Saturday 10 February 2018

இயற்கையின் மகிமை!

நாட்டு ரக விதைகளின் தாயான, இயற்கை விவசாயி, ஒம்பாலம்மா: கிருஷ்ணகிரி மாவட்டம், தளியிலிருந்து மைசூரு செல்லும் சாலையில் உள்ள ஆலப்பன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவள் நான். 20 ஆண்டுகளுக்கு முன், தளியில் நடந்த இயற்கை விவசாயம் குறித்த கூட்டத்தில், கலந்து கொண்டேன். அதில், இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு ரக விதை குறித்து விளக்கினர். அதன் பின் தான், நாட்டு விதைகள் மீது பாசம் வந்தது. நாட்டு விதைகளை பயிர் செய்யும் போது, அவற்றில் இருந்தே விதைகளை எடுத்துக் கொள்ளலாம். அப்படி, நான் விளைவித்த பயிர்களில் இருந்தே, எனக்கு விதைகள் கிடைக்கத் துவங்கியதால், அடுத்தவரிடம் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. 


எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக, 2 ஏக்கர் நிலம் உள்ளது. அது, மேட்டு நிலம் என்பதால், மழை வந்தால் தான் விதைப்பேன். மலையை ஒட்டியுள்ள வனத்துறைக்குச் சொந்தமான நிலத்திலும், மானாவாரி விவசாயம் செய்கிறேன்.பெரும்பாலும், கேழ்வரகை தான் மானாவாரியாக சாகுபடி செய்வேன். வீட்டுக்கு அருகில் சிறிய காய்கறி தோட்டத்தை அமைத்து, அதன் மூலமாகவும் விதைகளை பெருக்குகிறேன்.

வட்டம், லிங்கம், பந்து என, மூன்று வடிவங்களில் பூசணி விதைகள் உள்ளன. நாட்டு பூசணி விதைகளில் காய்க்கும் காய்கள், சுவையாக இருப்பதோடு, வாட்டமாகவும், கடினத்தன்மை உடையதாகவும் இருக்கும்.கோலி வடிவத்தில் இருக்கும் பாகல் விதை, மலைப்பகுதியில் மட்டுமே விளையக் கூடியவை; அரிதான ரகம். பாகற்காய்க்கு உரிய தன்மை மாறாமல் இருக்கும். இவை போல் கத்தரிக்காய், தக்காளி, அவரை, மிளகாய், கடலை, மொச்சை, சுரைக்காய், கடுகு, சூரியகாந்தி, வெள்ளரி, வரகு, சாமை, கீரை வகைகள் என, நாட்டு விதைகளை சேகரித்து வைத்திருக்கிறேன். நாட்டு ரக பயிர்களை சாகுபடி செய்யும் போது, பெரும்பாலும் பூச்சிகளே வருவதில்லை. அதுபோல, ஆமணக்கு பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்தால், பூச்சி தாக்குதல் இருக்காது.

ஆமணக்கு எண்ணெயை தலைக்கு தேய்த்து வருவதால், 67 வயதிலும் தலைமுடி நரைக்கவில்லை. இதுதான் இயற்கையின் மகிமை.காய்கறி மற்றும் சிறு தானியங்கள் என, மொத்தம், 31 வகையான, நாட்டு ரக விதைகளை பத்திரப்படுத்தி, விற்பனை செய்து வருகிறேன். தமிழகம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விதைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். நான் சொல்லும் விலையை விட, அதிக தொகை கொடுத்து பலர் வாங்குகின்றனர். இதன் மூலமாக வரும் வருமானத்தை, பெரிதாக எண்ணுவதில்லை. நாட்டு ரகங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே, என் ஆசை!
--தினமலர் நாளிதழிலிருந்து


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...