Sunday, 29 May 2016

சதுரகிரி மலை பயணம்: 1

அறிமுகம்: ஒரு நாள் வலைதளத்தில் தேடிகொண்டிருந்தபோது சதுரகிரி மலையைப் பற்றி படிக்க நேர்ந்தது, பின் தேடி தேடி சக்தி விகடனில் வந்த சதுரகிரி பற்றிய தொடர் முழுவதையும் படித்தேன், அதிலிருந்து ஒரு முறையாவது சதுரகிரி மலையையும் அங்கு உறையும் மஹாலிங்கங்களையும் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.  நான்கு புறமும் மலையால்  சூழப்பட்ட இடமானதால் இத்தலம் சதுரகிரி என்று அழைக்கப்படுகிறது. பழமை வாய்ந்த கோவில்கள் சென்று இறைவனை தரிசிப்பது எனக்கு பிடித்த விஷயங்களுள் ஒன்று, அதிலும் குறிப்பாக மலை ஏறி தரிசிப்பது மிக மிக பிடித்த விஷயம், அப்படியிருக்கும் போது என் ஆர்வத்தை பற்றி கேட்கவா வேண்டும். 

எண்ணங்களின் நிறைவேற்றம்: நாம் எவ்வளவு உறுதியாகவும், விருப்பத்துடனும் எண்ணுகிறோமோ அவ்வளவு விரைவில் அந்த எண்ணங்கள் நிறைவேறும். மேலும் சித்தர்கள் என்ற வார்த்தையை கேட்டாலே, அவர்கள் சர்வ வல்லமை படைத்தவர்கள், பஞ்ச பூதங்களை வென்றவர்கள், அஷ்டமாசித்திகளை பெற்றவர்கள், சித்து விளையாட்டுகளில் தேர்ந்தவர்கள் என்ற எண்ணமும் அவர்களை பார்க்க வேண்டும் என்றும் தோன்றும். பதினென் சித்தர்கள் சதுரகிரியில் வாழ்ந்தார்கள், பக்தர்களுக்கு ஆசிவழங்கி வருகிறார்கள் என்ற செய்தியும் கூட மலைக்கு செல்ல மிக பெரிய தூண்டுதலாக அமைந்தது. 

திருச்சி-மதுரை-கிருஷ்ணன்கோவில்-வத்ராப்-தானிப்பறை-சதுரகிரி இதுதான் வழி. சதுரகிரி எங்கே இருக்கிறது?


(http://sathuragirihills.com/about-us/)

பயணம் ஆரம்பம்: 2011 மே 16 அன்று மலைக்கு நான் மட்டும் செல்வதாக முடிவெடுத்தேன், அடுத்த நாள் பௌர்ணமி. இதற்கு முன் அங்கு சென்றதில்லை என்றாலும் தோ ஒரு நம்பிக்கையில் கலை 10 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினேன். வழக்கமாக அம்மாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மலை ஏறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். திருச்சி மலைகோட்டை வாயிலில் பிள்ளையார் சந்நிதியை அடுத்து ஒரு புத்தக கடையில் முன்னர் ஒரு நாள் பார்த்து வைத்த "சதுரகிரி சித்தர்கள்" என்ற புத்தகத்தை வாங்கிகொண்டு மத்திய பேரூந்து நிலையத்தில் மதுரைக்கு வண்டி ஏறும் போது மணி 12 க்கு மேல் இருக்கும். நான் மதுரைக்கு செல்ல ஏறிய வண்டி சுற்று வண்டி போல, திண்டுக்கல் செல்லும் வழியில் மணப்பாறை வரை சென்று அங்கிருந்து கிராமங்கள் வழி சென்று துவரங்குறிச்சியில் பிரதான சாலையை அடைந்து ஒரு வழியாக 3.15 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது (இதுவும் நன்மைக்கே போக போக எழுதுகிறேன்). 

ஒரு சர்பத் குடித்துவிட்டு, cellphone recharge செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் வண்டிக்காக காத்திருந்தேன். செங்கோட்டை செல்லும் வண்டி என்று நினைக்கிறேன் கிளம்பியது இருக்கைகள் காளியாக இருந்ததால் அதில் ஏறி கடைசியில் அமர்ந்து கொண்டேன் அப்போது மணி 4. பயணசீட்டு (26 ரூபாய்) எடுக்கும் போதுதான் தெரிந்தது எனக்கு அருகில் உள்ளவரும் கிருஷ்ணன்கோவில் நிறுதத்தில்தான் இறங்கபோகிறார் என்று,  நானும் அங்குதான் இறங்க வேண்டும். திருச்சியில் வாங்கிய புத்தகத்தை படிக்கவேயில்லை ஒரே ஒரு முறை எந்த ஊரில் இறங்க வேண்டும் என்பதற்காக மட்டும் பார்த்து கொண்டேன். 

திருமங்கலம், T .கல்லுப்பட்டி தாண்டி 5.20 மணிக்கு கிருஷ்ணன்கோவிலில் இறங்கினேன், சாலையின் எதிர்புறம் சென்று வத்ராப் செல்லும் வண்டி ஏறினேன் அமர இடமில்லை நின்றுகொண்டுதான் செல்ல வேண்டி இருந்தது, அந்த பேரூந்தின் கடைசி இருக்கையில் இருந்த மூன்று பேரை  பார்ப்பதற்கு மலைக்கு செல்பவர்கள் போதோன்றியது. (கிருஷ்ணன்கோவிலில் இருந்து 5 நிமிடம் பயணம் செய்தால் "கலசலிங்கம் பல்கலைகழகம்"  வருகிறது.) அடுத்த ஒரு நிறுத்தத்தில் காவி வேட்டியும், T - Shirt ம் , ருத்ராட்சமும் அணிந்த ஒருவர் வந்து ஏறினார், கரூரில் உள்ள கருப்பசாமி கோவிலின் பூசாரியாம் அவர். அவரும் அங்கு அமர்திருந்த மூவரும் மலையை பற்றியும், சில அதிசய சம்பவம் பற்றியும் பேசிக்கொண்டு வந்தனர், அதிலிருந்து அவர்களும் மலைக்குத்தான் செல்கின்றனர் என்று உறுதியானது. எனக்கோ துணைக்கு ஆள் கிடைத்தார்கள் என்ற நிம்மதி. 

துணை: மாலை 5.55 மணிக்கு வத்ராப் வந்து இறங்கினோம். பூசாரியும் மற்ற மூவரும் கடைக்கு சென்று விட்டனர், நானோ தனியாக செல்வதினால் எவ்வளவு சீக்கிரமாக செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக மலைக்கு சென்று விட வேண்டும் என்று அவர்களுக்காக காத்திருக்காமல் செல்ல முடிவெடுத்தேன். Share auto ஓட்டுனர்கள் தாணிப்பாறை, தாணிப்பாறை என்று அழைத்துகொண்டிருந்தார்கள். அதில் கிளம்ப தயாராக இருந்த ஒரு ஆட்டோவில் பின்புறம் அமர்ந்தேன், அங்கு 3 பேர் அமரலாம் நான் மட்டும் தான் இருந்தேன். சற்று நேரத்தில் ஒரு முதியவரும் அவரது பையனும் வந்து ஏறினார்கள். நான் வந்த பேரூந்து (திருச்சி-மதுரை) மெதுவாக வந்ததால் வருத்தப்பட்டேன் ஆனால் இப்போது இவர்களுடன் செல்வதற்க்காகதான் தாமதமோ என்று தோன்றுகிறது, ஏனெனில் இந்த பயணம் முழுவதும் வர்கள் என்னுடன் வரபோகிரார்கள் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. 

திருச்சியை அடுத்து இருக்கும் சிறுகாம்பூர் அவர்களுடையது அந்த ஊரிலிருந்து காளிபட்டிக்கு (என் ஊர் ) பெண் கொடுத்திருக்கிறார்கள், காளிபட்டியிலிருந்து பெண் எடுத்தும் இருக்கிறார்கள். எனவே அவர் என்னுடன் நன்றாக பேசிக்கொண்டு வந்தார். 6.15 மணிக்கு தாணிப்பாறையை அடைந்தோம், அந்த இடம்தான் சதுரகிரி மலையின் அடிவாரம். கடைகள் நிறைய இருந்தன, மனித நடமாட்டமும் அதிகமாக இருந்தது. என்னுடன் வந்தவர் கடந்த 4 மாதங்களாக அனைத்து பௌர்ணமி நாட்களிலும் மலைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார், அதனால் அவருக்கு அனைத்து இடங்களும் தெரியும். ஆடோவிலிருந்து இறங்கியதும் (10 ரூபாய் ஒருவருக்கு) நேரே மூலிகை சூப் விற்ற கடைக்கு சென்று மூலிகை சூப் 3 (10 ரூபாய் ஒன்று) சொன்னார், சூப் வந்தது சற்றே காரமாகவும், தொண்டைக்கு இதமாகவும் இருந்தது. 

(http://www.panoramio.com/user/4246158/tags/Thaniparai)

மலையேற்றம்: 6.30 க்கு மலை ஏற ஆரம்பித்தோம், எங்கும் நிற்காமல் நடந்து சென்றால் சன்னதியை அடைய 4 மணி நேரம் ஆகும். என்னுடன் வந்தவரின் மகனை அவர் வேறு எங்கோ கூட்டிசெல்கிறேன் என்று சொல்லி இங்கு கூட்டி வந்துவிட்டார், அதனால் அந்த பையன் ஆரம்பத்தில் அவ்வளவாக பேசவில்லை போக போக பேச ஆரம்பித்துவிட்டான் அந்த பையனுக்கும் இது தான் முதல் முறை சதுரகிரி பயணம். அந்த பையன் இங்கு சாப்பிட்டு செல்லலாம் என்றவுடன் நான் என்னுடன் கொண்டுவந்திருந்த சப்பாத்தியை சாப்பிட்டு செல்லலாம் என்றேன். (நான் over  night journey எங்கு சென்றாலும் என் அம்மா எனக்கு பிடித்த சப்பாத்தியை செய்து கொடுத்து விடுவார்). பையனுடைய அப்பா கொஞ்சம் மேலே  போய் சாப்பிடலாம் என்று சொல்லி அழைத்துச் சென்றார். 

வெயில் சாய்ந்து மலை முழுவதும் நிழல் படர்ந்திருந்தது. அடிவாரத்திலிருந்து 10 நிமிடம் ஏறியதும் பாதையின் இடதுபுறம் 50 மீட்டரில் ஒரு அருவி உள்ளது அதில் வந்த களைப்பு தீர குளித்து மேலே ஏற ஆரம்பித்தோம். வழியில் இருந்த ராஜதங்ககாளியம்மன் காளியை தரிசித்து விட்டு அருகில் இருந்த இட்லிகடையில் 2 தட்டு இட்லி வாங்கி என்னிடம் இருந்த ஒரு packet சப்பாத்தியையும் சேர்த்து மூவரும் பகிர்ந்து உண்டோம். அது ஒரு அருமையான தருணம், சூரியன் முழுதுமாக மறைந்து பௌர்ணமி நிலா வெளி கிளம்பி கொண்டிருந்தது. இதுவரை மலையேற்றம் அனைத்தும் பகலில்தான், இதுவே முதல் முறை இரவில் மலை ஏறுகிறேன். இதிலிருந்து புரிந்து கொண்ட உண்மையை இறங்கி வரும் போது எழுதுகிறேன்............ 

சதுரகிரி மலை பயணம்: 2
சதுரகிரி மலை பயணம்: 3


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற