Sunday, 10 November 2019

நீண்ட இடைவெளிக்குப் பிறகு......



சரியாக 10 மாதங்கள் கழித்து பதிவிட துவங்கியதில் மிக்க மகிழ்ச்சி. கட்டிட பொறியியல் துறையின் உட்பிரிவான நீர்வள மேலாண்மை (Water Resources Management) பிரிவில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து 8 வருடங்கள் வாழ்க்கையில் ஒரு இன்ச் முன்னேற்றம் கூட இல்லை.....எங்கே செல்லும் இந்த பாதை....என்ற நிலையிலேயே சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. சில சமயங்களில் நாம் என்னதான் உருண்டு பிரண்டு அழுது முயற்சித்தாலும் நமது சூழ்நிலையிலிருந்தும் பிரச்சனையிலிருந்தும் வெளிவரவே முடியாது....ஒரே தீர்வு தொடர் முயற்சியும், பொறுமையும்தான்.

அந்த தருணங்களில் தான் படிப்பிற்கான நேரம் போக, சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள இணையத்தில் எழுத தொடங்கி அதன் மூலம் நிறைய வாசிக்கவும் துவங்கினேன். இடது புறத்தில் இருக்கும் "இவங்க என்ன சொல்றாங்க" பகுதியில் உள்ளவர்களை அப்படிதான் கண்டறிந்தேன். கடினமான காலங்களில் ஆறுதலாக இருந்த வலைதள பதிவுகள், பதிவர்கள், blogger தளம் மற்றும் எனது பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு உற்சாகபடுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.


கடந்த ஆண்டு ஜுலை முதலே நல்ல அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது......பெண் பார்ப்பு, நிச்சயதார்த்தம், திருமணம், ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், முனைவர் பட்டம், பகுதி நேரமாக டி தூள் விற்பனை(அஸ்ஸாமிலிருந்து), குழந்தையின் வருகை.....என எல்லாம் அடுத்தடுத்து முடிந்தது மாயம்மா சித்தர் அருளாசியினால். நண்பர்கள், பெற்றோர்கள், உடன்பிறப்புகள், மனைவி, கல்லூரி மற்றும் எனது மேற்பார்வையாளர் (Supervisor / Guide) ஆகியோர் மிகுந்த உறுதுணையாக இருந்தார்கள் எனது ஆய்வு படிப்பை முடிக்க.

போராட்ட காலங்களில் நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம், அந்த கஷ்டமான காலங்களை திரும்பி பார்க்கும் போது அதெல்லாம் ஒன்றுமே இல்லை இதற்காகவா இப்படி வருந்தினோம் மன நிம்மதியை இழந்தோம் என்று கூட தோன்றும். இந்த மன நிலையை விளக்க கவிஞர் கண்ணதாசன் அவர்களை அழைக்கட்டுமா......  அட அட அட என்னமா எழுதிருக்காரு நம்ம கவிஞர்.
"வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

வாடி நிற்க கூடாது
கண்ணீர் வடிக்க கூடாது
பொறுமையை இழக்க கூடாது
நமது கடமையை மறக்க கூடாது.....அவ்வளவுதான்...... வாழ்க்கை நாம கேட்டதை கொடுத்து வாழ்த்திட்டு போகும்.

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...