Saturday, 28 October 2017

ஒரு லட்சம் வருவாய் ஈட்டித்தரப்போகும்... வேப்பந்தோப்பு!!

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர், கருப்பையா: 
புதுக்கோட்டை, வெள்ளனுார் அருகே தக்கிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் நான். 2013, செப்டம்பரில், 2 ஏக்கர் நிலத்தில், வேப்பந்தோப்பு பணியை துவங்கினேன். அரிமளம் கார்டனில் இருந்து, 60 ரூபாய் வீதம், 500 கன்றுகளை, 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, தோட்டத்தில் நட்டேன். வேப்பங் கன்று நடுவதற்கு முன், நிலத்தில் சாணக் குப்பை கொட்டி உழுது, மண்ணை வளப்படுத்தினேன். அதன் பின் வேப்பங் கன்று நட்டு தண்ணீர் ஊற்றி வரவும், ஆறு மாதங்களில் மிக அருமையாக வளர ஆரம்பித்து, நான்கு ஆண்டுகளில் வேப்ப மரங்கள் நன்றாக வளர்ந்து விட்டன.

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வேப்ப மரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.  
  • மனிதர்கள் சுவாசிக்கும் சுத்தமான காற்றுக்கு, நுாற் றுக்கு நுாறு மிகவும் உத்தரவாதமாக இருந்து வருவன, வேப்ப மரங்கள் தான். 
  • மேலும், மழைக் காலங்களில் இப்பகுதியில் அதிகமான மழைப் பொழிவையும் பெற்றுத் தருகிறது, இந்த வேப்பந் தோப்பு. வேப்பங் கன்றுகள் நன்றாக வளர்ந்துள்ள இப்பகுதியில், இரண்டு ஆண்டுகளாக இதை அனுபவப்பூர்வமாகவே உணர்ந்து வருகின்றனர், தக்கிரிப்பட்டி கிராம வாசிகள்.
  • இது, மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெயையும், நமக்கு வாரி வழங்குகிறது. 
  • வேப்பம் புண்ணாக்கு, கால்நடைகளுக்குச் சத்து மிக்க தீவனமாகப் பயன்பட்டு வருகிறது. 
  • வயல்களுக்கு மிகச்சிறந்த அடியுரமாக, வேப்பம் புண்ணாக்கு தான் போடுகிறோம். இதை விட நமக்கு வேறு என்ன வேண்டும்?
பொதுவாகவே வேப்ப மரங்கள், தை மாதம் பூ பூக்கும். வேப்பம் பூவை, ரசம் வைத்து அருந்துவது வழக்கம். அது நம் உடல் நலத்துக்கு நல்லது. மாசி மாதம் பிஞ்சு பிடித்து, பங்குனி மாதம் பழுக்கத் துவங்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் அந்த வேப்பம் பழங்கள் மரத்திலிருந்து கொட்டும். அந்த வேப்பங் கொட்டையை, கிராமத்தில் நாங்கள், 'வேப்பமுத்து' என்று தான் கூறுவோம். வேப்பெண்ணெய், வேப்பம் புண்ணாக்கு போன்றவை இதிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு சித்திரை, வைகாசி மாதங்களில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேப்பமுத்துக்களை, இந்த வேப்பந்தோப்பில் இருந்து எடுத்து விற்று, வருவாய் ஈட்டியுள்ளோம். வரும் ஆண்டில், ஒரு லட்ச ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் என்கின்றனர்.

வேப்ப மரங்களுக்கு ஆயுள் மிக அதிகம். அதன் வேப்பமுத்துக்களின் எண்ணிக்கையும், வருவாயும் ஒவ்வொரு ஆண்டிலும் கணிசமாக உயர்ந்து கொண்டே தான் இருக்கும். தினமும், காலையில் வேப்பங் கொழுந்து சாப்பிட்டு வர, வயிற்றுப் பூச்சி வராது; வயிறு தொடர்பான பிரச்னை இருக்காது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களில், சேரனுக்கு பனை மரம், சோழனுக்கு ஆத்தி மரம், பாண்டியனுக்கு வேப்ப மரம் போன்றவைகளே, இயற்கையின் அடையாளங்களாக இருந்து வந்துள்ளன.

இவற்றில் முதலில், வேப்ப மரங்கள் அடர்ந்த வேப்பந் தோப்பு உருவாக்க திட்டமிட்டு, அதில் எனக்கு வெற்றி. அடுத்து ஒரே இடத்தில், 1,000 பனை மரங்களை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அந்த எண்ணம் ஈடேறியதும், ஆத்தி மரங்கள் வளர்க்கும் பணியில் இறங்குவேன்.

--தினமலர் நாளிதழிலிருந்து.
 வேம்பு… தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...