Labels

Thursday, 2 June 2016

சதுரகிரி மலை பயணம்: 2

பல்லக்கு/stretcher  வசதி: சாப்பிட்டு முடித்து செருப்புகளை மறைவிடத்தில் வைத்தவிட்டு வரும் காலில் மலை பயணத்தை தொடர்ந்தோம், கால்களை மண்ணில் ஊன்றி நடப்பதின் சுகமே தனி. நடக்க முடியாதவர்களுக்கு பல்லக்கு/stretcher  வசதியும் உள்ளது, நம்மை அமரவைத்து அடிவாரத்திலிருந்து சன்னதி வரை தூக்கி வருவார்கள் பணமும் அதற்கு ஈடாக கொடுக்க வேண்டும். அவ்வாறு தூக்கி வருபவர் சொன்னதாக வேல்முருகன் அவர்களின் வலைதளத்தில் படித்தது இதோ,
("மலை ஏறமுடியாதவர்களை இப்படி தொட்டில்போல்  கட்டி மலை ஏற்றி சாமிகும்பிடவைத்து கீழே கொண்டு வந்து விடுவோம், அதற்கு கட்டணம் ரூபாய் 4000 ஆகும், அதிக எடை உள்ளவர்கள் எனில் 5000 ஆகும், என்றனர், சில சமயம் மலை ஏறியவர்கள் உடல்நலம் சரியில்லை எனில் மலையில் இருந்து இறக்கி வருவோம், மலையில் நெஞ்சு வலி வந்த பலரை தூக்கி வந்து காப்பாற்றியுள்ளோம், ஏறுவதற்கு 2 மணி நேரம், இறங்க 1.30 நிமிடம் ஆகும் என்றனர், வத்றாப்பில் உள்ளனர்" ). 
மேலே ஏற ஏற வியர்வை அதிகமாகியது, அதனால் சட்டையை கழற்றிவிட்டு இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு ஏற ஆரம்பித்தேன். உடன் வந்தவர் தன மகனின் படிப்பு, தன்னுடைய வேலை, அரசியல் என்று பேசிக்கொண்டு வந்தார் வழக்கம் போல நான் ஊங்கொட்டிக்கொண்டெ வந்தேன். வழி நெடுக ஆங்காங்கே கடைகள் அவற்றில் தேநீர், மோர், சுக்குகாபி, பஜ்ஜி, வடை, LED torchlight small, தண்ணீர் போன்றவை சற்று அதிக விலைக்கு விற்க்கப்பட்டது. அந்த மலைக்கு எதை கொண்டு செல்வதானாலும் தானிபாறையிலிருந்து தலையில்தான் சுமந்து செல்ல வேண்டும் (நாமக்கல் அருகில் உள்ள தலைமலை கோவிலிலும் இதேபோல்தான்) எனவே அந்த விலை சொல்வதில் ஆச்சர்யமில்லை.

ஒரு கடையில் தேநீர் அருந்தும் போது கிருஷ்ணன்கோவிலில் பேரூந்தில் ஏறிய அந்த பூசாரியை மறுபடியும் சந்தித்தேன். அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் என்னை அடையாளம் கண்டு கொண்டு  "என்ன கண்ணு வந்துட்டியா?" என்று அன்போடு விசாரித்தார், பிறகு உடன் வந்தவரோடு உரையாடும் போதுதான் அவர் கோவில் பூசாரி என்று தெரிந்தது. அவரிடம் விடைபெற்று கொண்டு அங்கிருந்து கிளம்பினோம், அந்த இடத்தின் பெயர் சங்கிலிப்பாறை, தண்ணீர் மிகுந்து வரும் காலங்களில் அந்த பாறையை கடக்க இரண்டு பாறைகளுக்கு இடையில் சங்கிலி கட்டப்பட்டிருக்கும் அதனால்தான் அந்த பெயர். 

 (http://www.panoramio.com/photo/114346148)

நான் தண்ணீர் கொள்கலனில் அடிவாரத்தில் பிடித்த தண்ணீரோடு  ஏறிகொண்டிருந்தேன், வழியில் சிலர் அதை வாங்கி தாகம் தீர்த்து கொண்டனர். பயணத்தின் போது தண்ணீர் எடுத்து செல்வது மிகமுக்கியம் நமக்கும், அடுத்தவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
"ஒரு செயல் நடக்க வேண்டுமென்று நாம் நினைத்தால் மட்டும் போதாது அது அந்த ஆண்டவனால்/இயற்கையால்/பிரபஞ்சத்தால் அனுமதிக்கப்படவேண்டும் பிறகே அதனை நம்மால் செய்ய முடியும்".
"கொல்லிமலைக்கு செல்ல வேண்டுமென்று நீண்ட நாட்களாக நினைக்கிறேன்  வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று நான் சொன்னதை கேட்டு, உடன் வந்தவர் மேற் கண்ட தத்துவ பதிலை கூறினார். அவரும் பொன்னர், சங்கர் கோவிலுக்கு போகவேண்டும் என்று 15 வருடங்களுக்கும் மேலாக நினைக்கிறாராம்  ஆனால் சூழ்நிலை அமையவில்லையாம், அதை கேட்ட உடன் நேரம், காலம் கூடி வர வேண்டும் என்பது உண்மைதான் என்று தோன்றியது. நான் cellphoneல் உள்ள torchஐ மட்டும் பயன்படுத்தி ஏறிகொண்டிருந்தேன், முன்னெச்சரிக்கையாக ஒரு கடையில் 15 ரூபாய்க்கு ஒரு சிறு torch ஒன்றையும் வாங்கி வைத்திருந்தேன்.

பௌர்ணமி என்றாலும் கூட மலையின் 60 % இடங்களில் நிலவின் ஒளி பாதை தெரியுமளவிற்கு இல்லை, மலையின் அமைப்பும், மரங்களின் அடர்த்தியும் அவ்வாறு இருந்தது. எங்குமே அமராமல், ஓய்வெடுக்காமல் பேசிக்கொண்டே  வருகின்ற வழியில் பிலாவடிகருப்பர், இரட்டை லிங்கம் ஆகிய கோவில்களை வணங்கி சுந்தரமஹாலிங்க சன்னதியை 10.30 மணிக்கு அடைந்துவிட்டோம்.

 (http://hill-temples.blogspot.in/2009/03/sathuragiri-mahalingam-temple.html)

சில இடங்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் cellphone signal நன்றாகவே கிடைத்தது, பழனி முருகன் கோவில் அடிவாரம் எப்படி இருக்குமோ அது போல மக்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டது அந்த இடம். அவ்வளவு  கடைகள், ஒலிபெருக்கியில் பாடல்கள் என அந்த இடம் சுறுசுறுப்பாக இருந்தது. சுந்தர மூர்த்தியை முதலாவதாக வழிபட்டுவிட்டு  சுந்தர மகாலிங்க சுவாமியை வழிபட சென்றோம். சிறிய வரிசையில் நின்று நன்றாக பார்த்து வழிபட்டு வெளியில் வந்து சர்க்கரை பொங்கல் பிரசாதம் வாங்கி உண்டுவிட்டு  சாப்பிட அன்னதானம் செல்லும் போது மணி இரவு 11. உடன் வந்த இருவரும் சாப்பிட்டனர் எனக்கு பசியில்லை எனவே சாப்பிடவில்லை, உடல் களைப்பும் இல்லை நன்றாகவே உணர்ந்தேன்.

 (http://www.panoramio.com/photo/114346612)

படுத்து ஓய்வெடுக்க 3 தாழ்வாரங்கள் இருந்தது அனைத்துமே நிரம்பிவிட்டது, ஏறி வருகின்ற படிகளிலும், கடை வாசல்களிலும், அன்னதானம் வழங்கிய இடத்திலும் மக்கள் உறங்க ஆரம்பித்திருந்தனர். 11.30 மணி போல சுந்தர மகாலிங்க சன்னதி முன் படுக்க சென்றோம். மாடுகள் அங்கு நிறைய சுற்றி திரிகிறது அவைகள் நாம் உண்ணும் உணவைதான் விரும்பி உண்கின்றன, அவ்வாறு பழகிவிட்டதா? பழக்கப்படுதிவிட்டோமா? என்று தெரியவில்லை. என்னிடம் இன்னும் ஒரு பொட்டலம் சப்பாத்தி இருந்தது அதை எடுத்து பிரித்து கொடுப்பதற்குள் ஒரு காளை மாடு அப்படியே இலையோடு கவ்வி சென்றுவிட்டது. தலைமலை கோவிலில் கண்ட அதே காட்சி, பொதுவாக கோவில்களில் தென்படும் குரங்கு, ஆடு மற்றும் மாடுகள் தாங்கள் இயற்கையாய் உண்பதை விட்டுவிட்டு நாம் உண்ணும் உணவு வகைகளை திண்ண ஆசைபடுகின்றன, இது இயற்கைக்கு புறம்பானது இல்லையா?.

ஜிம்மி: உதாரணமாக நாய்க்கு கண் தெரியாமல் போய் பார்த்திருக்கிறீர்களா? எங்கள் வீட்டில் நடந்தது, செல்ல நாய், பெயர் ஜிம்மி வாழ்வு 2005-2014 (9 வருடங்கள்). நாய்க்கு பொதுவாக உப்பில்லாமல் தான் உணவு கொடுக்க வேண்டும், சுவையான உணவுகள் எதையும் கொடுக்க கூடாது. நாய்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றி திரிய வேண்டும். இதை எதையுமே நாங்கள் பின்பற்றவில்லை. வீட்டில் ஆறு பேர், யார் எதை தின்றாலும் நாய்க்கு ஒரு பங்கு, என் தம்பியும் நாயும் அவ்வளவு நட்பு அதனால் அவன் பங்கு சற்று அதிகமாகவே இருக்கும். நாள் முழுதும் வீட்டிற்குள்ளேயே அடைதுவைக்கப்படும். அதனால் கடைசி வருஷம் நாய், படாத பாடு பட்டுவிட்டது. அன்று ஆசையுடன் போட்ட அத்துனை பங்குகளும் அதற்க்கு மிகுந்த வேதனையை உண்டாக்கி விட்டது.
நள்ளிரவு 12 மணி, நாங்கள் தேநீர் அருந்திவிட்டு வருவதற்கும் சுந்தர மகாலிங்க சந்நிதியின் கதவு சாத்தப்படுவதற்கும் சரியாய் இருந்தது.  அவரவர் படுப்பதற்கு ஒரு இடம் கிடைத்தது, சுவாமி சன்னதி தாழ்வாரம் முடியுமிடத்தில் ஒரு படியில் எனக்கு இடம் கிடைத்தது. கொண்டு சென்ற பையை தலைக்கு வைத்து, துண்டை விரித்து, சால்வையை போர்த்தி தூங்கிப்போனேன். ஆழ்ந்த தூக்கம் இல்லை என்றாலும் போதுமான தூக்கம், 4 மணிக்கு எழுந்துவிட்டோம். முகம்கழுவி தேநீர் குடித்து சந்தன மகாலிங்கத்தை தரிசிக்க சென்றோம். நான் விரும்பும் அழகான அமைதியான காலை நேரம். சன்னதி முன் 20 பேர் அமர்ந்து பஜனை செய்து கொண்டிருந்தனர். நாங்கள் மூவரும் சென்று சந்தன மஹாலிங்கத்தையும், சந்தன மகாதேவியையும் கண்கள் குளிர தரிசித்தோம். அது ஒரு அற்புத அனுபவம்.

சில்லென்ற காலை நேர சூழல், அமைதியான விடியலை நோக்கிய முகூர்த்தம் அதிகாலை 4.40 மணிக்கு இருட்டிலே இறங்கிகொண்டிருந்தோம். காலை 6.15 மணி  இப்போது முன்னிருக்கும் பாதை, எதிர் வருபவர் முகம் தெரியுமளவிற்கு நன்றாகவே வெளிச்சம் பரவிவிட்டிருந்தது, மலையை இப்போதுதான் வெளிச்சத்தில் பார்க்கிறேன், நேற்று ஏறும்போது அடிவாரம் வரை தான் வெளிச்சம் இருந்தது. ஒரு கடையில் கேவுரு மாவு ரொட்டியை உடன் வந்தவர் வாங்கி தந்தார், அதன் சுவையை சொல்ல வார்த்தைகள் இல்லை, அப்படி ஒரு ருசி!!!!!🍤 அதை ருசித்துக்கொண்டே கீழிறங்கினேன்.  6.30 மணிக்கு பாதி மலையை கடந்து விட்டிருந்தோம். இருட்டில் ஏறும் போது ஒரு உண்மை தெரிந்தது என்று சொல்லி இருந்தேன் அது என்ன தெரியுமா? சொல்கிறேன்.....
No comments:

Post a Comment

Popular Posts from This blog