Thursday, 10 January 2019

கூந்தலை மணக்க செய்யும் மூலிகை பொடி

கூந்தலை மணக்க செய்யும் மூலிகை பொடி குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்: உடலுக்குக் கெடுதல் தரும், 'ஷாம்பு, சென்ட்' உள்ளிட்ட வேதிப்பொருட்கள் எதுவும் இல்லாமல், இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி, நம் கூந்தலின் மணத்தை அதிகரிக்கலாம்.முந்தைய காலத்தில் வெந்தயத்தை அரைத்து, தலைக்குக் குளிப்பர். கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் உள்ளிட்டவற்றை அரைத்து, தலையில் தேய்த்து, அரப்புப்பொடி, சிகைக்காய் தேய்த்துக் குளிப்பர். வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தலைக்குத் தேய்ப்பர். வடிகஞ்சித் தண்ணீரை தலைக்குத் தேய்த்துக் குளிப்பர். இப்போது இந்த முறைகளெல்லாம், வழக்கொழிந்து விட்டன.

முடக்கத்தான் கீரையை அரைத்து தலைக்குத் தேய்த்து குளிக்க, தலையில் உள்ள அழுக்கு போகும். இதன் பின், கீழ்கண்ட பொடிகளால் துாபமிட, கூந்தல் மணக்கும்.
  • வெட்டிவேர், லவங்கபத்திரி, அகரு கட்டை, திருவட்டப்பச்சை தலா ஒரு பங்கு, கற்கண்டு மற்றும் சாம்பிராணி தலா, 5 பங்கு, சந்தனத்துாள், 10 பங்கு என்ற விகிதத்தில் எடுத்து, பொடி செய்து, தலைக்குத் துாபமிட்டால், கபாலத்திற்கும், தலை முடிக்கும் மிகவும் நல்லது. 
  • சந்தனத்துாள், 72 கிராம், கிச்சிலிக் கிழங்கு, 55 கிராம், வெள்ளை குங்கிலியம், 33 கிராம், சாம்பிராணி, 55 கிராம், லவங்கம், ஜாதிக்காய், மட்டிப்பால் தலா, 15 கிராம், நாட்டுச்சர்க்கரை, 25 கிராம் எடுத்து, நன்றாகப் பொடி செய்து, தலைக்குத் துாபமிடலாம். 
  • சந்தனத்துாள், 120 கிராம், ஜடாமஞ்சி, தேவதாரு, அகருகட்டை, கிரந்திதகரம், சாம்பிராணி, திருவட்டப்பச்சை தலா, 72 கிராம் எடுத்து துாபமிடலாம்.
  • சந்தனம், இலாமிச்சை வேர், சாம்பிராணி தலா, 25 கிராம், கிச்சிலிக்கிழங்கு, கோரைக்கிழங்கு, தேவதாரு, குங்கிலியம், கொம்பரக்கு, ஏலம், லவங்கம், கொட்டம் தலா, 16 கிராம், அகில்கட்டை, 25 கிராம் எடுத்து, பொடி செய்து, பன்னீர் விட்டுப் பிசைந்து, சூரிய ஒளியில் காய வைக்கவும். பின் அதை நன்றாக பொடித்து, துாபமிட, குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பதால் உண்டாகும் தலை பாரம், சைனஸ், சளி, மூக்கில் நீர்வடிதல் மற்றும் துர்நாற்றம் உள்ளிட்டவை நீங்கும். 
  • ரோஜாப்பூ, 850 கிராம், கிச்சிலிக்கிழங்கு, இலந்தைப் பழத்தோல், அகில் கட்டை, சாம்பிராணி - ஜடாமஞ்சி, லவங்கபத்திரி, பெரு லவங்கப்பட்டை, உலர்ந்த நார்த்தம் தோல் தலா, 50 கிராம், கஸ்துாரி, 6 கிராம் ஆகியவற்றை பொடித்து, அதனுடன் பன்னீர் சேர்த்து அரைத்து காய வைக்கவும். இதை பொடி செய்து, துாபமிட, கூந்தலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி, அருமையான வாசனை உண்டாகும்!
--தினமலர் நாளிதழிலிருந்து

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...