Thursday 15 November 2012

தலைமலை பயண அனுபவம்: 1

தலைமலை, நாமக்கல் -- துறையூர் சாலையில் உள்ள பவுத்திரம் என்ற ஊரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு  மலை. மலையின் உச்சியில் பெருமாள் கோவில் உள்ளது, மலைக்கு முசிறியிலிருந்தும் செல்லலாம்.

வேண்டுதல்: பயணம் என்றாலே மனம்  லேசாகி பறக்கத் துவங்கிவிடும், மலைகளுக்கு பயணம் என்றால் மகிழ்ச்சியை கேட்கவாவேண்டும் 🙋🙋🙋🙋🙋🙋. உயர்ந்த மரங்கள், எங்கும் பச்சை மயமான செடிகொடிகள், பறவைகளின் இதமான வரவேற்ப்புகள், மலைகளில் தவழும் அமைதி........இந்த பயணம்  சுற்றுலா அல்ல, வருடந்தோறும் புரட்டாசி மாதத்தில் ஏதாவது ஒரு சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம், அந்த வகையில் இது கோவில் பயணம். முன்பெல்லாம் புரட்டாசி துவங்கும் முன்பாக மழை பொழிந்து எங்கும் பசுமையாக காட்சியளிக்கும், இப்பொழுதோ ஆவணி மாதம் மழை பொழிவதே அரிதாகிவிட்டது. அண்ணனுக்கு வேலை கிடைத்துவிட்டது எனவே வேண்டுதலின் பெயரில் கோவிலுக்கு செல்கிறோம் என்பது பயணத்திற்கு,  கூடுதல் சிறப்பு.


              (Source:http://www.gconnect.in/guestarticles/thalaimalai-hills-unseen-serene-beauty-of-nature.html,Mr.R.Rakesh)
              
புறப்பாடு: எனது ஊர் காளிபட்டி, துறையூரிலிருந்து  திருச்சி செல்லும் வழியில் 5 கிமீ தொலைவில் உள்ளது. முதல் நாள் இறவே மலைக்கு செல்வோர் அனைவரும் துறையூரிலிருக்கும் மாமா வீட்டிற்கு வந்துவிட்டோம். புரட்டாசி 8ஆம் தேதி(24.9.2005) அதிகாலை 4.45 மணிக்கு  வாடகை காரில்  புறப்பட்டு பவித்திரம் வழியாக தலைமலை அடிவாரத்தை 6.15 மணிக்கு  சென்றடைந்தோம்.  நன்றாக விடிந்தும், மக்கள் நடமாட்டம் மிகுந்தும் இருந்தது அடிவாரம். வழக்கமாக அமைதியாக இருக்கும் இடம் இது, இன்று நகர சந்தை போல் இருந்தது. ஏனெனில்  சுற்று வட்டார மக்கள் மலை சென்று வந்துதான் விரதம் விடுவார்கள், வெயில் ஏறும் முன் வீடு திரும்பிவிடுவார்கள் அதனால்தான் முற்பகலில் கூட்டம் அதிகம். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் மக்கள் அதிகம் வருவதால் மலையடிவாரத்தில் நிறைய கடைகள் வந்துவிடும். கொய்யாபழம், பூஜைபொருட்கள், பூமாலை கடைகள், அன்னதான கூடம்  என கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஆக்கிரமிப்பு நடந்து விடும். சரி நாம் பயணத்தை தொடருவோமா............................

கோவிந்தா .... கோவிந்தா .... என்று  ஆளுக்கு ஒரு முறை கோவிந்தனை வழித்  துணைக்கு அழைத்துவிட்டு ஏற ஆரம்பித்தோம். (இன்றைக்கெல்லாம் கோவிந்தா கோவிந்தா  என்றாலே அதன் அர்த்தம் மாறிவிட்டதை நினைத்தால் வேதனையாக உள்ளது. பாகவதத்தில் படித்த ஞாபகம், பகவானும்  அவரது நாமமும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றே. ஒரு முறை எங்கேனும் எப்போதேனும் இன்பத்திலோ  அல்லது துன்பத்திலோ கண்களை மூடிக்கொண்டு  ஆத்மார்த்தமாக கோவிந்தா.. கோவிந்தா...(இஷ்ட தெய்வத்தின் பெயரை) என்று சொல்லி பாருங்கள் அதன் இன்பம் புரியும், ஏன் இப்பொழுதே சொல்லி பாருங்களேன்! நல்ல விஷயத்தை ஏன்  தள்ளிபோடுவனேன். இவ்வளவு ஏன்  உங்க நண்பர்களையோ, உறவுகாரங்களையோ ஒரு முறை அழுத்தம் திருத்தமாக முழு பெயரைச் சொல்லி கூப்பிட்டு பாருங்க........ அட கூப்பிட்டுதான் பாருங்களேன்)

மலை ஏற்றம்: மலைக்கு வந்து முடி எடுத்து பொங்கல்  வைத்து படைப்பதாக  வேண்டுதல்; ஆதலால்  எடுத்துச்  செல்ல நிறைய பொருட்கள் இருந்தது. எங்கள் அனைவருக்கும் முன்னால் பூஜைக்கு தேவையான தேங்காய், வாழைபழம், வெற்றிலை, பத்தி, சூடம்  நிறைந்த  பையை கையில் வைத்து மலை ஏறிக் கொண்டிருந்தார் மாமா. வெண்கல பாணை, அரிசியை எடுத்துக்கொண்டு நானும் அண்ணனும் பேசிக்கொண்டே (ஒரே கல்லூரியில் படித்ததால் கல்லூரியை பற்றி பேச்சு) மெதுவாக ஏறிகொண்டிருந்தோம். அண்டைவீட்டுகாரர் ஒருவரும் வந்திருந்தார். அவர் கட்டுசோறு (திருக்கோடி போடுவதால் இரவு வரை தங்க நேரிடும்) பையை எடுத்துகொண்டு எங்கள் பின்னால் வந்துக்கொண்டிருந்தார். (கிராமங்களில் பக்கத்துக்கு வீட்டில் வசிப்பவர்கள்,  இது போன்ற வேண்டுதல்கள், திருவிழா சமயங்கள், சடங்குகள் போன்றவற்றில் வந்து இருந்து உதவியாய் இருப்பார்கள்). அவருக்கும் பின்னால் பெரியப்பா திருக்கோடி (பெரிய்ய விளக்கு) போடுவதற்கான நெய், துண்டு மற்றும் தண்ணீரையும், பெரிம்மாவையும், அத்தையையும்  கூட்டிகொண்டு வந்துகொண்டிருந்தார்.


ஒரு குரல்: ஏற தொடங்கியபோது மலைஅடிவாரத்தில் நிழலாய் இருந்தது, மலை உச்சியில் காலை இளங்கதிரவனின் சூரிய கதிர்கள் விழுந்து வெள்ளமென பாய்ந்து அடிவாரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த ரம்மியமான காலை அழகை சிறிது பிடித்து வைக்கலாமென பையை தேடினேன், அப்பொழுதுதான் தெரிந்தது நிழற்பட கருவி இல்லையென, அடடா இவ்வளவு பாக்கியசாலியா  நீ, இறைவன் ஞாபக மறதியை அள்ளிகொடுத்திருக்கிறார் என்று பெருமையாக சங்கடப்பட்டுக்கொண்டு, இயற்கை அழகை கண்களால் கைது செய்துகொண்டே ஏற்றத்தை தொடர்ந்தேன். இந்த நினைவில் இருந்து என்னை வலிய இழுக்கும் ஒரு குரல் கேட்டது, நிமிர்ந்து பார்த்தால் 70 வயது மிக்க முதியவர், மலையிலிருந்து கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக்கொண்டு கையில் ஒரு தடியுடன் மெதுவாக இறங்கிகொண்டிருந்தார்.

எல்லாம் அவன் செயல்: சில சமயங்களில் நாம் எதிபாராத செயல்கள் எல்லாம் நடக்கும், அப்படி நடந்தவர் தான்  அந்த முதியவர், அவர் எவ்வாறு மலை ஏறினார் என்பது அதைவிட ஆச்சர்யம்⁈. "இந்த உலகத்தில் எல்லாமே இறைவன் செயல் தான்,  நம் செயலாவது யாதொன்றுமில்லை" இது முழுக்க முழுக்க நான் உணர்ந்தது. நம்முடைய செயல்னு பார்த்தால் ஒன்னே ஒன்னுதான்  அது,  "எல்லாம் இறைவன் செயல்" என்ற தெளிவை பெறுவது.  இந்த தெளிவு சாதரணமா வராது, வந்தா போகாது. ஆமாங்க உலகத்துல நாம அதிசயம், ரகசியம்னு தேடுவதெல்லாம் மிகவும் எளிய உண்மைகள் தான். அட உண்மைகள் தான் எளியது, மலை பாதை ரொம்ப கரடுமுரடானது ஏறலாம் வாங்க......-----%^****~~~¬¬¬¬?_.......

மலைப்பாதை: மலைக்கு வாகனத்தில் செல்ல முடியாது, செல்வதற்கான சாலையும் கிடையாது. அடிவாரத்திலிருந்து ஒரு 500 மீட்டர் தூரம் வரை ஏறுவதில் சிரமம் தெரியாது. அதன் பின்தான் பாதை ஒரு ஒழுங்குடன் இருக்காது, மழை காலத்தில வர்ற  காற்றாற்று பாதைதான் சில இடங்களில் நடை பாதையாக இருக்கும். மேல போக போக பாதையோட அகலம் குறைந்து ஒரு இடத்துல  ஒத்தையடி தடமாவே மாறிடுச்சி. கையில சாமான்கள் இருந்ததால கைகள்லாம் வலிக்க ஆரம்பிச்சிடுச்சு, அதற்குள் இராமர் தீர்த்தம் என்ற இடம் வந்திருந்தோம், மணி 7.15. அந்த இடத்தில் 4, 5 கடைகள் இருந்தது அங்கு மல்லிகாபி வாங்கி தொண்டைய நனச்சிகிட்டு அந்த ருசியோட மறுபடியும் பயணத்தை தொடர்ந்து சென்றோம். மெல்ல மெல்ல ஏறி 8.30 மணிக்கு மண்டப பகுதிக்கு வந்தோம். அந்த இடத்தில ஒரு குளம் இருக்கிறது அதைச் சுற்றிய மண்டபம் தான் அது. எங்களுக்கு முன்பே  வந்து அங்கு அமர்ந்து இளைப்பாறி கொண்டிருந்தார் மாமா.   நடந்து மலை ஏறியதால் கண்ணீர் விட்ட உடலுக்கு    முதல் நாள் பெய்த மழை, காலை நேரத்து ஈரம், மலையின் குளிர், தென்றலின் குளிர்ச்சி அனைத்தும்   ஆறுதல்  கூறிகொண்டிருந்தது. அன்போடு  தடவி கொடுக்க கொடுக்க படுத்திருக்கும் நாய் போல, சட்டையை கழற்றிவிட்டு தென்றலின் வருடலுக்கு உடலை கொடுத்திருந்தேன். கஷ்டப்பட்டு ஏறி வந்ததுக்கு அந்த காற்று அப்படி ஒரு சுகமாக இருந்தது.

                                      (புல்லாங்குழல் இசை)

குளம்: தலைமலைக்கு மூன்று ஊர்களிலிருந்து (பவித்திரம், மேய்க்கல்நாயக்கன்பட்டி, முட்டாஞ்செட்டி) ஏறுவதற்கு வழி உள்ளது. இந்த மூன்று பாதைகளும் அந்த குளத்தினருகில் ஒன்று கூடும், அங்கிருந்து கோவிலுக்கு ஒரே பதைதான். தலைமலை மூலஸ்தான கட்டிடம் மற்றும் குளத்திலிருந்து மூலஸ்தானம் வரை உள்ள படிகள் அனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டவை. கற்களை அந்த மலையில் இருந்த பறையில் இருந்தே எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில், அவ்வளவு  உயரத்தில்  மலையில் பெரிய குளம் ஒன்று உள்ளது. அந்த குளம், கற்களை வெட்டி எடுத்த பின் உருவானது போல் தோற்றமளிக்கிறது. அதில் தேங்கி உள்ள தண்ணீர் பச்சை நிறத்தில் இருக்கும். மழை காலத்தில் குளத்திற்கு தண்ணீர்  வர வழி உள்ளது ஆனால் வெளியேற வழி இல்லை. மலையுச்சியில் அந்த குளத்து தண்ணீரை தவிர பயன்படுத்துவதற்கு வேறு நீராதாரங்கள் இல்லை. அடிவாரத்திற்க்கும் மலைஉசிக்கும் நடுவில் ராமர் தீர்த்தம் உள்ளது, அங்கும் பச்சை நிற நீரே காணப்படும், அது இயற்கையாகவே உள்ள பறை பள்ளத்தில் தேங்கும் நீர்.

மொட்டை: சிறிது நேர இளைப்பாறளுக்குப் பின் அண்ணனிற்கு மொட்டை அடிப்பதற்க்காக இருவரும் சென்றுவிட்டோம். மொட்டையடித்த பின் அந்த குளத்தில் தான் குளிக்க முடியும். ஒருவர் இறங்கும் அளவிற்கு சிறிய படிகள் உண்டு, அதில் இறங்கி நான் தண்ணீர் எடுத்து கொடுக்க, பெரியப்பா உதவியில் அண்ணனின் மொட்டை குளியல் முடிந்தது. குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் நிறைய கடைகள் இருக்கும் அதில் பூஜை பொருட்கள், தின்பண்டங்கள், பழங்கள், சந்தனம், தேநீர் என அனைத்தும் கிடைக்கும். கடை வைக்க பொருட்களை கீழிருந்து  சுமந்துதான் எடுத்துவர முடியும். புரட்டாசி மாதத்தில் மட்டும் மலையை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு இது ஒரு வகை வருமானம்.

 தொடர்வோம்.........

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...