அலஹாபாத் வருவது இதுதான் முதல்முறை புதிய ஊர் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது, எங்கு தங்கப்போகிறேன் என்றும் தெரியாது இருந்தும் ஏதோ ஒரு தைரியத்தில் வந்துவிட்டேன். பெரும்பாலும் எனக்கு புதிய ஊருக்கு போவதோ, முன்பின் தெரியாத மனிதர்களுடன் பழகுவதோ சங்கடத்தையோ பயத்தையோ ஏற்படுத்தியது கிடையாது. நெருக்கமான உறவினர், நண்பர்கள் ஊர்களை தவிர மற்ற தெரிந்த இடங்களுக்கோ அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கோ செல்வதற்கு சலிப்பாகவும், சங்கடமாகவும் இருக்கும் இது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அலஹாபாத் சந்திப்பு, ரயிலில் இருந்த பாதி கூட்டம் இறங்கியது அதில் நானும் ஒருவன். எங்கு திரும்பினாலும் மனித தலைகள், ஒருவர் மேல் ஒருவர் இடிக்காமல் கையை அளவாக வீசி நடக்கக்கூடிய அளவில் கூட்டம் இருந்தது. அனைத்து ஊர்களிலிருந்தும் மக்கள் கூட்டம் ரயில்களில் வந்து இறங்கிய வண்ணம் இருந்தனர்.
ஹிந்தி மிஸ்: இறங்கியதும் சிறிது நேரம் நின்று மக்கள் வருவதையும் செல்வதையும் பார்த்துக்கொண்டிருந்தேன், எங்கு செல்வது, எப்படி செல்வது என்று யாரையும் கேட்கவில்லை. இறங்கிய மக்கள் கூட்டம் கூட்டமாக தலையில் பொருட்களை சுமந்து கொண்டு நடந்தும், cycle rickshaw விலும் சென்று கொண்டிருந்தனர், எனவே அதுதான் ஆற்றுக்கு (திரிவேணி சங்கம்) செல்லும் வழி என்று செல்ல முடிவெடுத்தேன். வழிகாட்டி பலகைகளை பார்த்து செல்லும் பாதை சரிதான் என்பதை உறுதிசெய்துகொண்டேன். 2 ஆம் வகுப்பு ஹிந்தி டீச்சர் (சாந்தி மிஸ்) அரட்டி மிரட்டி சொல்லி கொடுத்த ஹிந்தி இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது, அதை வைத்து இன்றும் ஹிந்தி எனக்கு படிக்க, எழுத தெரியும். நாம் 10 வயது வரை எதை கற்கிறோமோ அது நம் வாழ்நாள் முழுமைக்குமான அஸ்திவாரம், எனவே என்னென்ன நல்ல விஷயங்களை குழந்தைகள் மனதில் பதிய வைக்க முடியுமோ அத்தனையையும் 10 வயதுக்குள் பதியவைத்தால் அது குழந்தைகளின் மிக சிறந்த வேலியாய் அமையும், எந்த சூழ்நிலையிலிருந்தும் அவர்களே அவர்களை வழிநடத்திகொள்வார்கள்.
களங்கமற்ற வினா: 3 கிமீ வந்ததும் சாலையோர கட்டண கழிப்பறையில் காலைகடன்களை முடித்துவிட்டு
அருகில் இருந்த மர நிழலில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் மணி
காலை 10.50, நல்ல வெய்யில் இவ்வளவு நேரமும் வெய்யிலில் தான் நடந்து
வந்தேன். இதுவரையில் மற்றவர்களையும், சாரை சாரையாய் சென்றுகொண்டிருப்பவர்களையும் பார்த்து பலவிதமாக யோசித்த மனது என்னை நோக்கி திரும்பியது என்னை பற்றி யோசிக்க ஆரம்பித்தது. புது ஊர் யாருக்குமே என்னை தெரியாது, இந்த ஊரில் நான் மகன் அல்ல, மாணவன் அல்ல, அண்ணன் அல்ல, நண்பன் அல்ல எந்த உறவு முறைகளுக்குள்ளும் வராத ஒரு பயணி, வழிப்போக்கன் அவ்வளவே. எதற்க்காக இங்கு வந்தேன்? யார் என்னை தூண்டியது? "ஆற்றில் குளித்தால் எல்லாம் சரியாகிவிடும்" இது என்ன விதமான நம்பிக்கை? என பல கேள்விகள், வழக்கம் போல விடை தெரியாத கேள்விகள். 11.20 மணியிருக்கும் மனது எப்படியோ புறப்பொருட்களுக்கு சென்று விட்டது, சாலையில் எனது பயணத்தை தொடர்ந்தேன்.
(http://ecards.myfuncards.com/myfuncards/ComposeCard.jhtml?cardID=20091251)
திரிவேணி சங்கம்:
போக போகத்தான் தெரிந்தது த்ரிவேணிசங்கம் ரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ
என்று. ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் இருக்கும் சாலை state highways
சாலை என்று நினைக்கிறேன், அதன் ஓரமே மக்கள் சென்று கொண்டிருந்தனர்.
குதிரையில் போலீஸ்காரர்கள் ரோந்து சென்று வந்த வண்ணமே இருந்தனர்,
போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய Traffic police மற்றும் NCC மாணவர்கள்
ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உள்ளூர் மக்கள் கடைகளிலும், பேருந்து
நிறுத்தங்களிலும் நதிக்கு போகும் மக்களை பார்த்துக்கொண்டும், அவர்களிடம்
பேச்சுக்கொடுத்துக்கொண்டும், ஏதாவது கேட்டால் பதில் சொல்லிக்கொண்டும்
தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
5 கிமீ நடந்து வந்தாகிவிட்டது இன்னும் 1.5 கிமீ செல்ல வேண்டும், கடைசி 1.5 கிமீ state highways ஐ விட்டு விலகி தெருக்கள் வழியாக சென்று கொண்டிருந்தது. காலையிலிருந்து சாப்பிடாததால் பயங்கர பசி, சுற்றும் முற்றும் பார்த்தேன் அருகில் தள்ளுவண்டியில் அண்ணாச்சி பழம் இருந்தது, அதில் 2 தட்டு (20 ரூபாய்) வாங்கி சாப்பிட்டேன், அந்த நேரத்து பசிக்கு தேவ உணவாக இருந்தது. 1.5 கிமீ மேலும் நடந்து வந்தேன் ஆறு தெறிகிறது, ஆனால் நீர் இருக்கும் பகுதிக்கு செல்ல இன்னும் 1 கிமீ நடக்க வேண்டும். ஆற்றின் கரை என்று நினைக்கிறேன் நான் நின்றுகொண்டிருந்த இடம் மேடாக இருந்தது, அதாவது இதுவரை வந்த சாலையும் இனி போக வேண்டிய பாதையும் பள்ளத்தில் இருந்தன. அந்த இடத்தில் நின்று பார்த்தால் அனைத்து நிகழ்வுகளும் நன்றாக தெரியும், எனவே அங்கு ஏராளமான புகைப்பட கலைஞர்கள் (வெளிநாட்டுக்காரர்களும் இருந்தனர்) நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
யமுனை: அகண்ட காவேரி என்று சொல்லுமிடத்தில் காவேரி ஆற்றின் அகலம் பெரியதாக இருக்கும், அதைவிட இந்த த்ரிவேணிசங்கம் பெரியதாக இருந்தது, 2 ஆறுகள் கலக்கும் இடமில்லையா. தண்ணீர் தாகமெடுத்ததால் சாத்துக்குடி பழச்சாறு வாங்கி குடித்துவிட்டு 20 ரூபாய்க்காக 100 ரூபாயை நீட்டினால் சில்லறை இல்லை குளித்துவிட்டு வரும்போது கொடு என்று சொல்லிவிட்டார், எனக்கோ ஆச்சரியம் என்மேல் நம்பிக்கை வைத்து பிறகு கொடு என்கிறார், அவ்வளவு கூட்டத்தில் நான் திரும்பவும் வருவேனா என்பது சந்தேகமே சரி என்று நானும் கிளம்பி தண்ணீர் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன். 2, 3 நாட்களுக்கு முன்பு Delhiயில் நல்ல மழை பொழிந்திருந்ததால் ஆற்றின் நடுவில் மட்டும் நல்ல வேகமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. நான் நின்று கொண்டிருந்தது த்ரிவேணிசங்கத்தில் இல்லை அதற்கு சற்று முன்பாக, ஏனெனில் அங்கு கூட்டமாக இருந்தது. அதனால் ஒரு நதியில் மட்டும் (யமுனை) குளித்து செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.
(http://www.adyargopal.com/trivenisangam.html)
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் குளித்துக்கொண்டும், கரையில் நின்று கொண்டும், பொருட்களுக்கு காவலாயும் பல செயல்களில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தது, யாரையும் தண்ணீர் வேகமாக பாயும் இடத்திற்கு அனுமதிக்கவில்லை, ஒரு தடுப்பு கட்டி அதற்குள்ளாகவே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தண்ணீர் ஓடும் பகுதியிலிருந்து 3 மீ தூரத்திற்கு ஆற்றின் ஓரமாக காய்ந்த புற்களை பரப்பி வைத்திருந்தனர், அதனால் ஈர காலில் வந்தாலும் காலில் சேறு ஒட்டும் பிரச்சனையும், சகதி பிரச்சனையும் இல்லை. இதோ வந்தாகிவிட்டது அடுத்து குளிக்க வேண்டும் எப்படி குளிக்க போவது? என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
கும்பமேளா குளியல்: ஏனெனில் நான் தனியாக வந்திருந்தேன் என் பொருட்களை பார்த்து கொள்ள யாருமில்லை. சிறிது நேரம் யார் யார் பையின் அருகில் அமர்ந்திருக்கிறார்கள் என்று கவனித்தேன், ஒரு பெண்மணி தனது குடும்பத்தின் பொருட்களை பாதுகாத்துக்கொண்டிருந்தார் அவரிடம் சென்று பையை வைத்துவிட்டு செல்லலாம் என்று தீர்மானித்தேன். "இந்த பையை பார்த்துக்கொள்கிறீர்களா நான் குளித்துவிட்டு வருகிறேன்" என்று எனக்கு தெரிந்த ஹிந்தியில் அனுமதி கேட்டேன் அவரும் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு சரி என்றார். பையையும், சட்டையையும் அங்கு வைத்து விட்டு துண்டை கட்டிக்கொண்டு ஆற்றில் இறங்கினேன். ஆற்று நீர் அவ்வளவு கலங்கலாக இல்லை மிகவும் குளிர்ந்து கிடந்தது. மெது மெதுவாக இடுப்பளவு நீர் வரும்வரை இறங்கி நின்று 3 முறை முழுகி எழுந்தேன் முடிந்தது கும்பமேளா குளியல்.
No comments:
Post a Comment