Saturday 24 February 2018

பொறியியல் இடங்களை ONLINE லேயே தேர்வுசெய்துகொள்ளலாம்: (Tamil Nadu Engineering Counselling Online)

வரும் கல்வியாண்டு முதல் (2018-2019) இன்ஜினியரிங் (B.E, B.Tech) மாணவர் சேர்க்கை ஆன்லைன் கவுன்சிலிங் மூலம்  நடத்தப்படும் இதற்க்காக தமிழகம் முழுவதும் 44 உதவி மையங்கள் அரசு கல்லூரிகளில் அமைக்கப்படும், என, உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியதிலிருந்து....

கடந்த ஆண்டு வரை மாணவர்களைச் சேர்ப்பதற்கான, ஒற்றை சாளர கவுன்சிலிங், சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் நடத்தப்பட்டு வந்தது, மாணவர்களும் பெற்றோரும் நேரடி கலந்தாய்விற்கு சென்னை சென்று வர வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் வரும் கல்வி ஆண்டில் இருந்து, அதாவது 2018 ஜூன் முதல், மாணவர் சேர்க்கையை, ஆன்லைனில் நடத்த, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

 மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்து, கணினி வழியாக விண்ணப்பித்து, ஆன்லைனில் விருப்ப பாடம் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்யலாம், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக உதவி மையம் சென்றாக வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைகாக 44 உதவி மையங்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்படும். மாவட்டத்தின் அளவைப் பொறுத்து மாவட்டந்தோறும் 1 அல்லது 2 மையங்கள் அமைக்கப்படும். இந்த உதவி மையங்களில், எந்த காரணத்திற்க்காகவும், தனியார் கல்லுாரிகள் ஈடுபடுத்தப்பட மாட்டாது.

இந்த மையங்களை, கவுன்சிலிங் நாளுக்கு மட்டுமின்றி, விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யவும் பயன்படுத்தலாம்; அதற்கும் வசதிகள் செய்யப்படும்.
கவுன்சிலிங்குக்கான தேதி, விண்ணப்ப பதிவு துவங்கும் நாள், கடைசி நாள், துணை கவுன்சிலிங் துவங்கும் தேதி, &'ரேண்டம்&' எண் மற்றும் தரவரிசை வெளியிடப்படும் தேதி போன்றவை, விரைவில் அறிவிக்கப்படும். 

கவுன்சிலிங் தொடர்பாக, விரிவான வழிகாட்டுதல், அண்ணா பல்கலையால் வழங்கப்படும். மேலும், கவுன்சிலிங்குக்கு பதிவு செய்வோருக்கு, சான்றிதழ்சரிபார்ப்பு நாளில், கல்லுாரிகளின் பட்டியல் அடங்கிய, கையேடுகள் தரப்படும். அதில் இருந்து, கல்லுாரிகளின் பதிவு எண், பெயர், மாவட்டம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். 
விளையாட்டு வீரர்கள், மாற்றுதிறனாளிகள், தொழிற்துறை படிப்பை முடித்தவர்கள் உள்ளிட்டோறுக்கான கலந்தாய்வும், துணை கலந்தாய்வும் நேற்முக கலந்தாய்வாக நடைபெறும்.
மேலும், கவுன்சிலிங்கை எப்படி அணுகுவது என்ற வழிகாட்டுதல், விண்ணப்ப படிவத்தின் மாதிரி, நிரப்பும் முறை போன்றவை, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில், விரைவில் வெளியிடப்படும்.

கவுன்சிலிங் நடக்கும் முறை :

ஆன்லைன் முறையில் இன்ஜி., கவுன்சிலிங் முறை குறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி உறுப்பினர் செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:

* முதற்கட்டமாக, விண்ணப்ப பதிவு தேதி அறிவிக்கப்படும். மாணவர்கள், தங்கள் வீட்டில் உள்ள கணிணி வழியாகவோ, அரசின் கவுன்சிலிங் உதவி மையங்கள் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

* ஒவ்வொரு மாணவரும், பயனாளர் அடையாள குறியீடு மற்றும் ரகசிய எண்ணை, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில் தயாரித்து கொள்ள வேண்டும். விண்ணப்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், ஆன்லைனில் பதிவு செய்யபடும். 

* விண்ணப்ப பதிவுக்கு பின், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். 
அனைவருமே (வீட்டில்இருந்தே ஆன் லைனில் பதிவு செய்தவர்களும் மற்றும்  உதவி மையத்தில் பதிவு செய்தவர்களும்) சான்றிதழ் சரி பார்ப்புக்கு உதவி மையம் வர வேண்டும். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்கள், புகைப்படத்துடன் வரவேண்டும்

* பின், மதிப்பெண் தரவரிசையை உறுதி செய்வதற்கான, ரேண்டம் எண்; தரவரிசை பட்டியல் அடுத்தடுத்து வெளியாகும். தர வரிசையின்படி, ஐந்து சுற்றுகளாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, ஆன்லைன் கவுன்சிலிங் நடக்கும். ஒவ்வொரு மாணவருக்கும், ஐந்து நாட்கள் கவுன்சிலிங் நடவடிக்கைகள் இருக்கும்.

* முதல் மூன்று நாட்கள், விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். விருப்ப பட்டியலில், ஒவ்வொரு மாணவரும், கணினியில் காட்டும் கல்லுாரிகள் மற்றும் இடங்களில், விருப்பப் பட்ட எண்ணிக்கையில், கல்லுாரிகளை தேர்வு செய்யலாம்

* முதல் நாள் முதல், மூன்றாம் நாள் மாலை, 6:00 மணி வரை, விருப்ப பதிவுக்கு, 66 மணி நேரம் அவகாசம் தரப்படும். 

* மூன்றாம் நாளில், மாலை, 6:00 மணியுடன் விருப்ப பட்டியல் பக்கம், &'லாக்&' செய்யப்படும். அன்று இரவே, மாணவர்களுக்கான தோராய மான இட ஒதுக்கீட்டை, இன்ஜி., கமிட்டி, ஆன்லைனில் வழங்கும். மாணவர்கள் அதை பார்த்து, நான்காம் நாளில் உறுதி செய்து, ஆன்லைனில் பதில் அளிக்க வேண்டும்.

* ஐந்தாம் நாளில், அவர்கள் உறுதி செய்த இடம் ஒதுக்கப்பட்டு, டிஜிட்டல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். ஒரு முறை ஒதுக்கீடு பெற்றவர் கள், அதை ரத்து செய்யலாம்; மீண்டும் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.

* தரவரிசைப்படி, மாணவர்களுக்கு ஒதுக்கபட்ட நாட்களில், ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்களின் பெயர், மதிப்பெண் அடிப்படையில், அடுத்த சுற்றுக்கு வந்துவிடும். அடுத்த சுற்றில், எந்த கல்லுாரிகளில் இடங்கள் இருக்கிறதோ அவற்றில், இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

--தினமலர் மற்றும் தினமணியிலிருந்து.


தொடர்புடைய  பதிவுகள்:
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது? 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று

 

Monday 19 February 2018

ஒருவர் ‘டிகிரி’ ஒருவர் ‘அக்ரி’: மரத்தடி பஞ்சாயத்து தந்த மாற்றம்

கிராமத்துப் பெரியவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசுவதை பல படங்களில் பார்த்திருக்கலாம். பெரும்பாலும், அந்த பஞ்சாயத்துப் பேச்சுகள் நகைச்சுவை, நையாண்டியாகவே இருக்கும். ஆனால், தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு கிராமத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் கூடிப் பேசி எடுத்த முடிவு, அந்த கிராமத்தையே ஓர் உதாரண கிராமமாக மாற்றியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிராமம் சிந்தகம்பள்ளி. ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதி. இங்கு மின்சாரம் இல்லை, சாலை வசதி கள் இல்லை, பள்ளிக்கூடங்கள் இல்லை. இதெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. அப்போது, சிந்தகம்பள்ளி கிராமமே கூடி ஒரு முடிவெடுத்தது.


 (சிந்தகம்பள்ளியின் அழகிய தோற்றம்)

‘‘ஒரு குடும்பத்துல ரெண்டு புள்ளைங்க இருந்தா, ஒரு புள்ளைய படிக்க வைக்கணும்.. இன்னொரு புள்ளைய விவசாயத்துல இறக்கிடணும்..’’ இதுதான் அந்த தீர்மானம். ஊரில் இருந்த படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழை, பணக்காரர் எல்லோரும் இந்த தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொள்ள, வெறும் வாய் வார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. ஒப்புக்கொண்டபடி, ஒவ்வொரு வீடும் ஒரு பட்டதாரியையும், நல்ல விவசாயியையும் உருவாக்கத் தொடங்கியது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, என்எல்சி-யில் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய சவுந்தரபாண்டியன், தஞ்சையின் பிரபல கண் மருத்துவர் நவமணி, பொதுப்பணித் துறையில் முதன்மைப் பொறியாளராக இருந்த இளங்கோவன், திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநராக இருந்த குப்புசாமி.. என்று இந்த ஊர் உருவாக்கிய பிரபலங்கள் பட்டியல் நீள்கிறது. அது மட்டுமின்றி, ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு அலுவலர்களை அந்தக் காலத்திலேயே உருவாக்கிய பெருமையும் இந்த ஊருக்கு இருக்கிறது. படிப்போடு விவசாயமும் தழைத்ததில் அனைத்து வசதிகளும் பெற்ற உதாரண கிராமமாகவே மாறியது சிந்தகம்பள்ளி.

 
வேளாண் உதவி இயக்குநராக இருந்த குப்புசாமி கூறும்போது, “அந்த காலத்துல யாரும் பள்ளிக்கூடத்துக்குப் போகவே மாட்டாங்க. பள்ளிக்கூடம்னாலே வேப்பங்காயா கசக்கும். அதுவும், கிருஷ்ணகிரி மாதிரியான பின்தங்கிய மாவட்டத்துல சொல்லவே வேண்டாம். இப்பவும் கல்வி அறிவே இல்லாத பல கிராமங்கள் இங்கு இருக்கின்றன. ஆனா, எங்க முன்னோர்களுக்கு ஏதோ ஞானம் பிறந்திருக்கு. யார் எடுத்த முடிவு என்றெல்லாம் தெரியல. வீட்டுக்கு ஒருத்தர் பட்டப்படிப்பு படிக்கணும், ஒருத்தர் விவசாயத்துல ஜொலிக்கணும்னு சொல்லி வச்சுட்டாங்க. அதேபோல, ஒவ்வொரு வீட்லயும் ஒரு பட்டதாரி உருவாகி பெரிய பெரிய வேலைகளுக்குப் போனாங்க. விவசாயத்தைப் பார்த்துக்கிட்டவங்களும் பெரிய ஆளா வந்தாங்க. இது எவ்வளவு பெரிய சிந்தனை!ஆனால், வருஷம் ஆக ஆக சூழல் மாறிப்போச்சு. ஆறுகளெல்லாம் காஞ்சு, விவசாயம் பொய்த்துப் போச்சு. பட்டப்படிப்பு படிச்சவங்க ஓரளவுக்கு செட்டில் ஆகிட்டாங்க. விவசாயத்துல ஈடுபட்டவங்க நிலைமைதான் கஷ்டமா இருக்கு. விவசாயமும், கல்வியும் சமமா இருந்த ஊர்ல இன்னைக்கு எங்க கண்ணு முன்னாலயே விவசாயம் நொடிஞ்சு போறதை பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கலை’’ என்றார். சிந்தகம்பள்ளியில் வீட்டுக்கொரு பட்டதாரி உருவாக காரணமானவர்களில் ஒருவர் அந்த ஊரைச் சேர்ந்த சிவராஜ் வாத்தியார். இதே ஊரில் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஒவ்வொரு பட்டதாரி யும் இவரது வார்ப்புகள்தான். ஆரம்பக் கல்வியை அவர்தான் புகட்டியிருக்கிறார். அதே ஊர்க்காரர் என்பதால் கண்டிப்பும், கனிவும் கலந்து அவரிடம் படிக்கும் பிள்ளைகளை அரவணைத்தவர்.

‘‘இப்பகுதி பிள்ளைகள் நன்கு படித்து, முன்னேற வேண்டும் என்ற முனைப் போடு பணியாற்றினேன். என்னிடம் படித்த பலரும் இப்போது பெரிய பதவி யில் இருக்கிறார்கள். அதை நினைக்கும் போது பெருமையா இருக்கு’’ என்றார். ஒருவேளை, எதிர்காலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டாலும், குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் அரவணைத்துச் சென்றுவிடுவார்கள் என்ற தொலைநோக்குப் பார்வையில்தான், வீட்டுக்கு ஒருவர் விவசாயம், ஒருவர் பட்டப்படிப்பு என்று 75 ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்திருக்கின்றனர். தற்போது, ஆந்திராவில் தடுப்பணை கள் கட்டியது போன்ற காரணங்களால் தண்ணீர் வரத்து நின்றுவிட்டாலும், விவசாயத்துடனான உறவை இந்த கிராமத்தினர் இன்னும் விட்டுவிடவில்லை. படித்துவிட்டு பணியாற்றி வருபவர்கள்கூட நேரம் கிடைக்கும்போது விவசாயத்தை கவனிக்கின்றனர். படிப்பில் கவனம் செல் லாத பிள்ளைகளை விவசாயத்தின் பக் கம் மடைமாற்றுகின்றனர். ‘ஒரு பட்டதாரி, ஒரு விவசாயி’ என சிந்தகம்பள்ளி கிராமம் வகுத்து தந்த கொள்கை, இந்த நாட்டுக்கானது. அது சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து
ஒருவர் ‘டிகிரி’ ஒருவர் ‘அக்ரி’: மரத்தடி பஞ்சாயத்து தந்த மாற்றம்


Sunday 18 February 2018

முப்பொழுதும் உற்சாகமுடன் இருக்க: உயர்ந்தவற்றிற்கு ஆசைப்படு


தொலைநோக்குடன் வாழ்வதன் முக்கியத்துவம் பற்றிக் கூறும் ஜெகதீஷ் வாசுதேவ்: எவ்விதமான தொலைநோக்கும் இன்றி, ஏதோ ஒன்றை செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இன்றி, இங்கு ஒருவர் வாழ வேண்டுமெனில் அதற்கு ஒரே வழி, அவர் கள்ளங்கபடமற்றவராகவும் அகங்காரம் அற்றவராகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர் மட்டும் தான் இங்கே சும்மாவே ஆனந்தமாக வாழ முடியும். அவருக்கு தொலைநோக்கும் தேவையில்லை, அல்லது எதைப் பற்றிய விருப்பமும் கிடையாது. ஆனால் ஒருவர் இந்நிலையில் இல்லாவிட்டால், அவர் தொலைநோக்குடன் வாழ்வது மிகமிக அவசியம்.

இன்று மனிதனின் விருப்பத்திலும், தொலைநோக்கிலும் ஒரு தெளிவு இல்லை. உலகிலுள்ள பெரும்பான்மையான மக்கள் தாங்கள் உண்மையிலேயே என்ன விரும்புகிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை 'வாழ்ந்து' கொண்டிருக்கிறார்கள். அல்லது, தான் விரும்புவது என்ன என்று தெரிந்திருந்தும், தங்களுக்கு வேண்டியதை நடத்திக் கொள்ளும் மனஉறுதியோ, தொலைநோக்கோ அவர்களுக்கு இருப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் மக்கள் தங்களுக்கு எது மிக எளிதாகக் கிடைக்கிறதோ, தங்கள் கைகளுக்கு எது எட்டுகிறதோ, அதுவே போதும் என்று இருந்து விடுகின்றனர். 

ஏதாவது ஒன்று எளிதாகக் கிடைக்கிறதென்றால், அது வேண்டுமா, வேண்டாமா என்றெல்லாம் பார்க்காமல், அதை அடைவதற்கு மக்கள் தயாராகி விடுகின்றனர். எளிதாகக் கிடைக்கிறது, அது ஒன்றே போதும் அவர்களுக்கு! கடந்த ஆயிரம் ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளி சூழ்நிலையில் அதிசயத்தக்க மாறுதல்களை மனிதன் செய்திருக்கிறான். ஆனால் அதே நேரத்தில், 'கிடைப்பதையெல்லாம் அடைய வேண்டும்' என்ற ஒரு எண்ணத்தால், தனக்கும் இவ்வுலகிற்கும் அவன் மாபெரும் அநீதியை இழைத்திருக்கிறான். இலட்சம் வருடங்களில் நடக்காதது, கடந்த 1000 வருடங்களில் நடந்திருக்கிறது. அதே நேரத்தில், 'எளிதாகக் கிடைப்பதெல்லாம் வேண்டும்' என்று, வேண்டாதவைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறான். தனக்கு உண்மையிலேயே தேவையற்ற பலவற்றையும் அவன் செய்திருக்கிறான். இவ்வுலகில் மனிதன் செய்திருக்கும் பலப்பல மாற்றங்கள், இன்று அவனுக்கே தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்துமே 'செய்வதற்கு எளிது' என்ற ஒரு காரணத்தாலேயே அவனால் செய்யப்பட்டது.

தேவையான தொலைநோக்கு இல்லாமல், தனக்கு தோன்றியதை எல்லாம் செய்துவிட்டு, ஐம்பது ஆண்டுகள் கழித்து அதன் விளைவுகள் தெரியும் போது, மனிதன் மனம் நொந்து கொள்கிறான். தனக்கு உண்மையிலேயே என்ன தேவை, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கவனம் இன்றி, 'கிடைப்பதையெல்லாம் அடைய வேண்டும்' என்ற கண்ணோட்டத்தில் அணுகுவதால், வரமாய் இருந்திருக்க வேண்டிய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இன்று சாபக்கேடாய் ஆகியிருக்கிறது. இது போன்ற கண்ணோட்டத்தில் வாழ்வைத் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டுவிட்டதால், அவனின் வாழ்வை சுலபமாகவும், சுகமாகவும் மாற்றவல்ல விஞ்ஞானம், இன்று அவன் வாழ்வை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தொலைநோக்கும், மனஉறுதியும் இன்று இவ்வளவு குறைவாக இருக்கக் காரணம், சுற்றி இருக்கும் உலகை நாம் தவறாகப் புரிந்து கொண்டிருப்பது தான். இந்த நொடியில் உலகின் போக்கு எப்படியிருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டே நம் வாழ்வை நிர்மாணிக்க முயல்கிறோம். தற்போதைய நிலவரத்திற்கு ஒத்து, தொலைநோக்கை முடிவு செய்தால், மீண்டும், எது கிடைக்குமோ, எது எளிதாக நடக்குமோ, அதற்கே முன்னுரிமை வழங்குவோம். அதனால், எதை அடையமுடியும், எதை அடையமுடியாது என்று யோசிக்க வேண்டாம்.
வாழ்வில் எதை உச்சபட்சமாக அடைய முடியுமோ அதை உங்கள் தொலைநோக்காகக் கொள்ள சிந்தியுங்கள். உங்களைப் பொறுத்தவரை உயர்ந்தது எதுவோ, அதற்காக வாழுங்கள். அது நடக்குமா, நடக்காதா என்பது பற்றி கவலையில்லை. அது நடக்கிறதோ, இல்லையோ, அத்தகைய தொலைநோக்குடன் வாழ்வதே மிக உயர்வானதாக, நிறைவைத் தருவதாக இருக்கும். அப்படி வாழ்வது யாருக்குமே மகிழ்ச்சி தரும் செயலாக இருக்கும். உங்களுக்கென்று ஒரு தொலைநோக்கு வைத்திருக்கிறீர்கள்… அது எளிதானதா, கடினமானதா என்று உங்களுக்கு கவலையில்லை, அதை சாதிக்க முடியுமா, முடியாதா என்ற தயக்கம் இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அதன் முடிவைப்பற்றி உங்களுக்குக் கவலையில்லை. ஆனால் உங்கள் தொலைநோக்கிற்காக உங்கள் உயிரையும் கொடுக்க சித்தமாயிருக்கிறீர்கள். இப்படி வாழ முடிந்தால், இதுவே உன்னதமான நிலைகளை அடைவதற்கு மிக எளிய வழியாக இருக்கும். 
 உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது மட்டுமே கண்ணாக, வேறு எப்பக்கமும் கவனம் சிதறாமல், அது நடக்குமா நடக்காதா என்ற யோசனை இல்லாமல், உங்கள் உயிரையும் அதற்கென கொடுத்திடுங்கள். அவ்வாறு இருந்தால், அது நமக்குள்ளும், வெளியேயும் இருக்கும் தடைகளை தாண்டிச் செல்ல உதவுவதோடு, வாழ்க்கை, உயிர், மற்றும் அதைத் தாண்டிய பரிமாணங்களை அறிவதற்கும் வழிவகுக்கும். மனிதர்கள் எப்போதும் குழம்பிய குட்டையாய், தங்களுக்கு வேண்டாதவற்றையே பெரும்பாலும் தேடிக் கொண்டிருப்பதால் தான், அவர்களுக்கு வேண்டியது அவர்களுக்குக் கிட்டுவதில்லை. வாழ்வின் எக்கணத்திலும், நாம் கடந்து வந்திருக்கும் சூழ்நிலைகளையே அளவுகோலாகக் கொண்டால் அல்லது நம் தர்க்க அறிவிடம் ஒன்று முடியுமா, முடியாதா என்று நாம் கேட்டால், அது எப்போதுமே சராசரியான விஷயங்கள் மட்டுமே சாத்தியம் என்று சொல்லும். ஆனால் ஒருவருக்கு அவரது தொலைநோக்கு தெள்ளத் தெளிவாக இருந்தால், தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், அதுவே வேண்டும் என்று அவர் ஏங்கினால், மிகமிக உயரியவையும் அவர் காலடியில் வந்து விழும்.

இது சாக்ரடீஸின் வாழ்வில் நடந்தது: சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணத்தால், துரதிர்ஷ்டவசமாக அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தன் தண்டனைக்காக அவர் காத்திருந்த அந்த கடைசி சில வாரங்களில், அவருக்கு இசையின் மீது ஆர்வம் பிறந்தது. தன் வாழ்வில் அதுவரை அவர் தத்துவமேதையாகவே அறியப்பட்டார். அவரும் அவ்வாறே இருந்தார். இசையின் மீது அப்படி ஒன்றும் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, கடைசி சில வாரங்களே இருந்த போது அவருக்கு இசையின் மீது நாட்டம் வந்தது. அந்தக் கடைசி வாரங்களிலே இசையைக் கற்க ஆரம்பித்து, மிக அற்புதமாகவே இசைக்க ஆரம்பித்துவிட்டார். இசையின் வாயிலாக தன் வாழ்வையே புதுவிதமாய் அனுபவிக்கத் துவங்கினார் அவர். திடீரென அவருக்கும், அவரது வாழ்விற்கும் இசை ஒரு புதிய அழகை ஏற்படுத்தியது. அன்று அவரைக் கொல்லாமல் இருந்திருந்தால், ஒருவேளை அவர் ஒரு பெரிய இசைக் கலைஞனாய் வளர்ந்திருக்கலாம். நாமும் அவரை தத்துவமேதையாக அல்லாமல், இசைவல்லுநனராய் அறிந்திருப்போம். இதுபோல், ஒரு மனிதன் முடிவு செய்தால்… தன் வாழ்நாளின் கடைசி வாரங்கள் என்றாலும், அந்தக் கடைசி நாட்களிலும் கனவு காண்பதற்கும், அதை நிறைவேற்றிக் கொள்வதற்குமான மனோதிடமும், உறுதியும் அவனுக்கு உண்டு.

இவையெல்லாம் தெள்ளத் தெளிவாய் உணர்த்தும் ஒரு விஷயம் - உங்களுக்கு என்ன வேண்டும் என்பது உங்களுக்குத் தெளிவாக இருந்தால், அதுதான் எல்லாம் என்று நோக்கம் வைத்திருந்தால், இன்று மிகக் கடினமாகத் தோன்றுவது கூட, நாளையே உங்கள் வாழ்வில் சராசரி விஷயமாகிவிடும். எவ்வித ஆரவாரமும் இன்றி, உங்கள் காலடியில் அது வந்து விழும். ஆனால் ஒவ்வொரு கணமும், 'இது முடியுமா, முடியாதா' என்று உங்கள் தர்க்க அறிவை நீங்கள் கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருந்தால், உங்கள் மனதில் நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் குழப்பமே, இவ்வுலகிலும் பிரதிபலிக்கத் துவங்கிவிடும்.

உங்களுக்கென்று ஒரு தொலைநோக்கை உருவாக்கிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அது, இன்றைக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றி அல்ல. ஒரு மனிதனாக, உங்களுக்கு உண்மையிலேயே வேண்டியது என்ன? உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய விரும்பும் மிக உயரியது எது? என்று பார்த்து அதற்கான தொலைநோக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரேயொரு மனிதனுக்கு தொலைநோக்கு இருந்து, மற்றவர்கள் எல்லாம் அதற்கு எதிராக வேலை செய்தால், மிகக் குறைந்த அளவில்தான் அதை நோக்கிய முன்னேற்றம் இருக்கும். ஆனால் பலர் ஒன்றாக இணைந்து ஒரே தொலைநோக்கில் செயல்பட்டால், மிகமிக அழகான விஷயங்கள் நம் சமுதாயத்தில் நிகழும்!

--தினமலர் நாளிதழிலிருந்து.


Saturday 10 February 2018

நாட்டு ரக விதைகள் வேணுமா?

பட்டணத்துப் பண்பாடு, கிராமங்களில் கால்பதிப்பதற்கு முன்புவரை பெரும்பாலும் ‘கூரை’ வீடுகள்தான் இருந்தன. கூரைகளில் ‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’யை விஞ்சும் அளவுக்கு சுரைக்காய், அவரை, பாகல், பீர்க்கன் என கொடிகளுக்கு இடம்கொடுத்தனர், முன்னோர். ஆனால், நாகரிகம் வளரவளர… கூரை வீடுகள் மாடி வீடுகளாக மாறியதில், வீட்டுத் தோட்டங்களும் காணாமல் போயின. அதோடு, காணாமல் போனது, நமது நாட்டு விதைகளும்தான். கூடவே, பசுமைப் புரட்சியின் விளைவால், வீரிய விதைகள் வேகமாகப் பரவ, சுத்தமாகவே நாட்டு விதைகள் வழக்கொழிய ஆரம்பித்தன. இத்தகையச் சூழலில் மீண்டும், இயற்கை மீதான பாசம் பெருக ஆரம்பித்திருப்பதால், மாடித் தோட்டங்களும் வீட்டுத் தோட்டங்களும் செழிக்க ஆரம்பித்துள்ளன. இதோடு, நாட்டு விதைகளையும் விவசாயிகள் தேட ஆரம்பித்திருப்பது… மகிழ்ச்சிக்குரிய செய்தி!

கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்ட நாட்டு ரக விதைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கும் பாரம்பரிய விதைகள் என்று அனைத்தையும் தேடிப்பிடித்து, சேகரித்து, பாதுகாத்து, பயிர் செய்து விதைகளைப் பெருக்கி வருகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள் பலரும்! இந்த வரிசையில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ளது, சேலம் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு.

விஷயத்தைப் புரிய வைத்த வீரிய விதை!
‘வசிஷ்டா கிராம விதை வங்கி’ என்ற பெயரில், சேலம் மாவட்டம், புத்திரக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் செயல்படத் துவங்கியுள்ள விதை வங்கியில், உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஜெயராமனைச் சந்தித்தோம்.
”விவசாயத்து மேல நம்பிக்கை இல்லாம இருந்த சூழ்நிலையில, ‘எதிர்கால விவசாயமாவது லாபகரமா மாறட்டும்’னு சொல்லி, ஏழு வருஷத்துக்கு முன்ன அபிநவம் கிராமத்துல உழவர் மன்றம் ஆரம்பிச்சோம். இது மூலமா விவசாயிகளுக்குப் பயிற்சிகள் கொடுத்து, விவசாயிகளையும் விற்பனையாளரா மாத்தின பிறகு, எங்களுக்கு ஓரளவு லாபம் வர ஆரம்பிச்சுது. ஒரு வருஷத்துக்கு முன்ன தனியார் விதை கம்பெனிக்காரங்க ‘எஃப்-1’ விதை உற்பத்திக்காக எங்க உறுப்பினர்களைப் பயிர் செய்யச் சொன்னாங்க. அவங்க சொன்னபடி நாங்களும் விதையை உற்பத்தி செஞ்சு கொடுத்தோம். ஆனா, பணம் கொடுக்கல. ஏன்?னு கேட்டத்துக்கு ‘விதை தரமா இல்லாததால சான்று கிடைக்கலை’னு சொன்னாங்க. ஆனா, தரமற்ற அந்த விதையை விவசாயிங்க தலையில கட்டி கோடிக்கணக்குல லாபம் பார்த்தாங்க. எஃப்-1 விதையை ஒவ்வொரு முறையும் வாங்கிப் போடும்போது அதிக செலவாகும். ஆனா, அந்த விதை ஒரு முறைதான் நல்ல மகசூல் கொடுக்கும். அதுல இருந்து விதை எடுக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழல்ல… ‘உரம், பூச்சிக்கொல்லிக்கு அதிகமா செலவாகுதுனு சொல்லி, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சாங்க எங்க விவசாயிங்க. அப்பதான் ‘இயற்கை விவசாயத்துக்கு ஒட்டு விதைகள் ஏத்ததில்லை’னு புரிஞ்சுது. இதுக்குப் பிறகுதான் நாட்டு விதைகளைத் தேட ஆரம்பிச்சோம். கிடைச்ச விதைகளைப் பயிர் பண்ணி, விளைச்சலை அறுவடை பண்ணி சந்தைக்குக் கொண்டு போனப்ப… அந்த காய்களுக்குக் கூடுதல் விலை கிடைச்சுது. இதுக்குக் காரணம், எங்க தோட்டத்துக் காய்களோட சுவைதான். ஒட்டு விதைகளை விதைச்சு, உரம் போட்டு, மருந்தடிச்சு, பண்டுதம் பார்த்து கிடைக்கிற வருமானம் மொத்தமும் செலவுக்கே சரியாபோயிடும். ஆனா, பாரம்பரிய விதை களை இயற்கை முறையில விளைய வைக்கிறப்போ, செலவும் குறைவு. வருமானமும் கிடைக்குது. இந்த உண்மை இப்போதான் எங்களுக்கு உறைச்சிருக்கு” என்ற ஜெயராமன், தொடர்ந்தார்.
வகை வகையான பாரம்பரிய விதைகள்!
”பாரம்பரிய நெல் ரகங்கள், பயறு வகைகள், சிறுதானிய ரகங்கள், காய்கறி ரகங்கள்னு பலவிதமான பாரம்பரிய விதை ரகங்களை தனி ஆளா சேகரிச்சு, பாதுகாக்க முயற்சிகள் செஞ்சா சரிப்பட்டு வராதுனு, ‘சேலம் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு’னு ஆரம்பிச்சு… அது மூலமா பாரம்பரிய விதைகளைச் சேகரிக்க ஆரம்பிச்சோம். உழவர் மன்றங்களின் அறிமுகமும், ‘பசுமை விகடன்’ மூலமா கிடைச்ச விவசாய நண்பர்களும் விதை சேகரிப்புக்கு உதவியா இருந்தாங்க. தமிழ்நாடு முழுக்க சுத்தி 64 பாரம்பரிய நெல் ரகங்கள், 8 வகையான சிறுதானிய ரகங்கள், 6 வகையான பயறு ரகங்கள், 37 வகையான நாட்டுக் காய்கறி ரகங்கள் பாரம்பரிய விதைகளைச் சேகரிச்சிருக்கோம். ஆத்தூரைச் சுத்தி இருக்குற உழவர் மன்ற உறுப்பினர்களுக்கு விதைகளைக் கொடுத்துட்டு இருக்கோம். 

விதை தேவைப்படுறவங்களுக்கு ஒரு நிபந்தனை இருக்கு. ஒரு பங்கு விதை வாங்கினா, நாலு பங்கு விதையா திருப்பிக் கொடுத்திடணும். விவசாயிங்க, அவங்க கிட்ட இருக்குற ஒரு ரக விதையைக் கொடுத்திட்டு, இங்க இருக்குற வேற ரக விதையை வாங்கிக்கலாம். வீட்டுத் தோட்டம் போடுறவங்களுக்காக சாம்பிள் பாக்கெட்டுகளா போட்டு, ஒரு பாக்கெட் 15 ரூபாய்னு விற்பனை செய்றோம்” என்ற ஜெயராமன் நிறைவாக, ”பாரம்பரிய நெல் ரகங்கள் ‘பசுமை விகட’னோட முயற்சியால விவசாயிங்க மத்தியில பரவி இருக்கு. இதேமாதிரி காய்கறி விதைகளையும் பரப்பணும் அப்படிங்கிற ஆசையில இருக்குறோம். இன்னும் ரெண்டு வருஷத்துல, நாட்டுக் காய்கறி ரகங்கள் அத்தனையும் விவசாயிங்க மத்தியில பரவிடும்” என்றார், மகிழ்ச்சியாக!
தொடர்புக்கு, ஜெயராமன்,
செல்போன்: 99424-43055
--விகடன் இணைய இதழிலிருந்து 


இயற்கையின் மகிமை!

நாட்டு ரக விதைகளின் தாயான, இயற்கை விவசாயி, ஒம்பாலம்மா: கிருஷ்ணகிரி மாவட்டம், தளியிலிருந்து மைசூரு செல்லும் சாலையில் உள்ள ஆலப்பன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவள் நான். 20 ஆண்டுகளுக்கு முன், தளியில் நடந்த இயற்கை விவசாயம் குறித்த கூட்டத்தில், கலந்து கொண்டேன். அதில், இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு ரக விதை குறித்து விளக்கினர். அதன் பின் தான், நாட்டு விதைகள் மீது பாசம் வந்தது. நாட்டு விதைகளை பயிர் செய்யும் போது, அவற்றில் இருந்தே விதைகளை எடுத்துக் கொள்ளலாம். அப்படி, நான் விளைவித்த பயிர்களில் இருந்தே, எனக்கு விதைகள் கிடைக்கத் துவங்கியதால், அடுத்தவரிடம் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. 


எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக, 2 ஏக்கர் நிலம் உள்ளது. அது, மேட்டு நிலம் என்பதால், மழை வந்தால் தான் விதைப்பேன். மலையை ஒட்டியுள்ள வனத்துறைக்குச் சொந்தமான நிலத்திலும், மானாவாரி விவசாயம் செய்கிறேன்.பெரும்பாலும், கேழ்வரகை தான் மானாவாரியாக சாகுபடி செய்வேன். வீட்டுக்கு அருகில் சிறிய காய்கறி தோட்டத்தை அமைத்து, அதன் மூலமாகவும் விதைகளை பெருக்குகிறேன்.

வட்டம், லிங்கம், பந்து என, மூன்று வடிவங்களில் பூசணி விதைகள் உள்ளன. நாட்டு பூசணி விதைகளில் காய்க்கும் காய்கள், சுவையாக இருப்பதோடு, வாட்டமாகவும், கடினத்தன்மை உடையதாகவும் இருக்கும்.கோலி வடிவத்தில் இருக்கும் பாகல் விதை, மலைப்பகுதியில் மட்டுமே விளையக் கூடியவை; அரிதான ரகம். பாகற்காய்க்கு உரிய தன்மை மாறாமல் இருக்கும். இவை போல் கத்தரிக்காய், தக்காளி, அவரை, மிளகாய், கடலை, மொச்சை, சுரைக்காய், கடுகு, சூரியகாந்தி, வெள்ளரி, வரகு, சாமை, கீரை வகைகள் என, நாட்டு விதைகளை சேகரித்து வைத்திருக்கிறேன். நாட்டு ரக பயிர்களை சாகுபடி செய்யும் போது, பெரும்பாலும் பூச்சிகளே வருவதில்லை. அதுபோல, ஆமணக்கு பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்தால், பூச்சி தாக்குதல் இருக்காது.

ஆமணக்கு எண்ணெயை தலைக்கு தேய்த்து வருவதால், 67 வயதிலும் தலைமுடி நரைக்கவில்லை. இதுதான் இயற்கையின் மகிமை.காய்கறி மற்றும் சிறு தானியங்கள் என, மொத்தம், 31 வகையான, நாட்டு ரக விதைகளை பத்திரப்படுத்தி, விற்பனை செய்து வருகிறேன். தமிழகம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விதைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். நான் சொல்லும் விலையை விட, அதிக தொகை கொடுத்து பலர் வாங்குகின்றனர். இதன் மூலமாக வரும் வருமானத்தை, பெரிதாக எண்ணுவதில்லை. நாட்டு ரகங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே, என் ஆசை!
--தினமலர் நாளிதழிலிருந்து


Thursday 8 February 2018

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதா? இங்கே சரிபார்த்துக்கொள்ளலாம்

நமக்கு தெரியாமல் நம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளதா? இந்தச் சந்தேகத்தைப் போக்கும் வகையில் UIDAI அமைப்பு ஒரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, கடந்த 6 மாதங்களில் நம் ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை நிமிடங்களில் இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அப்படிப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை UIDAIன் தொலைபேசி எண்ணான 1945-க்கு அழைத்துப் புகார் செய்யலாம்.இந்தத் தகவலை எப்படி பார்ப்பது? ஆதார் என்ணுடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.
1) முதலில் https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இணைய முகவரியைத் திறந்துகொள்ளுங்கள்.
 
2)  'Aadhaar Authentication History' என்ற இடத்துக்குக் கீழிருக்கும் பெட்டியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்யவும்.

UIDAI

3) பின்னர் 4 இலக்க செக்யூரிட்டி கோடை அருகிலிருக்கும் பெட்டியில் பார்த்து டைப் செய்து, GENERATE OTP என்பதை க்ளிக் செய்யவும்.

4) ஆதார் வாங்கியபோது நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்.

5) அந்த OTP எண்ணை, அடுத்த பக்கத்தில் என்டர் செய்ய வேண்டியிருக்கும். அதற்குமுன் கீழ்க்கண்ட தகவல்களை என்டர் செய்யவும்.

6) இந்தப் பக்கத்தில்  Authentication Type என்ற டிராப் டவுன் மெனு ஒன்றிருக்கும். அதில் ALL என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (அல்லது உங்களுக்கு விருப்பமான வகையை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்)
UIDAI

7) அடுத்து, எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதி வரைக்குமான தகவல் தேவை என்பதை உள்ளீடு செய்யவும். அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான தகவல்களை இதன் மூலம் பெறலாம்.

8) அடுத்து, எத்தனை என்ட்ரிகளைப் பார்க்க வேண்டுமென்பதைத் தெரிவிக்கலாம். (அதிகபட்சம் 50 என்ட்ரிகள்)

9) இறுதியாக OTP எண்ணை என்டர் செய்து SUBMIT கொடுக்கவும்.

10) இப்போது, கடந்த 6 மாதத்தில் உங்கள் ஆதார் எண்ணை எங்கெல்லாம் பயன்படுத்தினீர்கள் என்ற தகவல்கள் வரும்.

ஒருவேளை, எந்த டிரான்ஸாக்‌ஷனிலாவது சந்தேகம் என்றால் உடனே 1945 என்ற எண்ணை அழைத்துப் புகார் செய்யலாம்.

--விகடன் இணையத்திலிருந்து.
உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதா? இங்கே செக் செய்துகொள்ளுங்கள்!

ஆதார் எண் எங்காவது பயன்படுத்தப்பட்டு இருந்தால் கீழுள்ள படத்தில் உள்ளது போல் தகவல் தெரியும்.
அதாவது 30/08/2017 ல் இருந்து 01/02/2018 வரை ஆதார் எண் ஒரு முறை SBI வங்கியால் சரிபார்க்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் உள்ளது. இந்த படத்தில் உள்ளவற்றிற்கு விளக்கங்கள் வேண்டுமெனில்  "UIDAI Error Code: Aadhaar authentication failure code Click here"  என்ற வரியில் உள்ள Click here ஐ click செய்தால் ஒரு PDF file பதிவிறங்கும் அதில் அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

 சரிபார்ப்பு முடிந்த பிறகு ஆதாருடன் பதிந்த நமது மின்னஞ்சலுக்கு "உங்கள் ஆதார் எண் OTP மூலமாக வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது" என்ற தகவலும் வரும்.


கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...