Sunday 9 July 2017

நகரத்தார்களும் விவசாயிகளாகமாற வேண்டும்!

நாட்டு விதைகளை வாங்கி, விழாக்களில் இலவசமாக வினியோகம் செய்து, சமூக பணி செய்து வரும் வானவன்:

நாகப்பட்டினத்தை சேர்ந்தவன் நான். தற்போது, சென்னை, மாத்துாரில் வசித்து வருகிறேன்.
அப்துல் கலாமை விட இப்போதை நமக்கு தேவை,
நம்மாழ்வார் தான்.அப்துல் கலாம், கனவு காணச் சொன்னார்; வல்லரசு ஆக்க சொன்னார். இதெல்லாம் நல்லது தான். ஆனால், நம் வாழ்வாதாரங்களான விதை, நிலம், உணவு, உரிமையை இழந்து, அன்னிய தேசத்து கார்ப்பரேட் கம்பெனியிடம் கையேந்தி வல்லரசாகி என்ன பிரயோஜனம்?
நம் நிலத்தை, விதைகளை, சுற்றுச்சூழலை மீட்பது, இப்போதைய தேவை. தனி மனிதனாக என்ன செய்ய முடியும் என பார்த்ததில், நம் நாட்டு விதைகளை இலவசமாக வினியோகிக்க முடிவு செய்தேன். இந்த சிந்தனை,நம்மாழ்வாருடையது.

சென்னை மூலக்கடை, சிம்சனில் மெக்கானிக்காக உள்ள நான், மாதச் சம்பளத்தில், 1,500 ரூபாயை, விதை வாங்க செலவு செய்கிறேன். முசிறியில் விதைகளை வாங்கி வந்து, வீட்டில் மனைவி, மகளுடன், ஓய்வு நேரங்களில், திருநீறு பொட்டலம் போல், விதைகளை காகிதத்தில் மடித்து கட்டுவேன். அதன் மேல், அந்தந்த விதைகளின் பெயரை எழுதி, நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு கொடுத்து, வீட்டு தொட்டியில் பயிரிடக் கூறுவேன். அப்போது அவர்களிடம், 'நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்ப்பது போல், இதையும் ஒரு கடமையாக செய்யுங்கள். 10 வெண்டைக்காய் செடி முளைத்து, நீங்கள் அதிலிருந்து, ஒன்பது செடியின் காய்களை பயன்படுத்தினால், ஒரு செடியை விதைக்காக விட்டு விடுங்கள். அந்த விதையை மற்றவர்களுக்கு கொடுங்கள். இப்படித்தான் நம்முடைய விதைகளை காப்பாற்ற முடியும்' என கூறுவேன்.

ஒருமுறை ஹைபிரிட் விதை வாங்க போனேன். 100 கிராம், 400 ரூபாய் என்றனர். நன்றாக காய்க்கும்; நமக்கும் நல்ல லாபம். ஆனால், நாம் பயிரிட்டு வரும் காயிலிருந்து விதை எடுத்து போட்டால் முளைக்காது. திரும்பவும் அவர்களிடம் தான் விதையை வாங்க வேண்டும். அப்போது அவர்கள் வைத்தது தான் விலை. ஒரு கட்டத்தில் விதை தர முடியாது என்றால், நம் மக்கள் நிலை என்னாவது? இந்த கார்ப்பரேட் விதை பெருகும் போது, நம் விதைகள் காணாமல் போய்விடும்.

'வீடு மற்றும் 'ஏசி' என வாழ்ந்து, காய்கறி, பழம், உணவுக்கு இன்னொருவனிடம் கையேந்தினால் நன்றாகவா இருக்கும்?... அதென்ன வளர்ச்சி...' என தோன்றவே, மனது பொறுக்காமல் இதில் இறங்கி, நான்கு ஆண்டு ஆகிறது.

நீங்களும் நான்கு பிளாஸ்டிக் டப்பாவில், நான்கு விதமான செடியை போட்டு, மாடி மேல் வளர்த்து பாருங்கள். சிறுதுளி பெரு வெள்ளம் போல், உங்களிடம் இருக்கும் நான்கு விதை தான், நம் நாட்டை காக்கும் ரகசியம். இதெல்லாம் ஒரு வேலையா என நினைக்காதீர். இப்படித்தான் நகரத்தார்களும், மறைமுகமாக விவசாயிகளாக மாற வேண்டும்.
தற்போது நான், விவசாய தொண்டு அமைப்புடன் சேர்ந்து, சென்னையில் இருக்கும் மரங்களின் விதைகளை சேமித்து, விதைப்பந்து தயாரிப்பவர்களிடம் கொடுத்து வருகிறேன். நாம் வசிக்கும் சென்னையையாவது பசுமையாக வைத்துக் கொள்வோமே!

தினமலர் நாளிதழிலிருந்து.
  

2 comments:

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...