Monday 22 March 2021

செடிகள் கேட்கும்!!!

 அன்பாக பேசினால் செடி கேட்கும்! செடிகளை வீட்டில் வளர்ப்பது எப்படி என, விலாவாரியாக சொல்லித் தருகிறார், சென்னையை சேர்ந்த சுமித்ரா ஸ்ரீகாந்த்:

உங்கள் வீட்டு பால்கனியில் கூட, அழகான தோட்டம் அமைக்கலாம். செடிகளுக்கு வெயில் முக்கியம்.

பூச்செடிகளுக்கு, நல்ல வெயில் அவசியம். 

சுமாரான வெயில் தான் வீட்டிற்குள் வரும் என்றால், கிழங்கு வகைகள் வைக்கலாம்.

 மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகள், மொட்டை மாடியில் அமர்க்களமாக வரும்.

 வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவை சுலபமாக வளரக் கூடியவை. 

காலிபிளவரிலிருந்து, ஸ்ட்ராபெர்ரி, கோஸ் வரை, எல்லாமே மொட்டை மாடியில் பயிரிடலாம்.

வெயில் காலத்தில் மண்ணில் அதிக சூடு இருக்கும். விடும் தண்ணீர் சீக்கிரம் வற்றாமல் இருக்க, மண்ணின் மேல் காய்ந்த இலைகள் அல்லது அட்டைப் பெட்டித் துண்டுகளை போடலாம்.

செடி வளர்ப்பும், பிள்ளைகள் வளர்ப்பு போல, மிகவும் கவனமாக செய்ய வேண்டியது.

 சும்மா, தினமும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி விட்டு, சரியா வளரலேன்னு புலம்பக் கூடாது. மாறாக, அக்கறை, அன்பு, ஊட்டம் என்று, எல்லாம் தரணும். செடிகளை ஒவ்வொண்ணாக கவனித்து, வளர்ச்சியில் பாதிப்பு இருக்கா, ஏன் பூத்துக் காய்க்க வில்லை என்பதை கவனிக்கணும். 


15 நாட்களுக்கு ஒரு தடவை உரம் போடணும்.பஞ்சகவ்யம் போன்ற, இயற்கை உரங்கள் கிடைக்கிறது. உரம் ஈரமாக இல்லாமல், நன்றாகக் காய்ந்திருக்கணும்.

தோட்டக்காரரையோ, ஆட்களையோ வைத்து, இவற்றை செய்தாலும், சொந்தக்காரர்கள், செடிகளை கூர்ந்து கவனித்து, அதோடு பேசி, ரசித்து வளர்ப்பதை, செடிகள் புரிந்து கொள்ளும். 

நான், பார்த்துப் பார்த்து கவனித்த எலுமிச்சைச் செடி, காய்க்காமல் படுத்தியபோது, கொஞ்சம் கோபமாகவே அதனுடன் பேசினேன். அதன் பிறகு காய்த்துக் குலுங்கியதை, பலரும் நம்ப மாட்டார்கள்.

உடல் பிரச்னை என்றால், நாம் மருந்து சாப்பிடுவது போல, செடிகளுக்கும் கொடுக்க வேண்டும். ரசாயன மருந்துகள் போட்டால், பூச்சிகள் இறக்கும். ஆனால், ரசாயனம் நமக்கு நல்லதல்ல. எனவே, வேப்பெண்ணெய், தண்ணீர் கலந்து தெளித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

நோய்களுக்கு நாம், 'ஆன்ட்டிபயாடிக்' மருந்துகள், ஐந்து நாட்களுக்கு எடுத்துக் கொள்வது போல, செடிகளுக்கும் தொடர்ந்து கொடுக்க வேண்டும். ஒன்றிரண்டு நாட்கள் கொடுத்துவிட்டு, பூச்சிகள் போகவில்லையே என, கேட்கக் கூடாது.

 செடிகளை ஆரோக்கியமாக வளர்ப்பது குறித்து, சமூக வலைதளங்களில் ஆலோசனை கேட்பதுடன், அனுபவஸ்தர்கள் துணையுடன், அழகாக செடிகளை வளர்க்கலாம். நிறைய குழந்தைகளைப் பெற்று, வளர்க்க முடியாமல் தவிப்பது போல, பெரிதாகத் தோட்டத்தைத் தொடங்கிவிட்டு, திண்டாடுவதை விட, சின்னதாகத் தொடங்கி நடத்துவது சிறந்தது!

Related sites

Sustainable Living with expert Ms. Sumithra Srikant

Zero-waste, a new component in event planning

Ecokonnectors

Saturday 20 March 2021

தேஜோமயானந்தர் அருளுரை

வாழ்க்கையில் யார் ஒழுங்குமுறைகளைக் கடைபிடிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியைத் தழுவுகிறார்கள். ஒழுக்கமில்லையெனில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.

* உயர்ந்த குணங்களை வளர்த்துக் கொண்டு, அவற்றைக்
கடைபிடித்து வாழ வேண்டுமென்று ஒவ்வொருவரும்
எண்ணத் தொடங்கினால் போதும்.


* இவ்வுலகில் உள்ள பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு
கண்டுவிடலாம். இது மிகவும் அவசியமான ஒன்று.
ஆனால், பிரச்னைகளுடன் வாழ்ந்தே பழக்கப்பட்டுள்ள
நாம், பிரச்னைகள் எதுவுமே இல்லையென்றால் பயந்து
போகிறோம்.

* நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் எளிமையானவையாக,
தினசரி செய்ய வேண்டியனவாக இருக்கலாம். அல்லது
மற்றவர்களுக்காக நாம் செய்ய வேண்டியனவாக
இருக்கலாம். அவை எத்தகையனவையாக இருப்பினும்,
அவற்றை செய்வதில் உறுதியுடன் இருக்குமாறு வேதங்கள்
நமக்குக் கூறுகின்றன.

* மற்றவர்கள் எதைச் செய்கிறார்கள் அல்லது செய்யாமல்
இருக்கிறார்கள் என்று ஆராய முற்படாதீர்கள். உங்களுடைய
கடமைகளை முறையாகக் செய்வதில் மட்டும் கவனம்
செலுத்துங்கள்.

* நம் கடமைகளைச் செய்யும் பொழுது, மற்றவர் தம்
கடமைகளைச் சரிவர செய்கிறாரா இல்லையா என்பது பற்றி நாம் கவலைப்படக் கூடாது. அதேபோல் கடமைகளைச் செய்வதில், சொந்த விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது.

* ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் செய்யும் பொழுது அதைச் செய்வது நமது கடமை என்ற மனப்பாங்குடன் செய்யவேண்டும். நம்முடைய கடமைகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் செய்ய வேண்டும். வீட்டிலோ அல்லது வெளியிலோ நமக்கென்று விதிக்கப் பட்டுள்ள கடமைகளை நாம் உறுதியுடன் செய்ய வேண்டும். மேலும் இச்சையினால் தூண்டப்பட்ட செயல்களை நாளடைவில் சிறிது சிறிதாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
-------------------------
-தேஜோமயானந்தர்

Wednesday 17 March 2021

வாழை நாரும் சிறந்ததே!!

வாழை நாரில் விதவிதமான கலைப் பொருட்களை படைத்து, பிரதமர் மோடியின், 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பாராட்டு பெற்றது குறித்து, தமிழகத்தை சேர்ந்த முருகேசன்: சொந்த ஊர், மதுரை அருகே உள்ள மேலக்கால் என்ற கிராமம். விவசாய குடும்பம் என்னுடையது.விவசாயத்தில் பழைய முறைகளை பின்பற்றாமல், புதிய யுக்திகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம், சிறு வயது முதல் இருந்து வந்தது. எங்கள் பகுதியில், எல்லாரும் கையால் அறுவடை செய்த போது, நான் இயந்திரங்களை வைத்து அறுவடை செய்தேன்.வழக்கமாக, இரண்டொரு நெல் ரகங்களையே விதைத்து வந்த எங்கள் பகுதியினர் மத்தியில், நான் புதுப்புது அரிசி ரகங்களை பயிரிட்டு காட்டினேன். விவசாயத் துறையால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஆர்வமாக பங்கேற்பேன். 


கரும்பு சக்கையை, நல்ல இயற்கை உரமாக மாற்ற முடியும் என, சொல்லித் தந்தனர். அதைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.அதுபோல, பல விதமான விவசாய கழிவு பொருட்களில் இருந்து, புதுமையான பொருட்களை படைக்க முடியும் என்பதை யோசித்து அறிந்தேன்.அந்த காலத்தில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை கூட அறியாமல், அனைத்து தரப்பினரும், பிளாஸ்டிக் பைகளை சகட்டு மேனிக்கு பயன்படுத்தத் துவங்கி இருந்தனர்.அதற்கான மூலப்பொருட்களை, கடைக்காரர்களும் வாங்கிக் குவித்திருந்தனர். 

இதனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுமே என, மனம் கலங்கியது.தென்னை நார், கயிறாக மாறுகிறது. பல தரப்பினராலும் பல விதங்களில் பயன்படுத்தப்படுவது போல, வாழைக் கழிவான, வாழை நாரிலிருந்தும், பல பொருட்களை தயாரிக்கலாமே என, பத்தாண்டுகளுக்கு முன் யோசித்தேன்.வாழை நாரிலிருந்து எடுக்கப்படும் நார், பூ கட்டுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. பிற தேவைகளுக்கு, அவை பயன்படுத்தப்படாமல், வீணாக எரிக்கப்படுகின்றன அல்லது மண்ணில் போடப்பட்டு மக்க வைக்கப்படுகின்றன. 

எனவே, வாழை நாரிலிருந்து கயிறு தயாரித்து, அந்த கயிற்றை பலமாக ஆக்கி, அதன் மூலம், பை, பழக்கூடை, மிதியடி, டேபிள் மேட் போன்றவற்றை தயாரிக்க முடியும் என அறிந்து, கயிறு திரிக்கும் இயந்திரங்கள் கிடைக்கிறதா என, பல இடங்களிலும் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை.பிறகு, நானே அந்த எளிய இயந்திரத்தை உருவாக்கி, வாழை நாரிலிருந்து கயிறு தயாரிக்கத் துவங்கினேன். விளம்பரம் இல்லாததால், பெரிய அளவில் விற்பனையாகவில்லை. 

அப்போது ஒரு நாள், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த கண்காட்சியில், வாழை நார் பொருட்களை காட்சிக்கு வைத்தேன். அதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான 'ஆர்டர்'கள் குவியத் துவங்கின.துவக்கத்தில், நான் மட்டுமே செய்த இந்த வேலையில், இப்போது, எங்கள் பகுதியில், 300 பேர் ஈடுபடும் அளவுக்கு, வாழை நார் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், இன்னமும் ஏராளமான வாழை நார்,வீணாகத் தான் போகிறது

முருகேசன் அவர்களை தொடர்பு கொள்ள : 93605 97884

From Dinamalar paper

வாழவைக்கும் வாழை நார் (From Dinamani paper)

கற்றாழை, வாழை நார்... கலகலப்பான மாற்றம்!

வாழை நார் ஆடைகள்: 'துணி'ந்தால் லாபம்தான்!

வாழைநாரில் டாலர்களைக் குவிக்கும் பாமர விவசாயி!

வருவாயை அள்ளித்தரும் வாழை நார்


Saturday 30 January 2021

தேடல்கள் ஓய்வது இல்லை: அரிய மரங்களின் காவலன் ராஜி

 அரிய வகை மரங்களை தேடிப் பிடித்து, சொந்தமாக ஒரு காட்டை உருவாக்கி வரும் இளைஞரின் தேடல், முற்று பெறாமல் தொடர்ந்து வருகிறது. அந்த காட்டில், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த, ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜி; பட்டதாரி.இவர், பறவைகள் மற்றும் விலங்குகளின் மீது தீவிர பற்று உடையவர். அவற்றுக்கான வாழிடமாக, தங்களுக்கு சொந்தமான மாந்தோப்பை, வனமாக உருமாற்றி வருகிறார்.அரிய வகை மரங்களை தேடிப் பிடித்து, அதன் கன்றுகளை தன் மாந்தோப்பில் வளர்த்து வருகிறார். குற்றாலம் பகுதியில் மட்டுமே விளையும், 'ஸ்டார் புரூட்' மரக்கன்று, இவர் நிலத்தில், தற்போது காய் காய்த்துள்ளது.வாட்டர் ஆப்பிள், வேங்கை மரம், சரக்கொன்றை, வில்வம், அல்லி மற்றும் தாமரை, மின்ட் சுவை துளசி, இனிப்பு சுவை துளசி, குமிழ் தேக்கு, லெமன் கிராஸ், நன்னாரி, வெட்டிவேர் என, ஏராளமான மூலிகை செடிகளும், மரக்கன்றுகளும் நடவு செய்து பராமரித்து வருகிறார்.இவற்றில் பெரும்பாலானவை, தற்போது காய் காய்த்து வருகின்றன.இந்த காட்டில், பறவைகளையும், கால்நடைகளையும் வளர்க்கிறார்.

வான்கோழி, கின்னி கோழி, நாட்டுக்கோழி, வாத்து, காதல் பறவைகள், காக்டெயில், பேன்சி ரக கோழிகள், பேன்சி ரக புறாக்கள், சிப்பிப்பாறை நாய் என, ஒரு பட்டாளம் இவரின் காட்டில் சுதந்திரமாக உலா வருகின்றன.இவை தவிர, அழையா விருந்தாளிகளாக, பாம்புகள், மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்டவையும் அருகில் உள்ள காட்டில் இருந்து, இவரது தோப்பிற்கு அவ்வப்போது வந்து செல்லும். தான் உருவாக்கிய காட்டில், ஒரு பூங்காவையும் இவர் வடிவமைத்துஉள்ளார்.அதில் உள்ள செயற்கை குளத்தில், பல வண்ண அல்லி மலர்கள் மிதக்கின்றன.இந்த அல்லி குளத்தில், கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க, வண்ண மீன்கள் விடப்பட்டுள்ளன. மரத்தடியில், மான் சிலையாக ஓய்வெடுக்கிறது. வெளிநாட்டு இன புற்களை, இங்கு வளர்க்கிறார்.


பிறந்த நாள் பரிசாக மரக்கன்றுகள்


ஊருக்கு பொதுவான பகுதிகளில், மரக்கன்றுகள் நடவு செய்யவும், ஒரு நாற்றாங்கால் அமைத்து மரக்கன்றுகளையும் வளர்த்து வருகிறார். நண்பர்கள் குழு மூலமாக அவற்றை, பள்ளி வளாகம் மற்றும் ஏரிக்கரையில் நடவு செய்து வருகிறார். வெளியூர்களுக்கு செல்லும் போதெல்லாம், அந்த பகுதியில் கிடைக்கும் மரக்கன்றுகள் மற்றும் விதைகளை சேகரித்து வருகிறார்.குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் பிறந்த நாளையொட்டி, தோப்பில் அவர்கள் சார்பாக, புதிய மரக்கன்றுகள் நடும் வழக்கத்தையும் கடைப்பிடித்து வருகிறார்.

மரங்களுக்கு வில்லன் மான்!

மரங்கள் வளர்வது மானுக்கு பிடிக்காது; மரங்கள் வளர்ந்தால், அதனடியில் புற்கள் முளைக்காது. மான்களுக்கு தேவையான புல்வெளிக்கு மரங்கள் தடையாக இருப்பதால், மான்கள், மரங்களை அழிக்க முற்படும். இளம் செடிகளாக இருக்கும் மரங்களை, தன் கொம்புகளால் உரசி அவற்றை சேதப்படுத்தும்.மரத்தின் பட்டைகளை அழித்தால், அந்த மரம் பட்டுப்போகும். அருகில் உள்ள காட்டில் இருந்து இரவு நேரத்தில் எங்கள் தோப்புக்கு, மான்கள் வந்து செல்கின்றன.நான் வளர்க்கும் மரங்களையும் அவை சேதப்படுத்துகின்றன. இயற்கையின் படைப்பில் இது நியாயம் என்பதால், நான் வருந்துவது இல்லை. மான்கள், மரங்களை அழித்தாலும், மரங்களை வளர்ப்பதில் என் முயற்சி ஓயாது; மான்களின் மீதான அக்கறையும் குறையாது.

--தினமலர் நாளிதழிலிருந்து.

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...