Monday 19 February 2018

ஒருவர் ‘டிகிரி’ ஒருவர் ‘அக்ரி’: மரத்தடி பஞ்சாயத்து தந்த மாற்றம்

கிராமத்துப் பெரியவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசுவதை பல படங்களில் பார்த்திருக்கலாம். பெரும்பாலும், அந்த பஞ்சாயத்துப் பேச்சுகள் நகைச்சுவை, நையாண்டியாகவே இருக்கும். ஆனால், தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு கிராமத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் கூடிப் பேசி எடுத்த முடிவு, அந்த கிராமத்தையே ஓர் உதாரண கிராமமாக மாற்றியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிராமம் சிந்தகம்பள்ளி. ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதி. இங்கு மின்சாரம் இல்லை, சாலை வசதி கள் இல்லை, பள்ளிக்கூடங்கள் இல்லை. இதெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. அப்போது, சிந்தகம்பள்ளி கிராமமே கூடி ஒரு முடிவெடுத்தது.


 (சிந்தகம்பள்ளியின் அழகிய தோற்றம்)

‘‘ஒரு குடும்பத்துல ரெண்டு புள்ளைங்க இருந்தா, ஒரு புள்ளைய படிக்க வைக்கணும்.. இன்னொரு புள்ளைய விவசாயத்துல இறக்கிடணும்..’’ இதுதான் அந்த தீர்மானம். ஊரில் இருந்த படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழை, பணக்காரர் எல்லோரும் இந்த தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொள்ள, வெறும் வாய் வார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. ஒப்புக்கொண்டபடி, ஒவ்வொரு வீடும் ஒரு பட்டதாரியையும், நல்ல விவசாயியையும் உருவாக்கத் தொடங்கியது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, என்எல்சி-யில் தலைமை பொறியாளராகப் பணியாற்றிய சவுந்தரபாண்டியன், தஞ்சையின் பிரபல கண் மருத்துவர் நவமணி, பொதுப்பணித் துறையில் முதன்மைப் பொறியாளராக இருந்த இளங்கோவன், திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநராக இருந்த குப்புசாமி.. என்று இந்த ஊர் உருவாக்கிய பிரபலங்கள் பட்டியல் நீள்கிறது. அது மட்டுமின்றி, ஏராளமான ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு அலுவலர்களை அந்தக் காலத்திலேயே உருவாக்கிய பெருமையும் இந்த ஊருக்கு இருக்கிறது. படிப்போடு விவசாயமும் தழைத்ததில் அனைத்து வசதிகளும் பெற்ற உதாரண கிராமமாகவே மாறியது சிந்தகம்பள்ளி.

 
வேளாண் உதவி இயக்குநராக இருந்த குப்புசாமி கூறும்போது, “அந்த காலத்துல யாரும் பள்ளிக்கூடத்துக்குப் போகவே மாட்டாங்க. பள்ளிக்கூடம்னாலே வேப்பங்காயா கசக்கும். அதுவும், கிருஷ்ணகிரி மாதிரியான பின்தங்கிய மாவட்டத்துல சொல்லவே வேண்டாம். இப்பவும் கல்வி அறிவே இல்லாத பல கிராமங்கள் இங்கு இருக்கின்றன. ஆனா, எங்க முன்னோர்களுக்கு ஏதோ ஞானம் பிறந்திருக்கு. யார் எடுத்த முடிவு என்றெல்லாம் தெரியல. வீட்டுக்கு ஒருத்தர் பட்டப்படிப்பு படிக்கணும், ஒருத்தர் விவசாயத்துல ஜொலிக்கணும்னு சொல்லி வச்சுட்டாங்க. அதேபோல, ஒவ்வொரு வீட்லயும் ஒரு பட்டதாரி உருவாகி பெரிய பெரிய வேலைகளுக்குப் போனாங்க. விவசாயத்தைப் பார்த்துக்கிட்டவங்களும் பெரிய ஆளா வந்தாங்க. இது எவ்வளவு பெரிய சிந்தனை!ஆனால், வருஷம் ஆக ஆக சூழல் மாறிப்போச்சு. ஆறுகளெல்லாம் காஞ்சு, விவசாயம் பொய்த்துப் போச்சு. பட்டப்படிப்பு படிச்சவங்க ஓரளவுக்கு செட்டில் ஆகிட்டாங்க. விவசாயத்துல ஈடுபட்டவங்க நிலைமைதான் கஷ்டமா இருக்கு. விவசாயமும், கல்வியும் சமமா இருந்த ஊர்ல இன்னைக்கு எங்க கண்ணு முன்னாலயே விவசாயம் நொடிஞ்சு போறதை பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கலை’’ என்றார். சிந்தகம்பள்ளியில் வீட்டுக்கொரு பட்டதாரி உருவாக காரணமானவர்களில் ஒருவர் அந்த ஊரைச் சேர்ந்த சிவராஜ் வாத்தியார். இதே ஊரில் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஒவ்வொரு பட்டதாரி யும் இவரது வார்ப்புகள்தான். ஆரம்பக் கல்வியை அவர்தான் புகட்டியிருக்கிறார். அதே ஊர்க்காரர் என்பதால் கண்டிப்பும், கனிவும் கலந்து அவரிடம் படிக்கும் பிள்ளைகளை அரவணைத்தவர்.

‘‘இப்பகுதி பிள்ளைகள் நன்கு படித்து, முன்னேற வேண்டும் என்ற முனைப் போடு பணியாற்றினேன். என்னிடம் படித்த பலரும் இப்போது பெரிய பதவி யில் இருக்கிறார்கள். அதை நினைக்கும் போது பெருமையா இருக்கு’’ என்றார். ஒருவேளை, எதிர்காலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டாலும், குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் அரவணைத்துச் சென்றுவிடுவார்கள் என்ற தொலைநோக்குப் பார்வையில்தான், வீட்டுக்கு ஒருவர் விவசாயம், ஒருவர் பட்டப்படிப்பு என்று 75 ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்திருக்கின்றனர். தற்போது, ஆந்திராவில் தடுப்பணை கள் கட்டியது போன்ற காரணங்களால் தண்ணீர் வரத்து நின்றுவிட்டாலும், விவசாயத்துடனான உறவை இந்த கிராமத்தினர் இன்னும் விட்டுவிடவில்லை. படித்துவிட்டு பணியாற்றி வருபவர்கள்கூட நேரம் கிடைக்கும்போது விவசாயத்தை கவனிக்கின்றனர். படிப்பில் கவனம் செல் லாத பிள்ளைகளை விவசாயத்தின் பக் கம் மடைமாற்றுகின்றனர். ‘ஒரு பட்டதாரி, ஒரு விவசாயி’ என சிந்தகம்பள்ளி கிராமம் வகுத்து தந்த கொள்கை, இந்த நாட்டுக்கானது. அது சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து
ஒருவர் ‘டிகிரி’ ஒருவர் ‘அக்ரி’: மரத்தடி பஞ்சாயத்து தந்த மாற்றம்


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...