Labels

Showing posts with label Self Employment. Show all posts
Showing posts with label Self Employment. Show all posts

Wednesday, 17 March 2021

வாழை நாரும் சிறந்ததே!!

வாழை நாரில் விதவிதமான கலைப் பொருட்களை படைத்து, பிரதமர் மோடியின், 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பாராட்டு பெற்றது குறித்து, தமிழகத்தை சேர்ந்த முருகேசன்: சொந்த ஊர், மதுரை அருகே உள்ள மேலக்கால் என்ற கிராமம். விவசாய குடும்பம் என்னுடையது.விவசாயத்தில் பழைய முறைகளை பின்பற்றாமல், புதிய யுக்திகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம், சிறு வயது முதல் இருந்து வந்தது. எங்கள் பகுதியில், எல்லாரும் கையால் அறுவடை செய்த போது, நான் இயந்திரங்களை வைத்து அறுவடை செய்தேன்.வழக்கமாக, இரண்டொரு நெல் ரகங்களையே விதைத்து வந்த எங்கள் பகுதியினர் மத்தியில், நான் புதுப்புது அரிசி ரகங்களை பயிரிட்டு காட்டினேன். விவசாயத் துறையால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஆர்வமாக பங்கேற்பேன். 


கரும்பு சக்கையை, நல்ல இயற்கை உரமாக மாற்ற முடியும் என, சொல்லித் தந்தனர். அதைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.அதுபோல, பல விதமான விவசாய கழிவு பொருட்களில் இருந்து, புதுமையான பொருட்களை படைக்க முடியும் என்பதை யோசித்து அறிந்தேன்.அந்த காலத்தில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை கூட அறியாமல், அனைத்து தரப்பினரும், பிளாஸ்டிக் பைகளை சகட்டு மேனிக்கு பயன்படுத்தத் துவங்கி இருந்தனர்.அதற்கான மூலப்பொருட்களை, கடைக்காரர்களும் வாங்கிக் குவித்திருந்தனர். 

இதனால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுமே என, மனம் கலங்கியது.தென்னை நார், கயிறாக மாறுகிறது. பல தரப்பினராலும் பல விதங்களில் பயன்படுத்தப்படுவது போல, வாழைக் கழிவான, வாழை நாரிலிருந்தும், பல பொருட்களை தயாரிக்கலாமே என, பத்தாண்டுகளுக்கு முன் யோசித்தேன்.வாழை நாரிலிருந்து எடுக்கப்படும் நார், பூ கட்டுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. பிற தேவைகளுக்கு, அவை பயன்படுத்தப்படாமல், வீணாக எரிக்கப்படுகின்றன அல்லது மண்ணில் போடப்பட்டு மக்க வைக்கப்படுகின்றன. 

எனவே, வாழை நாரிலிருந்து கயிறு தயாரித்து, அந்த கயிற்றை பலமாக ஆக்கி, அதன் மூலம், பை, பழக்கூடை, மிதியடி, டேபிள் மேட் போன்றவற்றை தயாரிக்க முடியும் என அறிந்து, கயிறு திரிக்கும் இயந்திரங்கள் கிடைக்கிறதா என, பல இடங்களிலும் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை.பிறகு, நானே அந்த எளிய இயந்திரத்தை உருவாக்கி, வாழை நாரிலிருந்து கயிறு தயாரிக்கத் துவங்கினேன். விளம்பரம் இல்லாததால், பெரிய அளவில் விற்பனையாகவில்லை. 

அப்போது ஒரு நாள், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த கண்காட்சியில், வாழை நார் பொருட்களை காட்சிக்கு வைத்தேன். அதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான 'ஆர்டர்'கள் குவியத் துவங்கின.துவக்கத்தில், நான் மட்டுமே செய்த இந்த வேலையில், இப்போது, எங்கள் பகுதியில், 300 பேர் ஈடுபடும் அளவுக்கு, வாழை நார் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனினும், இன்னமும் ஏராளமான வாழை நார்,வீணாகத் தான் போகிறது

முருகேசன் அவர்களை தொடர்பு கொள்ள : 93605 97884

From Dinamalar paper

வாழவைக்கும் வாழை நார் (From Dinamani paper)

கற்றாழை, வாழை நார்... கலகலப்பான மாற்றம்!

வாழை நார் ஆடைகள்: 'துணி'ந்தால் லாபம்தான்!

வாழைநாரில் டாலர்களைக் குவிக்கும் பாமர விவசாயி!

வருவாயை அள்ளித்தரும் வாழை நார்


Sunday, 10 November 2019

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

'யூ டியூப்' சமூக வலைதளத்தில், தன் சொந்த தோட்டத்தில் விளையும் பழங்கள், பூக்கள் பற்றிய, 'வீடியோ'க்களை பதிவிட்டு, மாதம், 1 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும், ஆனி யூஜின்: கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள இடக்கன்னு தான், சொந்த ஊர். படித்தது, பொருளாதாரம். வீட்டைச் சுற்றி, ௧ ஏக்கரில் தோட்டம் உள்ளது. அதில் நான் ஆசையாக வளர்த்த மரங்கள், செடிகள் பற்றி நான் எடுத்த வீடியோக்களை இழந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான், 'கிருஷி லோகம்' என்ற, யூ டியூப் சேனலை துவக்கினேன். (https://www.youtube.com/channel/UCS2J-u3UpGI448mgzKvnlXw)

என் தோட்டத்தில் சப்போட்டா, மா, கொய்யா, வாழை, லிச்சி, பலா, பேஷன் புரூட் போன்ற பழ மரங்கள் உள்ளன. பாகற்காய், புடலங்காய், தக்காளி, வெள்ளரி, கத்தரிக்காய், கேரட் போன்ற காய்கறி செடிகளையும் வளர்க்கிறேன். அத்துடன் கற்றாழை, ஜாதிக்காய் போன்ற மருத்துவ குணமுடைய செடிகளையும் வளர்க்கிறேன். என் சொந்த தோட்டத்தை மக்களிடம் காண்பிக்கவே, யூ டியூப் சேனலை துவக்கினேன். கூச்ச சுபாவம் கொண்டவள் நான். கேமரா முன் பேசுவதற்காக, கூச்சத்தை தவிர்த்தேன்; என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன்.

இப்போது என் சேனலுக்கு, மூன்று லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்; இரண்டு கோடி தடவைக்கும் மேல், என் வீடியோக்களை பார்த்துள்ளனர். அந்த சேனலில் வரும் விளம்பரங்களை, வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள், 'கிளிக்' செய்வதன் மூலம் எனக்கு வருமானம் வருகிறது. சராசரியாக மாதம், 1 லட்சம் ரூபாய் கிடைக்கும். சில மாதங்களில் அதற்கும் மேலாக கிடைத்து விடும். வீடியோக்களில் தொழில்நுட்பங்களையும், கூடுதல் விபரங்களையும், என் கணவர் மேற்கொள்கிறார்.

என் சேனலின் முதல் வீடியோ தலைப்பு, 'கேரள வீட்டில் விளைந்த கொய்யா' என்பது. அதில், கொய்யா மரங்களை எப்படி பராமரிக்க வேண்டும்; எந்த பருவத்தில் காய்களை பறிக்க வேண்டும்; பழங்களின் மருத்துவ குணங்கள் என்ன என்பதை விளக்குகிறேன். அதுபோல, ரோஜா செடி என்றால், எத்தகைய செடிகளை வளர்க்க வேண்டும்; எப்படி அந்த பூக்களை பறிக்க வேண்டும்; எந்த செடியிலிருந்து எந்த விதமான மலர் கிடைக்கும் என்பன போன்ற விபரங்களை கூறுகிறேன்.

நான் சொல்லும் விபரங்கள், கூறும் விதம் போன்றவை, வாடிக்கையாளர்களுக்கு பிடித்துப் போயுள்ளது. கிருஷி லோகம் சேனலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, 'டிப்ஸ் பார் ஹேப்பி லைப்' என்ற மற்றொரு சேனலையும் துவக்கியுள்ளேன். வாடிக்கையாளர்களின், 'கமென்ட்'களுக்கு, பதில் அளிப்பதையும் வழக்கமாக வைத்து உள்ளேன். இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; வருமானமும் கூடுகிறது!

--தினமலர் நாளிதழிலிருந்து

Wednesday, 19 December 2018

தொழிலில் ஜெயிக்கலாம் - பாரதிய யுவசக்தி டிரஸ்ட் (BYST) வழி காட்டுகிறது

'பாரதிய யுவசக்தி டிரஸ்ட்' நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரும், முன்னாள் ஜனாதிபதி, ஆர்.வெங்கட்ராமனின் மகளுமான, லட்சுமி வெங்கடேசன்: கடந்த, 1990ல், அப்பாவுடன், அமெரிக்கா போனபோது, ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், வேல்ஸ் இளவரசருமான சார்லசைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை தேடிக் கண்டுபிடித்து தொழிலதிபர்களாக்கும் அவருடைய முயற்சி, என்னை கவர்ந்தது. வேலையை விட்டு, அதே மாதிரியான திட்டத்தை ஆரம்பிக்க நினைத்தேன். என் யோசனையை, ஜே.ஆர்.டி., டாட்டாவிடம் கொடுத்தேன். வழிகாட்டியாகவும், நிறுவன தலைவராகவும் இருக்க அவர் சம்மதிக்க, 1992ல், Bharatiya Yuva Shakti Trust (BYST) ஆரம்பமானது.

அதாவது, 18 - 35 வயது இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும்போது, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போய்விடும். சிறுதொழில் ஆரம்பிக்கவும், வங்கியில் கடன் வாங்கவும் ஏகப்பட்ட கெடுபிடிகள்  உள்ளது. பெண்கள் நிலை இன்னும் மோசம். BYST  மூலமாக, கிராமம், சிறுநகரங்களுக்குச் சென்று, சிறுதொழில் செய்ய நினைப்பவர்களை கண்டுபிடிக்கிறோம். சாதாரண கைவினைப் பொருள் தயாரிப்போ, அதிநவீன தொழில்நுட்பம் தேவைப்படும் பிசினசோ செய்ய அவர்கள் முற்பட்டால், அவர்களுடைய யோசனைகளை வரவேற்கிறோம். சொத்து இருக்க வேண்டியதில்லை, செக்யூரிட்டி தேவையில்லை. பயிற்சி கொடுப்பதில் துவங்கி, வங்கிக் கடன் வாங்கித் தருவது, ஆலோசனை, வழிகாட்டுவது என, அனைத்தையும் செய்கிறோம்.  

தொழிலதிபர்களை உருவாக்கும் இத்திட்டத்தின் முதுகெலும்புகளே, வழிகாட்டிகள் தான். அப்படிப்பட்டவர்களை, பெரிய நிறுவனங்கள், தொழிற்பேட்டை, ரோட்டரி, லயன்ஸ் கிளப் அமைப்புகள் என, பல பின்னணியிலிருந்து தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவோம். வருங்கால தொழிலதிபர்களுக்கு வழிகாட்டப் போகும் அவர்களுக்கும், 'ட்ரெயினிங் ஆப் தி ட்ரெயினர்ஸ்' என்ற பெயரில், பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ தொழில் ஆரம்பித்த பிறகும், இரண்டு ஆண்டுகளுக்கு வழிகாட்டிகளின் ஆதரவு தொடரும்.

எங்கள் முயற்சியால், ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் உருவாகி, அவர்கள் வாயிலாக, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 42 நாடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். 'தொழிலில் ஜெயிக்க, பெரிய பின்புலம் தேவை' என்ற கருத்தை உடைப்பதே, எங்கள் நோக்கம். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வரும் ஆண், பெண் கூட, தொழிலதிபர் ஆகலாம்; அவர்கள், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம் என, நிரூபித்து வருகிறோம்.
--தினமலர் நாளிதழிலிருந்து

Monday, 3 December 2018

மருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூ இயற்கை முறையில் சாகுபடி:

மருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூவை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வரும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி: கோவில்பட்டியைச் சேர்ந்தவன் நான். விவசாயத்துக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை. எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் முடித்து, சென்னையில், ஒரு, 'சாப்ட்வேர் கம்பெனி'யில், 10 ஆண்டுகள் வேலை செய்தேன்.ஒரு கட்டத்தில் வேலை மிகவும் போர் அடிக்கவும், 2015ல், குடும்பத்தோடு ஊர் திரும்பி விட்டேன். எங்களுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர், கரம்பை நிலம், 15 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல், சீமைக்கருவேல மரங்களால் அடர்ந்து இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி, செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, நிலத்தை தயார் செய்து, 4,000 செம்பருத்தி செடிகளை நடவு செய்தேன்.


அதில், 500 செடிகள் பட்டுப்போயின.மீத செடிகளில் இருந்து கிடைக்கும் பூக்களை, ஆறு மாதங்களாக, அறுவடை செய்து வருகிறேன். சென்னை, கோவை, டில்லி நகரங்களில் சித்த மருந்து தயாரிக்கும் கம்பெனிகள், ஆயுர்வேத மருந்து மற்றும் அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனங்களை தேடிப்பிடித்து, நேரடியாக பூக்களை விற்பனை செய்து வருகிறேன். உள்ளூரில் உள்ள சித்த மருத்துவர்கள், மணப்பாகு தயாரிக்க, தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.உலராத பூக்களாகவும், மீதியை காய வைத்த பூக்களாகவும் விற்பனை செய்து வருகிறேன். 100 கிலோ பூவை காய வைத்தால், 20 கிலோ உலர்ந்த பூ கிடைக்கும். இதுவரையிலும் உலர வைக்காத, 200 கிலோ பூக்களை, கிலோ, 200 ரூபாய் என விற்று, 40 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது.

அதேபோல், 3,154 கிலோ பூக்களை உலர வைத்து, 616 கிலோ கிடைத்தது. இது, கிலோ, 490 - 750 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதன் மூலமாக, 3.08 லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. இதுவரை, நிலம் சீரமைப்பு, செடிகள், சொட்டுநீர் பாசனம், களை எடுப்பு, இடுபொருள் செலவு என, 2.71 லட்சம் ரூபாய் செலவு போக, 77 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இன்னும் போகப்போக மகசூல் அதிகரிக்கும்; பராமரிப்பு செலவு குறைந்து விடும் என்பதால், இனி, லாபம் அதிகரிக்கும். அத்துடன், செம்பருத்தியில் இருந்து தேநீர்ப் பொடி, இயற்கைக் கூந்தல் பொடி, செம்பருத்தி ஜாம் என, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் யோசனையும் உள்ளது. அப்படி விற்பனை செய்ய ஆரம்பித்தால், கூடுதல் லாபம் கிடைக்க ஆரம்பித்து விடும். தொடர்புக்கு: 99430 06666.
-- தினமலர் நாளிதழிலிருந்து
செம்பருத்தியல் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள்
செம்பருத்தி பூவினால் செழிக்கும் அழகு

Sunday, 7 October 2018

ஒரு நாளில் 100 'மாப்' தைக்கலாம்!

ஒரு நாளில் 100 'மாப்' தைக்கலாம்!பாத்திரங்களை மெருகேற்றும், 'மாப்' எனும் துடைப்பான் தயாரித்து வரும், சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சவுந்தர்யா: 10ம் வகுப்பு வரை படித்து உள்ளேன். எங்கள் பகுதியில், பாத்திரங்களுக்கு மெருகேற்றும், 'மாப்' தயாரிப்பவர்கள் இருந்தனர். பள்ளி சென்று வந்ததும், பகுதி நேர வேலையாக, இதை செய்ய கற்று, செய்து வந்தேன். ஒரு கட்டத்தில், அதையே முழு நேரமாக செய்யும் அளவுக்கு வளர்ந்ததோடு, நிறைய பேருக்கு வேலையும் கொடுத்து வருகிறேன். படிப்பு, அனுபவம் என, எதுவுமின்றி, கணிசமான வருமானம் பார்க்கும் இந்த தொழில், வேலைக்குப் போக முடியாத பெண்களுக்கான சரியான வாய்ப்பு!

ஆயத்த ஆடை நிறுவனங்களில், தைத்தது போக, வீணாகும் பருத்தி துணி துண்டுகள் மட்டும் தான் இதற்கு பயன்படும். இவை, ஆயத்த ஆடை நிறுவனங்களிலும் அல்லது சென்னை, பாரிஸ் கார்னர் கிடங்குகளிலும் கிடைக்கும். அதை, கிலோ கணக்கில் வாங்கி, அளவுக்கேற்ப அடுக்கி, தைத்து, ஆணி வைத்து அடிக்க வேண்டும்.துணியின் தரத்துக் கேற்ப கிலோ, 5 ரூபாய் முதல் கிடைக்கும். ஒரு மாப் தயாரிக்க, 2 கிலோ துணி தேவைப்படும். ஆரம்பத்தில் குறைந்தது, 100 கிலோ வரை தேவைப்படும்.

மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரத்தோடு சேர்த்து, மொத்த மூலதனம், 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். வேகமும், நுணுக்கமும் பிடிபட்டு விட்டால், ஒரு நாளுக்கு, 100 வரை தைக்கலாம். ஆரம்பத்தில், நாள் ஒன்றுக்கு, 30 மாப் வரை செய்யலாம்.அடுக்க, தைக்க என, ஒவ்வொன்றுக்கும் உதவிக்கு ஆள் வைத்திருந்தால், இன்னும் எண்ணிக்கையை கூட்டலாம்.ஒரு மாப் செய்ய அடக்க விலை, 40 ரூபாய். அதை, 60 ரூபாய்க்கு விற்கலாம். ஆணி அடிக்க உதவியாளர்கள் வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு மாப்புக்கு, 8 ரூபாய் கொடுக்கலாம்.

10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 20 ஆயிரம் வரை லாபம் பார்க்கலாம்.தனியாக துவங்குவதை விட, இரண்டு, மூன்று பேர் சேர்ந்து துவங்குவது லாபகரமாக இருக்கும். 300 ரூபாய் கட்டணத்தில், ஒரே நாள் பயிற்சியில், பாத்திரங்களை மெருகேற்றும் மாப் செய்ய கற்றுக் கொள்ளலாம்.
--தினமலர் நாளிதழிலிருந்து.

Sunday, 5 August 2018

பேரீச்சை சாகுபடி:

பேரீச்சை சாகுபடியில் அதிக லாபம் சம்பாதிக்க வழி கூறும், தருமபுரி மாவட்டம், அரியகுளத்தை சேர்ந்த நிஜாமுதின்: சவுதி அரேபியாவில், வேளாண் பயிற்சி கூடத்தில் பணிபுரிந்த போது, பேரீச்சை சாகுபடி குறித்து அறிந்தேன்.நம் ஊரில் செய்தால் என்ன என யோசனை வந்து, அங்கிருந்த பேரீச்சை நாற்றை எடுத்து வந்து, சொந்த ஊரில் நட்டேன். 1991ல், பேரீச்சை சாகுபடியை துவங்கினேன்.

தற்போது, 1 ஏக்கருக்கு, 76 செடி வீதம், 13 ஏக்கரில், 630 பேரீச்சை செடிகளை நட்டு, பராமரித்து வருகிறேன். 24க்கு, 24 அடியில், ஒரு செடி நட வேண்டும். குழியின் அடியில், 1.5 அடி வரை, மணல் கலந்த மண்ணையும், மேல் பாகம், 1.5 அடியில் மண்ணையும், இயற்கை உரங்களையும் கலந்து நடவு செய்ய வேண்டும். இது, அனைத்து வகையான மண் ரகத்திலும் வளரும் தன்மையுடையது. நடவு செய்து ஒரு மாதம் வரை, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, 50 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு மாதம் கழித்து, வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். மரங்களான பின், மாதத்திற்கு இரு முறை மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் போதும். தண்ணீர் இல்லாத வறட்சி காலங்களில், தென்னையை போல், பேரீச்சை மரம் காய்ந்து போக வாய்ப்பு இல்லை.

ஆண்டுக்கு இருமுறை, இடை உழவும், இருமுறை இயற்கை உரங்களும் போட வேண்டும். பேரீச்சை மரங்கள், 90 ஆண்டு வரை பழங்கள் தரும். இதன் ஆயுட்காலம், 150 ஆண்டு. இதன் நடுவே ஊடுபயிராக, அனைத்து விதமான பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.நடவு செய்த முதல் ஆண்டில், ஒவ்வொரு செடியும், 30 - 50 கிலோ வரையும், மூன்றாம் ஆண்டு பருவத்தில், 50 முதல் 100 வரை காய்க்கும். பெரும்பாலும் ஜனவரி, பிப்ரவரியில் பூ பூத்து, ஜூன், ஜூலை மாதங்களில் நல்ல தரமான, சுவையான பழங்களை அறுவடை செய்யலாம்.

மரத்தை சுற்றி விளையும் களைகளை, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மரம் வளர்ந்த பின், பக்கவாட்டில் உள்ள கிளைகளை வெட்டி விடுவதுடன், காய்க்க துவங்கியதும், வலைகளால், பழங்களை மூடி விட வேண்டும்; இல்லையெனில் எலி, அணில்கள், பழங்களை சேதப்படுத்தி விடும். எங்களிடம், 32 வகையான பேரீச்சை நாற்றுகள் உள்ளன.

ஒரு நாற்றின் விலை, 3,500 - 5,000 ரூபாய் வரை விற்கிறோம். பழங்கள் கிலோ, 250 - 500 ரூபாய் வரை விற்கிறோம். தற்போது, நம் நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விவசாயமும் படிப்படியாக குறைகிறது. வழக்கமான விவசாயத்தை விட, குறைந்த செலவில், பேரீச்சை சாகுபடியில் அதிக பலன்களை பெற முடியும். தொடர்புக்கு94423 37717.
--தினமலர் நாளிதழிலிருந்து.

 

Saturday, 4 August 2018

வீடுகளில் நெல் அரைக்கும் இயந்திரம் - கிரைண்டர் வைக்கும் இடமே போதுமானது:

நெல் அரைக்கும் இயந்திரம் குறித்து கூறும், சென்னையைச் சேர்ந்த, 'நல்லகீரை' அமைப்பைச் சேர்ந்த ஜெகன்: சத்தீஸ்கர் மாநில விவசாயிகளுக்கு, கீரை சாகுபடி தொடர்பாக பயிற்சி அளிக்க சென்ற போது, அங்கு, நெல் அரைக்கும் இயந்திரத்தை பார்த்தோம். அந்த மாநில மக்கள், வீடுகளிலேயே இந்த இயந்திரத்தை வைத்து நெல்லை அரைக்கின்றனர். தமிழக மக்களுக்கு பயன்படுமே என, இயந்திரம் தயார் செய்யும் இடத்துக்கு போய், நாலைந்து மிஷின்களை வாங்கி வந்தோம்.

அதை நண்பர்கள் சிலர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இப்போது நிறைய பேர், இயந்திரம் வாங்கி தருமாறு கேட்டதால், 'ஆர்டர்' செய்துள்ளோம். முதல் முறை வாங்கி வந்தபோது, ஒரு மிஷினுக்கு அடக்க விலை, 40 ஆயிரம் ரூபாய். இப்போது மொத்தமாக ஆர்டர் செய்திருப்பதால், 36 ஆயிரம் ரூபாய் ஆகிறது. லாபம் எதுவுமின்றி, அடக்க விலைக்கே வாங்கிக் கொடுக்கிறோம். இதை இயக்குவது, ரொம்ப சுலபம். கிரைண்டர் வைக்கும் அளவு இடமே போதுமானது. 3 ஹெச்.பி., மோட்டாரில் இயங்கும் இதற்கு, 'சிங்கிள் பேஸ்' மின் இணைப்பே போதும்.

100 கிலோ நெல்லை, 45 நிமிஷத்தில் அரைத்து விடலாம். 60 - 65 சதவீத அரிசி கிடைக்கும். நெல்லை பச்சையாகவும், வேக வைத்தும் அரைக்கலாம். இந்த மிஷினுக்கு மானியம் கிடைத்தால், இன்னும் குறைவான விலையில் விவசாயி களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

இயந்திரத்தை பயன்படுத்தி வரும், திண்டுக் கல்லைச் சேர்ந்த ஹரிஹரன்: இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகமுள்ள நான், விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கி, அரைத்து வருகிறேன். என்னிடம், 60 நாட்டு மாடுகள் உள்ளன. நெல் அரைக்கும் போது கிடைக்கும் தவிடு, மாடுகளுக்கு தீவனமாகிறது. மிஷினில் பெரிய தொழில்நுட்பம் எதுவும் இல்லை.

அரைக்கும் போது நெல்லை அதிகமாக கொட்டினால், 'பெல்ட்' இழுக்க சிரமப்படும். கொஞ்சமாக ஒரே சீராக கொட்ட வேண்டும். மிஷின் வாங்கி ஐந்து மாதம் ஆகியும், இதுவரை பிரச்னை இல்லாமல் வேலை செய்கிறது. மோட்டா, சன்னம் என, எல்லா ரக நெல்லையும் அரைத்துள்ளேன். ரகம், ஈரப்பதத்தை பொறுத்து அரிசி கிடைக்கும். எனக்கு, 100 கிலோ நெல்லுக்கு, 65 கிலோ அரிசி கிடைத்தது. தவிடு சேகரிக்க, தனியாக உள்ள பையில் விழுந்துவிடும். ஈரப்பதம் சரியாக இல்லையெனில், அரிசி உடையும். பெரும்பாலும் குருணை வருவதில்லை. ஒன்றிரண்டு வந்தாலும் தனியாக விழுந்துவிடும்;

மின் கட்டணமும் அதிகம் ஆகாது.உள்ளூர் விவசாயிகள், நெல்லை கொண்டு வந்து அரைத்து செல்கின்றனர். அரைக்கும் கூலியாக தவிட்டை கொடுத்து விடுகின்றனர். நெல் விவசாயிகளுக்கு, இது அவசியமான மிஷின்.தொடர்புக்கு: ஜெகன்: 90420 11768 ஹரிஹரன்: 73396 97444.
--தினமலர் நாளிதழிலிருந்து


Thursday, 19 July 2018

கிராமத்து உணவுகளுக்கு மதிப்பு அதிகம்! - தொக்கு வகைகள்

ஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை, தொக்கு வகை செய்து லாபம் ஈட்டி வரும், சென்னை, கேளம்பாக்கத்தை சேர்ந்த நிவேதா: 

தொக்கு: ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்படும் உணவு முறை; மாங்காய், தக்காளி போன்றவற்றை எண்ணெயில் வதக்கிக் காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தொடுகறி.‘மாங்காய்த் தொக்கு’,‘தக்காளித் தொக்கு’.


                                                       (தக்காளி வெங்காய தொக்கு)

நான், கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறேன். இன்ஜினியரிங் படித் தும், புகுந்த வீட்டில் வேலைக்கு போக வேண்டிய தேவை ஏற்படவில்லை.ஆறாவது முதல் காலேஜ் வரை, ஹாஸ்டலில் தான் படித்தேன்; சாப்பாடு சரியாக இருக்காது. விடுமுறைக்குவீட்டுக்கு வரும் போதெல்லாம் அழு வேன். அதனால் அம்மா, விதவிமான தொக்கு செய்து கொடுப்பார்; 20 நாள் வைத்து சாப்பிடலாம்; கெட்டுப் போகாது.

என் அம்மா மாதிரியே, மாமியாரும் தொக்கு ஸ்பெஷலிட்ஸ். மாமனாருக்கு நீரிழிவை கட்டுப்படுத்த, ஆவாரம் பூவில் தொக்கு செய்வார். வீட்டில் யாருக்காவது மூட்டுவலி எனில், முடக்கத்தான் தொக்கு செய்வார்.எங்கள் வீட்டில் ஒருவேளைக்கு, 15 - 20 பேருக்கு சமையல் நடக்கும். சொந்தமாக வயல் உள்ளதால், இயற்கை விவசாயம் செய்கிறோம். செக்கு நல்லெண்ணெய் தான் பயன்படுத்துகிறோம். எந்த கெமிக்கலும் இல்லாமல், இயற்கையான முறையில் தொக்கு செய்வது, எங்கள் வீட்டு ஸ்பெஷல் அடையாளமாவே மாறிவிட்டது. வீட்டுக்கு வந்து யார் சாப்பிட்டாலும், பாராட்டத் தவறியதே இல்லை. 'விலைக்கு தருவீங்களா?' என கேட்க ஆரம்பித்த பின் தான், இதை பிசினசாக செய்யும் யோசனை வந்து, உறவின பெண் சத்யாவும் சேர்ந்து ஆரம்பித்தோம்.

ஆவாரம்பூ, முடக்கத்தான், பாகற்காய், தக்காளி, புதினா, பூண்டு, பிரண்டை, புளித்த கீரை, துாதுவளை, வல்லாரை என, தொக்கு வகைகள் செய்து, ஆரோக்கியமான உணவு தயாரிப்பையே, பிசினசாக மாற்றவிரும்புவோருக்கும் வழிகாட்டுகிறோம். 

ஒவ்வொரு தொக்கும், 1 கிலோ அளவு தயாரிக்க, 200 - 300 ரூபாய் வரை தேவை. 10 வகை தொக்கும், தலா, 1 கிலோ செய்ய, குறைந்தபட்சம், 1,200 ரூபாய் முதலீடு போதும்.கிராமத்து உணவுகளுக்கு, நகரத்தில் எப்போதும் மதிப்பு அதிகம். இந்த தொக்கு வகைகளை இட்லி, தோசை, சப்பாத்தி என, டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்; சூடான சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். ஊறுகாய்க்கு நல்ல மாற்றும் கூட. மேலும், 300 கிராம்தொக்கு, 90 ரூபாய்க்கு விற்கலாம்.

ஐந்து நாட்கள் வரை வெளியிலேயே வைத்திருந்து பயன்படுத்தலாம்; பின், பிரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம். வேலைக்கு செல்பவர், பேச்சிலர், ஹாஸ்டலில் இருப்பவர் தான்வாடிக்கையாளர்கள். கடைகளில் வாங்கும் தொக்கு பெரும்பாலும் ஒரே சுவையில் இருக்கும்; ஆனால், இவை ஒவ்வொன்றும் அதன் மூலப்பொருளின் சுவைக்கேற்ப மாறுபடும் என்பதால், தினமும் சாப்பிட்டாலும் அலுப்புத் தட்டாது; 50 சதவீத லாபம் நிச்சயம்.

ஒரு நாள் பயிற்சியாக, 750 ரூபாயில், 10 வகையான தொக்குகளை கற்றுக் கொள்ளலாம்.தொடர்புக்கு: 9962146742, 9962114104.
--தினமலர் நாளிதழிலிருந்து.

Wednesday, 6 June 2018

நாட்டு மாடு வளர்ப்பில், பால் விற்பனை இல்லாமலேயே நல்ல வருமானம் ஈட்டலாம்

நாட்டு மாடு வளர்ப்பில், பால் விற்பனை இல்லாமலேயே, வருமானம் ஈட்ட வழிக்கூறும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சம்பத்: சிறு வயது முதலே எனக்கு, நாட்டு மாடுகள் மேல் பிரியம். பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கி பயிற்சி மையத்தில், நாட்டு மாடு வளர்ப்பு பயிற்சி கொடுத்த போது, நகை தணிக்கையாளரான நானும் கலந்து கொண்டேன். மூன்றாண்டுக்கு முன், அந்த பயிற்சி மைய இயக்குனர், இரண்டு பசு மாடு, ஒரு காளை, ஒரு கன்றுக்குட்டி வாங்கி கொடுத்தார்.

'நாட்டு மாட்டு சாணத்தை மதிப்புக்கூட்டி விற்றால், பாலை விட அதிக வருமானம் கிடைக்கும்' என, 'கொங்கு கோசாலா குரூப்'பை சேர்ந்த சிவகுமார் கூறினார். அதையடுத்து, சாணத்தை மதிப்புக்கூட்டும் விதம், அதற்கான சந்தை வாய்ப்பை அறிந்து, விபூதி தயாரித்து, விற்பனை செய்கிறேன்.

இப்போது எங்கள் பண்ணையில், 60 மாடுகள் உள்ளன; பெரும்பாலானவை காங்கேயம் ரகம் தான். பண்ணையை பராமரிக்க, ஒரு குடும்பம் தங்கி இருக்கிறது. மாடுகள் சாணம் போட்டவுடனே, பசு மாட்டு சாணம் தனியாகவும், காளை மாட்டு சாணம் தனியாகவும் பிரித்து வைத்து விடுவர். மாடுகளின் சிறுநீர், வாய்க்கால் வழியாக தொட்டிக்கு செல்லும் விதமாக, இரண்டு கீழ்நிலை தொட்டி அமைக்கப்பட்டுள்ளது .
  • பசு மாட்டு சாணத்தில் விபூதி தயாரிப்போம்; 1 கிலோ விபூதி, 500 ரூபாய்க்கு வாங்கி கொள்கின்றனர். மாதம், 75 கிலோ விபூதி விற்றால், 37 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும்.
  • 1 லி., சிறுநீர், 50 ரூபாய் என, மாதம், 500 லி., வரை விற்பதால், 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 
  • கன்றுகுட்டி குடித்தது போக தினமும், 15 லிட்டர் பால் கறந்து, 1 லி., 80 ரூபாய் என, மாதம், 36 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. 
  • காளை மாட்டு சாணத்தை உரத்துக்கு பயன்படுத்துவோம்.  விபூதி தயாரித்தது போக, மீத சாணத்தை, ஆண்டுக்கு மூன்று முறை விவசாயிகளுக்கு விற்பதால், 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. 
  • இவ்வாறு, அனைத்தும் சேர்த்து, மாதம், 1.02 லட்சம் ரூபாய் வருமானமும், மாடுகளுக்கு தீவனம், வேலையாள் சம்பளம் என, செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் லாபமும் கிடைக்கிறது. 
அடுத்து, விபூதி உற்பத்தியை அதிகப்படுத்தவும், பஞ்ச கவ்யா தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளேன். உ.பி., மாநிலத்தில், மாட்டு சிறுநீரை, 'பிராசஸ்' செய்து, 'ஹெல்த் டிரிங்க்' என, 1 லி., 150 ரூபாய்க்கு விற்கின்றனர். அவ்வாறு செய்யும் யோசனை உள்ளது. நாட்டு மாடு வளர்ப்பதை, ஆத்மார்த்தமான செயலாகவே பார்க்கிறேன்; வருமானத்துக்கான தொழிலாக பார்க்கவில்லை.'தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு' என்பது போல், நாம் முறையாக பாதுகாத்து பராமரித்தால், கோமாதா கொட்டிக் கொடுக்கும். பாலை விட நாட்டு மாடுகளுடைய கழிவுகளுக்கு இன்று கிராக்கி உள்ளது. சாணத்தையும், சிறுநீரையும் வைத்தே, நல்ல லாபம் பார்க்க முடியும்.
தொடர்புக்கு: 73389 39369
-- தினமலர் நாளிதழிலிருந்து.

 தொடர்புடையவை:
விவசாயம் சாரா தொழிலில் 15 சதவீத வருமானம் கிடைக்கிறது!
கருங் கோழிக்குஞ்சி, முட்டையில் வருமானம்

 

Wednesday, 4 April 2018

விவசாயம் சாரா தொழிலில் 15 சதவீத வருமானம் கிடைக்கிறது!


மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பத்தில், நாட்டு மாட்டின் சாணத்தைப் பயன்படுத்தி, முக பவுடர், பல்பொடி, ஷாம்பூ என, 12 பொருட்களைத் தயாரிக்கும், திருப்பூர் மாவட்டம், முத்துார் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த புரவிமுத்து:  

  • சாண வரட்டி சாம்பல், நாயுருவிச் செடி, மூலிகைக் கலப்பு கலந்த பல்பொடி, 70 கிராம், 45 ரூபாய்
  • பசுஞ்சாணப் பொடி, பச்சரிசி, குங்கிலியம், சிறிதளவு நெய் மற்றும் மூலிகை கலப்பு சேர்த்த, 18 சாம்பிராணித் துண்டுகள், 35 ரூபாய்
  • பசுஞ்சாண பொடி, வேம்பு, துளசி, தும்பை மற்றும் மூலிகைக் கலப்பு சேர்த்த, 18 கொசுவர்த்தித் துண்டுகள், 35 ரூபாய்.
  • மாட்டின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் பாகு, நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் மூலிகைக் கலப்பிலான மாலிஷ் ஆயில், 100 மி.லி., 120 ரூபாய்;  
  • பசுஞ்சாண விபூதி, இலுப்பைத் துாள், எலுமிச்சை தோல் பொடி மற்றும் மூலிகைக் கலப்புப் பொடி சேர்த்து தயாரிக்கப்படும், பாத்திரம் துலக்கும் பவுடர், கிலோ 100 ரூபாய்; விபூதி, கிலோ 300 ரூபாய்.
  • நாட்டுப் பசுஞ்சாண விபூதி, வெட்டிவேர், கிச்சிலிக் கிழங்கு மற்றும் மூலிகை கலப்பு சேர்த்த குளியல் பொடி, கிலோ, 300 ரூபாய்


  • நாட்டுபசு கோமியம் மற்றும் மூலிகைக் கலப்பு சேர்த்த ஷாம்பு, 180 மி.லி., 125 ரூபாய்.  
  • நாட்டுப்பசு மாட்டின் கோமியத்திலிருந்து, கோவர்ஷினி அர்க் தயாரிக்கப்படுகிறது. இது, சர்வரோக நிவாரணியாக செயல்பட்டு, சளி முதல் கேன்சர் வரையிலான நோய்களை கட்டுப்படுத்துகிறது; லிட்டர், 300 ரூபாய்.

  • கற்றாழை, வேப்பிலை, முல்தானி மிட்டி, நாட்டுப் பசு எரு, மூலிகைக் கலப்பு சேர்த்த, 70 கிராம் சோப்பு, 40 ரூபாய்.
  • குளியல் பொடியில் சேர்க்கப்படும் கிச்சலிக் கிழங்கைத் தவிர்த்து, முகப்பவுடர் தயாரிக்கப்படுகிறது.முக அழகு பவுடருடன் குளிர்ந்த நீர் சேர்த்து, சந்தனம்போல் கரைத்து பூசி, 15 நிமிடம் கழித்து வெந்நீரில் முகம் கழுவ, கரும் புள்ளி, தேமல், முகப்பரு, எண்ணெய் பசை நீங்கி, இளமைப் பொலிவுடன் முகம் வசீகரம் தரும்; 70 கிராம் பொடி, 40 ரூபாய்.
  • நாட்டுப் பசும்பால், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், மூலிகை கலப்பு சேர்த்து, தலைக்கு தேய்க்கும் எண்ணெய், 100 மி.லி., 125 ரூபாய்;  
இந்த தொழிலில் ஈடுபட, 15- 20 நாட்டு மாடு, மூலிகை வளர்க்க, 3 - 5 ஏக்கர் நிலம், அடுப்பு, அச்சு மிஷின்களுக்கு என, 13 லட்சம் செலவாகும்; நிலம் வாங்கும் செலவு தனி.மேற்கண்ட, 12 பொருட்களைத் தவிர, பஞ்சகவ்யம், பூச்சி விரட்டியும் தயார் செய்து விற்பனை செய்கிறேன். செலவுபோக, 15 சதவீதம் வருமானம் கிடைக்கிறது.
--தினமலர் நாளிதழிலிருந்து.


Sunday, 18 March 2018

உலர் சலவை முதல் நல வாழ்வு மையம் வரை:

துணிச் சலவை செய்வது முதல், சகலவிதமான பொருட்களை விற்பனை செய்பவரும், தொழில் முனைவோர் விருது பெற்றவருமான, நெய்வேலியைச் சேர்ந்த, வாசுகி வெற்றியரசு: என் மாமனார், 'காலேஜ் டிரை கிளீனர்ஸ்' என்ற கடையை, வேறொருவரிடம் இருந்து வாங்கி நடத்தி வந்தார்.அவருக்குப் பின், என்.எல்.சி.,யில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த என் கணவர், கடையை கவனிக்க ஆரம்பித்தார்; அவருடன் இணைந்து நானும் தொழிலை கற்றேன். சிறு அளவில் இருந்த கடையை, கணவரின் மறைவுக்குப் பின், பெரிதாக விரிவுபடுத்தினேன். இப்போது, சென்னை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, விருத்தாச்சலம் என, பல மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் துணிகளை கொடுத்து, சலவை செய்து வாங்கி செல்கின்றனர்.

வெள்ளை சட்டைகள், தைத்த போது இருந்த அதே நிறம், ஐந்து ஆண்டுகளானாலும் மிளிர்வது போல் தருவதால், பல ஊர்களின் அரசியல்வாதிகளும், எங்கள் கடையை தேடி வருகின்றனர். சென்னையிலிருந்து வரும் பஸ்சில், காலை யிலேயே துணியை எடுத்து வந்து, மாலைக் குள் துவைத்து, இஸ்திரி போட்டு கொடுத்து விடுவோம்.

சலவையகத்தோடு நின்று விடாமல், 'கல்லுாரி நல வாழ்வு நிலையம்' என்ற பெயரில், இயற்கை அங்காடிப் பொருட்களை விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறேன். அறுகம்புல் பவுடர், ஆவாரம்பூ பவுடர், ஒற்றை இலை தாமரைப் பொடி, தேனில் ஊற வைத்த நெல்லி, முல்தானி மட்டி, செம்பருத்தி எண்ணெய், இயற்கை காய்கறி ஜூஸ் மற்றும் சுத்தமான கொல்லிமலை தேன்(எங்கள் கடை ஸ்பெஷல்) என, எங்களிடம் கிடைக்காத விஷயம் எதுவுமில்லை.

விலை உயர்ந்த புடவை கிழிந்து விட்டால், அதை தைத்தாலும் அந்த இடம், அப்பட்டமாய் தெரிந்து, மானத்தை வாங்கும். ஆனால், தைத்த இடம் தெரியாமல் ஆக்கும், 'டார்னிங்' எனப்படும், கை நெசவு செய்து தருகிறோம்.இதற்காக, கிழிந்த சேலையில் இருந்தே நுால் எடுத்து, கண்ணுக்கே தெரியாத அளவுள்ள ஊசியால், டிசைன் போட்டு, இஸ்திரி போட்டால், கிழிந்த இடமே தெரியாது. இதை சொல்வது சுலபம்; செய்வது பெரிய வேலை. நானும், என் தங்கையும் சேர்ந்து, இந்த வேலையை செய்து தருகிறோம். இங்கே வேலை செய்த பாட்டியிடம் இருந்து, இதை கற்று, செய்து வருகிறேன்.

அதுமட்டுமின்றி, தையல், எம்பிராய்டரி உள்ளிட்டவற்றையும் செய்து கொடுக்கிறேன். என் மேற்பார்வையில், 15 பேர் வேலை செய்து வருகின்றனர்; இதில் பலரும் பெண்கள். என் சாதனைகளை பாராட்டிய சரஸ்வதி அறக்கட்டளை, சிறந்த தொழில் முனைவோர் விருதை, சமீபத்தில் வழங்கியுள்ளது.தொடர்புக்கு: 95006 31766
--தினமலர் நாளிதழிளிருந்து .

கீழ் வருவது விக்கிப்பீடியாவிலிருந்து (பொதுஅறிவிற்காக):

உலர் சலவை என்றால் என்ன?
 உலர் சலவையில் சாதாரண சலவை போன்றே துணிகள் துவைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு இஸ்திரி செய்யப்படுகிறது, ஆனால் தண்ணீருக்கு பதில் ட்ரைகுளோரோஈத்தேன், பெர்குளோரோஎத்திலீன், ஹைட்ரோகார்பன் மற்றும்  திரவ சிலிக்கான் மற்றும் கார்பன்டைஆக்சைட் போன்ற வேதி கரைப்பான்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.

தற்செயலான கண்டுபிடிப்பு:
பல கண்டுபிடிப்புகளைப்போல உலர் சலவையும் தற்செயலாகவே கண்டு பிடிக்கப்பட்டது. மண்ணெண்ணையில் விழுந்த துணிகளில் உள்ள அழுக்குகளும், கறைகளும் காணாமல் போயின. இதைக்கண்டே உலர்சலவை எண்ணம் தோன்றியது.

துணிகளில் அழுக்கு படிவதேன்?:
துணிகளில் அழுக்குப்படிவதற்குக் காரணம் எண்ணைப்பசைதான். உலர் சலவை செய்யும்போது துணிகளில் உள்ள எண்ணைப்பசை கரைக்கப்பட்டு அகற்றப்படுவதோடு அத்துடன் ஒட்டியுள்ள அழுக்கும் நீங்குகிறது.

உலர் சலவை முறை:
முதல் கட்டமாக உலர் சலவை இயந்திரத்தில் மினால், டர்பன்டைன் போன்ற பெட்ரோலியப் பொருளையும் துணியையும் போடுகின்றனர். 15-20 நிமிடங்கள் கழித்து துணிகள் சுத்தமாகி இருக்கும் மேலும் அழுக்குகள் இருந்தால் அவற்றை இரண்டாம் கட்டமாக அடையாளம் கண்டு, அது என்ன கறை என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி வெள்ளை பெட்ரோல், தின்னர் போன்ற பொருட்களை பயன்படுத்தி கறைகளை நீக்குகின்றனர்.

வேதி கரைப்பான் அலசல் முடிந்து, 60 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் துணிகள் உலர்த்தப்படும் அப்போது துணிகளில் உள்ள கரைப்பான்களோடு சேர்த்து கறை மற்றும் அழுக்குகளும் ஆவியாகிவிடும், பின் இஸ்திரி செய்தால் துணிகள் தயார்.  துணிகளை அலசி, உலர்த்தும் வசதி ஒரே இயந்திரத்திலேயே இருப்பது கூடுதல் வசதி.  



Friday, 16 March 2018

கருங் கோழிக்குஞ்சி, முட்டையில் வருமானம்:

கருங்கோழி மற்றும் நாட்டுக் கோழி வளர்த்து, லாபம் ஈட்டி வரும், தஞ்சை மாவட்டம், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, சரவணன்: விவசாய குடும்பத்தில் பிறந்த நான், கல்லுாரி படிப்பு முடித்து, சென்னையில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்த போது, பொழுது போக்காக கருங்கோழிகளை வளர்க்க ஆரம்பித்தேன். ம.பி., - ஆந்திர மாநிலங்களில் இருந்து, கலப்பு இல்லாத, 'ஒரிஜினல்' கருங்கோழியை வாங்கி வளர்த்தேன்.


இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னை வேலையை விட்டு, சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். எங்களுக்கு சொந்தமான, 30 ஏக்கர் நிலத்தில், தென்னை முழுக்க இயற்கை முறை பராமரிப்பு செய்யும் நிலையில், நெல் சாகுபடியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம். இத்துடன், நாட்டுக் கோழி, கருங்கோழிகளை வளர்த்து வருகிறேன்.

அசோலா, வேப்பிலை, முருங்கை இலை, அகத்திக்கீரை என, கீரைகளை தான் கோழிகளுக்கு உணவாக கொடுக்கிறோம். அதோடு, பகல் நேரத்தில் தோட்டத்துக்குள் மேய்ச்சலுக்கு விடுவதால், நாட்டுக்கோழிகளுக்கான குணாதிசயத்தோடு ஆரோக்கியமாக வளர்கின்றன. அதேபோல், அடர் தீவனத்தை, நாங்களே அரைத்து கொடுப்பதுடன், தோட்டத்துக்குள் கரையானையும் உற்பத்தி செய்கிறோம். பெரும்பாலான நோய்களுக்கு பாரம்பரிய நோய் தடுப்பு ஊசி, சொட்டு மருந்துக்கு ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்துகிறோம்.

நாட்டுக்கோழிகளில், 180 பெட்டை, 20 சேவல்; கருங்கோழிகளில், 31 பெட்டை, ஐந்து சேவல் என, தாய்க்கோழிகள் உள்ளன. இந்த தாய்கோழிகளில் இருந்து குஞ்சுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்கிறோம். கருங்கோழி இறைச்சி, முட்டையில் மருத்துவக் குணம் அதிகம் உள்ளதால், நல்ல விலை கிடைக்கிறது. கருங்கோழியின் உடல், இறைச்சி, எலும்பு கறுப்பு நிறத்திலும், ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்திலும், நாக்கு கருமை கலந்த சாம்பல் நிறத்திலும் இருக்கும்.

ஒரு கருங்கோழி ஆண்டுக்கு, 80 முட்டை இடும். அதில், 60 முட்டை தான், குஞ்சு பொரிக்க தேறும். அதிலும், பொரிப்பானில் வைத்தால், 40 குஞ்சு தான் வளர்ப்புக்கு தேறும். 31 கோழிகளில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக, 1,240 குஞ்சுகள் கிடைக்கின்றன. ஒரு மாதம் வளர்த்து, ஒரு குஞ்சு, 200 ரூபாய்க்கு விற்பதால், ஆண்டுக்கு, 2.48 லட்சம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.

இதேபோல், 180 நாட்டுக் கோழிகளில் இருந்து, ஆண்டுக்கு, 7,200 குஞ்சுகள் உற்பத்தி செய்கிறோம். ஒரு நாள் ஆன குஞ்சு, 40 ரூபாய்க்கு விற்றால், ஆண்டுக்கு, 2.88 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இதில் அனைத்து செலவும் போக, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். தொடர்புக்கு: 9677101100.
--தினமலர் நாளிதழிலிருந்து


Sunday, 11 March 2018

வேப்பிலை, எலுமிச்சை, புதினாவுடன் கூடிய டிஷ் வாஷ் மற்றும் ஹேண்ட் வாஷ்

ஹேண்ட் வாஷ் மற்றும் டிஷ் வாஷ் செய்து, விற்று வரும், 63 வயதான, புஷ்பாவதி தீனதயாளன்: ஒவ்வொரு நாள் பொழுதையும், சுறுசுறுப்பாகவும், உபயோகமாகவும் கழிக்க ஆசை. இரு மகள், மகனுக்கு திருமணமாகி பேரன், பேத்திகளையும் பார்த்து விட்டேன். அன்பாக, அனுசரணையாக கணவன் இருக்கிறார். இருந்தாலும், உழைக்காத நாள் உபயோகமான நாளாக கழியாது என்பது, என் எண்ணம்.

மனம், உடம்பில் தெம்பு உள்ள வரை உழைக்க வேண்டும். எனக்கு எப்போதும் புதிது புதிதாக கற்க ஆசை. ஏற்கனவே ஐந்து வகையான உள்பாவாடைகளை தைத்து, விற்பனை செய்து வருகிறேன். சமீபத்தில் தான், டிஷ் வாஷ், ஹேண்ட் வாஷ் செய்ய கற்று கொண்டேன். கடைகளில் வாங்கும் இவற்றில், கெமிக்கல் தான் அதிகமாக இருக்கும்; அதனால், நிறைய பேருக்கு, தோல் அலர்ஜி ஏற்படுகிறது.

வேப்பிலை, எலுமிச்சை, புதினா:
வேப்பிலை, எலுமிச்சை, புதினா உட்பட, இயற்கையான பொருட்கள் சேர்த்து, நான் டிஷ் வாஷ் மற்றும் ஹேண்ட் வாஷ் தயாரிக்கிறேன். கடைகளில் வாங்குவதை விட செலவும் குறைவாக இருப்பதுடன், கைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும். அடிப்படையான கெமிக்கல், தேவையான பழங்கள், மூலிகைகள், புட் கலர்ஸ், வாசனை, பிளாஸ்டிக் கவர் மற்றும் பாட்டில்கள் தேவை.

பாத்திரம் துலக்கும் திரவத்தில் லெமன், வேப்பிலை மற்றும் புதினா வகைகளும்; ஹேண்ட் வாஷில் விருப்பமான வகைகளையும் செய்ய முடியும். ஆரஞ்சு பழத்தின் சதைப்பற்றிலும் செய்யலாம். பழம், மூலிகைகளை சீசனில் மொத்தமான வாங்கி, பதப்படுத்தி வைத்து கொள்ளலாம். இரண்டும் தலா, 3 லி., தயாரிக்க, 1,000 ரூபாய் முதலீடு போதும்.கடைகளில் விற்பதை விட, குறைவான விலைக்கு தரலாம். பாதிக்கு பாதி லாபம் கிடைக்கும்.

ஆரம்பத்தில், 50 மில்லி அளவு நிரப்பி, சிறிய பாக்கெட்களில் விற்று, 'ஆர்டர்' அதிகரித்த பின், பாட்டில்களுக்கு மாறலாம்.வீடுகள் தான், உங்கள் முதல் இலக்காக இருக்க வேண்டும். கடை தயாரிப்புகளை விடவும், விலை குறைவு. கைகளுக்கு பாதுகாப்பு என்ற நம்பிக்கை வந்து விட்டால், அவர்களே உங்களுக்கு விளம்பர வேலையை பார்த்து, பிசினசை வளர்த்து விடுவர். அதைத் தொடர்ந்து, அலுவலகங்கள், கேன்டீன், ஓட்டல் போன்ற இடங்களில், 'ஆர்டர்' பிடிக்கலாம். ஒரு லிட்டர் தயாரிப்பிலிருந்து துவங்கலாம். அக்கம் பக்கத்தினர் இரண்டு, மூன்று பெண்களாக சேர்ந்து, ஆளுக்கு கொஞ்சம் முதலீடு போட்டு ஆரம்பிப்பது, சுலபமாக இருக்கும். அதில் வரும் லாபத்தை வைத்து, அதிகளவில் தயாரிக்கலாம். அரை நாள் பயிற்சிக்கு, தேவையான பொருள்களுடன் சேர்த்து, 750 ரூபாய் வாங்குகிறேன்!
--தினமலர் நாளிதழிலிருந்து

சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைகிறது, இதனை தவிர்த்து வேறு வகையான கொள்கலன்களை முயற்சி செய்தால் நன்று. 


Thursday, 13 July 2017

இல்லத்தரசிகளுக்கான முத்தான தொழில்!

முதலீடு இல்லாமல், உழைப்பு, நேர்மையை பயன்படுத்தி இல்லத்தரசிகள், பணம் சம்பாதிக்க வழிகளை கூறும், சுஹா தொண்டு நிறுவன தலைவியும், சுயதொழில் முனைவோருக்கான பயிற்சியாளருமான உமா ராஜ்:

10க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள் செய்ய தெரிந்தால், வீட்டின் முன், அறிவிப்பு பலகை வைத்து, வகுப்புகள் எடுக்கலாம். 

படித்தவர்கள் என்றால், டியூஷன் சென்டர்ஆரம்பிக்கலாம்.

வீட்டில் தயார் செய்யும் சமையலை சற்று அதிகமாக செய்து, வயதானவர், பேச்சிலர்களுக்கு, 'ஆர்டர்' அடிப்படையில் வினியோகம் செய்யலாம். மாலை நேரத்தில் சப்பாத்தி, 'ஆர்டர்' வாங்கி வினியோகிக்கலாம்.

நிறைய வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால், 'குழந்தையின் புத்தகங்களுக்கு அட்டை போட்டு தரப்படும்' என, அறிவிப்பு வைத்தால், நிறைய பேர் வருவர். 

வீட்டில் பேப்பர் வாங்குபவர்களாக இருந்தால், அதில், 'லாண்டரி பேக்' தயாரித்து, அயர்ன் நிலையம், ஓட்டல்களுக்கு வினியோகிக்கலாம்.

வீட்டில் இடம் இருந்தால் கோதுமை புல் வளர்த்து, நடைபயிற்சி நடைபெறுகிற சாலையோரம், பூங்காக்களில் கோதுமை புல் ஜூஸ் விற்பனை செய்யலாம்; கோதுமை புல்லை உலர வைத்து, பவுடராக்கியும் விற்கலாம். 


அதிக வீடுகள் கொண்ட குடியிருப்பில் வசிப்பவர்களாக இருந்தால், 'காய்கறி கட்டிங் சென்டர்' என அறிவிப்பு வைத்து, குடியிருப்புகள், கேட்டரிங், ஓட்டல்களுக்கு காய்கறி நறுக்கிகொடுக்கலாம்.

சிறிய கடை வியாபாரிகளை அணுகி, அவர்கள் கடைகளை, 15 நாள் அல்லது மாதம் ஒரு முறை அழகுபடுத்தி தரலாம். வீட்டில் இணைய வசதி இருந்தால், ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ் செய்து பணம் ஈட்டலாம்; ஆன்லைனில் டெலிபோன், இ.பி., பில் கட்டி, சேவை கட்டணம் பெறலாம்; ரயில், பஸ், விமான டிக்கெட் பதிவு செய்தும் பணம் சம்பாதிக்கலாம்.

வீட்டில் இட வசதி இருந்தால், மாலை, 5:00 - 7:00 மணியளவில் குழந்தைகளுக்கு, பழைய விளையாட்டுகளான பல்லாங்குழி, ஏழாங்கல், தாயம் சொல்லிக் கொடுத்து, விளையாட்டு மையம் ஆரம்பிக்கலாம். 

ஆள் பலம் இருந்தால், பழைய வீட்டில் இருந்து, புது வீட்டுக்கு பொருள் முழுவதும் கொண்டு சேர்த்து, வீட்டை அலங்கரிக்கும், 'ஹவுஸ் ஷிப்டிங்' சேவை துவங்கலாம்.

தையல், எம்பிராய்டிங் தெரிந்திருந்தால், மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், ரெடிமேட், தையல் கடைகளை அணுகி, நைட்டி, பாவாடை வெட்டி வாங்கி தைத்தும், பட்டன், ஹூக், ஹெம்மிங் செய்தும் தரலாம். 

முறையான பரதநாட்டியம், குச்சுப்புடி, யோகா கற்றிருந்தால், மற்றவர்களுக்கு கற்றுத் தரலாம். 

விடுமுறை அல்லது வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்கிறவர்களின் தொட்டி செடிகளை பராமரித்து தரலாம்.

பேச்சு திறன் உள்ளவர்கள் எனில், தாம்பூலப்பை, தேங்காய், பழம் மலிவு விலையில் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்து, திருமண மண்டபத்தை அணுகி, யார் வீட்டு திருமணத்துக்கு தேவையோ அவர்களுக்கு கைமாற்றிவிட்டு பணம் பண்ணலாம். கேட்டரிங் செய்பவர்கள் கூட கமிஷன் முறையில் வாங்கிக் கொள்வர்.


பழமையான கோவில், புண்ணிய தலங்களை அறிந்து, 'டூர்' ஏற்பாடு செய்யலாம். சுற்றுலா தலங்கள் உள்ள இடத்தில் வசிப்பவராக இருந்தால், அதன் வரலாற்றை அறிந்து, கைடாக பணிபுரியலாம்.

 தினமலர் நாளிதழிலிருந்து

Saturday, 1 October 2016

15 எளிய தொழில்கள் குறைந்த முதலீட்டில்:

தினமலர் நாளிதழில் "சொல்கிறார்கள்" பகுதியில் வந்த சிலரது செய்திகளை  தொகுத்து இங்கு கொடுத்திருக்கிறேன். அனைவருமே குறைந்த முதலீட்டில் குறைந்த லாபத்தை பெற கூடிய தொழில்கள் செய்கிறார்கள். 500 முதல் 20000 முதலீட்டில் ஆரம்பித்து 1000 முதல் 40000 வரை லாபம் பெற கூடிய தொழில்கள். லாபம், பணம் இவற்றை தாண்டி ஆர்வமும், விடாமுயற்சியும் தேவை என்பதே இவர்கள் அனைவரின் அறிவுரை.

1) மூலிகை சூப் ரெடிமிக்ஸ் வியாபாரம்: (Herbal  Soup Ready mix)

மதுரையை சேர்ந்த அனுராதா என்பவர் " அனு கிரீன்சூப்" என்ற பெயரில் இதை செய்து வருகிறார். சர்க்கரை நோய் கட்டுப்படுத்த, உணவுக்குழாய் சுத்தப்படுத்த, மஞ்சள் காமாலை குணப்படுத்த, ஞாபக சக்தியை அதிகப்படுத்த , மூட்டு வலி குணமாக்க, உடல் எடையை குறைக்க, சளி இருமல் போக்க என 7 வகையான சூப் மிக்ஸ் கூடவே மூலிகை டீ மற்றும் ஜுஸ் செய்து விற்பனை செய்கிறார், தொடர்புக்கு 81444-55977.


2) அப்பளம் வியாபாரம்:

மதுரையை சேர்ந்த ரேவதி என்பவர் அப்பளம் பிசினஸ் செய்து வருகிறார். உளுந்து அப்பளம், அரிசி அப்பளம், கிழங்கு அப்பளம் என்று வித விதமாக அப்பளம் செய்து விற்பனை செய்கிறார், தொடர்புக்கு 94429-38305.
3) சிறுதானிய பிஸ்கட் வியாபாரம்:
 
சென்னையை சேர்ந்த அக்லீசியா என்பவர் வீட்டிலேயே சிறுதானியங்களை பயன்படுத்தி பிஸ்கட், முறுக்கு, அதிரசம் செய்து விற்பனை செய்கிறார். இதற்க்கு குக்கர் ஒன்றே போதும் என்பவர் வியாபாரத்திற்காக மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்தி வருகிறார், தொடர்புக்கு 98431-80300.

  
4) சிறுதானிய உணவு வியாபாரம்:

30 வகையான சிறுதானிய உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் திருவையாரை சேர்ந்தவரும், சிறுதானிய உணவு தயாரிப்புக்காக மத்திய அரசின் ஸ்ருஷ்டி சம்மான் விருது பெற்றவரும், சுகா டயட் நாச்சுரல்ஸ் புட் நிறுவனருமான ராஜேஸ்வரி ரவிகுமார். ஆர்வமும், தொடர் புத்தக வாசிப்புமே தனது இந்த நிலைக்கு காரணம் எனினும் தனது கணவரின் பங்கும் முக்கியமானது என்கிறார், தொடர்புக்கு 94431 63206.


5)  சாக்லேட் வியாபாரம்:

விருதுநகரை சேர்ந்த கல்லூரி மாணவி அர்ஜிதா இதை செய்து வருகிறார். இயந்திரங்களின் விலை 20,000 - 30,000 ரூபாய் வரை இருக்கும், மூலதன பொருட்களுக்கு 5000 ரூபாய் போதும் என்கிறார்.



6) கை மற்றும் வீடு சுத்தம் செய்யும் க்ளீனர்கள் வியாபாரம்:

பினாயில், ஹேண்ட் வாஷ், புளோர் க்ளீனர், டாய்லட் க்ளீனர் மற்றும் சோப் ஆயில் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வரும் கலைசெல்வி அவர்கள் தனது தயாரிப்புகளில் துளியும் ஆசிட் இல்லை என்கிறார், தொடர்புக்கு 94441 74865.


7) குஷன் மற்றும் தலையணை தயாரிப்பு வியாபாரம்:

குஷன் மற்றும் தலையணை தயாரிக்க ஆர்வமும், புதிய புதிய டிஸைன் உருவாக்கும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இந்த தொழிலை செய்யலாம் என்கிறார் சென்னையை சேர்ந்த செல்விதிலீப் என்பவர், தொடர்புக்கு  98404 37131.


8) மூலிகை குளியல் பொடி வியாபாரம்:

கற்றாழை, நெல்லி முல்லை, ஆவாரம் பூ, செம்பருத்தி, துளசி, கோரக்கிழங்கு உள்ளிட்ட 16 வகையான பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் பேஸ் வாஷ் மற்றும் குளியல் பொடி தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கோவையை சேர்ந்த சோபனா என்பவர், தொடர்புக்கு 95001-48840.


9) ஐஸ்கிரீம் வியாபாரம்:

தனது மகளுக்கு ஐஸ்கிரீம் செய்து கொடுக்க போய் அதுவே இன்று முழு நேர தொழிலாக மாறியதாக கூறும் திருவள்ளூரை சேர்ந்த பிருந்தா அவர்கள், சீசனை பொறுத்து இரண்டு மூன்று மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார், தொடர்புக்கு 91761 89314.


10) சணல் பை தயாரிப்பு வியாபாரம்:

பர்ஸ், கை பை, சுற்றுலா பை, உணவு பை, தாம்பூல பை, மளிகை சரக்கு வாங்கும் பிக் ஷாப்பர் பை என பல வகையான பைகளை தயாரிக்கலாம் அதோடு கூட மொபைல் பவுச், டேபிள் மேட், தோரணம்  ஆகியவற்றையும் சணல் மூலம் தயாரிக்கலாம் என கூறுகிறார் மடிப்பக்கத்தை சேர்ந்த கிரிஜா அவர்கள். மூல பொருட்களுக்கு 2000 மற்றும் இயந்திரத்திற்கு 8000 ரூபாய் என மொத்தமாக 10000 முதலீடாக போட்டு வீட்டிலிருந்த படியே தொழில் செய்யலாம் என்கிறார்.
 11) மசாலா தயாரிப்பு வியாபாரம்:

மத்திய அரசின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மசாலா தயாரிப்பு தொழிலை கற்று கொண்டு இன்று சிக்கன் மசாலா, மட்டன் மசாலா, குருமா மசாலா, பிரியாணி மசாலா, சாம்பார் பொடி, ரச பொடி, அடை மிக்ஸ், ரவா தோசை மிக்ஸ், தேங்காய் சாத பொடி, தக்காளி குழம்பு, வத்த குழம்பு  என்று பல்வேறு வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் திண்டுக்கல்லை சேர்ந்த சித்ரா அவர்கள், தொடர்புக்கு 95241-35003.


12) ஊறுகாய் வியாபாரம்:

கடந்த 18 வருடங்களாக பாகற்காய், நார்த்தங்காய், இஞ்சி, நெல்லிக்காய், வெஜிடபிள் மிக்ஸ், கருவேப்பிலை, புதினா, வடுமாங்காய், எலுமிச்சை ஊறுகாய் என 35 வகையான ஊறுகாய்களை செய்து விற்று வருகிறார் மதுரை ஆண்டிபட்டியை சேர்ந்த லட்சுமி, மீனாஸ் ஊறுகையின் நிறுவனரும் இவரே.



13) நட்ஸ் அண்ட் ட்ரை ப்ரூட்ஸ் வியாபாரம்: (Nuts and Dry Fruits Business)

மேல்தட்டு, நடுத்தர மக்கள் பிறர் வீடுகளுக்கோ, விசேஷங்களுக்கோ செல்லும் போது தரமான பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை மற்றும் அத்தி, பேரீச்சை போன்றவற்றை சாக்லேட்டுடனோ  அல்லது தனியாகவோ பேக் செய்ததைத்தான் வாங்கி செல்கின்றனர் அதனால் திட்டமிட்டு உழைத்தால் நல்ல வருமானம் பெறலாம் என்கிறார் பவானிதேவி அவர்கள்.

14) ஜவுளி வியாபாரம்:

கண்ணை கவரும் டிசைன், விளம்பரம், ஏஸியுடன் கூடிய அடுக்கு மாடி துணிக்கடைகள் இருக்கும் இந்த காலத்திலும் கடந்த 15 வருடங்களாக வீடு வீடாக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார் பழைய வண்ணார பேட்டையை சேர்ந்த ராணி அவர்கள். ப்ளவுஸ் பிட், சேலை, உள்பாவாடை, வேட்டி, சட்டைகளை முதலில் விற்க ஆரம்பித்திருக்கிறார், துணியின் தரத்தினாலும் இவரது அணுகுமுறையினாலும் இன்று சென்னை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ள இவருக்கு மகன்களும், மருமகள்களும் வியாபாரத்தில் உதவுகின்றனர்.


15) தேனீ வளர்ப்பு:

"வீட்டிற்கு ஒரு தேனீ பெட்டி, குடும்பத்திற்கு ஆயுள் கெட்டி"ங்கிற அடிப்படையோட திருமதி ஜோஸ்பின் அவர்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள்ல, தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சியை வழங்குறாங்க. தொடர்புக்கு...மதுரை கடச்சனேந்தல் விபிஸ் இயற்கை பண்ணை, 98655 55047.



** முதலில் நமக்கு ஆர்வம் உள்ள தொழிலை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
** அதில் பயிற்சி பெற்று நம் மீதான நமது நம்பிக்கையை உயர்த்த வேண்டும்.
** நம் குடும்பத்தினர், நண்பர்கள், அண்டை வீட்டுகாரர்கள், உறவினர்கள் இவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
** பின் லாப நோக்கம் பாராமல் சிறிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும்.
** பின்னூட்டங்களை பெற்று குறை இருப்பின் நிவர்த்தி செய்து தொழிலை விரிவாக்க வேண்டும்.
** தொழில் வளர நமது நேரடி கண்காணிப்பும், தரமும், பொறுமையும் அவசியம்.
** பிறகு பணம் நாம் கேட்காமலேயே நம்மிடம் வரும். 

வியாபார நோக்கமின்றி திருப்திக்காக சில வேலைகள்:

1) கோலம் வரைதல்: 

25 ஆண்டுகளில் 10 ஆயிரம் வகை கோலங்கள் போட்டு, கோலத்திற்க்காக கலைமாமணி விருது வாங்கியிருக்கிறார் மாலதி அவர்கள். கல் உப்பு, தூள் உப்பு, மரத்தூள், நவதானியம், அரிசி, கலர் வத்தல், மணி, முத்து, மணல், கற்பூரம் போன்ற நம் வீட்டில் கிடைக்க கூடிய எளிமையான பொருட்களை பயன்படுத்தியே புதுமையான கோலம் போடலாம் என்கிறார் இவர். பிரெஞ் சாக் பவுடர் பயன்படுத்தி தண்ணீருக்கு அடியிலும், தண்ணீருக்கு மேலும் கோலம் போடலாமாம். திருமணங்களில் மணமக்களின் புகைப்படத்தை தத்ரூபமாக வரைவாராம் இவர், அதனாலேயே பத்திரிக்கையில் கூட "மாலதியின் மணமக்கள் கோலம்" என்று போடும் அளவிற்கு பிரபலம் இவர். லலிதா கலை பயிற்சி வகுப்பு மூலமாக கோலம் வகுப்பு எடுத்து வரும் இவரின் லட்சியம் கோலத்தில் கின்னஸ் சாதனை செய்வதுதானாம்.


2) மாடி தோட்டம்/ வீட்டு தோட்டம் :

2 அடி நிலத்தில் ஒரு சவாலாக செடி வளர்க்க ஆரம்பித்து இன்று 20 சென்ட் நிலத்தில் புடலை, சுரைக்காய், பரங்கிக்காய், வெண்டைக்காய், கொத்தவரை, தக்காளி, மிளகாய், சோளம், 20 வகை கீரைகள் ஆகியவற்றை இயற்க்கை வேளாண் முறையில் வளர்த்து இயற்க்கை அங்காடிக்கு விற்பனைக்கு கொடுத்தும், தனியே நிலம் வாங்கியும் விவசாயம் செய்து வருகிறார் ஏ.எம். மாலதி அவர்கள். ஒற்றை பயிர் முறையை விட்டு கலப்பு பயிர் வேளாண்மை செய்து வருகிறார் இவர், தொடர்புக்கு 9791072194. (இப்போ நான் விவசாயி : பயிர்களைத் தேடும் பெண் டிடெக்டிவ் )


3) அக்குபஞ்சர் மருத்துவம்:

நாடி பரிசோதனை மூலம் 12 உடல் உள் உறுப்புகளின் நிலையறிந்து தலை முடி தடிமனுடைய ஊசியை கொண்டு உடலின் சக்தி ஓட்டங்களை சரி செய்து நோய் தீர்க்கும் ஒரு மருந்தில்லா மருத்துவமுறையே அக்குபஞ்சர். ஊசிக்கு பதிலாக விரல்களை கொண்டு அழுத்தினால் அது அக்குபிரஷர் மருத்துவம். கோவை, மதுரை, சேலம், காரைக்குடியில் உள்ள சில தனியார் நிலையங்களிலும் மற்றும் சில பல்கலைக்கழகங்களிலும் படித்து இந்த மருத்துவ முறையை நாம் மேற்கொள்ளலாம். மருத்துவர் பஸ்லூர் ரஹ்மான் அவர்கள் வெளியிடும்  "ஹெல்த் டைம்" பத்திரிக்கையில் மேலும் விபரங்களை பெறலாம். 


மேலும் சில இணைப்புகள்:

1) http://owenbusiness.blogspot.in/2015/08/20.html 
2) http://thozhil.paramprojects.com/node/15 
3) குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தொழில்கள்!
4)வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்   
5) லாபம் தரும் பேப்பர் பை தயாரிப்பு தொழில்! Paper Bag  
6) http://siruthozhilgal.blogspot.in/ 
7) Entrepreneurship Development Institute (EDI)
8) தேனீ 
 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...