Wednesday, 19 December 2018

தொழிலில் ஜெயிக்கலாம் - பாரதிய யுவசக்தி டிரஸ்ட் (BYST) வழி காட்டுகிறது

'பாரதிய யுவசக்தி டிரஸ்ட்' நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரும், முன்னாள் ஜனாதிபதி, ஆர்.வெங்கட்ராமனின் மகளுமான, லட்சுமி வெங்கடேசன்: கடந்த, 1990ல், அப்பாவுடன், அமெரிக்கா போனபோது, ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், வேல்ஸ் இளவரசருமான சார்லசைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை தேடிக் கண்டுபிடித்து தொழிலதிபர்களாக்கும் அவருடைய முயற்சி, என்னை கவர்ந்தது. வேலையை விட்டு, அதே மாதிரியான திட்டத்தை ஆரம்பிக்க நினைத்தேன். என் யோசனையை, ஜே.ஆர்.டி., டாட்டாவிடம் கொடுத்தேன். வழிகாட்டியாகவும், நிறுவன தலைவராகவும் இருக்க அவர் சம்மதிக்க, 1992ல், Bharatiya Yuva Shakti Trust (BYST) ஆரம்பமானது.

அதாவது, 18 - 35 வயது இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும்போது, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போய்விடும். சிறுதொழில் ஆரம்பிக்கவும், வங்கியில் கடன் வாங்கவும் ஏகப்பட்ட கெடுபிடிகள்  உள்ளது. பெண்கள் நிலை இன்னும் மோசம். BYST  மூலமாக, கிராமம், சிறுநகரங்களுக்குச் சென்று, சிறுதொழில் செய்ய நினைப்பவர்களை கண்டுபிடிக்கிறோம். சாதாரண கைவினைப் பொருள் தயாரிப்போ, அதிநவீன தொழில்நுட்பம் தேவைப்படும் பிசினசோ செய்ய அவர்கள் முற்பட்டால், அவர்களுடைய யோசனைகளை வரவேற்கிறோம். சொத்து இருக்க வேண்டியதில்லை, செக்யூரிட்டி தேவையில்லை. பயிற்சி கொடுப்பதில் துவங்கி, வங்கிக் கடன் வாங்கித் தருவது, ஆலோசனை, வழிகாட்டுவது என, அனைத்தையும் செய்கிறோம்.  

தொழிலதிபர்களை உருவாக்கும் இத்திட்டத்தின் முதுகெலும்புகளே, வழிகாட்டிகள் தான். அப்படிப்பட்டவர்களை, பெரிய நிறுவனங்கள், தொழிற்பேட்டை, ரோட்டரி, லயன்ஸ் கிளப் அமைப்புகள் என, பல பின்னணியிலிருந்து தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவோம். வருங்கால தொழிலதிபர்களுக்கு வழிகாட்டப் போகும் அவர்களுக்கும், 'ட்ரெயினிங் ஆப் தி ட்ரெயினர்ஸ்' என்ற பெயரில், பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ தொழில் ஆரம்பித்த பிறகும், இரண்டு ஆண்டுகளுக்கு வழிகாட்டிகளின் ஆதரவு தொடரும்.

எங்கள் முயற்சியால், ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் உருவாகி, அவர்கள் வாயிலாக, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 42 நாடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். 'தொழிலில் ஜெயிக்க, பெரிய பின்புலம் தேவை' என்ற கருத்தை உடைப்பதே, எங்கள் நோக்கம். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வரும் ஆண், பெண் கூட, தொழிலதிபர் ஆகலாம்; அவர்கள், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம் என, நிரூபித்து வருகிறோம்.
--தினமலர் நாளிதழிலிருந்து

2 comments:

  1. இதற்க்கு எப்படி விண்ணப்பிப்பது சார்

    ReplyDelete
    Replies
    1. சாய் கணபதி அவர்களே வருக,
      எப்படி விண்ணபிப்பது என்று தெரியவில்லை....இருந்தாலும் இதை முயற்சி செய்து பாருங்கள்.

      என்ன தொழில் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொண்டு கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு பாருங்கள்.

      Bharatiya Yuva Shakti Trust
      C/o, Confederation of Indian Industry (CII)
      98/1, Velachery Main Road,Guindy,Chennai - 600042
      Tel : 044-42444521 (AVK) e-mail: byst.chennai@cii.in
      Contact Person: Mr. Anbazhagan K

      Delete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...