சூதக வாயு தீரும்.
கறிவேப்பிலையின் மகத்துவம் அறிந்து உபயோகிப்போம். உணவே மருந்து.

 --தினமலர்  நாளிதழிலிருந்து.

Wednesday, 8 November 2017

கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்

கண்ணாடி அணிந்து துன்புறும் மக்களுக்கு எளிய பயிற்சி முறை மற்றும் மருத்துவம்.

கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய...Mudra for eye issues ..Ayya Pasukkanna


குழந்தைகளை ஜெயில் போல் ஸ்கூலில் அடைக்கலாமா?.....

  • துள்ளி விளையாடும் பிஞ்சு குழந்தைகளை ஜெயில் போல் ஸ்கூலில் அடைக்கலாமா?. 
  • நாம் என்னென்ன தவறு செய்கிறோம்? 
  • முதல் ஏழு வருடங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தருவது என்ன என்பதை பொறுத்துதான் அவர்களின் வாழ்க்கை அமையும்.
தெரிந்து கொள்ளுங்கள். -- காயத்ரி இளங்கோ (Child Psychologist) அவர்களின் 11 மற்றும் 13 நிமிட காணொளிகள்.

Gayatri Ilango - Child Psychologist  100% ORGANIC SCHOOL 

தொடர்புடைய பதிவுகள்:
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி  
வாழ்வியல் கலை விளையாட்டு!
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!  
வழிகாட்டினால் போதும்; குழந்தைகள் கற்றுக் கொள்வர்!
பெற்றோர்களுக்காக


Friday, 29 September 2017

"ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா?" - ஆவாரையின் நன்மைகள்

ஆவாரையின் நன்மைகளை கூறும், சித்த மருத்துவர், கே.பி.அர்ஜுனன்: 'ஆவாரை பூத்திருக்க, சாவாரைக் கண்டதுண்டா!' என்ற பழமொழி உண்டு. ஆவாரம் பூவை புங்கை மரத்தின் நிழலில் உலர்த்தி பொடியாக்கிய துாளை, தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால், சகல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். இதனால் தான், இந்த பழமொழி வந்தது. குத்து செடி இனத்தை சேர்ந்த ஆவாரை, 10 அடி உயரம் வரை வளரும். இதன் இலை, பூ, பட்டை, விதை, பிசின், வேர் என எல்லாமே மருந்துக்கு பயன்படக் கூடியவை. ஆனாலும், பூவுக்கு மருத்துவ குணம் அதிகம். ஆவாரம்பூவில் சட்னி, துவையல், சாம்பார், தோசை என, பல உணவு வகைகளை செய்து சாப்பிடலாம்.



சோர்வு நீங்க:
மதுப்பழக்கத்தால் உடலில் சோர்வு ஏற்பட்டு, கல்லீரல் வீக்கம் மற்றும் பாதிப்பு உண்டாகி, மிகுந்த பிரச்னை உண்டாகும். அத்தகைய சூழலில், கால் டீஸ்பூன் ஆவாரம்பூ பவுடரை, சூடான பாலில் கலந்து, 48 நாட்கள் குடித்து வந்தால், நோய் அனைத்தும் நீங்கி, புதுத்தெம்பு கிடைக்கும்.

சர்க்கரை பிரச்சனைக்கு:
சர்க்கரை நோய் பாதித்தவர்கள், ஆவாரம்பூ பொடியை சூடான பாலில் கலந்து, காலை, மாலை என தொடர்ந்து அருந்தி வந்தால், சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய்க்கு ஆளானவர்கள் தவிர, மற்றவர்கள், ஆவாரம்பூ பொடியுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு:
ஆவாரம்பூ அல்லது அதன் பொடியை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அதனுடன் பால் சேர்த்து குடித்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ஆவாரம்பூ இதழ்களை, கறிக்கூட்டாக செய்தும் சாப்பிடலாம். இதனால் உடல் சூடு, உடல் நாற்றம், களைப்பு, வறட்சி, மேகவெட்டை போன்றவை சரியாகும்.

மிருதுவான சருமத்திற்கு:
பாசிபருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக்கிழங்கு மற்றும் கஸ்துாரி மஞ்சளுடன், சம அளவு ஆவாரம்பூ, சிறிதளவு வசம்பு சேர்த்து அரைக்க வேண்டும். சோப்புக்கு பதில் இந்த மூலிகை கலவையை தேய்த்து குளிப்பதால், சருமம் பொன் நிறமாக மாறும். அத்துடன், சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளி மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.

தசை பிசகுதல், மூட்டு நழுவுதல்:
பசுமையான ஆவாரை இலைகளை மையாக அரைத்து, தயிர், நாட்டு கோழி முட்டையின் வெள்ளைக் கரு, பொடியாக்கிய கறுப்பு உளுந்து, இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து, தசை பிசகுதல், மூட்டு நழுவுதல் மற்றும் எலும்பு உடைதல் போன்றவற்றுக்கு பற்று போட்டு வந்தால், பலன் கிடைக்கும்; விலகிய மூட்டை சரி செய்து, அதன் மீது பற்று போட வேண்டும்.

பற்கள் பிரச்சனைக்கு:
ஆவாரம் பட்டையை நன்றாக காய வைத்து இடித்து பொடியாக்கி, சலித்து கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் அளவு பொடியை, நான்கு டம்ளர் தண்ணீருடன் கலந்து, ஒரு டம்ளராக வற்றுமாறு கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி, இளஞ்சூட்டுடன் வாய் கொப்பளித்து வந்தால், பல் இறுகி கெட்டிப்படும். மேலும், ஆடிக் கொண்டிருந்த பற்களில் வலி இருந்தால் சரியாகிவிடும். பல் ஈறுகளில் வீக்கம், சீழ் பிடித்தல் போன்ற பாதிப்புகள் இருந்தால், இந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பாதிப்புகள் நீங்குவதுடன், பற்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.

--தினமலர் நாளிதழிலிருந்து

ஆவாரம் பூ தரும் அற்புத நன்மைகள்
ஆவாரம் பூ மருத்துவ குணம்

Sunday, 9 July 2017

தேங்காய்ப்பால்-வீட்டிலேயே ஒரு புத்துணர்ச்சி முகாம்

  • தேங்காய்ப் பாலைக் கூடுமானவரை வெறும் வயிற்றில் குடிப்பதே நலம். அதைக் குடித்த பின்னரும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு வேறு எதையும் உண்ணாமலும் பருகாமலும் இருப்பது நல்லது.
  • தேங்காய்ப் பாலை அப்படியே குடிப்பது மட்டுமல்லாமல், சோற்றுடன் பிசைந்தும் உண்ணலாம். சோற்றுடன் சேர்க்கிறபோது ஐந்தாறு சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்தால், தேங்காய்ப் பால் மோரின் சுவையைப் பெறும். எனவே, பால் மோருக்குப் பதிலாகத் தேங்காய்ப் பால் மோரைப் பயன்பாட்டில் நிரந்தரமாக்கிக்கொள்ளலாம்.
  • அவலுடன் தேங்காய் பாலைச் சேர்த்து ஊறவைத்து, எலுமிச்சைச் சாற்றைக் கலந்தால் ‘உடனடி தயிர் சாதம்’ தயார். இந்தத் தயிர் சாதம் வயிற்றைத் தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டது. பால் தயிர் சாதம் தரும் எதிர்விளைவுகள் எதையும் இது தராது. 


உடனடி சத்து உணவு
நீருக்குப் பதிலாகத் தேங்காய்ப் பாலை ஊற்றிச் சோறு சமைப்பது பள்ளிப் பிள்ளைகளின் மதிய உணவுக்கு ஏற்றதாக அமையும். இது சத்து மிகுந்த உணவாக மட்டுமல்லாமல், சுவை மிகுந்த உணவாகவும் இருக்கும். 

அதேபோல, சோறு வெந்து கொண்டிருக்கிறது. குழம்பு இன்னும் தயாராகவில்லை. அவசரமாக வெளியில் கிளம்ப வேண்டும் என்றால் சோற்றைக் கொட்டி ஆற வைத்துவிடுங்கள். அரை மூடித் தேங்காயைத் துருவி, அந்தப் பூவை எடுத்துச் சோற்றின் மீது சாரலாகத் தூவிவிட்டு, ஒரு தக்காளியையும், அரை வெங்காயத்தையும் பொடியாக வெட்டி வண்ணமயமாகச் சிதற விட்டு, சிறிதளவு நெய்யைப் படரவிட்டுப் பிசைந்து உண்டால் சிக்கனமான, ஆரோக்கியமான உணவு முடிந்தது. ஒரு ‘புல் மீல்ஸ்' தரும் நிறைவை இது தரும்.அதன் சுவை நீண்ட நேரத்துக்கு நாவில் நின்று நர்த்தனமாடும். மறுநாள் காலையும் ‘கலகல’வென்று இருக்கும். 

சிறுநீரகம் பத்திரம்
‘ஏதாவது ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டுவிட்டுப் போகிறேன்’ என்று கடையில் கால் மணி நேரம் நின்றிருந்து, வறுத்த சோற்றை அரையும் குறையுமாக மென்று உள்ளே தள்ளி அவதிப்படுவோர் நம்மில் அதிகம்.
இந்த வறுத்த சோறு (ஃபிரைடு ரைஸ்) தொண்டையை வறளச் செய்து மீண்டும் மீண்டும் தண்ணீரைக் குடிக்க வைத்து, சிறுநீரகத்தை ‘அரை ஹார்ஸ் பவர் மோட்டா'ராகத் தொடர்ந்து வேலை வாங்கி, தளர்ந்து போக வைத்துவிடுகிறது. அதனால்தான் இந்தக் காலத்தில் ஆண் - பெண் இருபாலரும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ள நேரிடுகிறது. முடி கொட்டுதலில் தொடங்கிக் குழந்தைப் பேறின்மை, கர்ப்பப் பைக் கட்டிகள்வரை பல்வேறுத் தொல்லைகள் இளம் வயதிலேயே தோன்றுவதற்குக் காரணம், சிறுநீரகங்களைச் சவட்டி வேலை வாங்குவதுதான். உபாதையைத் தரும் ‘ஃபாஸ்ட் ஃபுட்'டுக்கு பதிலாக, மேற்கண்ட உடனடிச் சத்து உணவைத் தாராளமாக உண்ணலாம். 

தேங்காய்ப்பால் குளியல்
சரி, ‘முடிசூடிய வேந்தர்' தேங்காய்க்கு வருவோம். பிரியாணி சமைக்கிறபோது, அதை நான்கைந்து மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்கப் போவதில்லை என்றால், நெய்யைத் தவிர்த்துவிட்டு அல்லது குறைத்துக்கொண்டு, அதற்கு ஈடாகத் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் காலத்தில் கடை நெய், அத்தனை பாதுகாப்பானதாக இல்லை என்பது மட்டுமில்லாமல், பொருளாதார ரீதியாகவும் தேங்காய்ப் பால் சிக்கனமாக இருக்கும். நெய்யைக் காட்டிலும் செரிமானமும் எளிதாகும். 

தேங்காய்ப் பால் வடித்த பின் கிடைக்கும் திப்பியை எடுத்துச் செடிகளுக்குப் போட்டால், திப்பியை உண்ண வரும் எறும்புகள் செடியின் வேர்ப்பகுதியில் இலவசமான நுட்ப உழவு ஒன்றை நிகழ்த்தும். அதனால் செடிகளுக்கு ‘போனஸ் காற்று' கிடைக்கும். 

எண்ணெய்க் குளியல் அருகிவிட்ட நிலையில், தேங்காய்ப் பாலைத் தேய்த்துக் குளித்தால் வறண்ட சருமம் ஈரப்பதம் பெறும் (குளியல் முறைகள் பற்றி, பின்னர் விரிவாகப் பார்ப்போம்). கண் எரிச்சல், உடல் சூடாகிவிட்டது போல் உணர்வது போன்ற நேரத்தில் ‘தேங்காய்ப் பால் குளியல்’ மேற்படி தொல்லைகளிலிருந்து உடனடி நிவாரணம் தரும். 

உடல் கழிவை வெளியேற்ற
போதிய மனப்பக்குவமும் விரதப் பயிற்சியும் இருந்தால் ஓரிரு நாட்களுக்குத் தேங்காய் மோர் உண்டு, உடலுக்குப் புத்துணர்ச்சி முகாம் ஒன்றை வீட்டிலேயே நடத்தலாம்.எப்படி…? 

ஒரு தேங்காயுடன் நான்கு பெரு நெல்லிக்காயைச் சேர்த்து அரைத் தால், இதமான புளிப்புச் சுவையில் மோர் போன்ற பானம் கிடைக்கும்.
விடுமுறையைக் கொண்டாடுகிறோம் என்று சொல்லி ஒருசில ஆயிரங்களைக் கரைத்து, உடலுக்கு மேலும் சில உபாதைகளைக் கொண்டுவந்து சேர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, இரண்டு நாட்களுக்கு முழுக்க முழுக்க இந்த மோர்ப் பானத்தை மட்டுமே அருந்திவந்தால், உடல் கழிவுகள் நீங்குவது மட்டுமில்லாமல், வேலை நாளில் சுறுசுறுப்புடன் பணியாற்றலாம். 

நெல்லியும் தேங்காயும் உடலில் நுண் சத்துகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதால், அடிக்கடி எதையேனும் உண்ண வேண்டும் என்ற பேராவல் தணிந்துவிடும். பசிக்கிறபோது மட்டுமே உரிய உணவை உண்பது என்ற பக்குவத்தைப் பெற்றுவிடுவோம். 

காலத்துக்கு ஏற்றவாறு எளிய முறையில் தேங்காயின் முழுப் பயனும் நம் உடலில் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்பதற்காகவே, இந்தத் தேங்காய்ப் பால் பரிந்துரை. 

சத்தும் சுவையும் மிகுந்த லஞ்ச் பாக்ஸ்
# ஒரு மூடித் தேங்காயைக் கீறிப் போட்டு, இரண்டு முறை மிக்ஸியில் சுற்றியெடுத்து 400 மில்லி தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும்.
# பச்சரிசி 200 கிராம் எடுத்து ஒருமுறை மட்டும் அலசி நீரை வடிக்கவும்.
# பச்சைப் பட்டாணி அல்லது முளை கட்டிய பச்சைப் பயறு ஒரு கோப்பை அளவு எடுத்துக்கொள்ளவும்.
# சிறிய கேரட்டைப் பொடிப் பொடி சதுரங்களாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்துபோட்டு இளஞ்சூட்டில் பொரிக்கவும். ஒரு அங்குல நீளப் பட்டை, நான்கு கிராம்பு, ஒரு அன்னாசி பூ ஆகியவற்றை உடன் சேர்த்து மூன்று நிமிடங்கள் புரட்டிய பின்னர், அரை அங்குல இஞ்சியைத் தட்டிப் போட்டு அது வதங்கும் முன்னரே பயறு, கேரட்டை தாளிப்புடன் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசம் போகும்வரை கிளறிவிட்டு, தேங்காய்ப் பாலை அதில் ஊற்றவும். இப்போது அரிசி, தேவையான அளவு உப்பு போட்டுக் குக்கரை மூடிவிடவும். இரண்டு விசில் வந்த பின்னர் இறக்கி, ஆவி அடங்கிய பின்னர் எடுத்துக் கிளறி ஆற விட்டு, புதினா சட்னி தொட்டுச் சாப்பிடலாம். இது எளிமையான சத்தும் சுவையும் நிறைந்த உணவு. சத்து நிறைந்தது என்பதால் குறைவாகச் சாப்பிட்டாலே போதும்.
இது வண்ணமயமாகத் தோற்ற மளிக்கும் என்பதால் பள்ளிப் பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸுக்கு மிகவும் ஏற்றது. சுவையாகவும் இருக்கும் என்பதால் டப்பா காலியாக வீடு திரும்பும். 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...