Saturday, 28 October 2017

ஒரு லட்சம் வருவாய் ஈட்டித்தரப்போகும்... வேப்பந்தோப்பு!!

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர், கருப்பையா: 
புதுக்கோட்டை, வெள்ளனுார் அருகே தக்கிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் நான். 2013, செப்டம்பரில், 2 ஏக்கர் நிலத்தில், வேப்பந்தோப்பு பணியை துவங்கினேன். அரிமளம் கார்டனில் இருந்து, 60 ரூபாய் வீதம், 500 கன்றுகளை, 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, தோட்டத்தில் நட்டேன். வேப்பங் கன்று நடுவதற்கு முன், நிலத்தில் சாணக் குப்பை கொட்டி உழுது, மண்ணை வளப்படுத்தினேன். அதன் பின் வேப்பங் கன்று நட்டு தண்ணீர் ஊற்றி வரவும், ஆறு மாதங்களில் மிக அருமையாக வளர ஆரம்பித்து, நான்கு ஆண்டுகளில் வேப்ப மரங்கள் நன்றாக வளர்ந்து விட்டன.

 • சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வேப்ப மரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.  
 • மனிதர்கள் சுவாசிக்கும் சுத்தமான காற்றுக்கு, நுாற் றுக்கு நுாறு மிகவும் உத்தரவாதமாக இருந்து வருவன, வேப்ப மரங்கள் தான். 
 • மேலும், மழைக் காலங்களில் இப்பகுதியில் அதிகமான மழைப் பொழிவையும் பெற்றுத் தருகிறது, இந்த வேப்பந் தோப்பு. வேப்பங் கன்றுகள் நன்றாக வளர்ந்துள்ள இப்பகுதியில், இரண்டு ஆண்டுகளாக இதை அனுபவப்பூர்வமாகவே உணர்ந்து வருகின்றனர், தக்கிரிப்பட்டி கிராம வாசிகள்.
 • இது, மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெயையும், நமக்கு வாரி வழங்குகிறது. 
 • வேப்பம் புண்ணாக்கு, கால்நடைகளுக்குச் சத்து மிக்க தீவனமாகப் பயன்பட்டு வருகிறது. 
 • வயல்களுக்கு மிகச்சிறந்த அடியுரமாக, வேப்பம் புண்ணாக்கு தான் போடுகிறோம். இதை விட நமக்கு வேறு என்ன வேண்டும்?
பொதுவாகவே வேப்ப மரங்கள், தை மாதம் பூ பூக்கும். வேப்பம் பூவை, ரசம் வைத்து அருந்துவது வழக்கம். அது நம் உடல் நலத்துக்கு நல்லது. மாசி மாதம் பிஞ்சு பிடித்து, பங்குனி மாதம் பழுக்கத் துவங்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் அந்த வேப்பம் பழங்கள் மரத்திலிருந்து கொட்டும். அந்த வேப்பங் கொட்டையை, கிராமத்தில் நாங்கள், 'வேப்பமுத்து' என்று தான் கூறுவோம். வேப்பெண்ணெய், வேப்பம் புண்ணாக்கு போன்றவை இதிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு சித்திரை, வைகாசி மாதங்களில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேப்பமுத்துக்களை, இந்த வேப்பந்தோப்பில் இருந்து எடுத்து விற்று, வருவாய் ஈட்டியுள்ளோம். வரும் ஆண்டில், ஒரு லட்ச ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் என்கின்றனர்.

வேப்ப மரங்களுக்கு ஆயுள் மிக அதிகம். அதன் வேப்பமுத்துக்களின் எண்ணிக்கையும், வருவாயும் ஒவ்வொரு ஆண்டிலும் கணிசமாக உயர்ந்து கொண்டே தான் இருக்கும். தினமும், காலையில் வேப்பங் கொழுந்து சாப்பிட்டு வர, வயிற்றுப் பூச்சி வராது; வயிறு தொடர்பான பிரச்னை இருக்காது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களில், சேரனுக்கு பனை மரம், சோழனுக்கு ஆத்தி மரம், பாண்டியனுக்கு வேப்ப மரம் போன்றவைகளே, இயற்கையின் அடையாளங்களாக இருந்து வந்துள்ளன.

இவற்றில் முதலில், வேப்ப மரங்கள் அடர்ந்த வேப்பந் தோப்பு உருவாக்க திட்டமிட்டு, அதில் எனக்கு வெற்றி. அடுத்து ஒரே இடத்தில், 1,000 பனை மரங்களை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அந்த எண்ணம் ஈடேறியதும், ஆத்தி மரங்கள் வளர்க்கும் பணியில் இறங்குவேன்.

--தினமலர் நாளிதழிலிருந்து.
 வேம்பு… தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!


Saturday, 21 October 2017

பணி ஓய்வுக்கு முன் பணமும்...; பணி ஓய்வுக்கு பின் மனமும்...

எட்டாம் வகுப்பை முடித்து அஞ்சலகத்தில் பணிக்குச் சேர்ந்த குருசாமி, தற்போது 91 வயதாகியும் அஞ்சல் துறைக்கு தன்னாலான சேவைகளைச் செய்து வருகின்றார்.

1940-ல் அஞ்சல் துறையில் பணியாளாகச் சேர்ந்தவர் பி.எம்.குருசாமி. 'பிஎம்ஜி' என்று அறியப்படும் இவர் 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்தார். இதனால் சிறைக்கும் அனுப்பப்பட்டார். ஆனால் அங்கிருந்த ஜெயிலர் அவருக்கு 16 வயதே ஆகிறது என்பதைக் கண்டுபிடித்தார். இதனால் குருசாமி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டவில்லை. அதையடுத்து தன்னுடைய அஞ்சலக வேலையை மீண்டும் தொடர்ந்தார் குருசாமி.


 காலங்கள் உருண்டோடின. மண்டபம் அஞ்சல் நிலையத்தில் 1943-ல் கிளாஸ் - IV ஊழியராக பதவியேற்றார் குருசாமி. தன்னுடைய அர்ப்பணிப்பான வேலை உணர்வால் 1985-ல் தபால்காரராக ஓய்வு பெற்றார். 

தற்போது குருசாமிக்கு 91 வயதாகிறது. ஆனாலும் பணி ஓய்வுக்குப் பிறகு சுமார் 32 வருடங்களாக தினந்தோறும் தலைமை தபால் நிலையத்துக்குத் தவறாமல் வந்துவிடுகிறார். தினசரி காலை 2 மணி நேரமும், மாலை 1 மணி நேரமும் வரும் அவர், தபால் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உதவுகிறார். தெரியாதவர்களுக்கு படிவங்களை நிரப்பிக் கொடுப்பது, பணத்தைக் கணக்கில் போடுவது, எடுத்துத் தருவது ஆகியவற்றை மேற்கொள்கிறார். அத்துடன் ஆர்.டி. ஆரம்பித்துக் கொடுப்பது, அரசின் அஞ்சலக திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் விளக்குவது ஆகிய செயல்களையும் குருசாமி ஆர்வத்துடன் மேற்கொள்கிறார்.

''ஓய்வுக்குப் பிறகு யாருமே பழைய அலுவலகத்துக்குச் செல்ல மாட்டார்கள், ஆனால் அதில் குருசாமி விதிவிலக்கு. 'மை ஸ்டாம்ப்' திட்டத்தைத் தொடங்க ஏராளமானோரை ஊக்குவித்தவர் அவர்தான்'' என்கிறார் அஞ்சல் துறை கண்காணிப்பாளர் என்.ஜே.உதயசிங்.

தன்னுடைய நெடும் பயணம் குறித்து 'தி இந்து'விடம் பகிர்ந்துகொள்ளும் குருசாமி, ''கடவுள் எனக்கு நல்ல உடல்நிலையைக் கொடுத்திருக்கிறார். என்னுடைய உடல் ஒத்துழைக்கும் வரை என்னாலான சேவைகளைத் தொடர்வேன்'' என்கிறார். இவரின் சேவைகளைப் பாராட்டி காரைக்குடி கம்பன் கழகம் குருசாமிக்கு 'சேவா ரத்னா' விருது வழங்கியுள்ளது.

--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து.

Monday, 2 October 2017

மீண்டும் மீண்டும்.....கேட்க்கத்தூண்டும் இசை: 2

சென்ற பதிவில் குறிப்பிட்டது போல இந்த பட்டியலில் உள்ள இசையும் கேட்ட உடனே மிகவும் பிடித்துவிட்டது. சிலவற்றை அமைதியாக கேட்க வேண்டும், சிலவற்றை கண்களை மூடி கேட்க வேண்டும், சில பாடல்கள் துள்ளலை கொண்டுவரும், சில பாடல்கள் அமைதியை கொண்டுவரும் மற்றும் சில வாழ்வின் உண்மையை உணர்த்தும். கலவையான இசை தொகுப்பு.


1) Hang drum / Space drum: Hang drum கருவியை இப்போது தான் முதன் முதலாக பார்க்கிறேன், வாசிப்பது என்னவோ நமது மிருதங்கம், தபேலா வாசிப்பது போலத்தான் உள்ளது ஆனால் வரும் இசை உலோகத்திலிருந்து. ஸ்விட்சர்லாந்து நாட்டில்தான் இந்த கருவி முதலில் தயாரிக்கப்பட்டது, இதன் இசை மிக அற்புதமாக இருக்கும் கேட்டுப்பாருங்கள். அட புதுசா இருக்கே!!!

 


2) பெர்சியன் (Persian) இசை: அமைதியாக கண்களை மூடி கேட்க வேண்டிய இசை.


3) ஜெர்மானிய Faun இசை குழு: (Faun Band) 1998ல் ஆரம்பிக்கப்பட்ட இசை குழு. பழைய இசை கருவிகளை பயன்படுத்துவதே இவர்களின் தனிச்சிறப்பு. ஜெர்மன், லத்தீன், கிரீக் மற்றும் ஸ்கேண்டிநேவியன் மொழிகளில் இவர்கள் பாடல்கள் இருக்கும், இங்கு உள்ள பாடல் எந்த மொழி என்று தெரியாது அநேகமாக ஜெர்மன் மொழியாக இருக்கக்கூடும். ஆடணும் போல தோணுதே!!!

 
 

4) பின்னிஷ் (Finnish) இசை: 1936ல் வந்து தற்போது பிரபலமாக உள்ள பின்னிஷ் நாட்டுப்புற பாடலும் (Loituma - Ievan's Polkka), Nightwish என்ற இசைக்குழுவின் Last of The Wilds இசை பாடலாகவும். இசை கருவிகள் இல்லாமல் பாடும் நாட்டுப்புற பாடலை கேட்டுப்பாருங்கள் அருமை. இசை மீது ஆர்வம் கொண்ட மகள் தாயை ஏமாற்றிவிட்டு கச்சேரி நடக்கும் இடத்திற்கு செல்வது பற்றியான பாடல் என்று நினைக்கிறேன்.

  

5) ஹரியான்வி நாட்டுப்புறப் பாடல்: சில நாட்களுக்கு முன்பு Whats App மூலமாக பார்க்க நேரிட்டது, இது பற்றி வெங்கட் நாகராஜ் என்ற பதிவரும் பதிவிட்டிருந்தார். பள்ளி மாணவிகள் பாடும் பாடல் தாலாட்டு ரகம்.


6) T.ராஜேந்தர் மற்றும் யேசுதாஸ் அவர்களின் பாடல்கள்: எங்கு பறந்தாலும் தரையில் தான் வந்து நிற்க முடியும், அதுபோல எந்த மொழிப் பாடல்/இசை கேட்டாலும் நம் தமிழில் கேட்பது என்பது தனி சுகம் தான். கல்லூரியில் படிக்கும் போது NCCயில் இருந்த காரணத்தால் ஒரு முறை Camp ற்கு அழைத்து சென்றிருந்தார்கள், (10 நாள் campற்கு பல கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் வருவார்கள்) அங்கு நமது தனித்திறமையை (பாட்டு, நடனம், இசை கருவிகள் வாசிப்பு, கவிதை மற்றும் பல...) காட்ட மாலை/இரவு பொழுதுகளில் வாய்ப்பு வழங்கப்படும். அப்படி ஒரு சமயத்தில் ஒரு மாணவன் பாடிய பாடல்தான் "ஆத்துக்கு பக்கம் ஆத்துக்கு பக்கம்..." என்ற பாடல், அன்று கேட்ட பாடல் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அருமையான வரிகள், யேசுதாஸ் அவர்களின் மெய் மறக்க செய்யும் குரல். மற்றொன்று T.ராஜேந்தர் அவர்களின் காலத்தை வென்ற பாடல்களுள் ஒன்று.

  
Sunday, 1 October 2017

தண்ணீர் 9: நீர் வித்தகர், 600 ஏரிகளை உருவாக்கியவர் - ஐயப்ப மசாகி

ஐயப்ப மசாகி:

நீர் காந்தி, நீர் வித்தைக்காரர், நீர் மருத்துவர் என பொதுமக்களால் வாஞ்சையாக அழைக்கப்படும் மசாகி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். மேற்கு கர்நாடகத்தில் கடக் (Gadag) மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிய சூழலில் பிறந்து தினமும்​ அதிகாலை 3 மணிக்கு ​எழுந்து, பல கிலோமீட்டர் தொலைவு தண்ணீர் எடுக்கச் சென்ற அவருடைய குழந்தைப் பருவமே, அவரை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இவருடைய அம்மா பல கி.மீ. தூரம் பானைகளைச் சுமந்து சென்று தண்ணீர் சுமந்து வந்த காட்சிகள் பசுமரத்தாணிபோல் இவர் மனதில் பதிந்திருக்கின்றது. இதனால் 25 ஆண்டு காலப் பணிக்குப் பின், நீராதாரங்களைப் புனரமைக்கும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.

 (Mr. Ayyappa Masagi, Founder and Director, Water Literacy Foundation)

" இந்தியாவை 2020-க்குள் தண்ணீரில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார் "

படிப்பும் பணியும்: 
 
படிப்பு ஒரு புறம் சென்றுகொண்டிருந்தாலும், தண்ணீருக்காக தான் பட்ட கஷ்டங்களை மற்றவர்கள் படக்கூடாது என்று தொடர்ந்து தண்ணீர் பிரச்சனைகளை தீர்க்கும் வழிகளை சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறார். இயந்திரவியல் தொழில்நுட்ப கல்வி முடித்து L&T யில் பணி கிடைக்கிறது, அங்கு 20 ஆண்டுகள் பணியாற்றுகிறார்.

மழைநீர் சேமிப்பும் விவசாயமும்:

பணிக்குஇடையில்  தனது ஊரில்  6 ஏக்கர் பரப்பளவில் வறண்ட ஒரு நிலப்பகுதியை வாங்கி அங்கு காபியும்,​ ரப்பரும் வளர்க்கிறார்.  கனமழை,​ பிறகு 2 வருடங்கள் வறட்சி என மாறி மாறி வந்ததில் பயிர்கள் அழிகிறது. அப்போதுதான் இவருக்கு ஒன்று புரிகிறது, அதாவது "இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாகப் பெய்யும் மழையின் அளவு குறையவில்லை. ஆனால், மழை பெய்யும் காலமும், இடமும் மாறியிருக்கின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக அளவு மழையும், சில பகுதிகளில் அறவே மழையில்லாமலும் இருக்கும் நிலை உள்ளது". இதற்க்கு தீர்வு தேடி நீர் மேலாண்மையில் வெற்றிகண்ட களப்பணியாளர்களான அண்ணா ஹசாரே, ராஜேந்திர சிங் போன்றோரை சந்தித்து தனது நெஞ்சில் இருக்கும் நீர் மேலாண்மை திட்ட கனவை நினைவாக்க வழிகளை தேடியெடுக்கிறார்.

போர்வெல்களில் அதிக நீரை சேமிப்பதன் மூலமும், பாசனத்திற்கு குறைந்த அளவு நீரை உபயோகிப்பதன் மூலமும் நீரை அதிகளவு சேமிக்கலாம்​ என்பதை அறிகிறார்.​ அடுத்தடுத்த வருடங்களில், அது வெற்றியை கொடுக்கிறது. இம்முறையைப் பயன்படுத்தி அவர் அதிக அறுவடை செய்கிறார். பிறகு, பக்கத்து வயல்களிலும் இம்முறையைப் பரிசோதித்து வெற்றி பெறுகிறார். அவருடைய வேலையை உதறிவிட்டு இப்பணியிலேயே தன்னை​ ஈடுபடுத்திக்கொள்கிறார். 


தொழில்நுட்பம்:

நிலத்தில் ஒரு குழி தோண்டி அதில் மணல், களிமண், கூழாங்கற்கள், பாராங்கற்கள் ஆகியவற்றை போட்டு மழை நீரை உட்புக வைத்தால், அது கற்களையும் மணலையும் தாண்டிச் சென்று அடிமண்ணை நனைக்கும். ஒரு saturation புள்ளிக்கு வந்த பிறகு, நிலத்தில் இருந்து நீர் ஊற்று போல் பெருக்கெடுக்கும்.​ மேலும் ஒவ்வொரு நிலத்தின் அமைப்புக்கும், அந்த வட்டார நீர்வளம், மழைவளம் பொருத்தும், நிலத்தில் தடுப்புகள், குட்டைகள், நீர் சேகரம்-சேமிப்பு, நிலத்தடி செறிவூட்டும் அமைப்புகள் போன்ற ஆலோசனைகளை வழங்குகிறார். இதுவே இவரது நீர் சேகரிப்பு முறை திட்டம்.

சாதனைகளும் விருதுகளும்:
 • கர்நாடகத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தண்ணீரின்றி வறண்ட பகுதிகளை இவர் வளப்படுத்தியிருக்கிறார். 
 • நீர்நிலைகளை உயிர்ப்பிக்கும் திட்டங்களில் ஓராண்டுக்குள் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார். 
 • மழைநீரைச் சேகரித்து வளம்பெறும் வழிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கல்வி அளிக்கும் மகத்தான பணியையும் இவர் செய்துவருகிறார்.
 • 600 ஏரிகள் உருவாக்கியது, 2,500 ஆழ்துளை கிணறுகளை உயிர்ப்பித்தது, தண்ணீர் தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது என இவரது சாதனைகள் நீண்டு  செல்கிறது. 
 • விவசாய சேவைக்காக அசோகா  fellowship, Jamnalal Bajaj உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

புதிய முறை:
 
**கழிவு நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பங்கள்.
**பள்ளிகள், தனியார் அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வேளாண் பண்ணைகளில் ஒரே பருவத்தில் நிலத்தடி நீரை மிக விரைவாக உயர்த்தும் வகையிலான தொழில்நுட்பங்கள்.
**தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சொட்டுநீர் பாசன முறைகளை அரசுத் துறைகள் அறிமுகம் செய்து விவசாயிகளும் அதைச் பின்பற்றிவருகிறார்கள். அதைவிட சிக்கனமாகத் தண்ணீரைப் பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்திருக்கிறேன்.
**குடிநீர் பாட்டில்கள் மூலம் நேரடியாகத் தாவரத்தின் வேருக்குத் தண்ணீர் தரும் தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்திருக்கிறேன்.

பல்வேறு தொழில்நுட்பங்கள் என்னிடம் இருக்கின்றன, எனது தொழில்நுட்பங்கள் குறித்து இளம் பொறியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கிறேன். 'வாட்டர் லிட்ரசி பவுண்டேஷன்' என்ற என்னுடைய அலுவலகத்தைச் சென்னையில் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன் என்கிறார் இவர்.

தொடர்புடைய பதிவுகள் மற்றும் காணொளிகள்:

1) ஐயப்பா மசாகி- வறட்சியிலும் நீர் சேமிக்க வழி சொன்ன மனிதர்!
2) ஐயப்ப மசாகி
3) வறண்ட கிணறுகளை உயிர்ப்பிக்கும் 'வாட்டர் காந்தி'
4) India’s Water Warrior Has a Solution for India’s Droughts. The Best Part – We Can Play a Role Too!
5) Why is this man so obsessed to the cause of water conservation
6) Ayyappa Masagi's innovative technologies encompass methods for irrigation & rainwater harvesting, both in urban & rural context
7) Borewells run dry? Crops failing? The Water Doctor will see you now
8) Meet India’s ‘water doctor’, who has turned 84 acres of barren land into a water bowl
9) Ayyappa M Masagi at TEDx
10) Masagi Presentation
11) Water Literacy Foundation
12) Here is a water crusader  
 தண்ணீர் 8: மழை இல்லம்

தென்தமிழகத்தின் முதல் மழை இல்லம்,  சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார், மதுரை மழை இல்லம் நிறுவனர் சக்திவேல்.

1)   எதற்காக ‘மழை இல்லம்’?

இயற்கையின் பெருஞ்செல்வம்தான் ‘மழை’. இதை ஒவ்வொருத்தரும் உணரனும் என்பதற்காகத்தான் இந்த ‘மழை இல்லம்’ திட்டம். பலதரப்பட்ட காரணங்களால் தண்ணீர் பற்றாக்குறை வந்திடுது. ஆனால் இயற்கை எந்த பஞ்சத்தையும் நமக்கு ஏற்படுத்தவே இல்லை. தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 998 மில்லி மீட்டர் அளவு மழைப்பொழிவு இருக்கு. இதை சேமித்தால் மட்டுமே போதும். ஒவ்வொரு வீட்டுக்கும் அன்றாடம் பயன்படுத்த முடியும். அதற்கான வழிமுறைதான் மழை இல்லம் அமைத்தல்.


2) மழை நீர் சேமிக்கும் வகைகள்?

மழை நீரை நேரடிப் பயன்பாடு, நிலத்தடி சேமிப்பு ஆகிய இரண்டு வழிகளில் சேமிக்கலாம். இதில் நேரடி பயன்பாட்டிற்கு தொட்டிகள் அமைத்தும், நிலத்தடி சேமிப்பிற்கு மழை நீர் குழி அமைத்தும் சேகரிக்கலாம்.

3) மழை நீரை எந்தெந்த முறைகளில் சேமிக்கலாம்?

தரை வழி மழை நீர் வடிகால் அமைப்பு, மேற்கூரை மழைநீர் வடிகால் அமைப்பு, மரபு வழி மழை நீர் சேமிப்பு ஆகிய முறைகளில் சேமிக்கலாம்.

4) மரபுவழி முறைகளில் சேமிப்பது எப்படி?

நிலத்தடி நீருக்காக நாம் போர்வெல் போட்டால்,  ஆழ்குழாய் பைப் பூமியின் பல அடுக்குகளைத் தாண்டி பாறைகளைக் குடைந்தபின், நமக்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால் பாரம்பரிய கிணறு வெட்டும்போது நிலத்திற்கும் பாறைக்கும் இடையிலான ‘அலுவியா’ என்னும் பூமி அடுக்கிலிருக்கும் நீர் நமக்கு கிடைக்கும். இதனால், 600 அடி வரை பூமியை தோண்டித் துளைக்கத் தேவையில்லை. நம்ம நிலப்பரப்பிலிருந்து 15 அடியிலேயே தண்ணீர் கிடைச்சிடும். இதுக்கு சாட்சி தான் எங்க ‘மழை இல்லம்’.

5) இதே மாதிரியான இல்லத்தை அமைப்பது எப்படி?

மழை இல்லம் என சொல்வதைவிட பசுமை இல்லம் அமைக்க முயற்சி பண்ணுங்க. பசுமை இல்லம் என்பது முறையான மழைநீர் சேகரிக்கும் அமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு, மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் என நம்ம வீட்டிலேயே நம்ம தேவைகள் அத்தனையும் பூர்த்தியாகிடும். முறையான வல்லுநர்களின் வழிகாட்டுதலோடுதான் இந்த மாதிரியான இல்லத்தை ஏற்படுத்த முடியும்.

6)   மழை இல்லம் அல்லது பசுமை இல்லம் எங்கெல்லாம் அமைக்கலாம்? அதற்கான செலவுத் திட்டம்?

உதாரணமாக எங்கள் ‘ரெயின் ஸ்டாக்” அமைப்பினால் தனிவீடுகள், பள்ளி-கல்லூரிகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் என பலநிலைகளில் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்யப்படுகிறது. தனிவீடுகளுக்கு அதன் அமைப்பு முறையைப் பொறுத்து ரூ.6000 முதல் ரூ.15,000 வரை செலவு கணக்கீடு இருக்கும்.

7) விவசாய நிலங்களுக்கான மழைநீர் சேமிக்கும் அமைப்பை எவ்வாறு அமைப்பது?

விவசாய நிலத்தின் அமைப்புமுறை மற்றும் நீரோட்டத்தை பொறுத்துதான் அமைக்கமுடியும். பண்ணைக்குட்டை அமைப்பது விவசாய நிலங்களுக்கு ஏற்ற சேமிக்கும் முறையாகும்.

8) மழை இல்லம் இல்லம் அமைப்பதற்கான வழிமுறை?

நம்ம வீட்டு மொட்டைமாடியில் விழும் மழைநீரை பில்டர்கள் கொண்ட தொட்டிகளில் சேமித்து, காற்று, வெயில் படாமல் வைத்து நேரடியாகக் குடிக்க சமைக்கப் பயன்படுத்தலாம். வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரித்து வீட்டுத் தோட்டத்திற்குப் பயன்படுத்தலாம். கழிவு நீர் வெளியேறும் பாதையில் கல்வாழை, சேப்பங்கிழங்கு செடிகளை நடுவதன் மூலம் கழிவு நீரின் நச்சுத்தன்மை நீங்கிவிடும். மாடியிலும் வீட்டைச் சுற்றியும் தோட்டம் அமைத்து, ஆர்கானிக் காய்கறிகளை நமக்கு நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம்.

--- ராகினி ஆத்ம வெண்டி 
(மாணவப் பத்திரிகையாளர்) 

சென்னை மழை இல்லம், முனைவர் சேகர் ராகவன் 


கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற