Tuesday, 12 November 2019

விதைத்த பின் அறுவடைக்கு போனால் போதும்!

எளிதாக வளரும் சிறுதானியமான, சாமை பயிரிடும், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் - பாலக்கோடு சாலையில் உள்ள, கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி காளி: எனக்கு, 3 ஏக்கர் நிலமிருக்கிறது. 1 ஏக்கரில், ஆரியம் எனப்படும் கேழ்வரகு, தலா, 30 சென்ட் நிலத்தில் சாமை, கம்பு பயிரிட்டு உள்ளேன். ஆடி, 18க்கு முன் விதைத்தேன்; ஆனியில் கிடைத்த மழைக்கு, உழவு ஓட்டினேன். டிராக்டர் உழவு கிடையாது. உழவுக்கு என, இரண்டு நாட்டு மாடு வைத்திருக்கிறேன். அதை வைத்து, நானே உழவு ஓட்டினேன். 1 ஏக்கருக்கு, 5 கிலோ சாமை விதை தேவைப்படும்.

விதையை வெளியில் வாங்குவதில்லை; விளைச்சலில் தனியாக எடுத்து வைத்து விடுவேன். உழவு ஓட்டிய வயலில், ஒரு கை விதையை, மூன்று விசிறு என, மூன்று முறை வீசினால் தான், பயிர்கள் கொத்தாக வளராமல், பரவலாக வளரும். சாமை மூன்று மாதப் பயிர். விதைத்து விட்டு விட்டால், அடுத்து, அறுவடைக்குப் போனால் போதும். நாட்டுச் சாமையைத் தான் விதைத்து விட்டுள்ளேன். தேவைப்பட்டால், ஒரு களை எடுத்தால் போதும். தானியம், பச்சை நிறத்துக்கு வந்ததும், அறுவடை செய்யணும். விற்பதற்கு கஷ்டமே இல்லை; சிறுதானிய உற்பத்தியாளர் சங்கத்தில் வாங்கிக் கொள்வர்!

பழனியம்மாள்: 70 சென்ட் நிலத்தில் தான், சாமை பயிரிட்டுள்ளோம். விதைப்பதற்கு ஒரு மாதம் முன், 30 நாட்களுக்கு அந்த இடத்தில், ஆட்டுக்கிடை போட்டிருந்தோம்; இரண்டு சால் உழவு ஓட்டினோம். வேறு எந்த உரமும் போடலை; பயிர்கள் செழிப்பாக வளர்ந்து உள்ளன. எப்படி போனாலும், நான்கு மூட்டை அதாவது, 400 கிலோ சாமை கிடைக்கும். 1 கிலோ, 40 ரூபாய்க்கு போனால் கூட, 16 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். உழவு, விதை மட்டும் தான் செலவு; மற்றதெல்லாம் லாபம் தான்! கவுரி: சாமை அரிசி சோறும், ராகி எனப்படும் கேழ்வரகு களியும் தான், இன்றும் எங்கள் வீட்டில் முக்கியமான சாப்பாடு. இரண்டையும், உரலில் கையால் குத்தி தான் தவிடு நீக்குகிறோம்.

ரேஷன் கடை வந்த பிறகு தான், நெல் அரிசி சாதத்தை அவ்வப்போது பார்க்கிறோம். முன்பெல்லாம், சோறு என்றாலே, சாமை அரிசி சோறு தான். கொள்ளுத்தண்ணீர் ரசத்தை, சாமை சோற்றில் கலந்து சாப்பிட்டா, அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும், நாட்டு மாட்டுத் தயிரை, பழைய சாமை சாதத்துல ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டால், அமிர்தம் போல இருக்கும். மழையை நம்பியே பயிரிடுகிறோம். விளைச்சல் கிடைக்கும் என நம்பி விதைக்கிறோம்; எதிர்பார்த்தது போலவே, நல்ல விளைச்சல் கிடைக்குது; நம்பிக்கையாக அறுவடையும் செய்கிறோம்; நல்ல விலையும் கிடைக்குது!

--தினமலர் நாளிதழிலிருந்து
 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...