Sunday, 21 January 2018

வேலை செய்து வந்தால்.....

திருச்சி, எடமலைப்பட்டி புதுாரில், மாடி தோட்டம் அமைத்து பராமரித்து வரும், 91 வயது பாட்டி, ஜெயலட்சுமி: என் கணவர், இறந்து விட்டார். எங்களுக்கு ஐந்து பெண், இரண்டு ஆண் குழந்தைகள். நாலாவது தலைமுறையை பார்த்து விட்ட நான், ஐந்தாவது மகள் வீட்டில் வசித்து வருகிறேன்.மாடித்தோட்டம் அமைத்து நாலைந்து ஆண்டுகளாகிறது. எந்த விதையை கேட்டாலும் பிள்ளைகள், மறக்காமல் வாங்கி தந்து விடுவர்.

மாடித்தோட்டம்: எனக்கு ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார பிடிக்காது. அந்த உழைப்பு தான், இந்த வயதிலும் மாடித்தோட்டம் போட வைத்துள்ளது.
பெயின்ட் வாளி, பழைய பிளாஸ்டிக் வாளிகளில், செம்மண், மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் போட்டு, இயற்கை உரக் காய்கறி தொட்டிகளை தயார் செய்து கொள்வேன். முதலில் காய்கறி, பூச்செடி விதைகளை போட்டு நாற்று உருவாக்கி, இயற்கை உரக் காய்கறி தொட்டிகளில் அவற்றை நட்டு, இரண்டு வேளையும் தண்ணீர்
ஊற்றுவேன்.

செடி வகைகள்: பாகல், பீர்க்கை, புடலை, அவரை கொடி, வெண்டை, தக்காளி, கத்திரிக்காய், வெள்ளை முள்ளங்கி, கொத்தவரங்காய், கீரை வகைகளும் உள்ளன. எனக்கும், என் மகளுக்கும் போக மீதியை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தந்து விடுவேன்.
மூலிகைகளில் துளசி, துாதுவளை, பிரண்டை, சிறியாநங்கை, கீழாநெல்லி, திருநீற்றுப்பச்சிலை, ஓமவல்லி வளர்த்து வருகிறேன்.
  • துளசி, துாதுவளை, சளிக்கு நல்லது. 
  • சிறியாநங்கை இலையை தினசரி மென்று வந்தாலே, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். 
  • கீழாநெல்லி, மஞ்சள் காமாலை நோய்க்கு கைக்கண்ட மருந்து. 
  •  திருநீற்றுப் பச்சிலை, கொய்யா இலை, குப்பைமேனி மூன்றையும் அரைத்து, தோல் பிரச்னை உள்ள இடங்களில் தேய்த்தால், பிரச்னை நீங்கும்.
  • அடுக்கு நந்தியாவட்டை பூவை விளக்கெண்ணை விட்டு வதக்கி, வெள்ளை துணியில் கட்டி, கண்ணில் ஒற்றி எடுத்தால், கண்களுக்கு குளிர்ச்சி. சுமங்கலிகள் யாராவது வீட்டுக்கு வந்தால், வெற்றிலை கொடியிலிருந்து பறித்து, தாம்பூலம் தந்து அனுப்புவோம்.
உணவு பழக்கம்:
6:00 மணிக்கு காப்பி;
8:00 மணிக்கு, வாரத்தில் இரண்டு நாள் பழச்சாறு, ஒரு நாள் பயத்தம்பயறு கஞ்சி, ஒரு நாள் வெந்தயக்கஞ்சி, இரண்டு நாள் ஏதேனும் மூலிகை சூப், ஞாயிற்றுக்கிழமை நிலவேம்பு கஷாயம் அல்லது மிளகு கஷாயம்.
10:30மணிக்கு சாப்பாடு;
2:00மணிக்கு இரண்டு இட்லி அல்லது பழம்;
5:30 மணிக்கு ஒரு டம்ளர் ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட்;
7:30 மணிக்கு இரவு உணவு; இதுதான், என் உணவுக் கட்டுப்பாடு.
துாங்கி நேரத்தை வீணாக்காமல், வேலை செய்து வந்தால், எந்த நோயும் வராது. உடம்பும் உடற்பயிற்சி செய்தது போல் ஆரோக்கியமாக இருக்கும்.

--தினமலர் நாளிதழிலிருந்து.

ஏன் உழைக்க வேண்டும்? என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுத நினைத்துள்ளேன், இந்த கேள்விக்கான தங்களின் பதிலை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே ........


கவனம் பெற்றவை

மின்னஞ்சலில் பெற