Sunday, 10 November 2019

வட்ட வடிவ வீடு : அழகு... உறுதி... செலவு குறைவு...

தஞ்சை, மூலிகைப் பண்ணை அருகே ராஜாஜி நகரில், வட்ட வடிவில் வீடு கட்டியுள்ள பொறியாளர் செல்வபாண்டியன்: வீடு என்றாலே, செவ்வகம், சதுரம் வடிவில் தான் பெரும்பாலும் கட்டப்படுகின்றன. அந்த வடிவில் தான் இருக்க வேண்டுமா; வட்ட வடிவில் கட்டினால் என்ன என நினைத்தேன். சங்க இலக்கியமான, 'நெடுநல்வாடை'யில், வட்ட வடிவ கட்டடங்கள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. பழங்கால மன்னர் அரண்மனைகள், கோட்டைகள், பழங்குடியின மக்கள் வீடுகள், வட்ட வடிவில் தான் உள்ளன. பிற வடிவ வீடுகளை விட, வட்ட வடிவிலான வீடுகளுக்கு உறுதித்தன்மை அதிகம்; வெயிலின் தாக்கமும் அதிகம் இருக்காது. வட்ட வடிவிலான வீடுகளில் முனைகளே கிடையாது. முடுக்கு இல்லை என்பதால், கட்டுமான பகுதிகள், முழு பயன்பாட்டில் இருக்கும்.


எலி வலை அமைப்பில் சுவர் அமைத்ததால், செங்கல், சிமென்ட், மணல், கூலிச் செலவு குறைவு. சுவரின் உள்ளே, கூடு போல இருப்பதால், வெயில், குளிர் தாக்கம் இருக்காது. நல்ல தரமான செங்கல் பயன்படுத்தியதால், வெளிப்பூச்சு இல்லை; வண்ணப் பூச்சும் கிடையாது. இதனால், செங்கற்கள் நன்றாக சுவாசிக்கின்றன. இயற்கை முறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, இந்த வீட்டில் மரமே பயன்படுத்தவில்லை. ஜன்னல்கள் முழுவதும் இரும்பால் தான் ஆனவை. வழக்கமாக, ஜன்னல்களின் பக்கவாட்டு பகுதியில், கதவுகள் இருக்கும்; அதனால் காற்று தடைபடும்.எனவே, எங்கள் வீட்டில், ஜன்னலின் நடுவே கதவுகள் அமைத்துள்ளோம். இதனால், காற்று தாராளமாக வரும்.


 படுக்கையறையில், கடப்பா கல்லில் கட்டில் அமைத்து உள்ளோம்.இதனால், வெயில் நேரத்தில், குளுகுளுவென இருக்கும்; மழைக் காலத்தில் கதகதப்பாக இருக்கும். ஒரு முறை இதற்கு செலவு செய்தால் போதும், காலம் காலமாக அப்படியே இருக்கும். வீட்டின் நடுவே முற்றம் அமைத்துள்ளோம். இதனால், வீடு முழுக்க நல்ல வெளிச்சமாக இருக்கும். முற்றம் வழியாக வெப்பக்காற்று, மேலே எழும்பி சென்று விடும்; இயற்கையான குளிர்ந்த காற்று, வீட்டிற்குள் வரும். 'எலிவேஷனுக்கு' இந்த வீட்டில் இல்லை; அதற்கான செலவும் கிடையாது. வீட்டை கட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இப்போதும் புத்தம் புதிது போல உள்ளது. கீழ்தளத்தில், 640; மேல் தளத்தில் இரண்டு படுக்கை அறைகள் மற்றும் நூலகமும் இருக்கு. மேல் தளத்தின் மொத்தக் கட்டுமானம் 480 சதுர அடி.. இந்த வீட்டை கட்ட, 12 லட்சம் ரூபாய் தான் செலவானது!


இந்த வீடு இவ்வளவு சிறப்பாக உருவானதற்கு, என் நண்பர் பொறியாளர் ராஜேந்திரனுக்குத்தான் நன்றி சொல்லணும். சிக்கன முறை கட்டுமானத்தில் இவர் தமிழ்நாடு அளவில் புகழ்பெற்றவர். ``அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கட்டடக்கலை எழில் கலைஞரான லாரி பெக்கரின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த வீட்டை உருவாக்கியிருக்கோம். குறைவான செலவுல அழகான, உறுதியான வீடுகளை உருவாக்கணும்கிறதுதான் லாரி பெக்கர் தொழில்நுட்பத்தின் அடிப்படைத் தத்துவம்’’ என சொல்கிறார் ராஜேந்திரன்.
கீழ்த்தளத்தில் வரவேற்புக் கூடம், சமையலறை, உணவருந்தும் கூடம், படுக்கையறை அமைந்துள்ளன. வரவேற்புக் கூடத்திலேயே ஹை சீலிங் முறையில் மாடிப்படி அமைக்கப்பட்டுள்ளது. எலிவேஷனுக்குன்னு தனியாக எந்தச் செலவும் செய்யலை. இயல்பாகவே, வெளிப்புறத் தோற்றம் வசீகரமாக உருவாகியிருக்கு. மின்சாரம் இல்லைன்னாலும் இந்த வீட்டின் காலிங் பெல் ஒலிக்கும்.

--தினமலர் மற்றும் விகடன் இதழிலிருந்து

தொடர்புடையவை

1) வட்ட வடிவங்களுடன் கூடிய வீடு.
2) அழகு... உறுதி... செலவு குறைவு... இது அதிசய வீடு!

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...