Saturday 4 August 2018

வீடுகளில் நெல் அரைக்கும் இயந்திரம் - கிரைண்டர் வைக்கும் இடமே போதுமானது:

நெல் அரைக்கும் இயந்திரம் குறித்து கூறும், சென்னையைச் சேர்ந்த, 'நல்லகீரை' அமைப்பைச் சேர்ந்த ஜெகன்: சத்தீஸ்கர் மாநில விவசாயிகளுக்கு, கீரை சாகுபடி தொடர்பாக பயிற்சி அளிக்க சென்ற போது, அங்கு, நெல் அரைக்கும் இயந்திரத்தை பார்த்தோம். அந்த மாநில மக்கள், வீடுகளிலேயே இந்த இயந்திரத்தை வைத்து நெல்லை அரைக்கின்றனர். தமிழக மக்களுக்கு பயன்படுமே என, இயந்திரம் தயார் செய்யும் இடத்துக்கு போய், நாலைந்து மிஷின்களை வாங்கி வந்தோம்.

அதை நண்பர்கள் சிலர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இப்போது நிறைய பேர், இயந்திரம் வாங்கி தருமாறு கேட்டதால், 'ஆர்டர்' செய்துள்ளோம். முதல் முறை வாங்கி வந்தபோது, ஒரு மிஷினுக்கு அடக்க விலை, 40 ஆயிரம் ரூபாய். இப்போது மொத்தமாக ஆர்டர் செய்திருப்பதால், 36 ஆயிரம் ரூபாய் ஆகிறது. லாபம் எதுவுமின்றி, அடக்க விலைக்கே வாங்கிக் கொடுக்கிறோம். இதை இயக்குவது, ரொம்ப சுலபம். கிரைண்டர் வைக்கும் அளவு இடமே போதுமானது. 3 ஹெச்.பி., மோட்டாரில் இயங்கும் இதற்கு, 'சிங்கிள் பேஸ்' மின் இணைப்பே போதும்.

100 கிலோ நெல்லை, 45 நிமிஷத்தில் அரைத்து விடலாம். 60 - 65 சதவீத அரிசி கிடைக்கும். நெல்லை பச்சையாகவும், வேக வைத்தும் அரைக்கலாம். இந்த மிஷினுக்கு மானியம் கிடைத்தால், இன்னும் குறைவான விலையில் விவசாயி களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

இயந்திரத்தை பயன்படுத்தி வரும், திண்டுக் கல்லைச் சேர்ந்த ஹரிஹரன்: இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகமுள்ள நான், விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கி, அரைத்து வருகிறேன். என்னிடம், 60 நாட்டு மாடுகள் உள்ளன. நெல் அரைக்கும் போது கிடைக்கும் தவிடு, மாடுகளுக்கு தீவனமாகிறது. மிஷினில் பெரிய தொழில்நுட்பம் எதுவும் இல்லை.

அரைக்கும் போது நெல்லை அதிகமாக கொட்டினால், 'பெல்ட்' இழுக்க சிரமப்படும். கொஞ்சமாக ஒரே சீராக கொட்ட வேண்டும். மிஷின் வாங்கி ஐந்து மாதம் ஆகியும், இதுவரை பிரச்னை இல்லாமல் வேலை செய்கிறது. மோட்டா, சன்னம் என, எல்லா ரக நெல்லையும் அரைத்துள்ளேன். ரகம், ஈரப்பதத்தை பொறுத்து அரிசி கிடைக்கும். எனக்கு, 100 கிலோ நெல்லுக்கு, 65 கிலோ அரிசி கிடைத்தது. தவிடு சேகரிக்க, தனியாக உள்ள பையில் விழுந்துவிடும். ஈரப்பதம் சரியாக இல்லையெனில், அரிசி உடையும். பெரும்பாலும் குருணை வருவதில்லை. ஒன்றிரண்டு வந்தாலும் தனியாக விழுந்துவிடும்;

மின் கட்டணமும் அதிகம் ஆகாது.உள்ளூர் விவசாயிகள், நெல்லை கொண்டு வந்து அரைத்து செல்கின்றனர். அரைக்கும் கூலியாக தவிட்டை கொடுத்து விடுகின்றனர். நெல் விவசாயிகளுக்கு, இது அவசியமான மிஷின்.தொடர்புக்கு: ஜெகன்: 90420 11768 ஹரிஹரன்: 73396 97444.
--தினமலர் நாளிதழிலிருந்து


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...