Sunday, 29 April 2018

'மழைத்துளி' வாட்ஸ் ஆப் குழுவின் வீடு தேடி வரும் மரக்கன்று!

வீடு தேடி வரும் மரக்கன்று!மதுரையில், 'மழைத்துளி' என்ற பெயரில் இயங்கி வரும், 'வாட்ஸ் ஆப்' குழுவின் ஒருங் கிணைப் பாளர், மதன் குமார்: மதுரை மாவட்டம், வெள்ளளூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக இருக்கிறேன். 'பேஸ்புக்' மூலம் இணைந்த மதுரை நண்பர்கள் நாங்கள். சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்யலாம் என, பேசிய போது தான், மழை வளத்தை பெருக்க அடிப்படையாக இருக்கும் மரங்களை அதிக அளவில் வளர்க்கலாம் என, முடிவு செய்தோம். அதற்காக, 'மழைத்துளி' என்ற, 'வாட்ஸ் ஆப்' குழுவை ஆரம்பித்தோம்.


ஆரம்பிக்கும்போது, நான்கு பேர் தான் உறுப்பினர்கள். தற்போது, 15 பேர் இணைந்துள்ளனர். இதில், 10 பேர் மதுரையில் வசிக்கின்றனர்; மீதி ஐந்து பேர், வெளியூர்க்காரர்கள். இவர்கள் வெளியிலிருந்து குழுவின் பணிகளுக்கு ஆதரவு தருகின்றனர். குழு ஆரம்பித்த பின், வில்லாபுரம் பகுதியில் மரங்கள் இல்லாத தெருக்களில், ஒவ்வொரு வீடாகப் போய், 'உங்க வீட்டு முன் மரக்கன்று நட்டு வைத்தால் வளர்ப்பீங்களா' எனக் கேட்டு, 'சர்வே' எடுத்தோம்.அவர்களில் சிலர் சம்மதிக்கவும், முதல் கட்டமாக, எட்டு மரக்கன்றுகளை நட்டு, கம்பிக் கூண்டு அமைத்து கொடுத்தோம். அப்புறம் இதே விஷயத்தை, மற்ற, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் மூலமாகவும் பரப்பினோம்.


மதுரை மாவட்டத்தில் இதுவரை, 752 பேர், தங்களின் முகவரியைப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி முதல் இதுவரை, 132 வீடுகளில் மரக்கன்று நட்டு வைத்துள்ளோம். கொஞ்சம் கொஞ்சமாக, பதிவு செய்துள்ளவரின் வீடுகளிலும் மரக்கன்றுகளை நட்டு விடுவோம். மதுரை மாவட்ட வனத்துறை மூலமாக விற்பனை செய்யும், வேம்பு, புங்கன் மரக்கன்றுகளைத் தான் நடவு செய்கிறோம். ஒரு கன்று, கூண்டுக்காக, 150 ரூபாய் செலவாகிறது. இதை எங்கள், 'வாட்ஸ் ஆப் குரூப்' உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்வோம். மரக்கன்றுகள் நட்ட உடனே, சம்பந்தப்பட்ட வீட்டு மொபைல் எண்ணை, 'மழைத்துளி மரக்கன்றுகள் நிலவரம்' எனும், 'வாட்ஸ் ஆப் குரூப்'பில் சேர்த்து விடுவோம். கன்றுகளின் வளர்ச்சியை அவர்கள், 'அப்டேட்' செய்வர். நாங்களும், 15 நாட்களுக்கு ஒருமுறை நேரிலும் சென்று பார்ப்போம். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு, முன்னுரிமையின் அடிப்படையில், மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.

குழு உறுப்பினர் தீபா: ஞாயிற்றுக்கிழமை தான், மரம் நடும் வேலையை செய்கிறோம். வெள்ளிக் கிழமையே அதற்கான முன்னேற்பாடுகளுக்கு திட்டமிட்டு, சனிக்கிழமையன்று, மரக்கன்று, கூண்டுகளை வாங்கி வைத்து விடுவோம். ஞாயிற்றுக்கிழமை காலை, 9:00 மணிக்கு குழி எடுக்கும் வேலையை ஆரம்பிப்போம். தோட்ட வேலை செய்யும் தாத்தா ஒருவரை வைத்துள்ளோம். அவர் தான், குழி எடுத்து, தொழு உரத்தை போட்டுக் கொடுப்பார். சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் அல்லது அவர்களது வீட்டுக் குழந்தைகளை நடச் சொல்கிறோம், அப்போது தான், 'நான் வெச்ச மரம்' என்று பராமரிக்கும் ஆசை வரும். தொடர்புக்கு: 86089 05957.

--தினமலர் நாளிதழிலிருந்து
--வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினால் மரக் கன்று வீடு தேடி வரும்!!


 


1 comment:

  1. வருகைக்கும், கருத்து பதிவிற்க்கும் நன்றிகள் @ரமேஷ் ராமர்

    ReplyDelete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...