Monday, 5 March 2018

மறுபடியும் வருவேன்.....கொஞ்சம் பொறுத்திரு.....

அந்த குடும்பத்தின் சொந்த பந்தங்களிலேயே முதல் திருமணம் இனிதாய் நிறைவேறுகிறது, ஈராறு மாதங்கள் கழித்து வந்துதிக்கப் போகும் மழலையை வரவேற்க தயாராகிய குடும்பத்திற்கு அழுகுரலை கொடுத்து களிப்பூட்டாமல் அனைவரின் அழுகையையும் வாங்கிச்  சென்றுவிட்டாள் அந்தப் பச்சிளங்குழந்தை. யார்தான் இதை எதிர்பார்ப்பார்கள்? மகள் மற்றும் மருமகனின் துன்பத்தை காண சகியாத அந்த பாட்டி இறந்த பேத்தியின் மொழியில் ஆறுதல் சொல்வதுதான் இந்த கவிதை...


மறுபடியும் வருவேன் கொஞ்சம் பொறுத்திரு 
ஆண்டாளாகப் பழகுத் தமிழ்ப் பேசி பாசம் வளர்த்திட 
மீண்டும் வருவேன் கொஞ்சம் பொறுத்திரு ....

பொறுமை மிகு என் தாயே....
 உன் பூமேனி ஆடாமல் 
பொன்வதனம் கசங்காமல்
 பூவாய் பூத்திருப்பேன் 
உன் கருணைக்குப் பரிசாக 
காண்பாய் என்னை மறுபடியும்  கொஞ்சம் பொறுத்திரு...

மணி விழி மலராமல் 
மழலை மொழி பேசாமல் 
மௌனமாகவே கிடந்த என்னை 
தொட்டுப் பார்த்து துடித்துப் போன தந்தையே
செப்புச் சிலையாக 
சிரிக்கும் மலராக 
சின்ன மகளாக சீக்கிரம் வருவேன்...

பூவிழி மலராமல் 
புதுக்கவிதை பேசாமல் 
பொம்மையாக கிடந்த என்னை 
தடவிப் பார்த்து தளர்ந்துவிட்ட தந்தையே
வளர்ப்புச் சிலையாக வாச மலராக 
வசந்த மகளாக வருவேன் மறுபடியும்...

சின்னக் கால் மடக்கி 
சீக்கிரமா மண்டியிட்டு 
வெள்ளிக் கொலுசொலிக்க 
சிட்டாக ஓடிவந்து 
உன்னை அனைத்துச் சிரித்திடவே
மறுபடியும் வருவேன் கொஞ்சம் பொறுத்திரு...

இறப்பின் பின் வரும் சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் முடிந்து உறவுகள் சென்ற பின் உள்ள தனிமைதான் நாம் எதிர்கொள்ளும் பெரிய வலி, அத்தகைய  ஒரு சூழலில் இதை எழுதி வைத்திருந்தார் என் பெரியம்மா. பின்னர் பேரக்குழந்தைகள் வந்த பிறகு வெகு நாட்கள் கழித்து எழுதிய காகிதத்தை தூக்கியெறிந்துவிட்டார். என் கண்ணில் பட்ட அந்த காகிதத்தை எடுத்து அதிலுள்ள வரிகளை அவருடைய துணையுடன் மீட்டெடுத்து இங்கு பாதி கொடுத்திருக்கிறேன், மீதி அழிந்துவிட்டது.


2 comments:

  1. Replies
    1. Yes, that situation paralyze us but we can overcome if we have supportive friends and family.

      Delete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...