Friday 15 November 2019

அரிது அரிது....இவரை போன்றோரை பார்ப்பது அரிது

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆயங்குடி பள்ளம், பாக்கியராஜ் நகரில் வசிக்கும் நீலாம்பாள்: அரியலுார் மாவட்டம், தேவாமங்கலத்தைச் சேர்ந்த வாசுதேவன் என் கணவர். எனக்கு, 17 வயதில் திருமணம்; 10 ஆண்டுகள் குழந்தை இல்லை. போகாத கோவில் இல்லை. பல ஆண்டு கால வேண்டுதலுக்குப் பின், மூன்று குழந்தைகள் பிறந்தன. இரண்டு ஆண்கள்; மகள் பிறந்தனர். திருமணமாகி, 17 ஆண்டுகளில் கணவர் இறந்து விட்டார். மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய கட்டாயம்.

தலையில் கூடை சுமந்து, பழ வியாபாரம் செய்திருக்கிறேன்.பள்ளிக்கூடம் அருகே, சின்னதாக, பழ வியாபாரம் செய்து வந்தேன். தனியாளாக போராடி, மூன்று பேரையும் வளர்த்து, திருமணம் முதற்கொண்டு அனைத்தையும் சரியாக செய்து விட்டேன். இரண்டு மகன்களும் இறந்து விட்டனர்; மகள் லட்சுமி மட்டும் தான் இருக்கிறாள். அவளுக்கு வயது, 60. பள்ளிக்கூடம் அருகே, நான் பார்த்த, பழ வியாபாரத்தை அவள் செய்கிறாள். அவள் வீட்டில், பேரன் மற்றும் மகளுடன் வசிக்கிறேன்.

என் வயதை எண்ணிக் கொண்டு இருப்பதில்லை. எனக்கு, 102 வயது என்று, உறவினர்கள் தான் சொல்கின்றனர். உடம்பில் தெம்பு இருக்கும் வரை, தலைச்சுமையாக சுமந்து, பல இடங்களுக்கும் சென்று, பழங்களை விற்றேன்; இப்போது முடியவில்லை. 'நீ எதுவும் செய்ய வேண்டாம்; நாங்கள் சோறு போடுகிறோம்' என்கின்றனர், உறவினர்கள். ஆனால், என்னால் சும்மா உட்கார்ந்து, சோறு சாப்பிட முடியாது. கட்டையில் வேகும் வரை, உழைத்தபடி தான் இருப்பேன். 

காலையில், டீயை குடித்து விட்டு, ரயில்வே லைன் கரைக்கு, அரிவாளோட போவேன். குளஞ்சி தட்டையை அறுத்து, காய வைப்பேன். அதற்குள் சூரியன் உச்சிக்கு வந்து விடும். கேழ்வரகு அல்லது கம்மங்கூழை குடிச்சுட்டு, கொஞ்ச நேரம் தரையில் படுப்பேன். தட்டை காய்ந்ததும், அதை கம்பு வைத்து தட்டி, மூன்று, நான்கு கட்டுகளாக கட்டி, ஒரு கட்டு, 10 ரூபாய்னு விற்று, கிடைக்கிற பணத்தை வீட்டில் கொடுத்து விடுவேன். சாப்பிடும் சாப்பாட்டிற்கு, ஏதாவது முடிந்த வேலையைச் செய்ய வேண்டும் அல்லவா!

இரவு ஒரு வேளை மட்டும் தான், அரிசி சாதம் சாப்பிடுவேன். மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். நோய், நொடி என படுத்ததில்லை. இப்ப கொஞ்ச நாட்களாகத் தான், வயிற்றுப் பிரச்னை இருக்குது. கையும், காலும் நல்லா இருப்பதால், அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை வாங்கவில்லை. எனக்கு எதற்கு அந்தப் பணம்... இதுவரையிலும், யார் கிட்டேயும் இலவசமாக எதையும் வாங்கியதில்லை!

--தினமலர் நாளிதழிலிருந்து

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...