Saturday, 17 March 2018

சாமியாத்தாள் என்கிற மூலிகைத்தாய்:

மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களால், 'மூலிகைத்தாய்' என அடையாளப்படுத்தப்பட்ட, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, 65 வயதான சாமியாத்தாள்: ஈரோடு, சாமிநாதபுரத்தில் தான் பிறந்தேன். என் தாத்தாக்கள், மூலிகை சிகிச்சையில் கெட்டிக்காரர்கள். காட்டுக்கு சென்று மூலிகைகளை பறித்து வந்து, மருந்து தயாரித்து தருவர்.என்னை துாங்க வைத்து, மூலிகைகளை இடிப்பர். ஆனால் நான், துாங்குவது போல் நடித்து, அவர்கள் மூலிகைகளை இடிக்கும் போது, அதுகுறித்து கேள்வி கேட்பேன். என் ஆர்வத்தை பார்த்து, என் அம்மா வழி தாத்தா, சொல்லி தருவார்.


அவர்களுக்குப் பின்னர் என் குடும்பத்தில் யாரும் மூலிகை வைத்தியம் பார்க்கவில்லை. ஐந்தாம் வகுப்பு வரை படித்த எனக்கு, 17 வயதில் திருமணமானது. கணவர் விவசாயம் பார்த்ததால், மூலிகை ஆர்வத்தை மூட்டை கட்டினேன். நோயால் அவதிப்பட்டவர்களைப் பார்த்தபோது, எனக்கு தெரிந்த மூலிகைகளை அவர்களுக்கு கொடுக்க தொடங்கினேன். என் கணவர் மறைவுக்குப் பின்னர் மூலிகையே என் வாழ்க்கையாகிவிட்டது என்றார் நீண்ட பெருமூச்சுடன்.
பெரும்பாலான மூலிகைகள் வனப்பகுதி, மலைப்பகுதியிலும் மட்டுமே கிடைக்கும் என்பதால், மூலிகைகளைத் தேடி கடுமையான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அதிலும் அடர்ந்த காடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும், சில நேரங்களில் வன விலங்குகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
என்னை 3 முறை நாகப்பாம்பு தீண்டியுள்ளது. மூலிகை சிகிச்சையால் மீண்டேன். இருப்பினும், மூலிகைகளைத் தேடி இனி செல்லக்கூடாது என எனது மகன்கள் தடை போட்டனர். ஆனால், பலரது நோய்களை குணப்படுத்தி அவர்களை வாழ வைக்க உதவும் பணி என்பதால், மரணம் வந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் என கூறிவிட்டு என் பயணத்தை தொடர்கிறேன்.
ஒருமுறை டெல்லியில் நடந்த கண்காட்சிக்கு சென்றிருந்த போது, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நான் காட்சிக்கு வைத்திருந்த மூலிகைகளை பார்த்தார். பின்னர் திடீரென என்னை மேடைக்கு அழைத்து, அரிய மூலிகைகளைத் தேடிச் சேகரித்து வரும் இவரது உழைப்பு அபாரமானது. இவருக்கு ‘மூலிகைத் தாய்’ என்ற கவுரவப் பெயரை அளிக்கிறேன்’ எனக் கூறி என்னை பெருமைப்படுத்தினார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் எனக்கு கவுரவப் பட்டம் வழங்கியுள்ளார்.
 மலை தாங்கி, முதியோர் கூந்தல், கள்ளு முளியான், செருப்படை, ஈஸ்வர மூலி, செந்நாயுருவி, தவசி முருங்கை, கோபுரம் தாங்கி, மூங்கிரட்டை, தைவேளை என, கேள்விப்படாத மூலிகைகளும் உண்டு. இதையெல்லாம் அடையாளம் கண்டு, கவனமாக பறிக்க வேண்டும்.
  • ஆகாச கருடனை வளர்த்தால், பாம்பு முதல் கெட்ட சக்தி வரை, வீட்டுக்குள் எதுவும் வராது; ஆனால், கிடைப்பது கஷ்டம். 
  • எலும்புருக்கி நோய்க்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு உதவும். 
  • பெண்களின் வெள்ளைப்படுதலுக்கு, ஓரிதழ் தாமரை, வெள்ளருகு, பற்படகம் அரைத்து, ஆட்டுப்பால் அல்லது மோரில் கலந்து, மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும்.
  • உடம்பு வலி, மூட்டு வலிக்கு, விராலி, தழுதாழை, வேலிப்பருத்தி, பிரண்டையின் நடுப்பகுதி, முடக்கத்தான், நொச்சு, ஆடு தின்னாப் பாலை, ஈச்வர மூலிகை ஆகிய அனைத்தையும், நீர் விட்டு காய்ச்சி, மூன்றில் ஒரு பங்காக சுண்ட வைத்து, காலை, மாலை, 50 மில்லி சாப்பிட குணமாகும். இந்த மூலிகைகளை நீரில் கொதிக்க வைத்து ஒத்தடமும் தரலாம்; குளிக்கவும் செய்யலாம்.
  • சளிக்கு கற்பூரவள்ளி இலையையும், தலைவலிக்கு, திருநீற்றுத் தழையையும் தான், என் பாட்டி, எனக்கு மருந்தாக கொடுத்தார். 
என்னை பற்றி கேள்விப்பட்ட சித்த மருத்துவர்கள், தேடி வந்து தேவையான மூலிகைகளை வாங்கி செல்கின்றனர். புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமியிடம், 2017ல், சிறந்த மூலிகை தாய் விருது, சன்மார்க்க சத்திய சங்கம் அளித்த வள்ளலார் விருது, பழநி சித்த மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் சான்றிதழையும் பெற்றுள்ளேன். தொடர்புக்கு: 9965969558
--தினமலர் மற்றும் தமிழ் ஹிந்து நாளிதழ்களிலிருந்து.
சாமியாத்தாள் என்கிற மூலிகைத்தாய்

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற