Monday 11 December 2017

மியாவாக்கி... குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!-2 (புகைப்படங்கள்)

 நிசப்தம் தளத்திலிருந்து.....அடர்வனம்

ஒரே வருடத்தில் ஒரு வனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் அடங்கிய வனம். வெறும் பதினெட்டு செண்ட் இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அடர்வனம் இது.

அடர்வனம் ஒன்றை திருப்பூர் மாவட்டம் குள்ளே கவுண்டன் புதூர் என்ற ஊரில் செயல்படுத்தியிருக்கிறார்கள். அவிநாசியிலிருந்து கோவை செல்லும் வழியில் இந்த ஊர் இருக்கிறது. பதினெட்டு சென்ட் இடத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து இருநூறு மரங்கள். சற்றேறக்குறைய அறுபது வகையான மரங்கள் இவை. சரியாகத் திட்டமிட்டு ஒவ்வொரு வகை மரத்தையும் கலந்து வைத்திருக்கிறார்கள். பதினெட்டு செண்ட் இடத்துக்கும் கம்பிவேலி உண்டு. அதனால் விலங்குகள் நுழைவதில்லை. உள்ளூர் மக்கள் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள் என்பதால் அவர்களும் வனத்துக்குள் நுழைவதில்லை. அடர்வனம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஐம்பது செடிகள் பட்டுப் போய்விட்டன ஆயினும் இரண்டாயிரத்து நூறுக்கும் அதிகமான செடிகள் உயிர்பிடித்திருக்கின்றன.

(ஒரு வருடத்திற்கு முன்பு அடர்வனம்)

 
(ஒரு வருடத்திற்குப் பிறகு இப்பொழுது)

அகிரா மியவாக்கி என்னும் ஜப்பானிய நிபுணர் கண்டறிந்த மரவளர்ப்பு முறை இது. விதவிதமான மரங்களை வெகு நெருக்கமாக நட்டு வளர்க்கிறார்கள். தாவரங்கள் சற்றே வளர்ந்த பிறகு மனிதர்களாலேயே உள்ளே நுழைய முடியாதபடியான நெருக்கம். பறவைகளுக்கும், அணில், பாம்பு உள்ளிட்ட ஊர்வனவைகளுக்குமான வனமாக அது மாறிவிடும். விதைகள் திரும்பத் திரும்ப வனத்துக்குள் விழுந்து முளைக்கும் போது வனத்தின் நெருக்கம் பெருகிக் கொண்டேயிருக்கும்.

பொதுவாக, செடிகளை இடைவெளி விட்டு நட்டு அவற்றை ஆடு மாடுகள் மேய்ந்துவிடாமல் பார்த்து, மனிதர்கள் முறித்துவிடாமல் காத்து என சகல பிரயத்தனங்களையும் செய்து காப்பாற்றப்படும் மரங்களின் எண்ணிக்கை சதவீதம் மிகக் குறைவு. அடர்வனத்தில் ஆரம்ப முதலீடு சற்றே அதிகம் என்றாலும் தப்பித்து மேலே எழும்பக் கூடிய மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

அடர்வனம் அமைப்பது குறித்தான சந்தேகங்கள் இருப்பின் திரு.சதீஷைத் தொடர்பு கொள்ளலாம்- 98421 23457. 



No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...