Thursday 5 December 2019

நெரூர் சதாசிவ ப்ரமேந்திராள் ஜீவ சமாதி

வெகு நாட்களுக்கு முன்பே இந்த ஜீவ சமாதி பற்றி தெரியும், போக வேண்டும் என்றும் தோன்றிக்கொண்டே இருக்கும்; ஆனால் இன்றுதான் நேரம் காலம் கூடி வந்தது போல.....அவரின் அருளை பெற. கரூரை அடுத்து 14 கி மீ தொலைவில் உள்ள நெரூர் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது சதாசிவ ப்ரமேந்திராள் அவர்களின் சமாதி. ஸ்ரீ காசி விசுவநாதர் விசாலாட்சி ஆலயமும் அதன் பின்புறம் சமாதியும் உள்ளது. இவ்வளவு தொலைவில் உள்ளதால் பக்தர்கள் குறைவாக இருப்பார்கள் என்று நினைத்தால்.....அது தவறு என்று நிரூபிப்பதை போல பக்தர்கள் வந்த வண்ணமே இருந்தார்கள். கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது; 13 ருபாய் கட்டணம். ஆட்டோவில் 250 ருபாய் --- செல்வதற்கு மட்டும், காத்திருந்து மீண்டும் கரூர் கூட்டி வர வேண்டுமென்றால் 400 ருபாய்.



(மூலம் :: Thedal blog)




(பேருந்து கால அட்டவணை)

தொடர்புடையவை:

ஜீவ சமாதிகள்:
Thedal

Friday 15 November 2019

அரிது அரிது....இவரை போன்றோரை பார்ப்பது அரிது

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆயங்குடி பள்ளம், பாக்கியராஜ் நகரில் வசிக்கும் நீலாம்பாள்: அரியலுார் மாவட்டம், தேவாமங்கலத்தைச் சேர்ந்த வாசுதேவன் என் கணவர். எனக்கு, 17 வயதில் திருமணம்; 10 ஆண்டுகள் குழந்தை இல்லை. போகாத கோவில் இல்லை. பல ஆண்டு கால வேண்டுதலுக்குப் பின், மூன்று குழந்தைகள் பிறந்தன. இரண்டு ஆண்கள்; மகள் பிறந்தனர். திருமணமாகி, 17 ஆண்டுகளில் கணவர் இறந்து விட்டார். மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய கட்டாயம்.

தலையில் கூடை சுமந்து, பழ வியாபாரம் செய்திருக்கிறேன்.பள்ளிக்கூடம் அருகே, சின்னதாக, பழ வியாபாரம் செய்து வந்தேன். தனியாளாக போராடி, மூன்று பேரையும் வளர்த்து, திருமணம் முதற்கொண்டு அனைத்தையும் சரியாக செய்து விட்டேன். இரண்டு மகன்களும் இறந்து விட்டனர்; மகள் லட்சுமி மட்டும் தான் இருக்கிறாள். அவளுக்கு வயது, 60. பள்ளிக்கூடம் அருகே, நான் பார்த்த, பழ வியாபாரத்தை அவள் செய்கிறாள். அவள் வீட்டில், பேரன் மற்றும் மகளுடன் வசிக்கிறேன்.

என் வயதை எண்ணிக் கொண்டு இருப்பதில்லை. எனக்கு, 102 வயது என்று, உறவினர்கள் தான் சொல்கின்றனர். உடம்பில் தெம்பு இருக்கும் வரை, தலைச்சுமையாக சுமந்து, பல இடங்களுக்கும் சென்று, பழங்களை விற்றேன்; இப்போது முடியவில்லை. 'நீ எதுவும் செய்ய வேண்டாம்; நாங்கள் சோறு போடுகிறோம்' என்கின்றனர், உறவினர்கள். ஆனால், என்னால் சும்மா உட்கார்ந்து, சோறு சாப்பிட முடியாது. கட்டையில் வேகும் வரை, உழைத்தபடி தான் இருப்பேன். 

காலையில், டீயை குடித்து விட்டு, ரயில்வே லைன் கரைக்கு, அரிவாளோட போவேன். குளஞ்சி தட்டையை அறுத்து, காய வைப்பேன். அதற்குள் சூரியன் உச்சிக்கு வந்து விடும். கேழ்வரகு அல்லது கம்மங்கூழை குடிச்சுட்டு, கொஞ்ச நேரம் தரையில் படுப்பேன். தட்டை காய்ந்ததும், அதை கம்பு வைத்து தட்டி, மூன்று, நான்கு கட்டுகளாக கட்டி, ஒரு கட்டு, 10 ரூபாய்னு விற்று, கிடைக்கிற பணத்தை வீட்டில் கொடுத்து விடுவேன். சாப்பிடும் சாப்பாட்டிற்கு, ஏதாவது முடிந்த வேலையைச் செய்ய வேண்டும் அல்லவா!

இரவு ஒரு வேளை மட்டும் தான், அரிசி சாதம் சாப்பிடுவேன். மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். நோய், நொடி என படுத்ததில்லை. இப்ப கொஞ்ச நாட்களாகத் தான், வயிற்றுப் பிரச்னை இருக்குது. கையும், காலும் நல்லா இருப்பதால், அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை வாங்கவில்லை. எனக்கு எதற்கு அந்தப் பணம்... இதுவரையிலும், யார் கிட்டேயும் இலவசமாக எதையும் வாங்கியதில்லை!

--தினமலர் நாளிதழிலிருந்து

Tuesday 12 November 2019

விதைத்த பின் அறுவடைக்கு போனால் போதும்!

எளிதாக வளரும் சிறுதானியமான, சாமை பயிரிடும், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் - பாலக்கோடு சாலையில் உள்ள, கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி காளி: எனக்கு, 3 ஏக்கர் நிலமிருக்கிறது. 1 ஏக்கரில், ஆரியம் எனப்படும் கேழ்வரகு, தலா, 30 சென்ட் நிலத்தில் சாமை, கம்பு பயிரிட்டு உள்ளேன். ஆடி, 18க்கு முன் விதைத்தேன்; ஆனியில் கிடைத்த மழைக்கு, உழவு ஓட்டினேன். டிராக்டர் உழவு கிடையாது. உழவுக்கு என, இரண்டு நாட்டு மாடு வைத்திருக்கிறேன். அதை வைத்து, நானே உழவு ஓட்டினேன். 1 ஏக்கருக்கு, 5 கிலோ சாமை விதை தேவைப்படும்.

விதையை வெளியில் வாங்குவதில்லை; விளைச்சலில் தனியாக எடுத்து வைத்து விடுவேன். உழவு ஓட்டிய வயலில், ஒரு கை விதையை, மூன்று விசிறு என, மூன்று முறை வீசினால் தான், பயிர்கள் கொத்தாக வளராமல், பரவலாக வளரும். சாமை மூன்று மாதப் பயிர். விதைத்து விட்டு விட்டால், அடுத்து, அறுவடைக்குப் போனால் போதும். நாட்டுச் சாமையைத் தான் விதைத்து விட்டுள்ளேன். தேவைப்பட்டால், ஒரு களை எடுத்தால் போதும். தானியம், பச்சை நிறத்துக்கு வந்ததும், அறுவடை செய்யணும். விற்பதற்கு கஷ்டமே இல்லை; சிறுதானிய உற்பத்தியாளர் சங்கத்தில் வாங்கிக் கொள்வர்!

பழனியம்மாள்: 70 சென்ட் நிலத்தில் தான், சாமை பயிரிட்டுள்ளோம். விதைப்பதற்கு ஒரு மாதம் முன், 30 நாட்களுக்கு அந்த இடத்தில், ஆட்டுக்கிடை போட்டிருந்தோம்; இரண்டு சால் உழவு ஓட்டினோம். வேறு எந்த உரமும் போடலை; பயிர்கள் செழிப்பாக வளர்ந்து உள்ளன. எப்படி போனாலும், நான்கு மூட்டை அதாவது, 400 கிலோ சாமை கிடைக்கும். 1 கிலோ, 40 ரூபாய்க்கு போனால் கூட, 16 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். உழவு, விதை மட்டும் தான் செலவு; மற்றதெல்லாம் லாபம் தான்! கவுரி: சாமை அரிசி சோறும், ராகி எனப்படும் கேழ்வரகு களியும் தான், இன்றும் எங்கள் வீட்டில் முக்கியமான சாப்பாடு. இரண்டையும், உரலில் கையால் குத்தி தான் தவிடு நீக்குகிறோம்.

ரேஷன் கடை வந்த பிறகு தான், நெல் அரிசி சாதத்தை அவ்வப்போது பார்க்கிறோம். முன்பெல்லாம், சோறு என்றாலே, சாமை அரிசி சோறு தான். கொள்ளுத்தண்ணீர் ரசத்தை, சாமை சோற்றில் கலந்து சாப்பிட்டா, அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும், நாட்டு மாட்டுத் தயிரை, பழைய சாமை சாதத்துல ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால், அமிர்தம் போல இருக்கும். மழையை நம்பியே பயிரிடுகிறோம். விளைச்சல் கிடைக்கும் என நம்பி விதைக்கிறோம்; எதிர்பார்த்தது போலவே, நல்ல விளைச்சல் கிடைக்குது; நம்பிக்கையாக அறுவடையும் செய்கிறோம்; நல்ல விலையும் கிடைக்குது!

--தினமலர் நாளிதழிலிருந்து
 

சத்திரம் பேருந்து நிலைய புதிய பேருந்து நிறுத்த இடங்கள்:

திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் (பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்குமிடம்) மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் (உள்ளூர்  மற்றும் வெளியூர் பேருந்துகள் நிற்குமிடம்) என்று இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளது தெரிந்ததே. Smart city திட்டத்தின் ஒரு பகுதியாக சத்திரம் பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது, அடுத்த 2 வருடங்கள் தொடர்ந்து நடைபெறும். இரண்டு தளங்கள், பார்க்கிங் வசதி, ஓய்வறை, பொருட்கள் வைப்பு அறை, ஒதுங்கிடம் உட்பட பல வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்படவிருக்கிறது. அதன் பொருட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன் வரைபடம் கீழே உள்ளது.


--தினமலர் நாளிதழிலிருந்து.



Sunday 10 November 2019

போத்து முறையில் மரங்களை வேகமாக வளர்க்க முடியும்

மரங்களை விரைவில் வளர்க்க வகை செய்யும் தொழில் நுட்பம் குறித்து, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உழவர் சந்தை துணை வேளாண் அலுவலர் அய்யப்பன்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே, பாப்பநாயக்கன்பட்டி சொந்த ஊர். திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படித்தேன்.

புதுக்கோட்டை மாவட்டம், பிசானத்துார் கிராமத்தில், ஆனந்த ராவ் என்பவர், ஆலமரக் கிளையை வெட்டி, போத்து முறையில் நடவு செய்து, பண்ணையை சோலைவனமாக மாற்றினார். அந்த பகுதியில் பணியாற்றிய போது, ஆனந்த ராவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மூலம் தான், போத்து முறை நடவு பற்றி தெரிந்தேன்.

போத்து என்றால், எங்கள் பகுதியில், மரத்தின் கிளை என, பொருள். ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை போன்ற மரங்கள், போத்து முறைக்கு ஏற்றவை; உதியன், வாதமடக்கி வேகமாக வளரும் தன்மை கொண்டவை. இந்த முறைக்கு தேர்வு செய்யப்படும் மரங்கள், 10 ஆண்டுகள் வளர்ந்தவையாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், கை மணிக்கட்டு கனத்தில், அதிக வளைவு இல்லாமல், நேராக இருக்க வேண்டும். அது, ௮ - ௧௦ அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் கொப்புகளை வெட்டி அகற்றி விட வேண்டும். மரத்திலிருந்து நடவுக்காக வெட்டும் கிளையை, கரும்பு வெட்டுவது போல, சரிவாக வெட்ட வேண்டும்.

இன்று நடப் போகிறோம் என்றால், முந்தைய நாளில் கிளைகளை வெட்ட வேண்டும். நடவுக்கு தாமதமானால், கிளையின் அடிப்பகுதியில் ஈரத்துணி சுற்றி, நிழலில் வைக்கலாம். முன்னதாக, ௪ அடி ஆழம், ௪ அடி சுற்றளவுக்கு குழி தோண்ட வேண்டும். அந்த குழியை, ஒரு வாரம், அப்படியே விட வேண்டும். நடவிற்கு முந்தைய நாள் மாலை, ஒரு குடம் தண்ணீரை அந்த குழியில் ஊற்ற வேண்டும். மறுநாள் காலையில், ௫ கிலோ மக்கிய தொழு உரத்துடன், மேல் மண்ணை கலந்து, குழிக்குள், ௧.௫ அடி உயரத்திற்கு நிரப்ப வேண்டும். அந்த குழிக்குள், மரக்கிளை நட்டு, சுற்றிலும் நன்றாக மண் மிதித்து, மண்ணை குவியல் போல வைக்க வேண்டும்.

இல்லாவிட்டால், காற்றின் சலனம், நீர் சலனத்தால், வேர் பிடித்தல் தாமதாகும். கிளையின் உச்சிப் பகுதியில், பசுஞ்சாணத்தை உருண்டை போல பிடித்து வைக்க வேண்டும். அடுத்த, ௪௫ - ௫௦ நாட்களில் இலைகள் துளிர் விடும். வெப்பம் குறைந்த, ஆடி துவங்கி, மார்கழி வரை, இந்த முறையில் மரங்களை நடவு செய்யலாம். இதனால், மரமாக வளரும் காலம் குறைந்து, விரைவில் பலன் கிடைக்கும். பணி ஓய்வுக்குப் பின், கிராமங்களுக்கு சென்று, போத்து தொழில் நுட்பத்தில் நிறைய மரங்கள் வளர்க்க உள்ளேன்.

மூலம் :: தினமலர் (13/8/19 பதிப்பு)

புதன், சனியில் எண்ணெய் தேய்த்துஆண்கள் குளிக்கணும்!

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள்; எப்படி தேய்த்து குளிக்க வேண்டும்; குளித்த பின் என்ன செய்யக் கூடாது என்பது பற்றி, இயற்கை மருத்துவர் எஸ்.இந்திரா தேவி: நான்கு நாட்களுக்கு ஒரு முறை, தலை முதல் கால் வரை, எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உடலில் தேய்த்து குளிக்கலாம். எண்ணெய் தேய்த்து குளித்தால், சளித் தொந்தரவு ஏற்படும் என எண்ணுவோர், எண்ணெயில் மிளகு, பூண்டு, சுக்கு, சீரகம் போன்றவற்றை சேர்த்து காய்ச்சி, வடிகட்டி தேய்க்கலாம். எண்ணெய் தேய்ப்பதை, முதலில் உச்சந்தலையில் இருந்து துவங்க வேண்டும்; உள்ளங்காலில் முடிக்க வேண்டும். குறிப்பாக, கண்கள், நாசி துவாரங்கள், காது, வாய், தொப்புள், ஆண் அல்லது பெண் இனப்பெருக்க உறுப்புகளில், எண்ணெய் நன்றாக படும்படி தேய்க்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்ததும், உடனே குளிக்கக் கூடாது. 10 முதல், 30 நிமிடங்கள் வரை ஊறிய பின், மிதமான சுடுநீரில், சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளிப்பதை, காலை, 7:30 மணிக்குள் முடித்து விட வேண்டும்.புதன் மற்றும் சனிக் கிழமைகளில் ஆண்களும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால், உடல் சருமத்தின் மேற்பரப்பில் வாழும், கண்ணுக்குத் தெரியாத நோய் அணுக்கள், பிராண வாயு கிடைக்காமல் இறந்து விடுகின்றன. இதனால், உடலில் நோய் தொற்றுவதில்லை. கண், மூக்கு, காது, நாக்கு, வாய் ஆகியவற்றில் பலமும், தெளிவும் கிடைக்கும்; உடலுக்கு வலிமை கிடைக்கும்.

தலையில் ரோம வளர்ச்சி அதிகரிக்கும்; ஆயுள் விருத்தி அடையும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நாற்றம் மறைந்து, மணம் கிடைக்கும். சருமத்தின் ஈரத்தன்மை பராமரிக்கப்படும். உயர் ரத்த அழுத்த நோய்கள் குணமாகும். எண்ணெய் குளியல் நல்லது தான் என்றாலும், மழைக்காலங்களில், மாலை, 6:00 மணிக்கு மேல்; காய்ச்சலின் போது; விரத நாட்களில்; மாதவிடாய் காலங்களில்; உடலுக்கு சுகம் இல்லாத நாட்களில் குளிக்கக் கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த நாட்களில், பகலில் உறக்கம் கூடாது. மது, மாமிசம், ஐஸ்கிரீம், இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, கொத்தவரை, மொச்சை, நீர் காய்கறிகளை உண்ணக் கூடாது. அந்த நாட்களில், உடலுறவை தவிர்க்க வேண்டும்!

--தினமலர் நாளிதழிலிருந்து

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

'யூ டியூப்' சமூக வலைதளத்தில், தன் சொந்த தோட்டத்தில் விளையும் பழங்கள், பூக்கள் பற்றிய, 'வீடியோ'க்களை பதிவிட்டு, மாதம், 1 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும், ஆனி யூஜின்: கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள இடக்கன்னு தான், சொந்த ஊர். படித்தது, பொருளாதாரம். வீட்டைச் சுற்றி, ௧ ஏக்கரில் தோட்டம் உள்ளது. அதில் நான் ஆசையாக வளர்த்த மரங்கள், செடிகள் பற்றி நான் எடுத்த வீடியோக்களை இழந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான், 'கிருஷி லோகம்' என்ற, யூ டியூப் சேனலை துவக்கினேன். (https://www.youtube.com/channel/UCS2J-u3UpGI448mgzKvnlXw)

என் தோட்டத்தில் சப்போட்டா, மா, கொய்யா, வாழை, லிச்சி, பலா, பேஷன் புரூட் போன்ற பழ மரங்கள் உள்ளன. பாகற்காய், புடலங்காய், தக்காளி, வெள்ளரி, கத்தரிக்காய், கேரட் போன்ற காய்கறி செடிகளையும் வளர்க்கிறேன். அத்துடன் கற்றாழை, ஜாதிக்காய் போன்ற மருத்துவ குணமுடைய செடிகளையும் வளர்க்கிறேன். என் சொந்த தோட்டத்தை மக்களிடம் காண்பிக்கவே, யூ டியூப் சேனலை துவக்கினேன். கூச்ச சுபாவம் கொண்டவள் நான். கேமரா முன் பேசுவதற்காக, கூச்சத்தை தவிர்த்தேன்; என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன்.

இப்போது என் சேனலுக்கு, மூன்று லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்; இரண்டு கோடி தடவைக்கும் மேல், என் வீடியோக்களை பார்த்துள்ளனர். அந்த சேனலில் வரும் விளம்பரங்களை, வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள், 'கிளிக்' செய்வதன் மூலம் எனக்கு வருமானம் வருகிறது. சராசரியாக மாதம், 1 லட்சம் ரூபாய் கிடைக்கும். சில மாதங்களில் அதற்கும் மேலாக கிடைத்து விடும். வீடியோக்களில் தொழில்நுட்பங்களையும், கூடுதல் விபரங்களையும், என் கணவர் மேற்கொள்கிறார்.

என் சேனலின் முதல் வீடியோ தலைப்பு, 'கேரள வீட்டில் விளைந்த கொய்யா' என்பது. அதில், கொய்யா மரங்களை எப்படி பராமரிக்க வேண்டும்; எந்த பருவத்தில் காய்களை பறிக்க வேண்டும்; பழங்களின் மருத்துவ குணங்கள் என்ன என்பதை விளக்குகிறேன். அதுபோல, ரோஜா செடி என்றால், எத்தகைய செடிகளை வளர்க்க வேண்டும்; எப்படி அந்த பூக்களை பறிக்க வேண்டும்; எந்த செடியிலிருந்து எந்த விதமான மலர் கிடைக்கும் என்பன போன்ற விபரங்களை கூறுகிறேன்.

நான் சொல்லும் விபரங்கள், கூறும் விதம் போன்றவை, வாடிக்கையாளர்களுக்கு பிடித்துப் போயுள்ளது. கிருஷி லோகம் சேனலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, 'டிப்ஸ் பார் ஹேப்பி லைப்' என்ற மற்றொரு சேனலையும் துவக்கியுள்ளேன். வாடிக்கையாளர்களின், 'கமென்ட்'களுக்கு, பதில் அளிப்பதையும் வழக்கமாக வைத்து உள்ளேன். இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; வருமானமும் கூடுகிறது!

--தினமலர் நாளிதழிலிருந்து

இயற்கை விவசாயத்தில் மனிதநேயம் உள்ளது!

பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, ஓவர்குடி விவசாயி, பரமசிவன்: எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளேன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், முழு நேரமாக விவசாயத்தை தான் மேற்கொள்கிறேன். எங்க குடும்பத்திற்கு சொந்தமாக, 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், பாரம்பரிய நெல் ரகங்களைத் தான் பயிரிடுகிறேன். இப்போது, 3 ஏக்கரில், மாப்பிள்ளைச் சம்பா; தலா, 1 ஏக்கரில், காட்டுயானம், கிச்சிலி சம்பா நெல் வகைகளை சாகுபடி செய்கிறேன். கிச்சிலி சம்பா, 135 - 140 நாட்கள்; மாப்பிள்ளை சம்பா, 160 - 165 நாட்கள்; காட்டுயானம், 180 - 185 நாட்களில் அறுவடைக்கு வரும்.

இது போன்ற பாரம்பரிய நெல் வகைகளில், இயல்பாகவே, களை, பூச்சி தாக்குதல் குறைவு; நோய் எதிர்ப்புத் திறன் அதிகம். இந்த நெல் ரகங்கள், நல்ல உயரமான பயிராக வளரும். 50 - 60 நாட்களிலேயே, ஒன்றரை அடி உயரத்திற்கு பயிர் வந்து விடும்; நிழல் விழுவதால், களை ஏற்படாது. இயற்கை விவசாயத்திற்காக நிலத்தை பக்குவப்படுத்த, மாட்டு எரு, ஆட்டுக் கிடையில் கிடைக்கும் சாணம், பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், ஜீவாமிர்தம் போன்ற இயற்கையான பொருட்களை மட்டுமே நிலத்தில் பயன்படுத்துவேன். படிப்படியாக கூடுதல் மகசூல் கிடைக்கிறது. நான் விளைவித்த பாரம்பரிய நெல்லை, அரிசியாகவும், அவலாகவும் மதிப்புக் கூட்டி, நேரடியாக விற்பனை செய்கிறேன். பலர் இங்கேயே வந்து, வாங்கிச் செல்கின்றனர்.

ஏக்கருக்கு, 21 மூட்டை நெல் கிடைத்தது. அதை காய வைத்து, சுத்தப்படுத்தியதில், 20 மூட்டை நெல் கிடைத்தது. அதில், 10 மூட்டையை, அவலாக மாற்றினேன். 300 கிலோ கிடைத்தது. 1 கிலோ, 100 ரூபாய் வீதம் விற்றதில், 30 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. மேலும், 150 கிலோ தவிடு கிடைத்தது. அதை விற்றதில், 1,500 ரூபாய் வந்தது. ஒன்பது மூட்டை நெல்லை, மிஷினில் கொடுத்து, உமியை மட்டும் நீக்கி, அரிசியாக மாற்றியதில், 315 கிலோ அரிசி கிடைத்தது. கிலோ, 80 ரூபாய் வீதம், 25 ஆயிரத்து, 200 ரூபாய் கிடைத்தது. மீதமுள்ள, ஒரு மூட்டை நெல்லை காய வைத்து, விதையாக மாற்றி, 48 கிலோ விதையை, கிலோ, 60 ரூபாய்க்கு விற்றதில், 2,880 ரூபாய் வந்தது.  

இவ்வாறு, 1 ஏக்கரில், மொத்தமாக, 60 ஆயிரத்து, ௭80 ரூபாய் கிடைத்தது. செலவு போக, 32 ஆயிரத்து, 480 ரூபாய் லாபம் பார்த்தேன். இயற்கை விவசாயத்தை, தொழிலாக பார்க்கக் கூடாது. இதில், மனிதநேயம் உள்ளது. விஷமில்லாத உணவை உற்பத்தி செய்வதால், சமுதாயத்திற்கு நல்லது செய்யும் மனதிருப்தி கிடைக்கிறது. மேலும், லாபத்தையும் பார்க்கக் கூடாது. மண்ணை வளமாக்கி, எதிர் கால சந்ததியினருக்கு நல்ல, உயிருள்ள நிலத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் அவசியம்!

தொடர்புக்கு: 99433 84204

--தினமலர் நாளிதழிலிருந்து
 

வட்ட வடிவ வீடு : அழகு... உறுதி... செலவு குறைவு...

தஞ்சை, மூலிகைப் பண்ணை அருகே ராஜாஜி நகரில், வட்ட வடிவில் வீடு கட்டியுள்ள பொறியாளர் செல்வபாண்டியன்: வீடு என்றாலே, செவ்வகம், சதுரம் வடிவில் தான் பெரும்பாலும் கட்டப்படுகின்றன. அந்த வடிவில் தான் இருக்க வேண்டுமா; வட்ட வடிவில் கட்டினால் என்ன என நினைத்தேன். சங்க இலக்கியமான, 'நெடுநல்வாடை'யில், வட்ட வடிவ கட்டடங்கள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. பழங்கால மன்னர் அரண்மனைகள், கோட்டைகள், பழங்குடியின மக்கள் வீடுகள், வட்ட வடிவில் தான் உள்ளன. பிற வடிவ வீடுகளை விட, வட்ட வடிவிலான வீடுகளுக்கு உறுதித்தன்மை அதிகம்; வெயிலின் தாக்கமும் அதிகம் இருக்காது. வட்ட வடிவிலான வீடுகளில் முனைகளே கிடையாது. முடுக்கு இல்லை என்பதால், கட்டுமான பகுதிகள், முழு பயன்பாட்டில் இருக்கும்.


எலி வலை அமைப்பில் சுவர் அமைத்ததால், செங்கல், சிமென்ட், மணல், கூலிச் செலவு குறைவு. சுவரின் உள்ளே, கூடு போல இருப்பதால், வெயில், குளிர் தாக்கம் இருக்காது. நல்ல தரமான செங்கல் பயன்படுத்தியதால், வெளிப்பூச்சு இல்லை; வண்ணப் பூச்சும் கிடையாது. இதனால், செங்கற்கள் நன்றாக சுவாசிக்கின்றன. இயற்கை முறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, இந்த வீட்டில் மரமே பயன்படுத்தவில்லை. ஜன்னல்கள் முழுவதும் இரும்பால் தான் ஆனவை. வழக்கமாக, ஜன்னல்களின் பக்கவாட்டு பகுதியில், கதவுகள் இருக்கும்; அதனால் காற்று தடைபடும்.எனவே, எங்கள் வீட்டில், ஜன்னலின் நடுவே கதவுகள் அமைத்துள்ளோம். இதனால், காற்று தாராளமாக வரும்.


 படுக்கையறையில், கடப்பா கல்லில் கட்டில் அமைத்து உள்ளோம்.இதனால், வெயில் நேரத்தில், குளுகுளுவென இருக்கும்; மழைக் காலத்தில் கதகதப்பாக இருக்கும். ஒரு முறை இதற்கு செலவு செய்தால் போதும், காலம் காலமாக அப்படியே இருக்கும். வீட்டின் நடுவே முற்றம் அமைத்துள்ளோம். இதனால், வீடு முழுக்க நல்ல வெளிச்சமாக இருக்கும். முற்றம் வழியாக வெப்பக்காற்று, மேலே எழும்பி சென்று விடும்; இயற்கையான குளிர்ந்த காற்று, வீட்டிற்குள் வரும். 'எலிவேஷனுக்கு' இந்த வீட்டில் இல்லை; அதற்கான செலவும் கிடையாது. வீட்டை கட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இப்போதும் புத்தம் புதிது போல உள்ளது. கீழ்தளத்தில், 640; மேல் தளத்தில் இரண்டு படுக்கை அறைகள் மற்றும் நூலகமும் இருக்கு. மேல் தளத்தின் மொத்தக் கட்டுமானம் 480 சதுர அடி.. இந்த வீட்டை கட்ட, 12 லட்சம் ரூபாய் தான் செலவானது!


இந்த வீடு இவ்வளவு சிறப்பாக உருவானதற்கு, என் நண்பர் பொறியாளர் ராஜேந்திரனுக்குத்தான் நன்றி சொல்லணும். சிக்கன முறை கட்டுமானத்தில் இவர் தமிழ்நாடு அளவில் புகழ்பெற்றவர். ``அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கட்டடக்கலை எழில் கலைஞரான லாரி பெக்கரின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வீட்டை உருவாக்கியிருக்கோம். குறைவான செலவுல அழகான, உறுதியான வீடுகளை உருவாக்கணும்கிறதுதான் லாரி பெக்கர் தொழில்நுட்பத்தின் அடிப்படைத் தத்துவம்’’ என சொல்கிறார் ராஜேந்திரன்.
கீழ்த்தளத்தில் வரவேற்புக் கூடம், சமையலறை, உணவருந்தும் கூடம், படுக்கையறை அமைந்துள்ளன. வரவேற்புக் கூடத்திலேயே ஹை சீலிங் முறையில் மாடிப்படி அமைக்கப்பட்டுள்ளது. எலிவேஷனுக்குன்னு தனியாக எந்தச் செலவும் செய்யலை. இயல்பாகவே, வெளிப்புறத் தோற்றம் வசீகரமாக உருவாகியிருக்கு. மின்சாரம் இல்லைன்னாலும் இந்த வீட்டின் காலிங் பெல் ஒலிக்கும்.

--தினமலர் மற்றும் விகடன் இதழிலிருந்து

தொடர்புடையவை

1) வட்ட வடிவங்களுடன் கூடிய வீடு.
2) அழகு... உறுதி... செலவு குறைவு... இது அதிசய வீடு!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு......



சரியாக 10 மாதங்கள் கழித்து பதிவிட துவங்கியதில் மிக்க மகிழ்ச்சி. கட்டிட பொறியியல் துறையின் உட்பிரிவான நீர்வள மேலாண்மை (Water Resources Management) பிரிவில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து 8 வருடங்கள் வாழ்க்கையில் ஒரு இன்ச் முன்னேற்றம் கூட இல்லை.....எங்கே செல்லும் இந்த பாதை....என்ற நிலையிலேயே சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. சில சமயங்களில் நாம் என்னதான் உருண்டு பிரண்டு அழுது முயற்சித்தாலும் நமது சூழ்நிலையிலிருந்தும் பிரச்சனையிலிருந்தும் வெளிவரவே முடியாது....ஒரே தீர்வு தொடர் முயற்சியும், பொறுமையும்தான்.

அந்த தருணங்களில் தான் படிப்பிற்கான நேரம் போக, சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள இணையத்தில் எழுத தொடங்கி அதன் மூலம் நிறைய வாசிக்கவும் துவங்கினேன். இடது புறத்தில் இருக்கும் "இவங்க என்ன சொல்றாங்க" பகுதியில் உள்ளவர்களை அப்படிதான் கண்டறிந்தேன். கடினமான காலங்களில் ஆறுதலாக இருந்த வலைதள பதிவுகள், பதிவர்கள், blogger தளம் மற்றும் எனது பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு உற்சாகபடுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.


கடந்த ஆண்டு ஜுலை முதலே நல்ல அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது......பெண் பார்ப்பு, நிச்சயதார்த்தம், திருமணம், ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், முனைவர் பட்டம், பகுதி நேரமாக டி தூள் விற்பனை(அஸ்ஸாமிலிருந்து), குழந்தையின் வருகை.....என எல்லாம் அடுத்தடுத்து முடிந்தது மாயம்மா சித்தர் அருளாசியினால். நண்பர்கள், பெற்றோர்கள், உடன்பிறப்புகள், மனைவி, கல்லூரி மற்றும் எனது மேற்பார்வையாளர் (Supervisor / Guide) ஆகியோர் மிகுந்த உறுதுணையாக இருந்தார்கள் எனது ஆய்வு படிப்பை முடிக்க.

போராட்ட காலங்களில் நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம், அந்த கஷ்டமான காலங்களை திரும்பி பார்க்கும் போது அதெல்லாம் ஒன்றுமே இல்லை இதற்காகவா இப்படி வருந்தினோம் மன நிம்மதியை இழந்தோம் என்று கூட தோன்றும். இந்த மன நிலையை விளக்க கவிஞர் கண்ணதாசன் அவர்களை அழைக்கட்டுமா......  அட அட அட என்னமா எழுதிருக்காரு நம்ம கவிஞர்.
"வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

வாடி நிற்க கூடாது
கண்ணீர் வடிக்க கூடாது
பொறுமையை இழக்க கூடாது
நமது கடமையை மறக்க கூடாது.....அவ்வளவுதான்...... வாழ்க்கை நாம கேட்டதை கொடுத்து வாழ்த்திட்டு போகும்.

1.5 ஏக்கரில் 1,100 மரங்கள்....

வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், தெக்குப்பட்டு கிராமத்தில், 1.5 ஏக்கரில், அடர்ந்த வனத்தை உருவாக்கியுள்ள, ஞானசூரிய பகவான்: கோவை பல்கலைக் கழகத்தில், பி.எஸ்சி., விவசாயம் படித்து, தமிழக அரசில், வேளாண்மைத் துறை அதிகாரியாக பணியாற்றினேன். அந்தப் பணியை ராஜினாமா செய்து, சென்னை வானொலி நிலையத்தில், விவசாயிகளுக்கான, 'வீடும் வயலும்' நிகழ்ச்சியில், 'சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்' என்ற பெயரில் பேசி வந்தேன்.

மரங்கள் மீது கொண்ட காதலால், அவற்றை வளர்க்கத் துவங்கினேன். சொந்த கிராமத்தில், 1.41 ஏக்கர் நிலத்தில், மரங்களை நெருக்கமாக வளர்த்து, மரக்காடு உருவாக்கியுள்ளேன்; இங்கு, 1,100 மரங்கள் உள்ளன. அதன் நடுவே வீடு கட்டி, மனைவியுடன் வசிக்கிறேன். வீட்டின் மாடியிலிருந்து விழும் மழை நீரை, மூன்று தொட்டிகளில், 70 ஆயிரம் லிட்டர் சேகரித்து, மரங்களுக்கு பயன்படுத்துகிறேன். சின்ன இடத்தில் நெருக்கமாக வளர்க்கப்படும் மரங்கள், வேகமாக வளர்கின்றன. காட்டில் வளரும் மரங்களுக்கு இடையே, இடைவெளி கிடையாது; மரம், செடி, கொடி என அடர்ந்து வளரும். இந்த வகை காடுகளை, 'மியாவாக்கி' காடுகள் என்பர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, அக்கிராமியாவாக்கி என்ற தாவரவியலாளர் தான், இந்த அடர்ந்த வனத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்.

என் மரக்காட்டில், பாரிஜாதம், சிங்கப்பூர் செர்ரி, செம்மரம் போன்ற, 100 மரங்கள் உள்ளன. மரங்கள் நமக்கு தாய் போன்றவை. அவற்றில் நல்ல மரம், கெட்ட மரம் என எதுவும் இல்லை; எல்லா மரங்களுமே மண்ணுக்கு தேவை. நம் நாட்டில், 1947க்கு முன், 47 சதவீதமாக இருந்த வனம், 24 சதவீதமாக சுருங்கியுள்ளது. தமிழகத்தில், 17 சதவீதம் மட்டுமே வனங்கள் உள்ளன. நான் மட்டும் காடு வளர்த்தால் போதாது என்றெண்ணி, விரும்பும் மாணவர்களுக்கு, காடு வளர்ப்பு மற்றும் வேளாண்மை பயிற்சி அளிக்கிறேன். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் பலர், பயிற்சிக்கு வருகின்றனர். நவீன வேளாண்மை குறித்து, எளிமையாக கற்றுக் கொடுக்கிறேன். இந்தப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள், விவசாயத் தொழில்நுட்பத்தை, நாடு முழுவதும் பின்பற்றி வருகின்றனர்.

இயற்கை வளப் பாதுகாப்புப் பணிகளை, 'பூமி' என்ற அறக்கட்டளை மூலம் மேற்கொண்டு வருகிறேன். மழை வளமும், நீர் வளமும், ஆரோக்கியமான காற்றின் வளமும் தான், மனிதர்களை வாழ வைக்கும். வெறும் சந்ததியினரால் மட்டும், வாழ வைத்து விட முடியாது. அதனால், மனிதர்களுடன் மரங்களையும் வளர்க்க வேண்டும். 'ஏசி'யையும், மின் விசிறியையும் பயன்படுத்துவது, கொள்ளிக்கட்டையால் முதுகை சொறிந்து கொள்ளும் கதை தான்!

--தினமலர் நாளிதழிலிருந்து
 

Thursday 10 January 2019

கூந்தலை மணக்க செய்யும் மூலிகை பொடி

கூந்தலை மணக்க செய்யும் மூலிகை பொடி குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்: உடலுக்குக் கெடுதல் தரும், 'ஷாம்பு, சென்ட்' உள்ளிட்ட வேதிப்பொருட்கள் எதுவும் இல்லாமல், இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி, நம் கூந்தலின் மணத்தை அதிகரிக்கலாம்.முந்தைய காலத்தில் வெந்தயத்தை அரைத்து, தலைக்குக் குளிப்பர். கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் உள்ளிட்டவற்றை அரைத்து, தலையில் தேய்த்து, அரப்புப்பொடி, சிகைக்காய் தேய்த்துக் குளிப்பர். வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தலைக்குத் தேய்ப்பர். வடிகஞ்சித் தண்ணீரை தலைக்குத் தேய்த்துக் குளிப்பர். இப்போது இந்த முறைகளெல்லாம், வழக்கொழிந்து விட்டன.

முடக்கத்தான் கீரையை அரைத்து தலைக்குத் தேய்த்து குளிக்க, தலையில் உள்ள அழுக்கு போகும். இதன் பின், கீழ்கண்ட பொடிகளால் துாபமிட, கூந்தல் மணக்கும்.
  • வெட்டிவேர், லவங்கபத்திரி, அகரு கட்டை, திருவட்டப்பச்சை தலா ஒரு பங்கு, கற்கண்டு மற்றும் சாம்பிராணி தலா, 5 பங்கு, சந்தனத்துாள், 10 பங்கு என்ற விகிதத்தில் எடுத்து, பொடி செய்து, தலைக்குத் துாபமிட்டால், கபாலத்திற்கும், தலை முடிக்கும் மிகவும் நல்லது. 
  • சந்தனத்துாள், 72 கிராம், கிச்சிலிக் கிழங்கு, 55 கிராம், வெள்ளை குங்கிலியம், 33 கிராம், சாம்பிராணி, 55 கிராம், லவங்கம், ஜாதிக்காய், மட்டிப்பால் தலா, 15 கிராம், நாட்டுச்சர்க்கரை, 25 கிராம் எடுத்து, நன்றாகப் பொடி செய்து, தலைக்குத் துாபமிடலாம். 
  • சந்தனத்துாள், 120 கிராம், ஜடாமஞ்சி, தேவதாரு, அகருகட்டை, கிரந்திதகரம், சாம்பிராணி, திருவட்டப்பச்சை தலா, 72 கிராம் எடுத்து துாபமிடலாம்.
  • சந்தனம், இலாமிச்சை வேர், சாம்பிராணி தலா, 25 கிராம், கிச்சிலிக்கிழங்கு, கோரைக்கிழங்கு, தேவதாரு, குங்கிலியம், கொம்பரக்கு, ஏலம், லவங்கம், கொட்டம் தலா, 16 கிராம், அகில்கட்டை, 25 கிராம் எடுத்து, பொடி செய்து, பன்னீர் விட்டுப் பிசைந்து, சூரிய ஒளியில் காய வைக்கவும். பின் அதை நன்றாக பொடித்து, துாபமிட, குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பதால் உண்டாகும் தலை பாரம், சைனஸ், சளி, மூக்கில் நீர்வடிதல் மற்றும் துர்நாற்றம் உள்ளிட்டவை நீங்கும். 
  • ரோஜாப்பூ, 850 கிராம், கிச்சிலிக்கிழங்கு, இலந்தைப் பழத்தோல், அகில் கட்டை, சாம்பிராணி - ஜடாமஞ்சி, லவங்கபத்திரி, பெரு லவங்கப்பட்டை, உலர்ந்த நார்த்தம் தோல் தலா, 50 கிராம், கஸ்துாரி, 6 கிராம் ஆகியவற்றை பொடித்து, அதனுடன் பன்னீர் சேர்த்து அரைத்து காய வைக்கவும். இதை பொடி செய்து, துாபமிட, கூந்தலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி, அருமையான வாசனை உண்டாகும்!
--தினமலர் நாளிதழிலிருந்து

Friday 4 January 2019

ஓராண்டு ஆனாலும் கெட்டுப் போகாது!!!.....வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்கப்பட்ட மழைநீர்!!!

மழைநீரை சேமித்து, குடிநீராக பயன்படுத்தி வரும், அரியலுார் மாவட்டம், கீழகாவாட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த, சண்முகசுந்தரம்: விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன், நான். அதனால், விவசாயத்தில் ஆர்வம் அதிகம். 15 ஆண்டுகளுக்கு முன், இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வாரோடு அறிமுகம் ஏற்பட்டது. அதனால், பாரம்பரிய விவசாயம், மரபு மருத்துவம் என, என் கவனம் திரும்பியது. என்னுடைய, ௦.5 ஏக்கர் நிலத்தில், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி எதுவும் போடாமல், விவசாயம்செய்கிறேன். ஆனால், சுற்று வட்டாரத்தில் ரசாயன விவசாயம் செய்வதால், பள்ளமான பகுதியில் உள்ள என் நிலத்திலும், மழைநீர் மூலமாக அந்தரசாயனங்கள் கலந்து விடுகின்றன. அதனால், வேறு இடத்தில், நண்பர்களோடு சேர்ந்து, இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன். இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை எப்போதும் இருக்கவே, பச்சை நிறத்தில் ஆடை உடுத்தி வருகிறேன்.

 

'மழை நீரில், உயிராற்றல் அதிகம். அதை குடித்தால், நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழலாம். கண் குறைபாடு வராது' என, நம்மாழ்வார், அடிக்கடி சொல்லி இருக்கிறார். அதனால், எங்கள் வீட்டில் உள்ள அனைவருமே, மழை நீரைத்தான் குடித்து வருகிறோம். 'மழை நீரைக் குடித்தால், சளி பிடிக்கும்' எனக் கூறுவர்; அது, தவறான கருத்து. எங்கள் அனுபவத்தில், அப்படி யாருக்கும் நடக்கவில்லை. பொதுவாக, தண்ணீரை சுட வைத்தால், அதன் சுவை மாறும். ஆனால், மழைநீரைக் கொதிக்க வைத்து குடித்தாலும், சுவை மாறாது. அத்துடன், மழை நீரைக் கொதிக்க வைத்து தான் குடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஒரு நாளுக்கு, 300 மி.லி., மழைநீரே, ஒருவருக்குபோதுமானதாக இருக்கும்.

மழை நீரை குடிப்பதால், தாகம் எடுக்காது; உடலில் சோர்வு ஏற்படாது. அந்தளவு, அதில் தேவையான உயிர் சத்துக்கள் உள்ளன. மழை பெய்ய ஆரம்பித்ததும், மொட்டை மாடியில் உள்ள கழிவுகள் எல்லாம் அடித்து, குழாய் வழியாக கீழே வரும்.அதெல்லாம் நீங்கி, தண்ணீர் சுத்தமாக வரத் துவங்கியதும், பருத்தி துணியால் வடிகட்டி, பாத்திரங்களில் பிடித்து வைத்துக் கொள்வோம். வெயில் படாமல் வைத்திருந்தால், ஓராண்டு ஆனாலும் மழைநீர் கெட்டுப் போகாது; துர்நாற்றம் வராது. இயல்புத் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். மழைநீரை மட்டுமே குடித்து, எந்த உணவும் சாப்பிடாமல், பல நாட்கள் இருந்துஉள்ளேன்.
--தினமலர் நாளிதழிலிருந்து

மழைநீரை வடிகட்டி குடிக்கும் முறை:
எங்கள் வீட்டிலும் மழைநீரைத்தான் குடிக்க பயன்படுத்துகிறோம். வெகு நாட்கள் கழித்து மழை பெய்யும் போது முதல் இரண்டு மழை நீரை பிடிப்பதில்லை, அதில் காற்றில் மற்றும் மேற்கூரையில் இருக்கும் அசுத்தங்கள் கலந்து இருக்கும். வசதி இருந்தால் மழை நீர் சேமிப்பு அமைப்பை முறையாக நிறுவிக்கொள்ளலாம் இல்லையெனில் மழைநீரை பாத்திரத்திலோ, drum அல்லது பிளாஸ்டிக் Barrel லிலோ பிடித்து வைக்கலாம். ஒரு நாள் அந்த பாத்திரத்திலேயே இருக்க வேண்டும்.....பிறகு வேறு பாத்திரத்தில் மாற்றி வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்க வேண்டும, அதன் பிறகு நான்கு அல்லது ஐந்து நாட்கள் கழித்து வேறொரு பாத்திரத்தில் மழைநீரை மாற்றி வெயில் இல்லாத இடத்தில மூடி வைக்க வேண்டும.

என்னதான் வடிகட்டினாலும் மழைநீரில் கலந்திருக்கும் நுண் துகள்கள் வடிகட்டப்படாது, ஒரு வாரம் வரை வைக்கும் போதுதான் அந்த துகள்கள் பாத்திரத்தின் அடியில் சேகரமாகும். பாத்திரத்தில் உள்ள மழைநீரை மாற்றிய பிறகு பாத்திரத்தின் உட்பகுதியை தேய்த்து கழுவினால் வெளிர் பழுப்பு நிறத்தில் படிந்துள்ள அசுத்தங்களை காண முடியும். இப்படி இரண்டு மூன்று முறை மாற்றிய நீரை குடிக்க பயன்படுத்தலாம். கடைசியாக மாற்றிய பாத்திரத்தில் கூட அடியில் உள்ள நீர் வரை குடிக்காமல் கடைசியில் உள்ள நீரை அலசி ஊற்றி விட வேண்டும். தொடர் மழை பெய்யும் காலங்களில் இந்த அசுத்தங்கள் குறைய வாய்ப்புள்ளது.

 தொடர்புடையவை....
தண்ணீர் 2: மழை நீர் பொறியாளர் வரதராஜன்
தண்ணீர் 7: மழை நீர் பொறியாளர் வரதராஜன்-2  
 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...