Sunday, 10 November 2019

1.5 ஏக்கரில் 1,100 மரங்கள்....

வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், தெக்குப்பட்டு கிராமத்தில், 1.5 ஏக்கரில், அடர்ந்த வனத்தை உருவாக்கியுள்ள, ஞானசூரிய பகவான்: கோவை பல்கலைக் கழகத்தில், பி.எஸ்சி., விவசாயம் படித்து, தமிழக அரசில், வேளாண்மைத் துறை அதிகாரியாக பணியாற்றினேன். அந்தப் பணியை ராஜினாமா செய்து, சென்னை வானொலி நிலையத்தில், விவசாயிகளுக்கான, 'வீடும் வயலும்' நிகழ்ச்சியில், 'சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்' என்ற பெயரில் பேசி வந்தேன்.

மரங்கள் மீது கொண்ட காதலால், அவற்றை வளர்க்கத் துவங்கினேன். சொந்த கிராமத்தில், 1.41 ஏக்கர் நிலத்தில், மரங்களை நெருக்கமாக வளர்த்து, மரக்காடு உருவாக்கியுள்ளேன்; இங்கு, 1,100 மரங்கள் உள்ளன. அதன் நடுவே வீடு கட்டி, மனைவியுடன் வசிக்கிறேன். வீட்டின் மாடியிலிருந்து விழும் மழை நீரை, மூன்று தொட்டிகளில், 70 ஆயிரம் லிட்டர் சேகரித்து, மரங்களுக்கு பயன்படுத்துகிறேன். சின்ன இடத்தில் நெருக்கமாக வளர்க்கப்படும் மரங்கள், வேகமாக வளர்கின்றன. காட்டில் வளரும் மரங்களுக்கு இடையே, இடைவெளி கிடையாது; மரம், செடி, கொடி என அடர்ந்து வளரும். இந்த வகை காடுகளை, 'மியாவாக்கி' காடுகள் என்பர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, அக்கிராமியாவாக்கி என்ற தாவரவியலாளர் தான், இந்த அடர்ந்த வனத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர்.

என் மரக்காட்டில், பாரிஜாதம், சிங்கப்பூர் செர்ரி, செம்மரம் போன்ற, 100 மரங்கள் உள்ளன. மரங்கள் நமக்கு தாய் போன்றவை. அவற்றில் நல்ல மரம், கெட்ட மரம் என எதுவும் இல்லை; எல்லா மரங்களுமே மண்ணுக்கு தேவை. நம் நாட்டில், 1947க்கு முன், 47 சதவீதமாக இருந்த வனம், 24 சதவீதமாக சுருங்கியுள்ளது. தமிழகத்தில், 17 சதவீதம் மட்டுமே வனங்கள் உள்ளன. நான் மட்டும் காடு வளர்த்தால் போதாது என்றெண்ணி, விரும்பும் மாணவர்களுக்கு, காடு வளர்ப்பு மற்றும் வேளாண்மை பயிற்சி அளிக்கிறேன். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் பலர், பயிற்சிக்கு வருகின்றனர். நவீன வேளாண்மை குறித்து, எளிமையாக கற்றுக் கொடுக்கிறேன். இந்தப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள், விவசாயத் தொழில்நுட்பத்தை, நாடு முழுவதும் பின்பற்றி வருகின்றனர்.

இயற்கை வளப் பாதுகாப்புப் பணிகளை, 'பூமி' என்ற அறக்கட்டளை மூலம் மேற்கொண்டு வருகிறேன். மழை வளமும், நீர் வளமும், ஆரோக்கியமான காற்றின் வளமும் தான், மனிதர்களை வாழ வைக்கும். வெறும் சந்ததியினரால் மட்டும், வாழ வைத்து விட முடியாது. அதனால், மனிதர்களுடன் மரங்களையும் வளர்க்க வேண்டும். 'ஏசி'யையும், மின் விசிறியையும் பயன்படுத்துவது, கொள்ளிக்கட்டையால் முதுகை சொறிந்து கொள்ளும் கதை தான்!

--தினமலர் நாளிதழிலிருந்து
 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...