Sunday 10 November 2019

'யூ டியூப்' மூலம் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்!

'யூ டியூப்' சமூக வலைதளத்தில், தன் சொந்த தோட்டத்தில் விளையும் பழங்கள், பூக்கள் பற்றிய, 'வீடியோ'க்களை பதிவிட்டு, மாதம், 1 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும், ஆனி யூஜின்: கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள இடக்கன்னு தான், சொந்த ஊர். படித்தது, பொருளாதாரம். வீட்டைச் சுற்றி, ௧ ஏக்கரில் தோட்டம் உள்ளது. அதில் நான் ஆசையாக வளர்த்த மரங்கள், செடிகள் பற்றி நான் எடுத்த வீடியோக்களை இழந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான், 'கிருஷி லோகம்' என்ற, யூ டியூப் சேனலை துவக்கினேன். (https://www.youtube.com/channel/UCS2J-u3UpGI448mgzKvnlXw)

என் தோட்டத்தில் சப்போட்டா, மா, கொய்யா, வாழை, லிச்சி, பலா, பேஷன் புரூட் போன்ற பழ மரங்கள் உள்ளன. பாகற்காய், புடலங்காய், தக்காளி, வெள்ளரி, கத்தரிக்காய், கேரட் போன்ற காய்கறி செடிகளையும் வளர்க்கிறேன். அத்துடன் கற்றாழை, ஜாதிக்காய் போன்ற மருத்துவ குணமுடைய செடிகளையும் வளர்க்கிறேன். என் சொந்த தோட்டத்தை மக்களிடம் காண்பிக்கவே, யூ டியூப் சேனலை துவக்கினேன். கூச்ச சுபாவம் கொண்டவள் நான். கேமரா முன் பேசுவதற்காக, கூச்சத்தை தவிர்த்தேன்; என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன்.

இப்போது என் சேனலுக்கு, மூன்று லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்; இரண்டு கோடி தடவைக்கும் மேல், என் வீடியோக்களை பார்த்துள்ளனர். அந்த சேனலில் வரும் விளம்பரங்களை, வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள், 'கிளிக்' செய்வதன் மூலம் எனக்கு வருமானம் வருகிறது. சராசரியாக மாதம், 1 லட்சம் ரூபாய் கிடைக்கும். சில மாதங்களில் அதற்கும் மேலாக கிடைத்து விடும். வீடியோக்களில் தொழில்நுட்பங்களையும், கூடுதல் விபரங்களையும், என் கணவர் மேற்கொள்கிறார்.

என் சேனலின் முதல் வீடியோ தலைப்பு, 'கேரள வீட்டில் விளைந்த கொய்யா' என்பது. அதில், கொய்யா மரங்களை எப்படி பராமரிக்க வேண்டும்; எந்த பருவத்தில் காய்களை பறிக்க வேண்டும்; பழங்களின் மருத்துவ குணங்கள் என்ன என்பதை விளக்குகிறேன். அதுபோல, ரோஜா செடி என்றால், எத்தகைய செடிகளை வளர்க்க வேண்டும்; எப்படி அந்த பூக்களை பறிக்க வேண்டும்; எந்த செடியிலிருந்து எந்த விதமான மலர் கிடைக்கும் என்பன போன்ற விபரங்களை கூறுகிறேன்.

நான் சொல்லும் விபரங்கள், கூறும் விதம் போன்றவை, வாடிக்கையாளர்களுக்கு பிடித்துப் போயுள்ளது. கிருஷி லோகம் சேனலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, 'டிப்ஸ் பார் ஹேப்பி லைப்' என்ற மற்றொரு சேனலையும் துவக்கியுள்ளேன். வாடிக்கையாளர்களின், 'கமென்ட்'களுக்கு, பதில் அளிப்பதையும் வழக்கமாக வைத்து உள்ளேன். இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; வருமானமும் கூடுகிறது!

--தினமலர் நாளிதழிலிருந்து

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...