Saturday 10 February 2018

நாட்டு ரக விதைகள் வேணுமா?

பட்டணத்துப் பண்பாடு, கிராமங்களில் கால்பதிப்பதற்கு முன்புவரை பெரும்பாலும் ‘கூரை’ வீடுகள்தான் இருந்தன. கூரைகளில் ‘முல்லைக்கு தேர் கொடுத்த பாரி’யை விஞ்சும் அளவுக்கு சுரைக்காய், அவரை, பாகல், பீர்க்கன் என கொடிகளுக்கு இடம்கொடுத்தனர், முன்னோர். ஆனால், நாகரிகம் வளரவளர… கூரை வீடுகள் மாடி வீடுகளாக மாறியதில், வீட்டுத் தோட்டங்களும் காணாமல் போயின. அதோடு, காணாமல் போனது, நமது நாட்டு விதைகளும்தான். கூடவே, பசுமைப் புரட்சியின் விளைவால், வீரிய விதைகள் வேகமாகப் பரவ, சுத்தமாகவே நாட்டு விதைகள் வழக்கொழிய ஆரம்பித்தன. இத்தகையச் சூழலில் மீண்டும், இயற்கை மீதான பாசம் பெருக ஆரம்பித்திருப்பதால், மாடித் தோட்டங்களும் வீட்டுத் தோட்டங்களும் செழிக்க ஆரம்பித்துள்ளன. இதோடு, நாட்டு விதைகளையும் விவசாயிகள் தேட ஆரம்பித்திருப்பது… மகிழ்ச்சிக்குரிய செய்தி!

கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்ட நாட்டு ரக விதைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கும் பாரம்பரிய விதைகள் என்று அனைத்தையும் தேடிப்பிடித்து, சேகரித்து, பாதுகாத்து, பயிர் செய்து விதைகளைப் பெருக்கி வருகிறார்கள் இயற்கை ஆர்வலர்கள் பலரும்! இந்த வரிசையில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ளது, சேலம் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு.

விஷயத்தைப் புரிய வைத்த வீரிய விதை!
‘வசிஷ்டா கிராம விதை வங்கி’ என்ற பெயரில், சேலம் மாவட்டம், புத்திரக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் செயல்படத் துவங்கியுள்ள விதை வங்கியில், உழவர் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஜெயராமனைச் சந்தித்தோம்.
”விவசாயத்து மேல நம்பிக்கை இல்லாம இருந்த சூழ்நிலையில, ‘எதிர்கால விவசாயமாவது லாபகரமா மாறட்டும்’னு சொல்லி, ஏழு வருஷத்துக்கு முன்ன அபிநவம் கிராமத்துல உழவர் மன்றம் ஆரம்பிச்சோம். இது மூலமா விவசாயிகளுக்குப் பயிற்சிகள் கொடுத்து, விவசாயிகளையும் விற்பனையாளரா மாத்தின பிறகு, எங்களுக்கு ஓரளவு லாபம் வர ஆரம்பிச்சுது. ஒரு வருஷத்துக்கு முன்ன தனியார் விதை கம்பெனிக்காரங்க ‘எஃப்-1’ விதை உற்பத்திக்காக எங்க உறுப்பினர்களைப் பயிர் செய்யச் சொன்னாங்க. அவங்க சொன்னபடி நாங்களும் விதையை உற்பத்தி செஞ்சு கொடுத்தோம். ஆனா, பணம் கொடுக்கல. ஏன்?னு கேட்டத்துக்கு ‘விதை தரமா இல்லாததால சான்று கிடைக்கலை’னு சொன்னாங்க. ஆனா, தரமற்ற அந்த விதையை விவசாயிங்க தலையில கட்டி கோடிக்கணக்குல லாபம் பார்த்தாங்க. எஃப்-1 விதையை ஒவ்வொரு முறையும் வாங்கிப் போடும்போது அதிக செலவாகும். ஆனா, அந்த விதை ஒரு முறைதான் நல்ல மகசூல் கொடுக்கும். அதுல இருந்து விதை எடுக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழல்ல… ‘உரம், பூச்சிக்கொல்லிக்கு அதிகமா செலவாகுதுனு சொல்லி, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சாங்க எங்க விவசாயிங்க. அப்பதான் ‘இயற்கை விவசாயத்துக்கு ஒட்டு விதைகள் ஏத்ததில்லை’னு புரிஞ்சுது. இதுக்குப் பிறகுதான் நாட்டு விதைகளைத் தேட ஆரம்பிச்சோம். கிடைச்ச விதைகளைப் பயிர் பண்ணி, விளைச்சலை அறுவடை பண்ணி சந்தைக்குக் கொண்டு போனப்ப… அந்த காய்களுக்குக் கூடுதல் விலை கிடைச்சுது. இதுக்குக் காரணம், எங்க தோட்டத்துக் காய்களோட சுவைதான். ஒட்டு விதைகளை விதைச்சு, உரம் போட்டு, மருந்தடிச்சு, பண்டுதம் பார்த்து கிடைக்கிற வருமானம் மொத்தமும் செலவுக்கே சரியாபோயிடும். ஆனா, பாரம்பரிய விதை களை இயற்கை முறையில விளைய வைக்கிறப்போ, செலவும் குறைவு. வருமானமும் கிடைக்குது. இந்த உண்மை இப்போதான் எங்களுக்கு உறைச்சிருக்கு” என்ற ஜெயராமன், தொடர்ந்தார்.
வகை வகையான பாரம்பரிய விதைகள்!
”பாரம்பரிய நெல் ரகங்கள், பயறு வகைகள், சிறுதானிய ரகங்கள், காய்கறி ரகங்கள்னு பலவிதமான பாரம்பரிய விதை ரகங்களை தனி ஆளா சேகரிச்சு, பாதுகாக்க முயற்சிகள் செஞ்சா சரிப்பட்டு வராதுனு, ‘சேலம் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு’னு ஆரம்பிச்சு… அது மூலமா பாரம்பரிய விதைகளைச் சேகரிக்க ஆரம்பிச்சோம். உழவர் மன்றங்களின் அறிமுகமும், ‘பசுமை விகடன்’ மூலமா கிடைச்ச விவசாய நண்பர்களும் விதை சேகரிப்புக்கு உதவியா இருந்தாங்க. தமிழ்நாடு முழுக்க சுத்தி 64 பாரம்பரிய நெல் ரகங்கள், 8 வகையான சிறுதானிய ரகங்கள், 6 வகையான பயறு ரகங்கள், 37 வகையான நாட்டுக் காய்கறி ரகங்கள் பாரம்பரிய விதைகளைச் சேகரிச்சிருக்கோம். ஆத்தூரைச் சுத்தி இருக்குற உழவர் மன்ற உறுப்பினர்களுக்கு விதைகளைக் கொடுத்துட்டு இருக்கோம். 

விதை தேவைப்படுறவங்களுக்கு ஒரு நிபந்தனை இருக்கு. ஒரு பங்கு விதை வாங்கினா, நாலு பங்கு விதையா திருப்பிக் கொடுத்திடணும். விவசாயிங்க, அவங்க கிட்ட இருக்குற ஒரு ரக விதையைக் கொடுத்திட்டு, இங்க இருக்குற வேற ரக விதையை வாங்கிக்கலாம். வீட்டுத் தோட்டம் போடுறவங்களுக்காக சாம்பிள் பாக்கெட்டுகளா போட்டு, ஒரு பாக்கெட் 15 ரூபாய்னு விற்பனை செய்றோம்” என்ற ஜெயராமன் நிறைவாக, ”பாரம்பரிய நெல் ரகங்கள் ‘பசுமை விகட’னோட முயற்சியால விவசாயிங்க மத்தியில பரவி இருக்கு. இதேமாதிரி காய்கறி விதைகளையும் பரப்பணும் அப்படிங்கிற ஆசையில இருக்குறோம். இன்னும் ரெண்டு வருஷத்துல, நாட்டுக் காய்கறி ரகங்கள் அத்தனையும் விவசாயிங்க மத்தியில பரவிடும்” என்றார், மகிழ்ச்சியாக!
தொடர்புக்கு, ஜெயராமன்,
செல்போன்: 99424-43055
--விகடன் இணைய இதழிலிருந்து 


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...