Friday, 30 March 2018

சைக்கிள் உழவு கருவி

சைக்கிள் உழவு கருவி குறித்து கூறும், மானாவாரி விவசாயம் செய்து வரும், முனியசாமி: விருதுநகர் மாவட்டம், தெற்கு ஆனைக்குட்டம் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கல்லுாரி படிப்பை முடித்து, சென்னை, துணிக்கடையில் மேனேஜராக வேலை பார்த்தேன். அப்போது, வேலை இல்லாத சமயங்களில், இன்டர்நெட்டில் தகவல் தேடுவேன்.இப்படி, இன்டர்நெட் வீடியோக்களை பார்த்து, இயற்கை விவசாயம் மீது ஆர்வம் வரவே, வேலையை விட்டு, பண்ணையில் தங்கி பயிற்சி எடுத்தேன்.

அப்போது, சிவகாசியில் இருக்கும் இயற்கை விவசாய அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டு, அந்த விவசாயிகளிடம் பேசினேன். அவர்கள், மாதிரி பண்ணைக்கு அழைத்துச் சென்றனர்.அந்த பண்ணையிலேயே பராமரிப்பு வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் அறிமுகமான நண்பர் ஒருவர், அவரின் இந்த, 1 ஏக்கர் நிலத்தை மட்டும் எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார். அதில் தான், மானாவாரி விவசாயம் செய்து வருகிறேன். இது, மணல்சாரியான கரிசல் மண். போன போகத்தில், இயற்கை முறையில் குதிரைவாலி சாகுபடி செய்தோம். இந்தாண்டு, துவரை, தட்டை, இருங்குச் சோளம், குதிரைவாலி என, நான்கு பயிர்களை, சைக்கிள் உழவுக் கருவியை பயன்படுத்தி, விதைத்தேன். விதைப்போடு களை எடுத்தல், மண் அணைத்தல் என, மற்ற வேலைகளையும் செய்து கொண்டேன்.

 இந்த கருவி மூலமாக உழவு, களை எடுப்பு இரண்டும் சேர்த்து, 1 ஏக்கருக்கு, 4,000 ரூபாய் மிச்சமானது. இந்த கருவியை உருவாக்க, பழைய சைக்கிளில் பின்பக்க வீல், பெடல், செயின் பாக்ஸ் ஆகியவற்றை எடுத்துவிட்டு, பெடல் இருந்த இடத்தில், ஒரு இரும்புப் பட்டையை வெல்டிங் மூலம் இணைக்க வேண்டும்.அதில் கொழுவை, போல்ட், நட் வைத்து இணைக்க வேண்டும். தேவைக்கேற்ப இரண்டு, மூன்று கொழுக்கள் கூட செய்து வைத்துக் கொள்ளலாம்.களை எடுக்க, நான்கு பல் கொண்ட கருவியை செய்து வைத்துக் கொள்ளலாம். உழவுக்கும், விதைப்புக்கும் ஒற்றை கொழுவை பயன்படுத்த வேண்டும். சீட் இருந்த இடத்தில் கைப்பிடியைப் பொருத்தி, சைக்கிளை முன்னோக்கி தள்ளும்போது, டயர் சுழல சுழல, கொழு மண்ணை கிளறிவிடும்.

சாதாரணமாக, அரை அடி ஆழமும், மண் பதமானதாக இருந்தால், முக்கால் அடி வரையும் கொழு இறங்கும். இக்கருவி மூலம் களை எடுக்கும்போது, களைகள் வேரோடு வந்து விடுகின்றன.தெரிந்த விவசாயி களிடம் விதை வாங்கினால் தரமாக இருக்கும் என நம்பி, பலரும் வாங்குகின்றனர். ஏதாவது ஒரு பயிர் கை கொடுக்கும் என நினைத்து தான், நான்கு பயிரை கலந்து போட்டேன். ஆனால், நான்குமே நன்றாக விளைந்துள்ளன.தொடர்புக்கு: 9655051239.

--தினமலர் நாளிதழிலிருந்து

சைக்கிள் உழவு கருவி - பசுமை தமிழகம் விவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்

Wednesday, 28 March 2018

வட்டமலை பாக்கியலட்சுமி பாட்டி...


தொன்னுாறு வயது ஏழை பாட்டி ஒருவர் எந்தவித எதர்பார்ப்பும் இல்லாமல் கடந்த பல வருடங்களாக வளர்த்த நுாற்றுக்கணக்கான மரங்களால் இன்று ரசும் மக்களும் பயன் அடைந்துவருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து 46 கிலோமீட்டர் பயணம் செய்தால் காங்கேயம் வரும், காங்கேயத்தில் இருந்து பழனி போகும் பாதையில் எட்டாவது கிலோமீட்டரில் இருக்கிறது வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில். இங்கு சென்றால் அவசியம் தரிசிக்கவேண்டியவர்கள் இரண்டு பேர் ஒன்று முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அருள்புரியும் முருகன் இரண்டாவது பாக்கியலட்சுமி என்ற 90 வயது பாட்டி.

  
ஏழு வயதில் திக்கு தெரியாமல் எப்படியோ இங்கு வந்து சேர்ந்த இவருக்கு உலகமே இந்த வட்டமலைதான். கோவிலை கூட்டி சுத்தம் செய்து பக்தர்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் தரும் பணத்தில் சாப்பிட்டு வருகிறார்.கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இதுதான் நடக்கிறது, யாரிடமும் போய் கேட்கமாட்டார் , தாமாகவே கொண்டுவந்து கொடுத்தால் மறுக்கமாட்டார். இந்த நிலையில்தான் ஐம்பது அறுபது வருடத்திற்கு முன் கோவில் பக்கத்தில் உள்ள ஒடையில் இருந்து தண்ணீர் எடுத்துவரும் போது கூடவே ஒரு செடியும் குடத்துடன் வர அதை அந்த கரையிலேயே நட்டுவிட்டுவந்தார். சில நாட்கள் கழித்து ஒடைப்பக்கம் வந்த போது,' ..பாக்யா என்னைப்பாரேன்' என்பது போல அந்த செடி செழித்து வளர்ந்து அழைத்தது. அதுவரை சொந்த பந்தம் என்று எதுவும் இல்லாதிருந்த பாக்கியாவிற்கு அந்த செடி ஏதோ தான் பெற்ற பிள்ளை போல தெரிய அதன் பக்கத்தில் போய் உட்கார்ந்து தடவிக்கொடுத்தார், சிறிது நேரம் கண்ணீர் விட்டார் பின்னர் தொடர்ந்து தண்ணீர் விட்டார்.

அந்த செடியின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியும் பாக்கியாவிற்கு மகிழ்ச்சி தர அதைப்போலவே இன்னும் பல செடிகளை விதைகளை கொண்டுவந்து அந்த பகுதியெங்கும் வளர்த்தார். எப்படி வளர்க்கணும் எந்த மரத்திற்கு எவ்வளவு குழி வெட்டணும் எப்படி உரம் போடணும் என்று எதுவுமே தெரியாது அவ்வளவு ஏன் நட்டுவைத்த செடிகூட என்ன செடி என்று தெரியாது, கிடைச்ச இடத்தில் செடியை நடணும் விடாம தண்ணீர் ஊற்றணும் இது மட்டுமே தெரிந்திருந்து, பாட்டியின் அன்பும் அந்த செடிகளுக்கு புரிந்திருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு செடியும் வேப்பமரம், இலுப்பைமரம், புளியமரமாக நன்கு வளர்ந்தது. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல நுாற்றுக்கும் அதிகமான மரங்கள் வனப்புடன் வளர்ந்துள்ளது. வட்டமலை பகுதியை பசுஞ்சோலையாக்கி வைத்துள்ள இந்த மரங்களின் நிழலில்தான் இப்போது கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் இளைப்பாறி களைப்பு நீங்க பெறுகிறார்கள்.

புளியமரத்தில் இருந்து விழும் புளியங்காயை பொறுக்கியெடுப்பதன் மூலம் சொற்ப வருமானம் கிடைத்து வந்தது பின்னர் அரசாங்கம் அந்த மரத்திற்கு எல்லாம் எண் போட்டு அரசுக்கு சொந்தமாக்கிவிட்டதால் இப்போது புளியமரத்து பலன் மட்டுமல்ல எந்த மரத்தின் பலனும் பாட்டிக்கு கிடையாது.
ஆனால் அதைப்பற்றி இவருக்கு சிறிதும் கவலை இல்லை எம் பிள்ளை(மரம்) எனக்கு வருமானம் தந்திட்டு இருந்தான், இப்ப அரசாங்கத்திற்கே வருமானம் தர்ரான் சந்தோஷம்தான் என்கிறார் சிரிப்பு குறையாமல். பிள்ளை என்றதும் நினைவு வருகிறது குடும்பம் சொந்த பந்தம் என்று கேட்டபோது எல்லாமே இதுங்கதான் என்று கைகாட்டுகிறார், அவர் கைகாட்டிய திசையில் அவர் வளர்த்த மரங்கள் இவர் சொல்வதை ஆமோதிப்பது போல இலை கிளை அசைக்கின்றன.

தற்போது கோவில் நிர்வாகம் சாமான்கள் போட்டுவைக்கும் அறையில் சாமான்களோடு சாமான்களாக வாழ்ந்துவரும் இவர் மரங்களின் மீது கொண்ட பாசம் காரணமாக அவைகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய நேசம் காரணம் வட்டமலையைத்தாண்டி எங்கும் போனதில்லை இனி போகப்போவதும் இல்லை. பொதுப்பார்வையில் இவர் ஒரு அப்பாவி பாட்டியாக தென்படலாம், ஆனால் உண்மையில் மரங்கள் வளர்ப்பு என்பதற்கான நாட்டின் உயர்ந்த விருதை எல்லாம் கொடுத்து இனியும் கையேந்தவிடாமல் கவுரமாக வாழ வழிசெய்யவேண்டும், அது அவருக்கு கவுரவத்தை சேர்க்கும் என்பதற்காக அல்ல நமக்கு புண்ணியத்தை தரும் என்பதால்.

போயிட்டு வர்ரேன் தாயி என்று மரங்களை பெற்ற அந்த மாதரசி மகராசியின் கால்களில் விழுந்து ஆசிபெற்று வரும்போது திரும்பி பார்க்கிறேன், வட்டமலையைவிட வட்டமலையின் மீதுள்ள முத்துக்குமாரசாமி கோபுரத்தைவிட உயரமாக பாக்கியலட்சுமி பாட்டி விசுவரூபமெடுத்து நிற்கிறார்.

(நன்றி:தணிகைச்செல்வி, காங்கேயம் நல்லதம்பி)
-எல்.முருகராஜ்
--தினமலர் நாளிதழிலிருந்து (அக் 02, 2015).

 

Sunday, 18 March 2018

உலர் சலவை முதல் நல வாழ்வு மையம் வரை:

துணிச் சலவை செய்வது முதல், சகலவிதமான பொருட்களை விற்பனை செய்பவரும், தொழில் முனைவோர் விருது பெற்றவருமான, நெய்வேலியைச் சேர்ந்த, வாசுகி வெற்றியரசு: என் மாமனார், 'காலேஜ் டிரை கிளீனர்ஸ்' என்ற கடையை, வேறொருவரிடம் இருந்து வாங்கி நடத்தி வந்தார்.அவருக்குப் பின், என்.எல்.சி.,யில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த என் கணவர், கடையை கவனிக்க ஆரம்பித்தார்; அவருடன் இணைந்து நானும் தொழிலை கற்றேன். சிறு அளவில் இருந்த கடையை, கணவரின் மறைவுக்குப் பின், பெரிதாக விரிவுபடுத்தினேன். இப்போது, சென்னை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி, விருத்தாச்சலம் என, பல மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் துணிகளை கொடுத்து, சலவை செய்து வாங்கி செல்கின்றனர்.

வெள்ளை சட்டைகள், தைத்த போது இருந்த அதே நிறம், ஐந்து ஆண்டுகளானாலும் மிளிர்வது போல் தருவதால், பல ஊர்களின் அரசியல்வாதிகளும், எங்கள் கடையை தேடி வருகின்றனர். சென்னையிலிருந்து வரும் பஸ்சில், காலை யிலேயே துணியை எடுத்து வந்து, மாலைக் குள் துவைத்து, இஸ்திரி போட்டு கொடுத்து விடுவோம்.

சலவையகத்தோடு நின்று விடாமல், 'கல்லுாரி நல வாழ்வு நிலையம்' என்ற பெயரில், இயற்கை அங்காடிப் பொருட்களை விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறேன். அறுகம்புல் பவுடர், ஆவாரம்பூ பவுடர், ஒற்றை இலை தாமரைப் பொடி, தேனில் ஊற வைத்த நெல்லி, முல்தானி மட்டி, செம்பருத்தி எண்ணெய், இயற்கை காய்கறி ஜூஸ் மற்றும் சுத்தமான கொல்லிமலை தேன்(எங்கள் கடை ஸ்பெஷல்) என, எங்களிடம் கிடைக்காத விஷயம் எதுவுமில்லை.

விலை உயர்ந்த புடவை கிழிந்து விட்டால், அதை தைத்தாலும் அந்த இடம், அப்பட்டமாய் தெரிந்து, மானத்தை வாங்கும். ஆனால், தைத்த இடம் தெரியாமல் ஆக்கும், 'டார்னிங்' எனப்படும், கை நெசவு செய்து தருகிறோம்.இதற்காக, கிழிந்த சேலையில் இருந்தே நுால் எடுத்து, கண்ணுக்கே தெரியாத அளவுள்ள ஊசியால், டிசைன் போட்டு, இஸ்திரி போட்டால், கிழிந்த இடமே தெரியாது. இதை சொல்வது சுலபம்; செய்வது பெரிய வேலை. நானும், என் தங்கையும் சேர்ந்து, இந்த வேலையை செய்து தருகிறோம். இங்கே வேலை செய்த பாட்டியிடம் இருந்து, இதை கற்று, செய்து வருகிறேன்.

அதுமட்டுமின்றி, தையல், எம்பிராய்டரி உள்ளிட்டவற்றையும் செய்து கொடுக்கிறேன். என் மேற்பார்வையில், 15 பேர் வேலை செய்து வருகின்றனர்; இதில் பலரும் பெண்கள். என் சாதனைகளை பாராட்டிய சரஸ்வதி அறக்கட்டளை, சிறந்த தொழில் முனைவோர் விருதை, சமீபத்தில் வழங்கியுள்ளது.தொடர்புக்கு: 95006 31766
--தினமலர் நாளிதழிளிருந்து .

கீழ் வருவது விக்கிப்பீடியாவிலிருந்து (பொதுஅறிவிற்காக):

உலர் சலவை என்றால் என்ன?
 உலர் சலவையில் சாதாரண சலவை போன்றே துணிகள் துவைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு இஸ்திரி செய்யப்படுகிறது, ஆனால் தண்ணீருக்கு பதில் ட்ரைகுளோரோஈத்தேன், பெர்குளோரோஎத்திலீன், ஹைட்ரோகார்பன் மற்றும்  திரவ சிலிக்கான் மற்றும் கார்பன்டைஆக்சைட் போன்ற வேதி கரைப்பான்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.

தற்செயலான கண்டுபிடிப்பு:
பல கண்டுபிடிப்புகளைப்போல உலர் சலவையும் தற்செயலாகவே கண்டு பிடிக்கப்பட்டது. மண்ணெண்ணையில் விழுந்த துணிகளில் உள்ள அழுக்குகளும், கறைகளும் காணாமல் போயின. இதைக்கண்டே உலர்சலவை எண்ணம் தோன்றியது.

துணிகளில் அழுக்கு படிவதேன்?:
துணிகளில் அழுக்குப்படிவதற்குக் காரணம் எண்ணைப்பசைதான். உலர் சலவை செய்யும்போது துணிகளில் உள்ள எண்ணைப்பசை கரைக்கப்பட்டு அகற்றப்படுவதோடு அத்துடன் ஒட்டியுள்ள அழுக்கும் நீங்குகிறது.

உலர் சலவை முறை:
முதல் கட்டமாக உலர் சலவை இயந்திரத்தில் மினால், டர்பன்டைன் போன்ற பெட்ரோலியப் பொருளையும் துணியையும் போடுகின்றனர். 15-20 நிமிடங்கள் கழித்து துணிகள் சுத்தமாகி இருக்கும் மேலும் அழுக்குகள் இருந்தால் அவற்றை இரண்டாம் கட்டமாக அடையாளம் கண்டு, அது என்ன கறை என்பதை ஆராய்ந்து அதற்கேற்றபடி வெள்ளை பெட்ரோல், தின்னர் போன்ற பொருட்களை பயன்படுத்தி கறைகளை நீக்குகின்றனர்.

வேதி கரைப்பான் அலசல் முடிந்து, 60 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் துணிகள் உலர்த்தப்படும் அப்போது துணிகளில் உள்ள கரைப்பான்களோடு சேர்த்து கறை மற்றும் அழுக்குகளும் ஆவியாகிவிடும், பின் இஸ்திரி செய்தால் துணிகள் தயார்.  துணிகளை அலசி, உலர்த்தும் வசதி ஒரே இயந்திரத்திலேயே இருப்பது கூடுதல் வசதி.  Saturday, 17 March 2018

சாமியாத்தாள் என்கிற மூலிகைத்தாய்:

மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களால், 'மூலிகைத்தாய்' என அடையாளப்படுத்தப்பட்ட, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, 65 வயதான சாமியாத்தாள்: ஈரோடு, சாமிநாதபுரத்தில் தான் பிறந்தேன். என் தாத்தாக்கள், மூலிகை சிகிச்சையில் கெட்டிக்காரர்கள். காட்டுக்கு சென்று மூலிகைகளை பறித்து வந்து, மருந்து தயாரித்து தருவர்.என்னை துாங்க வைத்து, மூலிகைகளை இடிப்பர். ஆனால் நான், துாங்குவது போல் நடித்து, அவர்கள் மூலிகைகளை இடிக்கும் போது, அதுகுறித்து கேள்வி கேட்பேன். என் ஆர்வத்தை பார்த்து, என் அம்மா வழி தாத்தா, சொல்லி தருவார்.


அவர்களுக்குப் பின்னர் என் குடும்பத்தில் யாரும் மூலிகை வைத்தியம் பார்க்கவில்லை. ஐந்தாம் வகுப்பு வரை படித்த எனக்கு, 17 வயதில் திருமணமானது. கணவர் விவசாயம் பார்த்ததால், மூலிகை ஆர்வத்தை மூட்டை கட்டினேன். நோயால் அவதிப்பட்டவர்களைப் பார்த்தபோது, எனக்கு தெரிந்த மூலிகைகளை அவர்களுக்கு கொடுக்க தொடங்கினேன். என் கணவர் மறைவுக்குப் பின்னர் மூலிகையே என் வாழ்க்கையாகிவிட்டது என்றார் நீண்ட பெருமூச்சுடன்.
பெரும்பாலான மூலிகைகள் வனப்பகுதி, மலைப்பகுதியிலும் மட்டுமே கிடைக்கும் என்பதால், மூலிகைகளைத் தேடி கடுமையான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அதிலும் அடர்ந்த காடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும், சில நேரங்களில் வன விலங்குகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
என்னை 3 முறை நாகப்பாம்பு தீண்டியுள்ளது. மூலிகை சிகிச்சையால் மீண்டேன். இருப்பினும், மூலிகைகளைத் தேடி இனி செல்லக்கூடாது என எனது மகன்கள் தடை போட்டனர். ஆனால், பலரது நோய்களை குணப்படுத்தி அவர்களை வாழ வைக்க உதவும் பணி என்பதால், மரணம் வந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என கூறிவிட்டு என் பயணத்தை தொடர்கிறேன்.
ஒருமுறை டெல்லியில் நடந்த கண்காட்சிக்கு சென்றிருந்த போது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நான் காட்சிக்கு வைத்திருந்த மூலிகைகளை பார்த்தார். பின்னர் திடீரென என்னை மேடைக்கு அழைத்து, அரிய மூலிகைகளைத் தேடிச் சேகரித்து வரும் இவரது உழைப்பு அபாரமானது. இவருக்கு ‘மூலிகைத் தாய்’ என்ற கவுரவப் பெயரை அளிக்கிறேன்’ எனக் கூறி என்னை பெருமைப்படுத்தினார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் எனக்கு கவுரவப் பட்டம் வழங்கியுள்ளார்.
 மலை தாங்கி, முதியோர் கூந்தல், கள்ளு முளியான், செருப்படை, ஈஸ்வர மூலி, செந்நாயுருவி, தவசி முருங்கை, கோபுரம் தாங்கி, மூங்கிரட்டை, தைவேளை என, கேள்விப்படாத மூலிகைகளும் உண்டு. இதையெல்லாம் அடையாளம் கண்டு, கவனமாக பறிக்க வேண்டும்.
  • ஆகாச கருடனை வளர்த்தால், பாம்பு முதல் கெட்ட சக்தி வரை, வீட்டுக்குள் எதுவும் வராது; ஆனால், கிடைப்பது கஷ்டம். 
  • எலும்புருக்கி நோய்க்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு உதவும். 
  • பெண்களின் வெள்ளைப்படுதலுக்கு, ஓரிதழ் தாமரை, வெள்ளருகு, பற்படகம் அரைத்து, ஆட்டுப்பால் அல்லது மோரில் கலந்து, மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.
  • உடம்பு வலி, மூட்டு வலிக்கு, விராலி, தழுதாழை, வேலிப்பருத்தி, பிரண்டையின் நடுப்பகுதி, முடக்கத்தான், நொச்சு, ஆடு தின்னாப் பாலை, ஈச்வர மூலிகை ஆகிய அனைத்தையும், நீர் விட்டு காய்ச்சி, மூன்றில் ஒரு பங்காக சுண்ட வைத்து, காலை, மாலை, 50 மில்லி சாப்பிட குணமாகும். இந்த மூலிகைகளை நீரில் கொதிக்க வைத்து ஒத்தடமும் தரலாம்; குளிக்கவும் செய்யலாம்.
  • சளிக்கு கற்பூரவள்ளி இலையையும், தலைவலிக்கு, திருநீற்றுத் தழையையும் தான், என் பாட்டி, எனக்கு மருந்தாக கொடுத்தார். 
என்னை பற்றி கேள்விப்பட்ட சித்த மருத்துவர்கள், தேடி வந்து தேவையான மூலிகைகளை வாங்கி செல்கின்றனர். புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியிடம், 2017ல், சிறந்த மூலிகை தாய் விருது, சன்மார்க்க சத்திய சங்கம் அளித்த வள்ளலார் விருது, பழநி சித்த மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் சான்றிதழையும் பெற்றுள்ளேன். தொடர்புக்கு: 9965969558
--தினமலர் மற்றும் தமிழ் ஹிந்து நாளிதழ்களிலிருந்து.
சாமியாத்தாள் என்கிற மூலிகைத்தாய்

WhatsApp காணொளிகள் - 1:

5 Minutes-Crafts:
ஊசியில் எவ்வாறு எளிமையாக நூல் கோர்ப்பது, நீளமான முழு கால்ச்சட்டையை(Pant) வெட்டாமல் எவ்வாறு குறைப்பது போன்ற பயனுள்ள தகவல்கள் செய்முறையாக இங்கே...5 Minutes-Crafts என்ற பயனுள்ள காணொளி Facebook ல் அடிக்கடி வரும் அதில் ஒன்று தான் இந்த காணொளி. 

 

கொசுறு: ஆயத்த  முழு கால்ச்சட்டை(Ready made Pant) போட்டு பார்க்காமலே எவ்வாறு இடுப்பளவை சரிபார்ப்பது?
முழுகால்ச்சட்டையின் இடுப்பு பகுதியை கழுத்தை சுற்றி வைத்துப் பார்க்க வேண்டும், கழுத்தின் சுற்றளவும் முழுகால்ச்சட்டையின் இடுப்பு அளவும் ஒத்துப்போனால் அது உங்களுக்கு பொருந்தும். அல்லாமல் கழுத்து முழுதும் சுற்றிய  பின் pantன்  இடுப்புப் பகுதி மிச்சம் இருந்தால் முழுகால்ச்சட்டை தொளதொளவென பெரிதாக இருக்கும் அல்லது pantன் இடுப்புப் பகுதி கழுத்தை சுற்றிய  பின் கழுத்தின் சுற்றளவை விட குறைவாக இருந்தால் முழுகால்ச்சட்டை உங்களுக்கு இறுக்கமாக இருக்கும்.

மரணத்தின் விளிம்பில் மனிதர்கள் சொன்ன வருத்தமான வார்த்தைகள்:
எவ்வளவுதான் அடுத்தவர்களின் அனுபவங்களை கேட்டாலும் நாமாக பட்டு தெரிந்து கொள்ளும்வரை நம் மனதில் பதியும் விஷயங்கள் வெகு குறைவே, இருந்தாலும் இதை பார்த்தாவது ஏதாவது எடுத்துக்கொண்டால்....

 

தேசிய நீர்வழிச்சாலை திட்டம்:
சமீபத்தில் கேள்விப்பட்ட திட்டங்களில் மிகச்சிறந்த திட்டம் இது. நாடு முழுதும் பெய்யும் மழை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவுகளில் பெய்கிறது, இதன் மூலம் ஏற்படும் சமநிலையின்மையை சமன்படுத்தி பயன்படுத்தி கொள்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது.


பெற்றோர்களுக்கான தலைமையாசிரியர் வேண்டுகோள்:
சிங்கப்பூரில் உள்ள பள்ளியின் தலைமையாசிரியர் மாணவர்களின் பெற்றோருக்கு ஒரு கடிதம் கீழ்வருமாறு எழுதியதாக வந்த ஒலிப்பதிவு இது. பாட புத்தக அறிவை வளர்ப்பதோடு குழந்தையின் ஆளுமையை வளர்ப்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் செய்தி.


திட்டமிடாத வேலை எப்படி இருக்கும்?:
சிலர் பேசினால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம், அதுவும் நகைச்சுவையோடு பேசினால்...தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் பேச்சுப் பதிவு இது. 


Friday, 16 March 2018

கருங் கோழிக்குஞ்சி, முட்டையில் வருமானம்:

கருங்கோழி மற்றும் நாட்டுக் கோழி வளர்த்து, லாபம் ஈட்டி வரும், தஞ்சை மாவட்டம், வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, சரவணன்: விவசாய குடும்பத்தில் பிறந்த நான், கல்லுாரி படிப்பு முடித்து, சென்னையில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்த போது, பொழுது போக்காக கருங்கோழிகளை வளர்க்க ஆரம்பித்தேன். ம.பி., - ஆந்திர மாநிலங்களில் இருந்து, கலப்பு இல்லாத, 'ஒரிஜினல்' கருங்கோழியை வாங்கி வளர்த்தேன்.


இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னை வேலையை விட்டு, சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். எங்களுக்கு சொந்தமான, 30 ஏக்கர் நிலத்தில், தென்னை முழுக்க இயற்கை முறை பராமரிப்பு செய்யும் நிலையில், நெல் சாகுபடியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம். இத்துடன், நாட்டுக் கோழி, கருங்கோழிகளை வளர்த்து வருகிறேன்.

அசோலா, வேப்பிலை, முருங்கை இலை, அகத்திக்கீரை என, கீரைகளை தான் கோழிகளுக்கு உணவாக கொடுக்கிறோம். அதோடு, பகல் நேரத்தில் தோட்டத்துக்குள் மேய்ச்சலுக்கு விடுவதால், நாட்டுக்கோழிகளுக்கான குணாதிசயத்தோடு ஆரோக்கியமாக வளர்கின்றன. அதேபோல், அடர் தீவனத்தை, நாங்களே அரைத்து கொடுப்பதுடன், தோட்டத்துக்குள் கரையானையும் உற்பத்தி செய்கிறோம். பெரும்பாலான நோய்களுக்கு பாரம்பரிய நோய் தடுப்பு ஊசி, சொட்டு மருந்துக்கு ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்துகிறோம்.

நாட்டுக்கோழிகளில், 180 பெட்டை, 20 சேவல்; கருங்கோழிகளில், 31 பெட்டை, ஐந்து சேவல் என, தாய்க்கோழிகள் உள்ளன. இந்த தாய்கோழிகளில் இருந்து குஞ்சுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்கிறோம். கருங்கோழி இறைச்சி, முட்டையில் மருத்துவக் குணம் அதிகம் உள்ளதால், நல்ல விலை கிடைக்கிறது. கருங்கோழியின் உடல், இறைச்சி, எலும்பு கறுப்பு நிறத்திலும், ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்திலும், நாக்கு கருமை கலந்த சாம்பல் நிறத்திலும் இருக்கும்.

ஒரு கருங்கோழி ஆண்டுக்கு, 80 முட்டை இடும். அதில், 60 முட்டை தான், குஞ்சு பொரிக்க தேறும். அதிலும், பொரிப்பானில் வைத்தால், 40 குஞ்சு தான் வளர்ப்புக்கு தேறும். 31 கோழிகளில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக, 1,240 குஞ்சுகள் கிடைக்கின்றன. ஒரு மாதம் வளர்த்து, ஒரு குஞ்சு, 200 ரூபாய்க்கு விற்பதால், ஆண்டுக்கு, 2.48 லட்சம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.

இதேபோல், 180 நாட்டுக் கோழிகளில் இருந்து, ஆண்டுக்கு, 7,200 குஞ்சுகள் உற்பத்தி செய்கிறோம். ஒரு நாள் ஆன குஞ்சு, 40 ரூபாய்க்கு விற்றால், ஆண்டுக்கு, 2.88 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இதில் அனைத்து செலவும் போக, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். தொடர்புக்கு: 9677101100.
--தினமலர் நாளிதழிலிருந்து


Sunday, 11 March 2018

வேப்பிலை, எலுமிச்சை, புதினாவுடன் கூடிய டிஷ் வாஷ் மற்றும் ஹேண்ட் வாஷ்

ஹேண்ட் வாஷ் மற்றும் டிஷ் வாஷ் செய்து, விற்று வரும், 63 வயதான, புஷ்பாவதி தீனதயாளன்: ஒவ்வொரு நாள் பொழுதையும், சுறுசுறுப்பாகவும், உபயோகமாகவும் கழிக்க ஆசை. இரு மகள், மகனுக்கு திருமணமாகி பேரன், பேத்திகளையும் பார்த்து விட்டேன். அன்பாக, அனுசரணையாக கணவன் இருக்கிறார். இருந்தாலும், உழைக்காத நாள் உபயோகமான நாளாக கழியாது என்பது, என் எண்ணம்.

மனம், உடம்பில் தெம்பு உள்ள வரை உழைக்க வேண்டும். எனக்கு எப்போதும் புதிது புதிதாக கற்க ஆசை. ஏற்கனவே ஐந்து வகையான உள்பாவாடைகளை தைத்து, விற்பனை செய்து வருகிறேன். சமீபத்தில் தான், டிஷ் வாஷ், ஹேண்ட் வாஷ் செய்ய கற்று கொண்டேன். கடைகளில் வாங்கும் இவற்றில், கெமிக்கல் தான் அதிகமாக இருக்கும்; அதனால், நிறைய பேருக்கு, தோல் அலர்ஜி ஏற்படுகிறது.

வேப்பிலை, எலுமிச்சை, புதினா:
வேப்பிலை, எலுமிச்சை, புதினா உட்பட, இயற்கையான பொருட்கள் சேர்த்து, நான் டிஷ் வாஷ் மற்றும் ஹேண்ட் வாஷ் தயாரிக்கிறேன். கடைகளில் வாங்குவதை விட செலவும் குறைவாக இருப்பதுடன், கைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும். அடிப்படையான கெமிக்கல், தேவையான பழங்கள், மூலிகைகள், புட் கலர்ஸ், வாசனை, பிளாஸ்டிக் கவர் மற்றும் பாட்டில்கள் தேவை.

பாத்திரம் துலக்கும் திரவத்தில் லெமன், வேப்பிலை மற்றும் புதினா வகைகளும்; ஹேண்ட் வாஷில் விருப்பமான வகைகளையும் செய்ய முடியும். ஆரஞ்சு பழத்தின் சதைப்பற்றிலும் செய்யலாம். பழம், மூலிகைகளை சீசனில் மொத்தமான வாங்கி, பதப்படுத்தி வைத்து கொள்ளலாம். இரண்டும் தலா, 3 லி., தயாரிக்க, 1,000 ரூபாய் முதலீடு போதும்.கடைகளில் விற்பதை விட, குறைவான விலைக்கு தரலாம். பாதிக்கு பாதி லாபம் கிடைக்கும்.

ஆரம்பத்தில், 50 மில்லி அளவு நிரப்பி, சிறிய பாக்கெட்களில் விற்று, 'ஆர்டர்' அதிகரித்த பின், பாட்டில்களுக்கு மாறலாம்.வீடுகள் தான், உங்கள் முதல் இலக்காக இருக்க வேண்டும். கடை தயாரிப்புகளை விடவும், விலை குறைவு. கைகளுக்கு பாதுகாப்பு என்ற நம்பிக்கை வந்து விட்டால், அவர்களே உங்களுக்கு விளம்பர வேலையை பார்த்து, பிசினசை வளர்த்து விடுவர். அதைத் தொடர்ந்து, அலுவலகங்கள், கேன்டீன், ஓட்டல் போன்ற இடங்களில், 'ஆர்டர்' பிடிக்கலாம். ஒரு லிட்டர் தயாரிப்பிலிருந்து துவங்கலாம். அக்கம் பக்கத்தினர் இரண்டு, மூன்று பெண்களாக சேர்ந்து, ஆளுக்கு கொஞ்சம் முதலீடு போட்டு ஆரம்பிப்பது, சுலபமாக இருக்கும். அதில் வரும் லாபத்தை வைத்து, அதிகளவில் தயாரிக்கலாம். அரை நாள் பயிற்சிக்கு, தேவையான பொருள்களுடன் சேர்த்து, 750 ரூபாய் வாங்குகிறேன்!
--தினமலர் நாளிதழிலிருந்து

சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைகிறது, இதனை தவிர்த்து வேறு வகையான கொள்கலன்களை முயற்சி செய்தால் நன்று. 


Monday, 5 March 2018

மறுபடியும் வருவேன்.....கொஞ்சம் பொறுத்திரு.....

அந்த குடும்பத்தின் சொந்த பந்தங்களிலேயே முதல் திருமணம் இனிதாய் நிறைவேறுகிறது, ஈராறு மாதங்கள் கழித்து வந்துதிக்கப் போகும் மழலையை வரவேற்க தயாராகிய குடும்பத்திற்கு அழுகுரலை கொடுத்து களிப்பூட்டாமல் அனைவரின் அழுகையையும் வாங்கிச்  சென்றுவிட்டாள் அந்தப் பச்சிளங்குழந்தை. யார்தான் இதை எதிர்பார்ப்பார்கள்? மகள் மற்றும் மருமகனின் துன்பத்தை காண சகியாத அந்த பாட்டி இறந்த பேத்தியின் மொழியில் ஆறுதல் சொல்வதுதான் இந்த கவிதை...


மறுபடியும் வருவேன் கொஞ்சம் பொறுத்திரு 
ஆண்டாளாகப் பழகுத் தமிழ்ப் பேசி பாசம் வளர்த்திட 
மீண்டும் வருவேன் கொஞ்சம் பொறுத்திரு ....

பொறுமை மிகு என் தாயே....
 உன் பூமேனி ஆடாமல் 
பொன்வதனம் கசங்காமல்
 பூவாய் பூத்திருப்பேன் 
உன் கருணைக்குப் பரிசாக 
காண்பாய் என்னை மறுபடியும்  கொஞ்சம் பொறுத்திரு...

மணி விழி மலராமல் 
மழலை மொழி பேசாமல் 
மௌனமாகவே கிடந்த என்னை 
தொட்டுப் பார்த்து துடித்துப் போன தந்தையே
செப்புச் சிலையாக 
சிரிக்கும் மலராக 
சின்ன மகளாக சீக்கிரம் வருவேன்...

பூவிழி மலராமல் 
புதுக்கவிதை பேசாமல் 
பொம்மையாக கிடந்த என்னை 
தடவிப் பார்த்து தளர்ந்துவிட்ட தந்தையே
வளர்ப்புச் சிலையாக வாச மலராக 
வசந்த மகளாக வருவேன் மறுபடியும்...

சின்னக் கால் மடக்கி 
சீக்கிரமா மண்டியிட்டு 
வெள்ளிக் கொலுசொலிக்க 
சிட்டாக ஓடிவந்து 
உன்னை அனைத்துச் சிரித்திடவே
மறுபடியும் வருவேன் கொஞ்சம் பொறுத்திரு...

இறப்பின் பின் வரும் சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் முடிந்து உறவுகள் சென்ற பின் உள்ள தனிமைதான் நாம் எதிர்கொள்ளும் பெரிய வலி, அத்தகைய  ஒரு சூழலில் இதை எழுதி வைத்திருந்தார் என் பெரியம்மா. பின்னர் பேரக்குழந்தைகள் வந்த பிறகு வெகு நாட்கள் கழித்து எழுதிய காகிதத்தை தூக்கியெறிந்துவிட்டார். என் கண்ணில் பட்ட அந்த காகிதத்தை எடுத்து அதிலுள்ள வரிகளை அவருடைய துணையுடன் மீட்டெடுத்து இங்கு பாதி கொடுத்திருக்கிறேன், மீதி அழிந்துவிட்டது.


Saturday, 3 March 2018

கொத்தமல்லியில் தழைக்குது வருமானம்!

கொத்தமல்லி சாகுபடி செய்து வரும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணி - பேபி தம்பதி: எங்களுடைய, 9 ஏக்கர் நிலத்தில், 5 ஏக்கரில் தென்னையும், அரை ஏக்கரில் கொத்தமல்லி, 1 ஏக்கரில், சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ளோம்.பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீர் சரியாக கிடைக்காததால், 'போர்வெல்' போட்டுத் தான் பாசனம் செய்கிறோம். அதிலும் தண்ணீர் குறைவாக இருப்பதால், தென்னைக்கு பாய்ச்சியது போக மீதி நீரில், விவசாயம் செய்கிறோம்.
கொத்தமல்லித் தழை, 45 நாட்களில் அறுவடைக்கு வந்து விடக்கூடிய பயிர். அரை ஏக்கர் பரப்பில் விதைக்க, 4 கிலோ விதை தேவைப்படும். தேர்வு செய்த நிலத்தில், 3 டன் தொழு உரமிட்டு, உழுது, 10 அடி நீளம், 4 அடி அகலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். பின், வீரிய ரகக் கொத்தமல்லி விதையை பாத்திகளில் சீராகத் துாவி, அவற்றை நீண்ட கூர்மையான குச்சியால், மண்ணைக் கீறி மூடி, உடனடியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

விதைத்த, 10 நாட்களுக்குள் விதைகள் முளைத்து வரும். அப்போது, பாசனம் செய்து, ஈரம் காய்ந்தவுடன், களை எடுத்து, தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும். இரண்டாவது முறையாக, 25ம் நாளில், களை எடுத்து, கடலைப் பிண்ணாக்கு மூழ்கும் அளவு தண்ணீர் நிரப்பி, மூன்று நாள் ஊற வைத்து, அத்துடன், தலா, 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து, கடலை பிண்ணாக்கு கரைசலை, பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

செடிகள், 30ம் நாள், நன்கு வளர்ந்துவிடும். அப்போது, வரும்முன் காக்கும் விதமாக, 10 லி., தண்ணீருக்கு, 100 மில்லி இஞ்சி, பச்சை மிளகாய், வெள்ளைப் பூண்டு கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 45ம் நாளில், மாலை நேரத்தில் கொத்தமல்லி செடிகளை, வேருடன் பிடுங்கி, கட்டுகளாக கட்டி, நீரில் அலசி, மண்ணை நீக்க வேண்டும். நிழலில் அடுக்கி, ஈரத்துணியால் மூடி வைத்து, மறுநாள் விற்பனைக்கு கொண்டு செல்லலாம்.

அரை ஏக்கரில், 3,000 கிலோ கொத்துமல்லித் தழை கிடைக்கும். ஒரு கிலோ, 25 - 30 ரூபாய் வரை விற்றால், குறைந்தபட்சமாக, 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். விதை, நடவு, இடுபொருள் செலவு போக, 60 ஆயிரம் ரூபாய் லாபம் வரும். நாங்கள் நேரடியாகவே உழவர் சந்தையில் விற்பனை செய்வதால், தரகு கமிஷன் கிடையாது. கொத்தமல்லியை, இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும் நாங்கள், அடுத்த முறை, சின்ன வெங்காயத்தையும் இயற்கை முறையில் சாகுபடி செய்யவுள்ளோம். தொடர்புக்கு: 9688380579.
--தினமலர் நாளிதழிலிருந்து


கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற