Thursday 30 June 2016

படித்ததில் பிடித்தது 3

1) உண்மை ஒன்றே ஒன்றுதான்; பொய்கள்தான் பல.

2) நமது மனங்கள் சிறியவை, புரிதல் ஆற்றலும் குறுகியது. முழுமையை பார்க்க நம்மால் முடிவதில்லை, ஒரு பகுதியை மட்டுமே நாம் பார்க்கிறோம்.

3) வெறுப்பு கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் மட்டுமே இருக்க கூடியது; அன்புக்கு இறந்த காலமும் எதிர்காலமும் இல்லை.

4) புலன்களை நம்பாதே, விழிப்புணர்வை நம்பு; விழிப்புணர்வு புலன்களுக்கு பின்னால் மறைந்திருப்பது.

5) பிறருடைய சத்தியத்தை நம்ப ஆரம்பிக்கும் போது நீ சிரமப்பட்டுதான் போகிறாய்.

6) மனம் என்பது சேர்த்து வைத்து கொண்டிருக்கும் எண்ணங்கள், கடந்த காலத்தின் குப்பை கூளம், நீ அதனிடமிருந்து முழுக்க வித்தியாசமானவன்.
                                                                                                                                                 -ஓஷோ

7) தினமும் 2 மணிநேரத்தை உங்களுக்காக இல்லாமல், லாப நோக்கத்திக்காக இல்லாமல் மற்றவர்களுக்காகவும், பொதுநலனுக்காகவும் செலவிடுங்கள் வாழ்க்கை பயணம் பெரிதும் இனிக்கும், முதுமை இனிமையாக கழியும். முதியோர் இல்லங்களுக்கு சென்று முதியோருடன் பேசுங்கள்.
-வரலொட்டி ரெங்கசாமி

கேட்டதில் பிடித்தது

8) மனுஷனோட மனுஷன் சேர்ந்து வாழறதுதானே சந்தோசம், இது தெரியாத அறிவு என்ன அறிவு? 
 -தம்பி ராமய்யா

9) வேணும்னு சொல்றதுல இல்ல, வேண்டாம் அப்படிங்கறத அழுத்தி சொல்றதுதான் கெத்து.
-பாபி சிம்ஹா

10) KNOWING IS OWNING
-Sherlock Holmes, Season-3(Episode-3)

அலஹாபாத் மஹாகும்பமேளா பயணம்: 5

பசி: ஆற்றிலிருந்து ரயில் நிலையம் வரும் வழியில் ஒரு இடத்தில், சாலையில் சென்றுகொண்டிருப்பவர்களை அழைத்து வந்து உணவு கொடுத்தனர், எனக்கும் கொடுக்கப்பட்டது, அவர்கள் கூப்பிடாமல் இருந்திருந்தாலும் நானே சென்று வாங்கியிருப்பேன் அவ்வளவு பசி, களைப்பு. அருகில் உணவு விடுதிகள் இல்லை, அந்த நேரத்து உணவு தேவ அமிர்தமாக இருந்தது, அதை சுவைத்தது இல்லை ஆனால் இப்படி தான் இருக்கும் என்ற ஒரு கற்பனை. சாப்பிட்டு களைப்பு தீர நிழலில் அமர்ந்து இளைப்பாறிவிட்டு ரயில்நிலையத்தை அடைந்தேன், பயணசீட்டு எடுக்க 4 பெரிய வரிசைகளில் மக்கள் காத்துக்கிடந்தனர். அதில் ஒரு வரிசையில் நின்று அரை மணி நேரம் கழித்து ஹவ்ராவிற்கு ஒரு பொது வகுப்பு பயணசீட்டு  எடுத்து, 10.30 மணிக்கு நடைமேடையை அடைந்தேன்.

ஏற்றிவிட்டார்கள்: வரும் ரயில்கள் அனைத்திலும் மக்கள் சாரை சாரையாய் வந்து கொண்டே இருந்தனர் அவர்களை வேடிக்கை பார்த்தே நேரம் ஓடிவிட்டது. டெல்லியிலிருந்து வரும் ரயிலுக்காக காத்திருந்தேன், 1.5 மணி நேரம் ரயில் தாமதம், 12 மணிக்கு வரவேண்டிய வண்டி 1.30 க்கு தான் வந்தது. General compartmentல் கால் வைக்க முடியாத நிலை, வேறு வழியே இல்லை sleeper coachல் தான் ஏறியாக வேண்டும். ஏகப்பட்ட தள்ளு முள்ளு. இறங்குபவர்களாலும் நிதானமாக இறங்கமுடியவில்லை ஏறுபவர்களாலும் சரியாக ஏறமுடியவில்லை. எனக்கு முன் 10 பேர் எனக்கு பின் 10 பேர், உண்மையில் நான் ரயில் ஏற முயற்சிசெய்துகொண்டிருந்தேன். ஆனால் எனக்கு பின் இருந்தவர்களின் உந்து விசையால் நான் ரயிலில் ஏற்றப்பட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக எனக்கு பின் இருந்த குண்டு பெண்மணி முரட்டுத்தனமாக தள்ளிக்கொண்டு ஏற முயன்றுகொண்டிருந்தார், அவர்தான் என்னை தள்ளி தள்ளி ரயிலில் ஏறச்செய்தார் ஒருவழியாக ஏறிவிட்டேன், இல்லை ஏற்றிவிட்டார்கள். நம்ம ஊரில் வேலை நாட்களில் Peak hoursல் பேருந்துகளில் எவ்வளவு கூட்டம் இருக்குமோ அவ்வளவு கூட்டம் இருந்தது, இத்தனைக்கும் அது Sleeper compartment. இதுவே இப்படி என்றால் General compartment நிலைமை எப்படி இருக்கும்!!!!!!!!!!#####???????. யாராலும் எங்கும் நடந்து போய்வர முடியவில்லை, நின்ற இடத்திலேயே அசைந்துகொண்டிருக்க மட்டுமே முடிந்தது, இந்த கூட்டத்தில் TT வரமாட்டார் என்ற ஒரு நிம்மதி, அவரும் கடைசி வரை வரவேயில்லை. 2 மணிக்கு ரயில் கிளம்பியது, செல்ல செல்ல கூட்டம் குறைய ஆரம்பித்தது, 2 மணி நேரம் கழித்து நின்ற இடத்திலேயே அமரும் அளவிற்கு இடம் கிடைத்தது.

கொல்கத்தா: இரவு 2 மணி வரை தூங்கவேயில்லை, நின்றுகொண்டும், தரையில் அமர்ந்து கொண்டும் காலத்தை கடத்தினேன். இன்னும் 2 மணி நேரத்தில் கொல்கத்தா அடைந்துவிடும் சமயத்தில் Sleeper berth ஒன்று காலியாகி இடம் கிடைத்தது. படுத்து நன்றாக தூங்கிப்போனேன். 4 மணிக்கு ஹவுரா நிலயத்தை அடைந்து, ஹோட்டல் ஹவுராவில் (ஹவுரா நிலையத்தை விட்டு வெளிவந்து நின்று பார்த்தால் இந்த ஹோட்டல் தெரியும்) அறை எடுத்து தங்கினேன், ஒரு நாள் வாடகை 300 ரூபாய். 9 மணி வரை உறங்கி பின் எழுந்து குளித்து சாப்பிட சென்றேன்.

(http://myventure.in/list-of-startups-from-kolkata-that-are-making-it-big/)

தட்கால் சீட்டு: இதுதான் முதல் முறை கொல்கத்தா வீதிகளில் உலாவருவது, ஏனோ தெரியவில்லை கொல்கத்தா எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது குவாஹாத்தி செல்ல ரயில் கிடைக்காது விமானம்தான் ஒரே தீர்வு, விலையும் 2500 ஐ தாண்டாது. அதனால் விமானசீட்டு முன்பதிவு செய்ய Browsing center தேடிக்கண்டுபிடித்து browsing செய்துகொண்டிருந்தபோது ஒரு எண்ணம் தோன்றியது. எனவே சும்மா தெரிந்து கொள்ளலாமே என்று "இன்று (11/2/13) மலை குவாஹாத்தி செல்ல ரயிலில் பயணசீட்டு கிடைக்குமா?"  என்று விசாரித்தேன். கிடைக்குமென்றார்கள், Agentஇடம் சென்று Saraighat trainக்கு தட்கலில் முயற்சி செய்தபோது Tatkal Waiting List 7 என்று காட்டியது, சீட்டு உறுதியாகிவிடும் என்றார்கள், சரி பதிவு செய்யுங்கள் என்று சொல்லி 100 ரூபாய் முன்பணம் செலுத்தி வந்துவிட்டேன்.

காளி தரிசனம்: மாலை 3.50 மணிக்குத்தான் வண்டி, அதுவரை என்ன செய்யலாம், காளி கோவில் சென்றுவரலாம் என்ற யோசனை வந்தது. வரும் வழியில் ஒரு தமிழ் ஹோட்டல் இருந்தது. அங்கு இட்லி, தோசை சாப்பிட்டு காளி கோவில் செல்ல வழி கேட்டு  சென்றேன். காசி சென்று வருவதாகத்தான் திட்டம், ஆனால் காளி அன்னை தன்னை பார்க்க அழைத்திருக்கிறாள். கோவிலில் அன்னையின் தரிசனம் சிறப்பாக முடிந்தது. இப்போது வீட்டிற்கு phone செய்து கும்பமேளா சென்று வந்தது பற்றி கூறினேன், அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை, திட்டவுமில்லை. பிறகு கோவிலிருந்து படகு மூலம் ராமகிருஷ்ண மடம் வந்தடைந்தேன், மணி மதியம் ஒன்றாகியிருந்தது அதனால் மடம் மூடப்பட்டுவிட்டது.

VISITING  HOURS OF BELUR MATH

April to September:: 6.00 to 11.30 a.m. and 4.00 to 7.00 p.m.
October to March  :: 6.30 to 11.30 a.m. and 3.30 to 6.00 p.m.

அப்படியே பேரூந்து பிடித்து வந்து Tatkal ticket நிலவரம் பார்த்தால் உறுதியாகி இருந்தது. மீதி பணத்தை கொடுத்து சீட்டை வாங்கி கொண்டு மீண்டும் தமிழ் ஹோட்டலில் சாப்பிட்டு, ஹௌரா ஹோட்டல் அறையை காலி செய்து ரயில் நிலையத்தை மாலை 3.20 மணிக்கு அடைந்தேன். 3.50 க்கு கிளம்பி அடுத்த நாள் காலை 11.45 க்கு குவாஹாத்தியை வந்தடைந்தேன். இவ்வாறாக கும்பமேளா பயணம் எதிர்பாராத திருப்பங்களுடன் முடிவடைந்தது. எண்ணங்கள் நிறைவேறும் என்பதற்க்கேற்ப காசி செல்லும் வாய்ப்பு கிடைத்தது அடுத்த பதிவில் தொடர்வோம்........
  

    (http://www.railwire.co.in/pilgrimage.html)                                                 (http://blog.onlineprasad.com/amazing-and-rare-aarti-video-from-dakshineshwar-kali-temple/)

You see, my son, it is not a fact that you will never face danger. Difficulties always come, but they do not last forever. You will see that they pass away like water under a bridge. - Sarada Devi




 

Wednesday 29 June 2016

அலஹாபாத் மஹாகும்பமேளா பயணம்: 4

ரசித்தவை: கரை ஏறி பொருட்களை வைத்த இடத்திற்கு வந்து துவட்டிக்கொண்டு ஈரம் காய்ந்த பிறகு உடை மாற்றி பொருட்களை பார்த்துக்கொண்டிருந்தவர்க்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். உச்சி வெயில் மண்டையை சூடாக்கி கொண்டிருந்தது, சர்பத் குடித்ததற்கு காசு கொடுக்கவில்லை என்பது ஞாபகம் வந்தது. அவரை தேடி கண்டுபிடித்து பணத்தை கொடுத்து நடையை தொடர்ந்தேன். இவ்வளவு நேரமும் நானிருந்தது ஆற்றின் நடு பகுதிதான், 800மீ நடந்து வந்திருப்பேன், ஆற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது அதன் சுற்று பகுதியில் நிறைய கடைகள் இருந்தன. அதில் ஒரு கடையில் 15 ரூபாய்க்கு பூரி கிழங்கும் டீயும் சாப்பிட்டபின்தான் தெம்பே வந்தது மணி மதியம் 1.30.

நல்ல விஷயம் என்னவென்றால் மண் குவளையில் டீ கொடுக்கப்பட்டதுதான், கொல்கத்தாவிலும் அநேக இடங்களில் இப்படித்தான் கொடுக்கப்படும். கையில் பிடிக்கும் போது அவ்வளவு சூடாக இருக்காது, விரைவில் ஆறிவிடும், உதட்டில் சூடு படுவது இருக்காது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இருக்காது. அடுத்து அலஹாபாத் சிட்டி ஸ்டேஷனிலிருந்து வாரணாசி செல்லும் திட்டத்துடன் ஒரு ரிக்சாவில் ஏறினேன், இந்த ஊரில் ரிக்சாக்கள் மிக அதிகம். இந்த ரிக்சாக்களின் மணி வித்தியாசமாக, அதாவது பிரேக் பிடித்தால் மணி அடிக்கும் விதமாக இருந்தது.

     
(http://www.nextstopwhoknows.com/india-photo-series/)(http://www.denizenreport.com/wp-content/uploads/2014/03/RICKSHAW_EDIT_LR.jpg)

ரயில் தாமதம்: ரிக்சாவாலா அரைமணிநேரத்தில் கொண்டுவந்து என்னை இறக்கி விட்டார், 3.15 மணிக்கு காசி செல்ல டிக்கெட் எடுத்து நடைமேடை வந்தேன். 3.30 க்கு வர வேண்டிய வண்டி 4 மணிக்கு தான் என்ற அறிவிப்பு வந்தது. நிலையத்திற்கு வெளியில் போய்வரலாம் என்று வந்து பார்த்தபோது நிறைய கொய்யாப்பழங்கள் இருந்தது அவற்றில் 2 வாங்கி சாப்பிட்டுவிட்டு சிறிது உலாத்திவிட்டு மீண்டும் உள்ளே வரும்போது மணி 3.45, மீண்டும் ரயில் தாமதம் பற்றிய அறிவிப்பு. அரைமணி நேரம் தாமதத்தை அடுத்து ஒன்றரை மணி நேரம் தாமதம் என்ற அறிவிப்பு வந்தது, எப்படியாவது காசி சென்று விட வேண்டும் என்று நடைமேடையிலேயே காத்திருந்தேன். வெயில் முற்றிலுமாக மறைந்து பணிப்பெய்ய ஆரம்பித்திருந்தது. கல்லூரி மாணவர்கள் அதிகமாக இருந்தனர், சாமியார்கள், சம்சாரிகள், வியாபாரிகள் என்று பலரும் அந்த ரயிலுக்காக காத்திருந்தனர். 

மன மாற்றம்: பல விதமான எண்ணங்கள் மற்றும் விடை காணமுடியாத கேள்விகள் வந்துபோன வண்ணம் இருந்தது. மணி இப்போது 6. ரயில் இன்னும் வரவில்லை, எனக்கோ மனம் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தது, காசி போயேத்தான் ஆக வேண்டுமா? அல்லது காத்திருந்து போவதா? சில போராட்டங்களுக்கு பின் "காசி போக, வேண்டாம் இன்றே ரயில் பிடித்து ஹவுரா செல்லலாம் பிறகு அங்கிருந்து விமானத்தில் குவாஹாத்தி செல்லலாம்" என்று முடிவெடுத்து நிலையத்தை விட்டு வெளியில் வந்தேன், எதிரில் இருந்த கடையில் ஒரு டீ குடித்துவிட்டு ரிக்சாவில் ஏறி அலஹாபாத் ஜங்சன் செல்ல சொன்னேன். அலஹாபாத் தெருக்கள் வழியாக சென்று கொண்டிருந்தேன், அழகான தெருக்கள், கட்டிடங்கள் புகை காக்கும் ஆட்டோ ரிக்சா இல்லை. தெருவில் அநேக இடங்களில் உணவு பந்தல்கள் இருந்தது, அனைத்தும் கும்பமேளாவிற்கு வருபவர்களுக்கான அன்னதான பந்தல், வருபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள்தான். 

அன்னதானமும் சூழல் கேடும்: உண்மையில் இந்த பந்தல்கள் நல்ல விஷயம்தான், ஆனால் கொடுக்கப்படும் பொருட்கள் பிளாஸ்டிக் தட்டுகளில் கொடுக்கப்பட்டதுதான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, ஒரு வகையில் தானம் தான் என்றாலும் அது உண்டுபண்ணும் கழிவுகள் மிக அதிகம். சில இடங்களில் காய்ந்த இலைகளை தட்டுபோல் செய்து அதில் கொடுத்தார்கள். பூரிக்கிழங்கு, ரொட்டி, சாம்பார்சாதம், தண்ணீர்  என ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு வகை. என்னை கூட்டி சென்ற ரிக்சாகாரர் ஒரு பந்தலில் நிறுத்தி "சாப்பிட்டு செல்லலாமா?" என்று கேட்டார், சரி என்றதும் இறங்கிப்போய் அவருக்கு ஒரு தட்டும், நான் வேண்டாம் என்று சொல்லியும் எனக்கு ஒரு தட்டு பூரி கிழங்கும் வாங்கிவந்துவிட்டார். பூரி நன்றாகத்தான் இருந்தது. 6.30 க்கு ஜங்சன் வந்துவிட்டேன்.

 (https://www.flickr.com/photos/30120194@N02/4260065599)

இரவு தங்குதல்: பின் பக்கம் வழியாக ரயில் நிலையத்திற்குள் சென்றேன், பயண சீட்டு வழங்க சிறப்பு counterகள் செயல்பட்டுக்கொண்டிருந்தது. கூட்டம் அதிகமிருந்ததால் காவல்துறையின் கண்காணிப்பும் வலுவாக இருந்தது, குண்டு கண்டறியும் கருவி, மோப்ப நாய்கள், ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் காவலர்கள் என எதையும் சமாளிக்கும் நிலையில் காவல்துறையினரின் செயல்பாடு இருந்தது. அங்கும் இங்கும் அலைந்து பார்த்தும் ஹவ்ரா செல்லும் ரயிலின் பெயரும் காலமும் தெரியவில்லை எனவே ஹிந்தி ரயில் வழிகாட்டி ஒன்றை வாங்கினேன். அத்தனை முறை புரட்டிப்பார்த்ததில் இன்று இரவே கிளம்புவதற்கு ரயில் கிடையாது அடுத்த நாள்தான் கிளம்ப முடியும் என்று தெரிந்தது. என்னிடம் உறுதி செய்யப்பட்ட பயணசீட்டு கிடையாது, நடை மேடை சீட்டு எடுத்தாலும் இரவு முழுதும் ரயில்நிலையத்தில் தங்க முடியாது. ஹோட்டலில் தங்கலாம் என தீர்மானித்து நிலையத்தை விட்டு வெளிவரும்போது இரவு மணி 8. 

15 நிமிட நடைக்குப்பின் ஒரு நல்ல ஹோட்டல் இருந்தது ஆனால் அறைகள் காலி இல்லை. அந்த சமயத்தில் உள்ளூர்காரர் ஒருவர் நான் அறை தேடுவதை தெரிந்துகொண்டு ஒரு இடத்தை காட்டி அங்கு சென்று பார்க்கும்படி கூறினார். அதே போல் அங்கு சென்று கேட்டேன் இடம் கிடைத்தது. அது ஒரு சின்ன கட்டிடம் மொத்தம் 10 கட்டில்கள், ஒரு கட்டில் மட்டும் 3 அடுக்குடன் இருந்தது, அதில் மூன்றாவது அடுக்கில் எனக்கு இடம் ஒதுக்கப்பட்டது, ஒரு இரவுக்கு 200 ரூபாய். 10 பிப்ரவரி 2013 காலை 6 மணிக்கு விழித்தெழுந்தேன் நல்ல உறக்கம். 6.30 மணிக்கு கிளம்பி மீண்டும் த்ரிவேணிசங்கம் செல்ல எண்ணினேன். நேற்றை விட இன்று மக்கள் கூட்டம் சாலையில் மிக அதிகமாக இருந்தது. 

மீண்டும் திரிவேணி சங்கம்: ஆற்றை நோக்கி செல்லச் செல்ல கூட்ட நெரிசலும் அதிகரித்து கொண்டே சென்றது. 5 கிமீ வந்துவிட்டேன் இன்னும் 2 கிமீ சென்றால் ஆறு வந்துவிடும், ஆனால் எனக்கோ "உள்ளே சென்று வெளிவர முடியுமா?" என்ற சந்தேகம் வரவே, ரயில் நிலையம் சென்று ஹவ்ரா செல்வது என்ற முடிவுடன் திரும்பி வர ஆரம்பித்துவிட்டேன். 4 கிமீ வந்த பிறகு மிகவும் கலைப்படைந்துவிட்டேன், பயணசீட்டு உறுதியாகவில்லை எவ்வாறு செல்ல போகிறோமோ? என்ற கவலையும் சேர்ந்து "ஏன்தான் இங்கு வந்தோமோ?" என்று தோன்றவைத்துவிட்டது. கான்பூர் சென்று அங்கிருந்து செல்லலாம் என்றாலும், காத்திருந்து பயணசீட்டு எடுத்து செல்ல 4 மணிநேரம் ஆகிவிடும், எனவே ஒரே வழி அலஹாபாத் நிலையம் சென்று பொது வகுப்பு பயணசீட்டு வாங்கி செல்வதுதான், இந்த முடிவில் உறுதியுடன் ரயில்நிலையம் நோக்கி நடந்தேன்.



Saturday 25 June 2016

அலஹாபாத் மஹாகும்பமேளா பயணம்: 3

அலஹாபாத் வருவது இதுதான் முதல்முறை புதிய ஊர் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது, எங்கு தங்கப்போகிறேன் என்றும் தெரியாது இருந்தும் ஏதோ ஒரு தைரியத்தில் வந்துவிட்டேன். பெரும்பாலும் எனக்கு புதிய ஊருக்கு போவதோ, முன்பின் தெரியாத மனிதர்களுடன் பழகுவதோ சங்கடத்தையோ பயத்தையோ ஏற்படுத்தியது கிடையாது. நெருக்கமான உறவினர், நண்பர்கள் ஊர்களை தவிர மற்ற தெரிந்த இடங்களுக்கோ அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கோ செல்வதற்கு சலிப்பாகவும், சங்கடமாகவும் இருக்கும் இது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அலஹாபாத் சந்திப்பு, ரயிலில் இருந்த பாதி கூட்டம் இறங்கியது அதில் நானும் ஒருவன். எங்கு திரும்பினாலும்  மனித தலைகள், ஒருவர் மேல் ஒருவர் இடிக்காமல் கையை அளவாக வீசி நடக்கக்கூடிய அளவில் கூட்டம் இருந்தது. அனைத்து ஊர்களிலிருந்தும் மக்கள் கூட்டம் ரயில்களில் வந்து இறங்கிய வண்ணம் இருந்தனர். 

ஹிந்தி மிஸ்: இறங்கியதும் சிறிது நேரம் நின்று மக்கள் வருவதையும் செல்வதையும் பார்த்துக்கொண்டிருந்தேன், எங்கு செல்வது, எப்படி செல்வது என்று யாரையும் கேட்கவில்லை. இறங்கிய மக்கள் கூட்டம் கூட்டமாக தலையில் பொருட்களை சுமந்து கொண்டு நடந்தும், cycle rickshaw விலும் சென்று கொண்டிருந்தனர், எனவே அதுதான் ஆற்றுக்கு (திரிவேணி சங்கம்) செல்லும் வழி என்று செல்ல முடிவெடுத்தேன். வழிகாட்டி பலகைகளை பார்த்து செல்லும் பாதை சரிதான் என்பதை உறுதிசெய்துகொண்டேன். 2 ஆம் வகுப்பு ஹிந்தி டீச்சர் (சாந்தி மிஸ்)  அரட்டி மிரட்டி சொல்லி கொடுத்த ஹிந்தி இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது, அதை வைத்து இன்றும் ஹிந்தி எனக்கு படிக்க, எழுத தெரியும். நாம் 10 வயது வரை எதை கற்கிறோமோ அது நம் வாழ்நாள் முழுமைக்குமான அஸ்திவாரம், எனவே என்னென்ன நல்ல விஷயங்களை குழந்தைகள் மனதில் பதிய வைக்க முடியுமோ அத்தனையையும் 10 வயதுக்குள் பதியவைத்தால் அது குழந்தைகளின் மிக சிறந்த வேலியாய் அமையும், எந்த சூழ்நிலையிலிருந்தும் அவர்களே அவர்களை வழிநடத்திகொள்வார்கள்.

(http://indiarailinfo.com/arrivals/allahabad-junction-ald/455)

களங்கமற்ற வினா: 3 கிமீ வந்ததும் சாலையோர கட்டண கழிப்பறையில் காலைகடன்களை முடித்துவிட்டு அருகில் இருந்த மர நிழலில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் மணி காலை 10.50, நல்ல வெய்யில் இவ்வளவு நேரமும் வெய்யிலில் தான் நடந்து வந்தேன். இதுவரையில் மற்றவர்களையும், சாரை சாரையாய் சென்றுகொண்டிருப்பவர்களையும் பார்த்து பலவிதமாக யோசித்த மனது என்னை நோக்கி திரும்பியது என்னை பற்றி யோசிக்க ஆரம்பித்தது. புது ஊர் யாருக்குமே என்னை தெரியாது, இந்த ஊரில் நான் மகன் அல்ல, மாணவன் அல்ல, அண்ணன் அல்ல, நண்பன் அல்ல எந்த உறவு முறைகளுக்குள்ளும் வராத ஒரு பயணி, வழிப்போக்கன் அவ்வளவே. எதற்க்காக இங்கு வந்தேன்? யார் என்னை தூண்டியது? "ஆற்றில் குளித்தால் எல்லாம் சரியாகிவிடும்" இது என்ன விதமான  நம்பிக்கை? என பல கேள்விகள், வழக்கம் போல விடை தெரியாத கேள்விகள். 11.20 மணியிருக்கும் மனது எப்படியோ புறப்பொருட்களுக்கு சென்று விட்டது, சாலையில் எனது பயணத்தை தொடர்ந்தேன்.

(http://ecards.myfuncards.com/myfuncards/ComposeCard.jhtml?cardID=20091251)

திரிவேணி சங்கம்: போக போகத்தான் தெரிந்தது த்ரிவேணிசங்கம் ரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ  என்று. ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் இருக்கும் சாலை state highways சாலை என்று நினைக்கிறேன், அதன் ஓரமே மக்கள் சென்று கொண்டிருந்தனர். குதிரையில் போலீஸ்காரர்கள் ரோந்து சென்று வந்த வண்ணமே இருந்தனர், போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய Traffic police மற்றும் NCC மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உள்ளூர் மக்கள் கடைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் நதிக்கு போகும் மக்களை பார்த்துக்கொண்டும், அவர்களிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டும், ஏதாவது கேட்டால் பதில் சொல்லிக்கொண்டும் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

5 கிமீ நடந்து வந்தாகிவிட்டது இன்னும் 1.5 கிமீ செல்ல வேண்டும், கடைசி 1.5 கிமீ state highways ஐ விட்டு விலகி தெருக்கள் வழியாக சென்று கொண்டிருந்தது. காலையிலிருந்து சாப்பிடாததால் பயங்கர பசி, சுற்றும் முற்றும் பார்த்தேன் அருகில் தள்ளுவண்டியில் அண்ணாச்சி பழம் இருந்தது, அதில் 2 தட்டு (20 ரூபாய்) வாங்கி சாப்பிட்டேன், அந்த நேரத்து பசிக்கு தேவ உணவாக இருந்தது. 1.5 கிமீ மேலும் நடந்து வந்தேன் ஆறு தெறிகிறது, ஆனால் நீர் இருக்கும் பகுதிக்கு செல்ல இன்னும் 1 கிமீ நடக்க வேண்டும். ஆற்றின் கரை என்று நினைக்கிறேன் நான் நின்றுகொண்டிருந்த இடம் மேடாக இருந்தது, அதாவது இதுவரை வந்த சாலையும் இனி போக வேண்டிய பாதையும் பள்ளத்தில் இருந்தன. அந்த இடத்தில் நின்று பார்த்தால் அனைத்து நிகழ்வுகளும் நன்றாக தெரியும், எனவே அங்கு ஏராளமான புகைப்பட கலைஞர்கள் (வெளிநாட்டுக்காரர்களும் இருந்தனர்) நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். 

யமுனை: அகண்ட காவேரி என்று சொல்லுமிடத்தில் காவேரி ஆற்றின் அகலம் பெரியதாக இருக்கும், அதைவிட இந்த த்ரிவேணிசங்கம் பெரியதாக இருந்தது, 2 ஆறுகள் கலக்கும் இடமில்லையா. தண்ணீர் தாகமெடுத்ததால் சாத்துக்குடி பழச்சாறு வாங்கி குடித்துவிட்டு 20 ரூபாய்க்காக 100 ரூபாயை நீட்டினால் சில்லறை இல்லை குளித்துவிட்டு வரும்போது கொடு என்று சொல்லிவிட்டார், எனக்கோ ஆச்சரியம் என்மேல் நம்பிக்கை வைத்து பிறகு கொடு என்கிறார், அவ்வளவு கூட்டத்தில் நான் திரும்பவும் வருவேனா என்பது சந்தேகமே சரி என்று நானும் கிளம்பி தண்ணீர் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன். 2, 3 நாட்களுக்கு முன்பு Delhiயில் நல்ல மழை பொழிந்திருந்ததால் ஆற்றின் நடுவில் மட்டும் நல்ல வேகமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. நான் நின்று கொண்டிருந்தது த்ரிவேணிசங்கத்தில் இல்லை அதற்கு சற்று முன்பாக, ஏனெனில் அங்கு கூட்டமாக இருந்தது. அதனால் ஒரு நதியில் மட்டும் (யமுனை) குளித்து செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

(http://www.adyargopal.com/trivenisangam.html)

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் குளித்துக்கொண்டும், கரையில் நின்று கொண்டும், பொருட்களுக்கு காவலாயும் பல செயல்களில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தது, யாரையும் தண்ணீர் வேகமாக பாயும் இடத்திற்கு அனுமதிக்கவில்லை, ஒரு தடுப்பு கட்டி அதற்குள்ளாகவே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தண்ணீர் ஓடும் பகுதியிலிருந்து 3 மீ தூரத்திற்கு ஆற்றின் ஓரமாக காய்ந்த புற்களை பரப்பி வைத்திருந்தனர், அதனால் ஈர காலில் வந்தாலும் காலில் சேறு ஒட்டும் பிரச்சனையும், சகதி பிரச்சனையும் இல்லை. இதோ வந்தாகிவிட்டது அடுத்து குளிக்க வேண்டும் எப்படி குளிக்க போவது? என்று யோசித்துக்கொண்டிருந்தேன். 

கும்பமேளா குளியல்: ஏனெனில் நான் தனியாக வந்திருந்தேன் என் பொருட்களை பார்த்து கொள்ள யாருமில்லை. சிறிது நேரம் யார் யார் பையின் அருகில் அமர்ந்திருக்கிறார்கள் என்று கவனித்தேன், ஒரு பெண்மணி தனது குடும்பத்தின் பொருட்களை பாதுகாத்துக்கொண்டிருந்தார் அவரிடம் சென்று பையை வைத்துவிட்டு செல்லலாம் என்று தீர்மானித்தேன். "இந்த பையை பார்த்துக்கொள்கிறீர்களா நான் குளித்துவிட்டு வருகிறேன்" என்று எனக்கு தெரிந்த ஹிந்தியில் அனுமதி கேட்டேன் அவரும் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு சரி என்றார். பையையும், சட்டையையும் அங்கு வைத்து விட்டு துண்டை கட்டிக்கொண்டு ஆற்றில் இறங்கினேன். ஆற்று நீர் அவ்வளவு கலங்கலாக இல்லை மிகவும் குளிர்ந்து கிடந்தது. மெது மெதுவாக இடுப்பளவு நீர் வரும்வரை இறங்கி நின்று 3 முறை முழுகி எழுந்தேன் முடிந்தது கும்பமேளா குளியல்.



Thursday 9 June 2016

அலஹாபாத் மஹாகும்பமேளா பயணம்: 2

ரயில் பயணம்: பொதுவாக வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் February மாதம் காலை மாலைகளில் சற்று குளிர் அதிகமாகவே இருக்கும் sweater இல்லாமல் இருக்க முடியாது. பகல் பொழுதில் நன்றாக இருக்கும் 20 டிகிரி தாண்டாது. எனவே ரயில் பயணம் நன்றாகவே இருக்கும் வெப்ப கால பயணம் போல புழுக்கமாக இருக்காது. ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டே வந்தேன், 1.5 மணி நேரம் கழித்து ஒரு  குடும்பம் (அப்பா, 2 மகன்கள்) என் berth அருகில் வந்தமர்ந்தனர். அப்பாவை மருத்துவத்திற்க்காக அழைத்து செல்கிறார்கள் என்று எனக்கு தெரிந்த ஹிந்தியை வைத்து தெரிந்துகொண்டேன். 

இப்பொழுது ஆட்கள் இருக்கிறார்களே என்று பையை வைத்துவிட்டு (பெரிதாக ஏதும் இல்லை என்றாலும் கொஞ்சம் பணம் இருந்தது) கதவருகில் வந்து நின்றுகொண்டிருந்தேன். 2.5 மணி நேரம் ஓடியிருக்கும், கதவருகில் நின்றுகொண்டிருந்த எனக்கு கண்கொள்ளா காட்சி, தண்டவாளத்தின் இரு புறமும் வயல்வெளிகள், அதில் அழகான மஞ்சள் நிற பூக்கள் பூத்திருந்தன, அதன் கீழ் இலையின் பச்சை நிறம், மஞ்சள் பச்சை கூட்டணி அற்புதமாக இருந்தது அவை அனைத்தும் கடுகு செடிகள். அது பழைய ஞாபகங்களுக்கு என்னை இட்டுச் சென்றது, 6 ஆம் வகுப்பில் William Wordsworth அவர்களின் Daffodils poem படித்த ஞாபகம். நம்மூர் வரலாற்றை இவ்வளவு ஞாபகம் வைத்திருந்ததாக தெரியவில்லை.


(http://www.panoramio.com/photo/64803240
https://assamscience.wordpress.com/2014/02/14/alternative-cultivation-help-assams-flood-affecrd-farmers/)

காட்சிகள்: நேரம் ஆக ஆக ரயிலில் கூட்டம் அதிகமானது, பலவிதமான மனிதர்கள் காபி & டீ விற்பவர்கள், விளையாட்டு பொருட்கள் & மின்னனு சாதனங்கள் விற்பவர்கள், பிச்சை எடுப்பவர்கள், ரோந்து பணியில் இருக்கும் மிலிட்டரி ஆட்கள், TTR, தண்ணீர் & குளிர் பானம் விற்பவர்கள், கைதட்டிக்கொண்டே வரும் மூன்றாம் பாலினத்தவர்கள், நொறுக்கு தீனி & புகையிலை வஸ்து பாக்கு  விற்பவர்கள் என கடவுளின் படைப்பில் உள்ள அனைவரும் sleeper coach ல் வந்து சென்று கொண்டிருந்தனர். 

நிலையாக அமர்ந்திருக்கும் என் கண்களின் பார்வைக்குட்பட்ட எல்லையில் இறைவன் இயக்கும் நாடகத்தில் இயக்கிவைக்கப்படும் பாத்திரங்கள் அனைத்தும் வந்து போய்கொண்டிருந்தனர். வாழ்க்கைக்கும், திரைப்படத்திற்கும் எத்தனை ஒற்றுமைகள். சிறிது நேரம் யோசனை, சிறிது நேரம் வேடிக்கை, மதிய உணவு, அமர்ந்த படியே தூக்கம், எனக்கு தெரிந்த ஹிந்தியில் சிறிய உரையாடல்கள் என பகல் பொழுது கழிந்தது. இரவு உணவிற்குப்பின் upper berth ல் சென்று படுத்து கொண்டேன், நல்ல குளிர் வேறு. sweat shirt மற்றும் போர்வையின் துணை கொண்டு குளிரை என்னிடம் இருந்து தள்ளி வைத்து தூங்கி போனேன்.

புதிய நாள்: Feb-9'2013 எங்கோ சென்றிருந்த மனது அதிகாலை என்னை வந்து எழுப்பியது, கண் விழித்தேன் மணி 5.20, காலம் தெரிந்து விட்டது ஆனால் வண்டி சென்று கொண்டிருக்கும் இடம் என்னவென்று தெரியவில்லை. கீழே பார்த்தால் இரவு இருந்ததை விட அதிக கூட்டம், சென்று வரும் வழியிலேயே படுத்து உறங்கிகொண்டிருந்தார்கள். டீ விற்பவர்கள் வந்து படுதிருந்தவர்களை எழுப்பி பாதையை மீட்டெடுத்து கொடுத்தனர். 6.45 க்கு முகல்சராய் நிலையம் வரும் அங்கு இறங்கி வாரணாசி செல்லலாம் என தயாரானேன். வந்தது நிலையம் நான் இருந்த Compartment மட்டும் திறந்திருந்தது மற்ற Compartmentகள்  மூடியிருந்தது அதனால்  ஒடிஷாவில் இருந்து கும்பமேளாவிற்க்கு வந்த அனைவரும் இதில் ஏற ஆரம்பித்தனர். 

கூட்டம் கூட்டம்...: Platform ல் அதிக கூட்டம், இருவர் மட்டுமே ஏற கூடிய வாயிலில் 4,5 பேர்  என ஆண்கள் பெண்கள் அனைவரும், ஒரே நேரத்தில் தாங்கள் கொண்டுவந்திருந்த சாமான்களுடன் ஏற முயன்று கொண்டிருந்தனர். Survival of the fittest என்ற மொழிக்கேற்ப பலமுள்ளவர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். உள்ளே வந்தவர்களும் உள்ளிருந்தவர்களும் கூட்டத்தை பார்த்து கதவை மூட முயன்றனர், ஆனால் வெளியிலிருந்து ஏறுபவர்களின் ஒரே தீர்கமான நோக்கம் உள்ளே எப்படியாவது ஏறிவிடவேண்டும், அதுவே கடைசியில் வென்றது கதவை மூட முடியவில்லை. ரயில் கிளம்பியபின்தான் ஏறுவது நின்றது கதவும் மூடப்பட்டது. 3 பேர் அமரகூடிய berth இல் 5 பேர், ஒருவர் தாராளமாக நிற்கக்கூடிய இடத்தில் 3 பேர், நிற்பவர்கள் தலையில் அவர் அவர் சாமான்கள், ரயிலின் தரை பகுதி கண்களுக்கு புலப்படவேயில்லை. அதிக கூட்டமிருந்தால் "எள்ளு போட்டா எண்ணை வந்துவிடும்" என்ற சொலவடை உண்டு ஆனால் இங்கு எள்ளு போட்டாலும் சரி, கடுகு போட்டாலும் சரி எதுவுமே வெளியில் வராது, எண்ணை கூட!!!! அவ்வளவு கூட்டம்.



Plan  பண்ணியும் இறங்க முடியலையே!!!! ரயில் கிளம்ப ஆரம்பித்தது, அவரவர் அகத்தின் அழகு முகத்தில் கண்களின் வழியே தெரிந்துகொண்டிருந்தது. ஏறமுடியாதவர்களின் கண்களில் இடத்திற்கான ஏக்கம், ஏறியவர்களின் கண்களில் மகிழ்ச்சி, அமர்ந்திருந்தவர்கள் கண்களில் தாராளமான இடம் பறிபோன கோபம், ஒரு ஜோடி கண்களின் வழியே மட்டும் இங்கு இறங்கமுடியவில்லையே Master Plan தவிடுபபொடியாகிவிட்டதே என்ற சோகம், வேறுயாருமல்ல நான்தான், என்கண்களில்தான். அந்த கூட்டம் ஏறும் ஆவேசத்தை பார்த்ததும் இங்கு இறங்க வேண்டும் என்ற எண்ணமே மறைந்துவிட்டது. (கவனிக்க எனக்கு Lower berth கிடைத்திருந்தால் நான் இறங்கியிருப்பேன், விதி என்று சொல்லலாமில்லையா?) அலஹாபாத் வரை பயணச்சீட்டு இருந்ததால் பிரச்சனையில்லை, காசியை மாலையில் பார்த்து கொள்ளலாம் என் இருந்துவிட்டேன், 9.45 மணிக்கு அலஹாபாத் நிலையத்தை ரயில் அடைந்தது.


அலஹாபாத் மஹாகும்பமேளா பயணம்: 1

செய்தி: February-10 2013 அம்மாவாசை, 3 ஆறுகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (முன்னொரு காலத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது)) நீராட புனிதமான நாள், மஹாகும்பமேளாவின் மிகவும் முக்கியமான நாள, மக்கள் மிக அதிகமாக வருவார்கள் (8-10 இலட்சம் பேர்) என்று எதிர்பார்க்கப்பட்ட நாளும் அதுவே. கும்பமேளா ஒரு மாதம் நடக்கும், அதாவது ஒரு பௌர்ணமி முதல் அடுத்த பௌர்ணமி வரை. அதில் குறிப்பாக 7-10 நாட்கள் மிக முக்கியமான நாட்கள், அந்த நாட்களில் ஆற்றில் குளிப்பது விஷேசமாக கருதப்படும், நம் பாவங்கள் கழுவப்பட்டு உள்ளும் புறமும் தூய்மையாகும், முக்தி வாய்க்கப்பெறும் என்பது நம்பிக்கை. 

மஹாகும்பமேளா என்பது 12 வருடங்களுக்கு ஒரு முறை வருவது. கும்பமேளா என்பது 3 வருடங்களுக்கு ஒருமுறை அலஹாபாத், ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக் இதில் ஏதாவது ஒரு ஊரில் உள்ள ஆற்றில் நடக்கும். உலகிலேயே சமயம் சார்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு, ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த ஒரு அழைப்பும் இல்லாமல் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கூடும் ஒரே நிகழ்வு மஹாகும்பமேளாதான். இந்தியாவில் உள்ள துறவிகள், சாதுக்கள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினர் என்று அனைவரும் கலந்து கொள்ளும் நிகழ்வு இது.


(http://www.dogonews.com/2013/2/1/indias-maha-kumbh-mela-aka-the-largest-single-gathering-of-humanity-has-begun 
http://blogs.hungrybags.com/2013/01/11/maha-kumbh-mela-2013-bathing-dates-and-safety-tips-for-allahabad-tour/)

2 வித மனிதர்கள்: வேலையோ, எதிர்காலமோ அதை அணுகும் விதத்தை கொண்டு, என்னை பொருத்தவரையில் மனிதர்களை 2 பிரிவுகளாக பிரிக்கலாம். திட்டமிட்டு செய்பவர்கள், போகிற போக்கில் செய்பவர்கள். நான் இரண்டாம் வகை திட்டமிடாமல் செயல்படுகிறவன். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று தோன்றினால் அதை உடனடியாக நடைமுறை படுத்திவிடுவது எனது இயல்பாக அமைந்துவிட்டது. ஒரு முறை கும்பமேளாவை பற்றி செய்திகளில் படித்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு எண்ணம், ஒரு விசை என்னுள்ளிருந்து  எழுந்து என்னை கும்பமேளாவிற்கு செல்ல தூண்டியது; நானும் அதை செயல்படுத்திவிட்டேன் என்றால் இதில் மிகைபடுத்தல் இல்லை. 

முன்பதிவு: சரி போகலாம் என்று முடிவாகிவிட்டது, இரயில் முன்பதிவு 9ஆம் தேதிக்கு செய்தேன். ஆனால் திரும்பி வருவதற்கு ticket இல்லை RLWL தான் கிடைத்தது. General waiting list என்றால் பயணச்சீட்டு  உறுதி ஆகிவிடும், ஆனால் Remote Location Waiting List (RLWL) என்றால் உறுதியாகும் வாய்ப்பு மிக மிக குறைவு. அதனை பிறகு பார்த்து கொள்ளலாம் என்றும், பெற்றோர்கள் எனக்கு தினமும் phone செய்து பேசுவார்கள் எனவே அவர்களுக்கு தெரியாமல் போக வேண்டும் என்றும் முடிவெடுத்தேன். February-9, 10, 11 ஆகிய 3 நாட்களில் சென்று வரலாம் என்று யோசனை, ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க சிறிது பயம் வந்துவிட்டது. ஏற்கனவே கூட்டம் என்றால் எனக்கு அலர்ஜி, இந்த லட்சணத்தில் 10 இலட்சம் பேர் வந்தால் அதில் எவ்வாறு போய் வருவது, வீட்டிற்கு சொல்லாமல் வேறு போகிறோம் ஏதாவது நடந்து விட்டால் என்ன செய்வது? என்ற யோசனையும் வந்து செல்லவே, திடீரென்று மாற்று யோசனை வந்தது. அதன்படி 8 தேதி கிளம்பலாம் என்று குவஹாத்தியிலிருந்து-அலஹாபாத் வரை செல்ல Tatkal ticket எடுத்து கிளம்ப தயாரானேன். 

பயணம்: Feb-8 2013 ரயில் கிளம்பும் நேரத்திற்கு 45 நிமிடம் முன்பே  நிலையத்தை அடையும்படி கிளம்பிவிட்டேன், ஆனால் போக்குவரத்து, மினி பஸ் இவைகளால் கடைசி நேர பரபரப்புக்கு பின் 5 நிமிடம் முன்னதாகத்தான் நிலையத்தை அடைந்தேன். சரியாக காலை 10.05 மணிக்கு North-east express காமாக்யா நிலையத்திற்கு வந்தது, ஏறினேன் பயணம் தொடர்ந்தது. நான் எப்பொழுதும் Lower berth தான் பதிவு செய்வேன் இந்த முறை Upper berth தான் கிடைத்தது, என்னுடைய seat இருந்த இடத்தில் யாரும் இல்லை, என்னிடம் அதிகம் சுமைகளும் இல்லை அதனால் எந்த பயமும் இல்லாமல் இங்கும் அங்கும் சென்று வரலாம். 2 set pant, shirt, 1 sweater, 1 போர்வை , mobile and charger, paste & brush அவ்வளவே என்னுடைய சாமான்கள். 8ஆம் தேதி புறப்பட்டு 9ஆம் தேதி காலை முகல்சராய் நிலையத்தில் இறங்கி காசி சென்று விஸ்வநாதரை தரிசித்து விட்டு அங்கிருந்து அலஹாபாத் சென்று கங்கையில் குளித்துவிட்டு அன்றிரவு எங்காவது தங்கியிருந்துவிட்டு 10 ஆம் தேதி புறப்பட்டு மீண்டும் குவஹாத்தி வந்துவிடலாம் என்பது என் திட்டம். திட்டமில்லாமல் திடீரென்று கிளம்பும் நான் போட்ட சிறிய திட்டத்திலும் திருப்பங்கள் காத்திருந்தன...........பார்ப்போம்
 


கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...