Saturday 21 October 2017

பணி ஓய்வுக்கு முன் பணமும்...; பணி ஓய்வுக்கு பின் மனமும்...

எட்டாம் வகுப்பை முடித்து அஞ்சலகத்தில் பணிக்குச் சேர்ந்த குருசாமி, தற்போது 91 வயதாகியும் அஞ்சல் துறைக்கு தன்னாலான சேவைகளைச் செய்து வருகின்றார்.

1940-ல் அஞ்சல் துறையில் பணியாளாகச் சேர்ந்தவர் பி.எம்.குருசாமி. 'பிஎம்ஜி' என்று அறியப்படும் இவர் 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்தார். இதனால் சிறைக்கும் அனுப்பப்பட்டார். ஆனால் அங்கிருந்த ஜெயிலர் அவருக்கு 16 வயதே ஆகிறது என்பதைக் கண்டுபிடித்தார். இதனால் குருசாமி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டவில்லை. அதையடுத்து தன்னுடைய அஞ்சலக வேலையை மீண்டும் தொடர்ந்தார் குருசாமி.


 காலங்கள் உருண்டோடின. மண்டபம் அஞ்சல் நிலையத்தில் 1943-ல் கிளாஸ் - IV ஊழியராக பதவியேற்றார் குருசாமி. தன்னுடைய அர்ப்பணிப்பான வேலை உணர்வால் 1985-ல் தபால்காரராக ஓய்வு பெற்றார். 

தற்போது குருசாமிக்கு 91 வயதாகிறது. ஆனாலும் பணி ஓய்வுக்குப் பிறகு சுமார் 32 வருடங்களாக தினந்தோறும் தலைமை தபால் நிலையத்துக்குத் தவறாமல் வந்துவிடுகிறார். தினசரி காலை 2 மணி நேரமும், மாலை 1 மணி நேரமும் வரும் அவர், தபால் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உதவுகிறார். தெரியாதவர்களுக்கு படிவங்களை நிரப்பிக் கொடுப்பது, பணத்தைக் கணக்கில் போடுவது, எடுத்துத் தருவது ஆகியவற்றை மேற்கொள்கிறார். அத்துடன் ஆர்.டி. ஆரம்பித்துக் கொடுப்பது, அரசின் அஞ்சலக திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் விளக்குவது ஆகிய செயல்களையும் குருசாமி ஆர்வத்துடன் மேற்கொள்கிறார்.

''ஓய்வுக்குப் பிறகு யாருமே பழைய அலுவலகத்துக்குச் செல்ல மாட்டார்கள், ஆனால் அதில் குருசாமி விதிவிலக்கு. 'மை ஸ்டாம்ப்' திட்டத்தைத் தொடங்க ஏராளமானோரை ஊக்குவித்தவர் அவர்தான்'' என்கிறார் அஞ்சல் துறை கண்காணிப்பாளர் என்.ஜே.உதயசிங்.

தன்னுடைய நெடும் பயணம் குறித்து 'தி இந்து'விடம் பகிர்ந்துகொள்ளும் குருசாமி, ''கடவுள் எனக்கு நல்ல உடல்நிலையைக் கொடுத்திருக்கிறார். என்னுடைய உடல் ஒத்துழைக்கும் வரை என்னாலான சேவைகளைத் தொடர்வேன்'' என்கிறார். இவரின் சேவைகளைப் பாராட்டி காரைக்குடி கம்பன் கழகம் குருசாமிக்கு 'சேவா ரத்னா' விருது வழங்கியுள்ளது.

--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து.

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...