Sunday, 12 August 2018

குடிநீரை இயற்கை முறையில் சுத்தப்படுத்தும் வழிமுறைகள்:

மழை காலத்தில் குடிநீரை இயற்கை முறையில் சுத்தப்படுத்த வழி கூறும், இயற்கை நல மருத்துவர், ஒய்.தீபா, ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன், எக்ஸ்னோரா நிர்மல்: இன்றைய, 'வாட்டர் பியூரி பையர்'களும், 'மினரல் வாட்டர் கேன்' களின் ஆட்சியும் இல்லாத போது, நம் முன்னோர் சில இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தினர்.

தேத்தாங்கொட்டை:
சமையலுக்கு உபயோகிக்க கூடிய தண்ணீரிலோ அல்லது குடிக்கும் தண்ணீரிலோ, தேற்றன் கொட்டையைப் பொடியாக்கிப் போட்டால், தண்ணீரில் இருக்க கூடிய நுண்கிருமி மற்றும் பாக்டீரியாக்களை, பாத்திரத்தின் அடியில் படிய வைக்கும். மேல் உள்ள தண்ணீரைக் குடிப்பதால், கண் மற்றும் தோல் நோய், வயிற்றுப்போக்கு, பசியின்மை, சிறுநீரகக் கல் உள்ளிட்டவை குணமாகும். கேன் வாட்டரிலும் தேற்றன் கொட்டையை போட்டு பயன்படுத்தலாம். நீர்த் தேக்க தொட்டியிலும் கூட, உடைத்த தேற்றன் கொட்டையை மெல்லிய துணியில் முடிந்து போடலாம்.

முருங்கை இலை மற்றும் விதை:
அதேபோல், முருங்கை விதை மற்றும் இலையைப் பொடித்து, மெல்லிய துணியில் கட்டி, சம்ப் மற்றும் நீர் தேக்க தொட்டியில் போட்டு, அரை மணி நேரம் கழித்து எடுத்து விடலாம். வீட்டு உபயோகத்துக்கான பானைகளிலும் போடலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஓரிரண்டு முருங்கை விதை மற்றும் ஒரு கைப்பிடி அளவு இலை சேர்த்து, 20 நிமிடங்கள் கழித்து வடிகட்டிக் குடிக்கலாம். முருங்கை சிறந்த கிருமிநாசினியாக செயல்படும்.

மிளகு:
ஒரு பாத்திரத்தில், ஐந்து மிளகு மற்றும் தண்ணீர் சேர்த்து, இரவு முழுவதும் ஊற விட்டு, காலையில் வடிகட்டி குடிப்பது நல்லது. மிளகு, தண்ணீரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை உறிஞ்சிக் கொள்ளும். அரை லி., தண்ணீருக்கு, 5 - 6 மிளகு போடலாம். தவிர, ஒரு நாள் இரவு ஊறிய தண்ணீரை, மறுநாளே பயன்படுத்தி விடுவது நல்லது.

காந்தம்:
ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி, 15 - 30 நிமிடம் வரை, அதனுள் காந்தத்தை போட்டு வைத்தால், காந்த சக்தி கிடைக்கும். இதுதவிர, நம் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தையும் தரும். பொதுவாகவே தண்ணீர் தோன்றும் பகுதி, அது கடந்து வரும் பாதையைப் பொறுத்து, அதன் தன்மை, சத்து மாறுபடும். இந்த காந்த முறையைப் பயன்படுத்தும் போது, அது தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறு, மினரல்சை அதிகப்படுத்தும். அதனால், நம் உடலில் உள்ள உணவுக் கழிவு மற்றும் வளர்சிதைக் கழிவுகள் அனைத்தும் சேர்ந்த, வெளியேற்றப்பட வேண்டிய நச்சான, 'பிரி ரேடிக்கல்ஸ்' வெளியேறும் தன்மையையும் அதிகரிக்கும்.

இவை நம் உடலில் தங்கியிருந்தால், ஒவ்வொரு செல்லுக்கும் சேர வேண்டிய ஆக்சிஜனின் அளவை குறைத்து, செல்லை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இது, நாளடைவில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகையால், காந்த முறையில், ஹைட்ரஜன் அதிகமான தண்ணீரைக் குடிக்கும் போது, இவை அனைத்தையும் சரிசெய்யும்.பயணம் செய்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
-- தினமலர் நாளிதழிலிருந்து.

தொடர்புடைய வலைதளங்கள் .
தேத்தான் கொட்டை
உடலுக்கு பலம் தரும் தேத்தான் கொட்டை
குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!
தேத்தாங்கொட்டை
தேற்றா மரக் கொட்டையின் மருத்துவப் பயன்கள்
கிழக்கில் விரியும் கிளைகள்: நீருக்குச் சுவை தரும் தேத்தாங்கொட்டை
கலங்கிய நீரையும் தெளிவாக்கும் தேற்றா மரக் கொட்டை
மெலிந்தவனையும் வலியவனாக்கும் `தேற்றான்கொட்டை’ என்கிற மகா மருந்து!


Monday, 6 August 2018

உடம்பும், மனதும் தெம்பாக உள்ளது!--மாடித் தோட்டத்தால்....

மாடித் தோட்டத்தை பராமரித்து வரும், 75 வயதான, சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன்: மெட்ரோ வாட்டர் போர்டில், இன்ஜினியராக இருந்த நான், 25 ஆண்டு பணி முடித்து, விருப்ப ஓய்வு பெற்று, சொந்த தொழில் ஆரம்பித்தேன். 10 ஆண்டுகளுக்கு முன், அதையும் மூடி, இப்போது ஓய்வில் இருக்கிறேன். சொந்த தொழில் நடத்திய சமயத்திலேயே, மாடித் தோட்டம் ஆரம்பித்து விட்டேன்.


செடிகளை வளர்க்க பிளாஸ்டிக் வாளி, பைகளை தான் பயன்படுத்துகிறேன். வாளி, பையின் பக்கவாட்டில், சிறு துளை போட்டு, மணல், செம்மண், தேங்காய் நார், மாட்டு எரு, மண்புழு உரம் நிரப்பி, விதைப்பேன். வீணாகும் காய்கறிகள், மட்கின இலை தழைகளை, செடிகள் இருக்கும் தொட்டிகளில் போடுவேன். தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றுவேன்.

பருப்புக்கீரை, தண்டுக்கீரை, முடக்கத்தான், துாதுவளை, புளிச்சகீரை, புதினா, தக்காளி, கத்திரி, குடை மிளகாய், பிரண்டை, காராமணி, துளசி, திருநீற்றுப் பச்சிலை, சோற்றுக் கற்றாழை, மல்லிகைப்பூ, முல்லைப்பூ, வாழை, கீழாநெல்லி, இன்சுலின் செடி, வெற்றிலை என, பல செடிகள் உள்ளன. மல்லிகை கொடி கீழிருந்து, மூன்றாவது மாடி வரை படர்ந்து உள்ளது. 

ஒரு வாளியில், ஒரு வகை விதையை மட்டும் தான் விதைப்பேன். செடிகளில் ஊட்டம் குறையும் போது, 20 லிட்டர் தண்ணீரில், 30 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளித்து விடுவேன்.பூச்சித் தாக்குதல் வராமல் இருக்க, அவ்வப்போது இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் தெளிப்பேன். 20 நாட்களுக்கு ஒரு தடவை, 10 லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி, இ.எம்., கரைசல் கலந்து தெளிப்பேன். வெயில் காலத்தில் செடி வாடாமல் இருக்க, நிழல் வலை அமைத்துஉள்ளேன்.

இயற்கையில் விளையும் காய்கறிகள், நல்ல சுவையுடன் உள்ளன. அன்றன்றே பறித்து, புத்துணர்ச்சியுடன் ஒரு கீரையை உணவில் சேர்க்க முடிகிறது. பக்கத்தில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு, தினமும் வீட்டில் இருந்து பூ பறித்து எடுத்து போவேன். வாளி, பைகளை பலகை மேல் வைத்துள்ளதால், தரைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. என் மாடித் தோட்ட ஆர்வத்தை பார்த்து, 'ஆர்கானிக் கார்டன் பவுண்டேஷன்' அமைப்பினர், 'வாழ்நாள் சாதனையாளர்' விருது கொடுத்து உள்ளனர்.

தினமும் தோட்டத்தில் வேலை செய்வது, உடற்பயிற்சியாக இருப்பதுடன், நமக்கு தேவையானதை, நாமே உற்பத்தி செய்வதும், மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வயதிலும் உடம்பும், மனதும் எப்போதும் தெம்பாக இருப்பதற்கு காரணம், இந்த செடிகள் தான். தொடர்புக்கு 94449 26128
--தினமலர் நாளிதழிலிருந்து

Sunday, 5 August 2018

பேரீச்சை சாகுபடி:

பேரீச்சை சாகுபடியில் அதிக லாபம் சம்பாதிக்க வழி கூறும், தருமபுரி மாவட்டம், அரியகுளத்தை சேர்ந்த நிஜாமுதின்: சவுதி அரேபியாவில், வேளாண் பயிற்சி கூடத்தில் பணிபுரிந்த போது, பேரீச்சை சாகுபடி குறித்து அறிந்தேன்.நம் ஊரில் செய்தால் என்ன என யோசனை வந்து, அங்கிருந்த பேரீச்சை நாற்றை எடுத்து வந்து, சொந்த ஊரில் நட்டேன். 1991ல், பேரீச்சை சாகுபடியை துவங்கினேன்.

தற்போது, 1 ஏக்கருக்கு, 76 செடி வீதம், 13 ஏக்கரில், 630 பேரீச்சை செடிகளை நட்டு, பராமரித்து வருகிறேன். 24க்கு, 24 அடியில், ஒரு செடி நட வேண்டும். குழியின் அடியில், 1.5 அடி வரை, மணல் கலந்த மண்ணையும், மேல் பாகம், 1.5 அடியில் மண்ணையும், இயற்கை உரங்களையும் கலந்து நடவு செய்ய வேண்டும். இது, அனைத்து வகையான மண் ரகத்திலும் வளரும் தன்மையுடையது. நடவு செய்து ஒரு மாதம் வரை, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, 50 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மாதம் கழித்து, வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். மரங்களான பின், மாதத்திற்கு இரு முறை மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் போதும். தண்ணீர் இல்லாத வறட்சி காலங்களில், தென்னையை போல், பேரீச்சை மரம் காய்ந்து போக வாய்ப்பு இல்லை.

ஆண்டுக்கு இருமுறை, இடை உழவும், இருமுறை இயற்கை உரங்களும் போட வேண்டும். பேரீச்சை மரங்கள், 90 ஆண்டு வரை பழங்கள் தரும். இதன் ஆயுட்காலம், 150 ஆண்டு. இதன் நடுவே ஊடுபயிராக, அனைத்து விதமான பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.நடவு செய்த முதல் ஆண்டில், ஒவ்வொரு செடியும், 30 - 50 கிலோ வரையும், மூன்றாம் ஆண்டு பருவத்தில், 50 முதல் 100 வரை காய்க்கும். பெரும்பாலும் ஜனவரி, பிப்ரவரியில் பூ பூத்து, ஜூன், ஜூலை மாதங்களில் நல்ல தரமான, சுவையான பழங்களை அறுவடை செய்யலாம்.

மரத்தை சுற்றி விளையும் களைகளை, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மரம் வளர்ந்த பின், பக்கவாட்டில் உள்ள கிளைகளை வெட்டி விடுவதுடன், காய்க்க துவங்கியதும், வலைகளால், பழங்களை மூடி விட வேண்டும்; இல்லையெனில் எலி, அணில்கள், பழங்களை சேதப்படுத்தி விடும். எங்களிடம், 32 வகையான பேரீச்சை நாற்றுகள் உள்ளன.

ஒரு நாற்றின் விலை, 3,500 - 5,000 ரூபாய் வரை விற்கிறோம். பழங்கள் கிலோ, 250 - 500 ரூபாய் வரை விற்கிறோம். தற்போது, நம் நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விவசாயமும் படிப்படியாக குறைகிறது. வழக்கமான விவசாயத்தை விட, குறைந்த செலவில், பேரீச்சை சாகுபடியில் அதிக பலன்களை பெற முடியும். தொடர்புக்கு94423 37717.
--தினமலர் நாளிதழிலிருந்து.

 

Saturday, 4 August 2018

வீடுகளில் நெல் அரைக்கும் இயந்திரம் - கிரைண்டர் வைக்கும் இடமே போதுமானது:

நெல் அரைக்கும் இயந்திரம் குறித்து கூறும், சென்னையைச் சேர்ந்த, 'நல்லகீரை' அமைப்பைச் சேர்ந்த ஜெகன்: சத்தீஸ்கர் மாநில விவசாயிகளுக்கு, கீரை சாகுபடி தொடர்பாக பயிற்சி அளிக்க சென்ற போது, அங்கு, நெல் அரைக்கும் இயந்திரத்தை பார்த்தோம். அந்த மாநில மக்கள், வீடுகளிலேயே இந்த இயந்திரத்தை வைத்து நெல்லை அரைக்கின்றனர். தமிழக மக்களுக்கு பயன்படுமே என, இயந்திரம் தயார் செய்யும் இடத்துக்கு போய், நாலைந்து மிஷின்களை வாங்கி வந்தோம்.

அதை நண்பர்கள் சிலர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இப்போது நிறைய பேர், இயந்திரம் வாங்கி தருமாறு கேட்டதால், 'ஆர்டர்' செய்துள்ளோம். முதல் முறை வாங்கி வந்தபோது, ஒரு மிஷினுக்கு அடக்க விலை, 40 ஆயிரம் ரூபாய். இப்போது மொத்தமாக ஆர்டர் செய்திருப்பதால், 36 ஆயிரம் ரூபாய் ஆகிறது. லாபம் எதுவுமின்றி, அடக்க விலைக்கே வாங்கிக் கொடுக்கிறோம். இதை இயக்குவது, ரொம்ப சுலபம். கிரைண்டர் வைக்கும் அளவு இடமே போதுமானது. 3 ஹெச்.பி., மோட்டாரில் இயங்கும் இதற்கு, 'சிங்கிள் பேஸ்' மின் இணைப்பே போதும்.

100 கிலோ நெல்லை, 45 நிமிஷத்தில் அரைத்து விடலாம். 60 - 65 சதவீத அரிசி கிடைக்கும். நெல்லை பச்சையாகவும், வேக வைத்தும் அரைக்கலாம். இந்த மிஷினுக்கு மானியம் கிடைத்தால், இன்னும் குறைவான விலையில் விவசாயி களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

இயந்திரத்தை பயன்படுத்தி வரும், திண்டுக் கல்லைச் சேர்ந்த ஹரிஹரன்: இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகமுள்ள நான், விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கி, அரைத்து வருகிறேன். என்னிடம், 60 நாட்டு மாடுகள் உள்ளன. நெல் அரைக்கும் போது கிடைக்கும் தவிடு, மாடுகளுக்கு தீவனமாகிறது. மிஷினில் பெரிய தொழில்நுட்பம் எதுவும் இல்லை.

அரைக்கும் போது நெல்லை அதிகமாக கொட்டினால், 'பெல்ட்' இழுக்க சிரமப்படும். கொஞ்சமாக ஒரே சீராக கொட்ட வேண்டும். மிஷின் வாங்கி ஐந்து மாதம் ஆகியும், இதுவரை பிரச்னை இல்லாமல் வேலை செய்கிறது. மோட்டா, சன்னம் என, எல்லா ரக நெல்லையும் அரைத்துள்ளேன். ரகம், ஈரப்பதத்தை பொறுத்து அரிசி கிடைக்கும். எனக்கு, 100 கிலோ நெல்லுக்கு, 65 கிலோ அரிசி கிடைத்தது. தவிடு சேகரிக்க, தனியாக உள்ள பையில் விழுந்துவிடும். ஈரப்பதம் சரியாக இல்லையெனில், அரிசி உடையும். பெரும்பாலும் குருணை வருவதில்லை. ஒன்றிரண்டு வந்தாலும் தனியாக விழுந்துவிடும்;

மின் கட்டணமும் அதிகம் ஆகாது.உள்ளூர் விவசாயிகள், நெல்லை கொண்டு வந்து அரைத்து செல்கின்றனர். அரைக்கும் கூலியாக தவிட்டை கொடுத்து விடுகின்றனர். நெல் விவசாயிகளுக்கு, இது அவசியமான மிஷின்.தொடர்புக்கு: ஜெகன்: 90420 11768 ஹரிஹரன்: 73396 97444.
--தினமலர் நாளிதழிலிருந்து


கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற