Sunday 22 July 2018

திருமண நிகழ்வில் நெகிழியும், கழிவும் இல்லையா? அடடே.....

'நோ பிளாஸ்டிக்; நோ வேஸ்டேஜ்' என்ற கோட்பாடுடன், மகள் சம்யுக்தா திருமண அனுபவம் பற்றி கூறும், ஜெயஸ்ரீ:

துணிப்பை மற்றும் காகித உரை:
திருமணம் என்றால் ஷாப்பிங், சாப்பாடு, அலங்காரம், தாம்பூலம் என, நான்கு விஷயங்களில் தான், பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்துகிறோம்.எனவே, திருமண ஷாப்பிங் எதுவானாலும், அவற்றை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு தரவேண்டாம் என, கடையில் சொல்லி விட்டோம். வாங்கிய துணிமணிகளைப் பழுப்பு நிற காகித கவரில் போட்டு, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தோம். தேவையான போது, துணிப் பைகளைப் பயன்படுத்தினோம்.

கரும்பு சக்கை கிண்ணம் மற்றும் எவர்சில்வர் டம்ளர்:
திருமண கேட்டரிங் கான்ட்ராக்டரை ஒப்பந்தம் செய்யும் போதே, பிளாஸ்டிக் பயன்பாடு கூடாது என்ற, எங்கள் தீர்மானத்தை விளக்கியதும், அவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு திருமணத்திலும், ஆயிரக்கணக்கில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில், சாப்பாட்டுக்கு தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக, சுத்தமான எவர்சில்வர் டம்ளர்கள் தான் என, முடிவெடுத்தோம்.அடுத்து, ஐஸ்கிரீம் தர தெர்மோகோல் தட்டு, பேப்பர் கப்களுக்கு பதிலாக, மறு சுழற்சி செய்யக்கூடிய, கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கிண்ணங்களை பயன்படுத்தினோம்.

இயற்கையான மலர்கள் மற்றும் பனை ஓலை விசிறி:
பத்தமடையிலிருந்து, பாய் கோரையைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட டப்பாக்களில், திருமண சீர் பட்சணங்களைப் போட்டு, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தோம். திருமண மேடை, அரங்க டெகரேஷனுக்கு இயற்கையான மலர்கள், நிஜப் பூந்தொட்டிகளையே வைத்தோம்.
மணமேடை பின்புலமாக, பாரம்பரிய பனை ஓலை விசிறிகளையே, புதுமையான டிசைனில் பயன்படுத்தினோம். மறுநாள் முகூர்த்தத்தின்போது, அந்த விசிறிகளை, வந்திருந்தவர்களுக்கு வினியோகித்து விட்டோம். தாம்பூலத்திற்கு துணிப்பை, மஞ்சள், குங்குமத்தை காகிதத்தில் மடித்து வைத்தோம். 'பேக்' செய்த பாக்குத் துாளுக்குப் பதிலாக, பாரம்பரியக் கொட்டைப் பாக்கு தான்.

மாநகராட்சியின் ஒத்துழைப்பு:
இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் திருமணத்தின்போது எதுவுமே வீண் என்று குப்பைக்குப் போகக் கூடாது என நினைத்தோம். எனவே, சென்னை மாநகராட்சியின் ஒத்துழைப்பை நாடினோம். சாப்பாட்டு கூடத்தில், இலைகளை எடுக்கும் போதே, மேஜையில் விரித்த காகிதம், கரும்புச் சக்கை கப்கள் என, மறு சுழற்சிக்கானவற்றை தனியாகப் பிரித்து விட்டோம். சமையல் கூடத்தில், காய்கறி நறுக்கிய கழிவுகளைத் தனியே சேகரித்து வைத்தோம்.
அலங்காரத்துக்குப் பயன்படுத்திய பூக்கள், சாப்பிட்ட இலைகளை கூட வீணாக்காமல், மாநகராட்சியின் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்துக்கும், சாண எரிவாயு தயாரிப்பு மையத்துக்கும் அனுப்பி விட்டோம்.

மன திருப்தி:
இவற்றை சேகரிப்பதற்குக் கூட, வழக்கமான பெரிய கறுப்பு நிற பைகளை பயன்படுத்தாமல், டிரம்களைப் பயன்படுத்தினோம். இதனால், எங்களுக்கு கூடுதலான செலவு ஆகவில்லை. பலருடைய பாராட்டு கிடைத்ததுடன், எங்களுக்கு மன திருப்தியும் ஏற்பட்டது.தொடர்புக்கு: 98410 18301.
--தினமலர் நாளிதழிலிருந்து .

ஜெயஸ்ரீ  அவர்களுக்கு பணிவான வணக்கங்கள், நல்ல முன்மாதிரியான ஒரு திருமணத்தை முடித்துள்ளமைக்கு. நல்ல சமயத்தில் கிடைத்த நல்ல தகவல்.

Thursday 19 July 2018

கிராமத்து உணவுகளுக்கு மதிப்பு அதிகம்! - தொக்கு வகைகள்

ஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை, தொக்கு வகை செய்து லாபம் ஈட்டி வரும், சென்னை, கேளம்பாக்கத்தை சேர்ந்த நிவேதா: 

தொக்கு: ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்படும் உணவு முறை; மாங்காய், தக்காளி போன்றவற்றை எண்ணெயில் வதக்கிக் காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தொடுகறி.‘மாங்காய்த் தொக்கு’,‘தக்காளித் தொக்கு’.


                                                       (தக்காளி வெங்காய தொக்கு)

நான், கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறேன். இன்ஜினியரிங் படித் தும், புகுந்த வீட்டில் வேலைக்கு போக வேண்டிய தேவை ஏற்படவில்லை.ஆறாவது முதல் காலேஜ் வரை, ஹாஸ்டலில் தான் படித்தேன்; சாப்பாடு சரியாக இருக்காது. விடுமுறைக்குவீட்டுக்கு வரும் போதெல்லாம் அழு வேன். அதனால் அம்மா, விதவிமான தொக்கு செய்து கொடுப்பார்; 20 நாள் வைத்து சாப்பிடலாம்; கெட்டுப் போகாது.

என் அம்மா மாதிரியே, மாமியாரும் தொக்கு ஸ்பெஷலிட்ஸ். மாமனாருக்கு நீரிழிவை கட்டுப்படுத்த, ஆவாரம் பூவில் தொக்கு செய்வார். வீட்டில் யாருக்காவது மூட்டுவலி எனில், முடக்கத்தான் தொக்கு செய்வார்.எங்கள் வீட்டில் ஒருவேளைக்கு, 15 - 20 பேருக்கு சமையல் நடக்கும். சொந்தமாக வயல் உள்ளதால், இயற்கை விவசாயம் செய்கிறோம். செக்கு நல்லெண்ணெய் தான் பயன்படுத்துகிறோம். எந்த கெமிக்கலும் இல்லாமல், இயற்கையான முறையில் தொக்கு செய்வது, எங்கள் வீட்டு ஸ்பெஷல் அடையாளமாவே மாறிவிட்டது. வீட்டுக்கு வந்து யார் சாப்பிட்டாலும், பாராட்டத் தவறியதே இல்லை. 'விலைக்கு தருவீங்களா?' என கேட்க ஆரம்பித்த பின் தான், இதை பிசினசாக செய்யும் யோசனை வந்து, உறவின பெண் சத்யாவும் சேர்ந்து ஆரம்பித்தோம்.

ஆவாரம்பூ, முடக்கத்தான், பாகற்காய், தக்காளி, புதினா, பூண்டு, பிரண்டை, புளித்த கீரை, துாதுவளை, வல்லாரை என, தொக்கு வகைகள் செய்து, ஆரோக்கியமான உணவு தயாரிப்பையே, பிசினசாக மாற்றவிரும்புவோருக்கும் வழிகாட்டுகிறோம். 

ஒவ்வொரு தொக்கும், 1 கிலோ அளவு தயாரிக்க, 200 - 300 ரூபாய் வரை தேவை. 10 வகை தொக்கும், தலா, 1 கிலோ செய்ய, குறைந்தபட்சம், 1,200 ரூபாய் முதலீடு போதும்.கிராமத்து உணவுகளுக்கு, நகரத்தில் எப்போதும் மதிப்பு அதிகம். இந்த தொக்கு வகைகளை இட்லி, தோசை, சப்பாத்தி என, டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்; சூடான சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். ஊறுகாய்க்கு நல்ல மாற்றும் கூட. மேலும், 300 கிராம்தொக்கு, 90 ரூபாய்க்கு விற்கலாம்.

ஐந்து நாட்கள் வரை வெளியிலேயே வைத்திருந்து பயன்படுத்தலாம்; பின், பிரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம். வேலைக்கு செல்பவர், பேச்சிலர், ஹாஸ்டலில் இருப்பவர் தான்வாடிக்கையாளர்கள். கடைகளில் வாங்கும் தொக்கு பெரும்பாலும் ஒரே சுவையில் இருக்கும்; ஆனால், இவை ஒவ்வொன்றும் அதன் மூலப்பொருளின் சுவைக்கேற்ப மாறுபடும் என்பதால், தினமும் சாப்பிட்டாலும் அலுப்புத் தட்டாது; 50 சதவீத லாபம் நிச்சயம்.

ஒரு நாள் பயிற்சியாக, 750 ரூபாயில், 10 வகையான தொக்குகளை கற்றுக் கொள்ளலாம்.தொடர்புக்கு: 9962146742, 9962114104.
--தினமலர் நாளிதழிலிருந்து.

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...