Thursday, 27 July 2017

தன்னையறிதல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

செவிவழி கேட்பதென்பது படிப்பின் வழி அறிவதைவிடவும் இனிமையான ஒன்று. தன்னையறிதல் பற்றி அறிந்தவர்கள் கூறியதாக படித்ததுண்டு, கேட்டதுண்டு ஆனால் தன்னையறிந்தவரே கூறிகேட்பதென்பது மிகப்பெரிய அனுபவம்தானே. அந்த வகையில் தன்னையறிதல் பற்றி கேட்டதில் என்னை பாதித்த மிக பிடித்தமான பேச்சு எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்களுடையது.

வாழ்க்கையின் பல கட்டங்களில் பல கேள்விகள்  எழும், அப்படி எழும் கேள்விகளுக்கு பதில்களும் கிடைக்கிறது. பூட்டு விற்பவர் சாவியையும் சேர்த்துதானே விற்கிறார் அது போல உண்மையான தேடுதல் உணர்வோடு கேள்வி (இதை தான் ஓஷோ களங்கமற்ற வினா என்கிறார்) எழுந்தால் அதற்குரிய பதிலும் கிடைக்கும். ஆனால் எப்போது, எப்படி கிடைக்கும் என்று தெரியாது அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே.

உதாரணமாக "நாம் எதற்கு உழைக்க வேண்டும்?" என்ற கேள்வி பலமுறை தோன்றியதுண்டு. எதற்கு? சம்பாதிக்க, வாழ்க்கையில் முன்னேற, எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க, உழைப்பின் வெற்றியை ருசிக்க, மற்றவர்களுக்காக இப்படி எந்த பதிலும் எனக்கு திருப்தியாக தோன்றவில்லை. இதற்கு பதில் ஒரு முறை சுகிசிவம் அவர்களின் சொற்பொழிவில் கிடைத்தது.


இதனால் சுகிசிவம் அவர்களின் ஒளிப்படங்கள் மேலும் சிலவற்றை தேடி கொண்டிருந்தபோது கிடைத்ததுதான் 2002 ம் வருடத்தின் பாலகுமாரன் அவர்களுடைய "உன்னையறிந்தால்" தலைப்பிலான சொற்பொழிவு. சிங்கப்பூரில் நடந்த இந்த சொற்பொழிவில் எழுத்தாளர் சிவசங்கரி, சுகிசிவம் மற்றும் பாலகுமாரன் ஆகியோர் உரையாற்றினர்.

என்ன ஒரு உரை!!! என்ன ஒரு ஆற்றல்!!! புதிதாக எதுவும் கிடையாது, அவருடைய வாழ்க்கை வரலாறுதான். பல உரைகளில் பேச்சாளர்கள் முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அதை விளக்கி விவரிப்பார்கள். ஆனால் இவரோ தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்குகிறார். நமது மனதின் அடிநாதம் எது? தன்னையறிதலை  எங்கிருந்து துவக்குவது என்ற ஆரம்ப புள்ளியை மிக தெளிவாக சுட்டி காட்டுகிறார். 

அந்த 40 நிமிட உரை முழுமையும் மனம் வேறெங்கும் போகாது, 'இவர் இல்லாததை சொல்கிறாரோ?' என்ற எண்ணம் தோன்றாது. அந்த உரையை கேட்க்கும் போது, நமது மனதின் கண்ணை கட்டி கூட்டிப்போகும்படியான ஒரு அருமையான அனுபவத்தை உணர்வீர்கள். மீண்டும் அதே உரையை 13 வருடங்கள் கழித்து கோவையிலும் பேசியிருக்கிறார் கேட்டு பயன்பெறுங்கள்.

  1. Unnaiyarinthaal-Ezhuthu sidhar Balakumaran(உன்னையறிந்தால் எழுத்துச்சித்தர் பாலகுமாரன்) (2002 Singapore Speech)
  2. Writer Balakumaran speech on Guru Darisanam in Coimbatore 2015 
தன்னையறிதல் என்றால் என்ன? எதற்கு தன்னை அறிய வேண்டும்? எப்படி ஆரம்பிப்பது? தன்னையறிந்து கொண்டால் சாமியாராகத்தானே போக முடியும் அது எதற்கு இப்போது? போன்ற கேள்விகளுக்கு தெளிவாக பதில் தருகிறது இவரது உரை. தன்னையறிதலுக்கு உணர்வளவில் ஒரு விழிப்பு நிலை தேவை, அந்த நிலையை அடைந்துவிட்டால் இந்த உலக வாழ்வில் நாம் மிகச்சிறந்த செயல்களை செய்ய முடியும், வாழ்வே எளிமையாகி விடும்.Thursday, 13 July 2017

இல்லத்தரசிகளுக்கான முத்தான தொழில்!

முதலீடு இல்லாமல், உழைப்பு, நேர்மையை பயன்படுத்தி இல்லத்தரசிகள், பணம் சம்பாதிக்க வழிகளை கூறும், சுஹா தொண்டு நிறுவன தலைவியும், சுயதொழில் முனைவோருக்கான பயிற்சியாளருமான உமா ராஜ்:

10க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள் செய்ய தெரிந்தால், வீட்டின் முன், அறிவிப்பு பலகை வைத்து, வகுப்புகள் எடுக்கலாம். 

படித்தவர்கள் என்றால், டியூஷன் சென்டர்ஆரம்பிக்கலாம்.

வீட்டில் தயார் செய்யும் சமையலை சற்று அதிகமாக செய்து, வயதானவர், பேச்சிலர்களுக்கு, 'ஆர்டர்' அடிப்படையில் வினியோகம் செய்யலாம். மாலை நேரத்தில் சப்பாத்தி, 'ஆர்டர்' வாங்கி வினியோகிக்கலாம்.

நிறைய வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால், 'குழந்தையின் புத்தகங்களுக்கு அட்டை போட்டு தரப்படும்' என, அறிவிப்பு வைத்தால், நிறைய பேர் வருவர். 

வீட்டில் பேப்பர் வாங்குபவர்களாக இருந்தால், அதில், 'லாண்டரி பேக்' தயாரித்து, அயர்ன் நிலையம், ஓட்டல்களுக்கு வினியோகிக்கலாம்.

வீட்டில் இடம் இருந்தால் கோதுமை புல் வளர்த்து, நடைபயிற்சி நடைபெறுகிற சாலையோரம், பூங்காக்களில் கோதுமை புல் ஜூஸ் விற்பனை செய்யலாம்; கோதுமை புல்லை உலர வைத்து, பவுடராக்கியும் விற்கலாம். 


அதிக வீடுகள் கொண்ட குடியிருப்பில் வசிப்பவர்களாக இருந்தால், 'காய்கறி கட்டிங் சென்டர்' என அறிவிப்பு வைத்து, குடியிருப்புகள், கேட்டரிங், ஓட்டல்களுக்கு காய்கறி நறுக்கிகொடுக்கலாம்.

சிறிய கடை வியாபாரிகளை அணுகி, அவர்கள் கடைகளை, 15 நாள் அல்லது மாதம் ஒரு முறை அழகுபடுத்தி தரலாம். வீட்டில் இணைய வசதி இருந்தால், ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ் செய்து பணம் ஈட்டலாம்; ஆன்லைனில் டெலிபோன், இ.பி., பில் கட்டி, சேவை கட்டணம் பெறலாம்; ரயில், பஸ், விமான டிக்கெட் பதிவு செய்தும் பணம் சம்பாதிக்கலாம்.

வீட்டில் இட வசதி இருந்தால், மாலை, 5:00 - 7:00 மணியளவில் குழந்தைகளுக்கு, பழைய விளையாட்டுகளான பல்லாங்குழி, ஏழாங்கல், தாயம் சொல்லிக் கொடுத்து, விளையாட்டு மையம் ஆரம்பிக்கலாம். 

ஆள் பலம் இருந்தால், பழைய வீட்டில் இருந்து, புது வீட்டுக்கு பொருள் முழுவதும் கொண்டு சேர்த்து, வீட்டை அலங்கரிக்கும், 'ஹவுஸ் ஷிப்டிங்' சேவை துவங்கலாம்.

தையல், எம்பிராய்டிங் தெரிந்திருந்தால், மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், ரெடிமேட், தையல் கடைகளை அணுகி, நைட்டி, பாவாடை வெட்டி வாங்கி தைத்தும், பட்டன், ஹூக், ஹெம்மிங் செய்தும் தரலாம். 

முறையான பரதநாட்டியம், குச்சுப்புடி, யோகா கற்றிருந்தால், மற்றவர்களுக்கு கற்றுத் தரலாம். 

விடுமுறை அல்லது வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்கிறவர்களின் தொட்டி செடிகளை பராமரித்து தரலாம்.

பேச்சு திறன் உள்ளவர்கள் எனில், தாம்பூலப்பை, தேங்காய், பழம் மலிவு விலையில் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்து, திருமண மண்டபத்தை அணுகி, யார் வீட்டு திருமணத்துக்கு தேவையோ அவர்களுக்கு கைமாற்றிவிட்டு பணம் பண்ணலாம். கேட்டரிங் செய்பவர்கள் கூட கமிஷன் முறையில் வாங்கிக் கொள்வர்.


பழமையான கோவில், புண்ணிய தலங்களை அறிந்து, 'டூர்' ஏற்பாடு செய்யலாம். சுற்றுலா தலங்கள் உள்ள இடத்தில் வசிப்பவராக இருந்தால், அதன் வரலாற்றை அறிந்து, கைடாக பணிபுரியலாம்.

 தினமலர் நாளிதழிலிருந்து

Sunday, 9 July 2017

தேங்காய்ப்பால்-வீட்டிலேயே ஒரு புத்துணர்ச்சி முகாம்

  • தேங்காய்ப் பாலைக் கூடுமானவரை வெறும் வயிற்றில் குடிப்பதே நலம். அதைக் குடித்த பின்னரும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு வேறு எதையும் உண்ணாமலும் பருகாமலும் இருப்பது நல்லது.
  • தேங்காய்ப் பாலை அப்படியே குடிப்பது மட்டுமல்லாமல், சோற்றுடன் பிசைந்தும் உண்ணலாம். சோற்றுடன் சேர்க்கிறபோது ஐந்தாறு சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்தால், தேங்காய்ப் பால் மோரின் சுவையைப் பெறும். எனவே, பால் மோருக்குப் பதிலாகத் தேங்காய்ப் பால் மோரைப் பயன்பாட்டில் நிரந்தரமாக்கிக்கொள்ளலாம்.
  • அவலுடன் தேங்காய் பாலைச் சேர்த்து ஊறவைத்து, எலுமிச்சைச் சாற்றைக் கலந்தால் ‘உடனடி தயிர் சாதம்’ தயார். இந்தத் தயிர் சாதம் வயிற்றைத் தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டது. பால் தயிர் சாதம் தரும் எதிர்விளைவுகள் எதையும் இது தராது. 


உடனடி சத்து உணவு
நீருக்குப் பதிலாகத் தேங்காய்ப் பாலை ஊற்றிச் சோறு சமைப்பது பள்ளிப் பிள்ளைகளின் மதிய உணவுக்கு ஏற்றதாக அமையும். இது சத்து மிகுந்த உணவாக மட்டுமல்லாமல், சுவை மிகுந்த உணவாகவும் இருக்கும். 

அதேபோல, சோறு வெந்து கொண்டிருக்கிறது. குழம்பு இன்னும் தயாராகவில்லை. அவசரமாக வெளியில் கிளம்ப வேண்டும் என்றால் சோற்றைக் கொட்டி ஆற வைத்துவிடுங்கள். அரை மூடித் தேங்காயைத் துருவி, அந்தப் பூவை எடுத்துச் சோற்றின் மீது சாரலாகத் தூவிவிட்டு, ஒரு தக்காளியையும், அரை வெங்காயத்தையும் பொடியாக வெட்டி வண்ணமயமாகச் சிதற விட்டு, சிறிதளவு நெய்யைப் படரவிட்டுப் பிசைந்து உண்டால் சிக்கனமான, ஆரோக்கியமான உணவு முடிந்தது. ஒரு ‘புல் மீல்ஸ்' தரும் நிறைவை இது தரும்.அதன் சுவை நீண்ட நேரத்துக்கு நாவில் நின்று நர்த்தனமாடும். மறுநாள் காலையும் ‘கலகல’வென்று இருக்கும். 

சிறுநீரகம் பத்திரம்
‘ஏதாவது ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டுவிட்டுப் போகிறேன்’ என்று கடையில் கால் மணி நேரம் நின்றிருந்து, வறுத்த சோற்றை அரையும் குறையுமாக மென்று உள்ளே தள்ளி அவதிப்படுவோர் நம்மில் அதிகம்.
இந்த வறுத்த சோறு (ஃபிரைடு ரைஸ்) தொண்டையை வறளச் செய்து மீண்டும் மீண்டும் தண்ணீரைக் குடிக்க வைத்து, சிறுநீரகத்தை ‘அரை ஹார்ஸ் பவர் மோட்டா'ராகத் தொடர்ந்து வேலை வாங்கி, தளர்ந்து போக வைத்துவிடுகிறது. அதனால்தான் இந்தக் காலத்தில் ஆண் - பெண் இருபாலரும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ள நேரிடுகிறது. முடி கொட்டுதலில் தொடங்கிக் குழந்தைப் பேறின்மை, கர்ப்பப் பைக் கட்டிகள்வரை பல்வேறுத் தொல்லைகள் இளம் வயதிலேயே தோன்றுவதற்குக் காரணம், சிறுநீரகங்களைச் சவட்டி வேலை வாங்குவதுதான். உபாதையைத் தரும் ‘ஃபாஸ்ட் ஃபுட்'டுக்கு பதிலாக, மேற்கண்ட உடனடிச் சத்து உணவைத் தாராளமாக உண்ணலாம். 

தேங்காய்ப்பால் குளியல்
சரி, ‘முடிசூடிய வேந்தர்' தேங்காய்க்கு வருவோம். பிரியாணி சமைக்கிறபோது, அதை நான்கைந்து மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்கப் போவதில்லை என்றால், நெய்யைத் தவிர்த்துவிட்டு அல்லது குறைத்துக்கொண்டு, அதற்கு ஈடாகத் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் காலத்தில் கடை நெய், அத்தனை பாதுகாப்பானதாக இல்லை என்பது மட்டுமில்லாமல், பொருளாதார ரீதியாகவும் தேங்காய்ப் பால் சிக்கனமாக இருக்கும். நெய்யைக் காட்டிலும் செரிமானமும் எளிதாகும். 

தேங்காய்ப் பால் வடித்த பின் கிடைக்கும் திப்பியை எடுத்துச் செடிகளுக்குப் போட்டால், திப்பியை உண்ண வரும் எறும்புகள் செடியின் வேர்ப்பகுதியில் இலவசமான நுட்ப உழவு ஒன்றை நிகழ்த்தும். அதனால் செடிகளுக்கு ‘போனஸ் காற்று' கிடைக்கும். 

எண்ணெய்க் குளியல் அருகிவிட்ட நிலையில், தேங்காய்ப் பாலைத் தேய்த்துக் குளித்தால் வறண்ட சருமம் ஈரப்பதம் பெறும் (குளியல் முறைகள் பற்றி, பின்னர் விரிவாகப் பார்ப்போம்). கண் எரிச்சல், உடல் சூடாகிவிட்டது போல் உணர்வது போன்ற நேரத்தில் ‘தேங்காய்ப் பால் குளியல்’ மேற்படி தொல்லைகளிலிருந்து உடனடி நிவாரணம் தரும். 

உடல் கழிவை வெளியேற்ற
போதிய மனப்பக்குவமும் விரதப் பயிற்சியும் இருந்தால் ஓரிரு நாட்களுக்குத் தேங்காய் மோர் உண்டு, உடலுக்குப் புத்துணர்ச்சி முகாம் ஒன்றை வீட்டிலேயே நடத்தலாம்.எப்படி…? 

ஒரு தேங்காயுடன் நான்கு பெரு நெல்லிக்காயைச் சேர்த்து அரைத் தால், இதமான புளிப்புச் சுவையில் மோர் போன்ற பானம் கிடைக்கும்.
விடுமுறையைக் கொண்டாடுகிறோம் என்று சொல்லி ஒருசில ஆயிரங்களைக் கரைத்து, உடலுக்கு மேலும் சில உபாதைகளைக் கொண்டுவந்து சேர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, இரண்டு நாட்களுக்கு முழுக்க முழுக்க இந்த மோர்ப் பானத்தை மட்டுமே அருந்திவந்தால், உடல் கழிவுகள் நீங்குவது மட்டுமில்லாமல், வேலை நாளில் சுறுசுறுப்புடன் பணியாற்றலாம். 

நெல்லியும் தேங்காயும் உடலில் நுண் சத்துகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதால், அடிக்கடி எதையேனும் உண்ண வேண்டும் என்ற பேராவல் தணிந்துவிடும். பசிக்கிறபோது மட்டுமே உரிய உணவை உண்பது என்ற பக்குவத்தைப் பெற்றுவிடுவோம். 

காலத்துக்கு ஏற்றவாறு எளிய முறையில் தேங்காயின் முழுப் பயனும் நம் உடலில் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்பதற்காகவே, இந்தத் தேங்காய்ப் பால் பரிந்துரை. 

சத்தும் சுவையும் மிகுந்த லஞ்ச் பாக்ஸ்
# ஒரு மூடித் தேங்காயைக் கீறிப் போட்டு, இரண்டு முறை மிக்ஸியில் சுற்றியெடுத்து 400 மில்லி தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும்.
# பச்சரிசி 200 கிராம் எடுத்து ஒருமுறை மட்டும் அலசி நீரை வடிக்கவும்.
# பச்சைப் பட்டாணி அல்லது முளை கட்டிய பச்சைப் பயறு ஒரு கோப்பை அளவு எடுத்துக்கொள்ளவும்.
# சிறிய கேரட்டைப் பொடிப் பொடி சதுரங்களாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்துபோட்டு இளஞ்சூட்டில் பொரிக்கவும். ஒரு அங்குல நீளப் பட்டை, நான்கு கிராம்பு, ஒரு அன்னாசி பூ ஆகியவற்றை உடன் சேர்த்து மூன்று நிமிடங்கள் புரட்டிய பின்னர், அரை அங்குல இஞ்சியைத் தட்டிப் போட்டு அது வதங்கும் முன்னரே பயறு, கேரட்டை தாளிப்புடன் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசம் போகும்வரை கிளறிவிட்டு, தேங்காய்ப் பாலை அதில் ஊற்றவும். இப்போது அரிசி, தேவையான அளவு உப்பு போட்டுக் குக்கரை மூடிவிடவும். இரண்டு விசில் வந்த பின்னர் இறக்கி, ஆவி அடங்கிய பின்னர் எடுத்துக் கிளறி ஆற விட்டு, புதினா சட்னி தொட்டுச் சாப்பிடலாம். இது எளிமையான சத்தும் சுவையும் நிறைந்த உணவு. சத்து நிறைந்தது என்பதால் குறைவாகச் சாப்பிட்டாலே போதும்.
இது வண்ணமயமாகத் தோற்ற மளிக்கும் என்பதால் பள்ளிப் பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸுக்கு மிகவும் ஏற்றது. சுவையாகவும் இருக்கும் என்பதால் டப்பா காலியாக வீடு திரும்பும். 

நகரத்தார்களும் விவசாயிகளாகமாற வேண்டும்!

நாட்டு விதைகளை வாங்கி, விழாக்களில் இலவசமாக வினியோகம் செய்து, சமூக பணி செய்து வரும் வானவன்:

நாகப்பட்டினத்தை சேர்ந்தவன் நான். தற்போது, சென்னை, மாத்துாரில் வசித்து வருகிறேன்.
அப்துல் கலாமை விட இப்போதை நமக்கு தேவை,
நம்மாழ்வார் தான்.அப்துல் கலாம், கனவு காணச் சொன்னார்; வல்லரசு ஆக்க சொன்னார். இதெல்லாம் நல்லது தான். ஆனால், நம் வாழ்வாதாரங்களான விதை, நிலம், உணவு, உரிமையை இழந்து, அன்னிய தேசத்து கார்ப்பரேட் கம்பெனியிடம் கையேந்தி வல்லரசாகி என்ன பிரயோஜனம்?
நம் நிலத்தை, விதைகளை, சுற்றுச்சூழலை மீட்பது, இப்போதைய தேவை. தனி மனிதனாக என்ன செய்ய முடியும் என பார்த்ததில், நம் நாட்டு விதைகளை இலவசமாக வினியோகிக்க முடிவு செய்தேன். இந்த சிந்தனை,நம்மாழ்வாருடையது.

சென்னை மூலக்கடை, சிம்சனில் மெக்கானிக்காக உள்ள நான், மாதச் சம்பளத்தில், 1,500 ரூபாயை, விதை வாங்க செலவு செய்கிறேன். முசிறியில் விதைகளை வாங்கி வந்து, வீட்டில் மனைவி, மகளுடன், ஓய்வு நேரங்களில், திருநீறு பொட்டலம் போல், விதைகளை காகிதத்தில் மடித்து கட்டுவேன். அதன் மேல், அந்தந்த விதைகளின் பெயரை எழுதி, நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு கொடுத்து, வீட்டு தொட்டியில் பயிரிடக் கூறுவேன். அப்போது அவர்களிடம், 'நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்ப்பது போல், இதையும் ஒரு கடமையாக செய்யுங்கள். 10 வெண்டைக்காய் செடி முளைத்து, நீங்கள் அதிலிருந்து, ஒன்பது செடியின் காய்களை பயன்படுத்தினால், ஒரு செடியை விதைக்காக விட்டு விடுங்கள். அந்த விதையை மற்றவர்களுக்கு கொடுங்கள். இப்படித்தான் நம்முடைய விதைகளை காப்பாற்ற முடியும்' என கூறுவேன்.

ஒருமுறை ஹைபிரிட் விதை வாங்க போனேன். 100 கிராம், 400 ரூபாய் என்றனர். நன்றாக காய்க்கும்; நமக்கும் நல்ல லாபம். ஆனால், நாம் பயிரிட்டு வரும் காயிலிருந்து விதை எடுத்து போட்டால் முளைக்காது. திரும்பவும் அவர்களிடம் தான் விதையை வாங்க வேண்டும். அப்போது அவர்கள் வைத்தது தான் விலை. ஒரு கட்டத்தில் விதை தர முடியாது என்றால், நம் மக்கள் நிலை என்னாவது? இந்த கார்ப்பரேட் விதை பெருகும் போது, நம் விதைகள் காணாமல் போய்விடும்.

'வீடு மற்றும் 'ஏசி' என வாழ்ந்து, காய்கறி, பழம், உணவுக்கு இன்னொருவனிடம் கையேந்தினால் நன்றாகவா இருக்கும்?... அதென்ன வளர்ச்சி...' என தோன்றவே, மனது பொறுக்காமல் இதில் இறங்கி, நான்கு ஆண்டு ஆகிறது.

நீங்களும் நான்கு பிளாஸ்டிக் டப்பாவில், நான்கு விதமான செடியை போட்டு, மாடி மேல் வளர்த்து பாருங்கள். சிறுதுளி பெரு வெள்ளம் போல், உங்களிடம் இருக்கும் நான்கு விதை தான், நம் நாட்டை காக்கும் ரகசியம். இதெல்லாம் ஒரு வேலையா என நினைக்காதீர். இப்படித்தான் நகரத்தார்களும், மறைமுகமாக விவசாயிகளாக மாற வேண்டும்.
தற்போது நான், விவசாய தொண்டு அமைப்புடன் சேர்ந்து, சென்னையில் இருக்கும் மரங்களின் விதைகளை சேமித்து, விதைப்பந்து தயாரிப்பவர்களிடம் கொடுத்து வருகிறேன். நாம் வசிக்கும் சென்னையையாவது பசுமையாக வைத்துக் கொள்வோமே!

தினமலர் நாளிதழிலிருந்து.
  

17 ஆண்டுகளில் 9 லட்சம் பேர்.......?

தமிழகத்தில் 2000 முதல் 2017ம் ஆண்டு வரை 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டதாக விவசாயிகள் சங்கத்தினர்தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2000 ல் 67 லட்சம் எக்டேர் சாகுபடி பரப்பாகஇருந்தது. இதில் 37 லட்சம் ஹெக்டேர் இறவை சாகுபடி யாகவும், 30 லட்சம் எக்டேர் மானாவாரியாகவும் இருந்தன.

மொத்தம் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் மேற்கொண்டனர். லாபம் குறைவு, நகரங்களின் விரிவாக்கம்,விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை, தொடர் வறட்சி, காவிரி, முல்லை பெரியாறு அணை பிரச்னை, நிலத்தடிநீர் பாதிப்பு, கடன் தொல்லை, நீர்நிலைகள் மற்றும் வரத்துக் கால்வாய்கள்ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் 17 ஆண்டுகளில் 9 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டனர்.

இதனால் தற்போது சாகுபடி பரப்பும் 60.74 லட்சம் எக்டேராக சரிந்துள்ளது. அதேபோல் 81.18 லட்சம் விவசாயிகளே உள்ளனர். அதிலும் பலர் தங்களது நிலங்களை பிறருக்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டு, பெயருக்கு மட்டுமே விவசாயிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு அனைத்துவிவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: அரசு ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு, உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கிறது. ஆனால் விவ சாயத்தை மீட்பதற்கான நீண்டகால திட்டம் இல்லை. நீர் மேலாண்மை முறையாக செயல்படுத்தவில்லை. இதனால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து, கிணற்று பாசன சாகுபடி பரப்பும் கூட குறைந்து வருகிறது.

காவிரி, முல்லை பெரியாறு பிரச்னை தீராததால், அதை நம்பியிருந்த பல விவசாயிகள் வேறுதொழிலுக்கு மாறிவிட்டனர். நீர்நிலைகளை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. மானியங்கள் கடைமட்ட விவசாயி வரை சென்றடைவதில்லை. லாபம் இல்லாத தொழிலாக மாறிவிட்டது. இதனால் ஆண்டுதோறும் பல ஆயிரம் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வருகின்றனர், என்றார்.

விவசாயத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பல ஆண்டுகளாக தரிசாக விடப்பட்ட நிலங்களை மீட்க தற்போது நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் உழவு முதல் அறுவடை வரை ஏராளமான மானியத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன,' என்றார்.

தினமலர் நாளிதழிலிருந்து.
 

கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற