Sunday, 9 July 2017

தேங்காய்ப்பால்-வீட்டிலேயே ஒரு புத்துணர்ச்சி முகாம்

  • தேங்காய்ப் பாலைக் கூடுமானவரை வெறும் வயிற்றில் குடிப்பதே நலம். அதைக் குடித்த பின்னரும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு வேறு எதையும் உண்ணாமலும் பருகாமலும் இருப்பது நல்லது.
  • தேங்காய்ப் பாலை அப்படியே குடிப்பது மட்டுமல்லாமல், சோற்றுடன் பிசைந்தும் உண்ணலாம். சோற்றுடன் சேர்க்கிறபோது ஐந்தாறு சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்தால், தேங்காய்ப் பால் மோரின் சுவையைப் பெறும். எனவே, பால் மோருக்குப் பதிலாகத் தேங்காய்ப் பால் மோரைப் பயன்பாட்டில் நிரந்தரமாக்கிக்கொள்ளலாம்.
  • அவலுடன் தேங்காய் பாலைச் சேர்த்து ஊறவைத்து, எலுமிச்சைச் சாற்றைக் கலந்தால் ‘உடனடி தயிர் சாதம்’ தயார். இந்தத் தயிர் சாதம் வயிற்றைத் தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டது. பால் தயிர் சாதம் தரும் எதிர்விளைவுகள் எதையும் இது தராது. 


உடனடி சத்து உணவு
நீருக்குப் பதிலாகத் தேங்காய்ப் பாலை ஊற்றிச் சோறு சமைப்பது பள்ளிப் பிள்ளைகளின் மதிய உணவுக்கு ஏற்றதாக அமையும். இது சத்து மிகுந்த உணவாக மட்டுமல்லாமல், சுவை மிகுந்த உணவாகவும் இருக்கும். 

அதேபோல, சோறு வெந்து கொண்டிருக்கிறது. குழம்பு இன்னும் தயாராகவில்லை. அவசரமாக வெளியில் கிளம்ப வேண்டும் என்றால் சோற்றைக் கொட்டி ஆற வைத்துவிடுங்கள். அரை மூடித் தேங்காயைத் துருவி, அந்தப் பூவை எடுத்துச் சோற்றின் மீது சாரலாகத் தூவிவிட்டு, ஒரு தக்காளியையும், அரை வெங்காயத்தையும் பொடியாக வெட்டி வண்ணமயமாகச் சிதற விட்டு, சிறிதளவு நெய்யைப் படரவிட்டுப் பிசைந்து உண்டால் சிக்கனமான, ஆரோக்கியமான உணவு முடிந்தது. ஒரு ‘புல் மீல்ஸ்' தரும் நிறைவை இது தரும்.அதன் சுவை நீண்ட நேரத்துக்கு நாவில் நின்று நர்த்தனமாடும். மறுநாள் காலையும் ‘கலகல’வென்று இருக்கும். 

சிறுநீரகம் பத்திரம்
‘ஏதாவது ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டுவிட்டுப் போகிறேன்’ என்று கடையில் கால் மணி நேரம் நின்றிருந்து, வறுத்த சோற்றை அரையும் குறையுமாக மென்று உள்ளே தள்ளி அவதிப்படுவோர் நம்மில் அதிகம்.
இந்த வறுத்த சோறு (ஃபிரைடு ரைஸ்) தொண்டையை வறளச் செய்து மீண்டும் மீண்டும் தண்ணீரைக் குடிக்க வைத்து, சிறுநீரகத்தை ‘அரை ஹார்ஸ் பவர் மோட்டா'ராகத் தொடர்ந்து வேலை வாங்கி, தளர்ந்து போக வைத்துவிடுகிறது. அதனால்தான் இந்தக் காலத்தில் ஆண் - பெண் இருபாலரும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ள நேரிடுகிறது. முடி கொட்டுதலில் தொடங்கிக் குழந்தைப் பேறின்மை, கர்ப்பப் பைக் கட்டிகள்வரை பல்வேறுத் தொல்லைகள் இளம் வயதிலேயே தோன்றுவதற்குக் காரணம், சிறுநீரகங்களைச் சவட்டி வேலை வாங்குவதுதான். உபாதையைத் தரும் ‘ஃபாஸ்ட் ஃபுட்'டுக்கு பதிலாக, மேற்கண்ட உடனடிச் சத்து உணவைத் தாராளமாக உண்ணலாம். 

தேங்காய்ப்பால் குளியல்
சரி, ‘முடிசூடிய வேந்தர்' தேங்காய்க்கு வருவோம். பிரியாணி சமைக்கிறபோது, அதை நான்கைந்து மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்கப் போவதில்லை என்றால், நெய்யைத் தவிர்த்துவிட்டு அல்லது குறைத்துக்கொண்டு, அதற்கு ஈடாகத் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் காலத்தில் கடை நெய், அத்தனை பாதுகாப்பானதாக இல்லை என்பது மட்டுமில்லாமல், பொருளாதார ரீதியாகவும் தேங்காய்ப் பால் சிக்கனமாக இருக்கும். நெய்யைக் காட்டிலும் செரிமானமும் எளிதாகும். 

தேங்காய்ப் பால் வடித்த பின் கிடைக்கும் திப்பியை எடுத்துச் செடிகளுக்குப் போட்டால், திப்பியை உண்ண வரும் எறும்புகள் செடியின் வேர்ப்பகுதியில் இலவசமான நுட்ப உழவு ஒன்றை நிகழ்த்தும். அதனால் செடிகளுக்கு ‘போனஸ் காற்று' கிடைக்கும். 

எண்ணெய்க் குளியல் அருகிவிட்ட நிலையில், தேங்காய்ப் பாலைத் தேய்த்துக் குளித்தால் வறண்ட சருமம் ஈரப்பதம் பெறும் (குளியல் முறைகள் பற்றி, பின்னர் விரிவாகப் பார்ப்போம்). கண் எரிச்சல், உடல் சூடாகிவிட்டது போல் உணர்வது போன்ற நேரத்தில் ‘தேங்காய்ப் பால் குளியல்’ மேற்படி தொல்லைகளிலிருந்து உடனடி நிவாரணம் தரும். 

உடல் கழிவை வெளியேற்ற
போதிய மனப்பக்குவமும் விரதப் பயிற்சியும் இருந்தால் ஓரிரு நாட்களுக்குத் தேங்காய் மோர் உண்டு, உடலுக்குப் புத்துணர்ச்சி முகாம் ஒன்றை வீட்டிலேயே நடத்தலாம்.எப்படி…? 

ஒரு தேங்காயுடன் நான்கு பெரு நெல்லிக்காயைச் சேர்த்து அரைத் தால், இதமான புளிப்புச் சுவையில் மோர் போன்ற பானம் கிடைக்கும்.
விடுமுறையைக் கொண்டாடுகிறோம் என்று சொல்லி ஒருசில ஆயிரங்களைக் கரைத்து, உடலுக்கு மேலும் சில உபாதைகளைக் கொண்டுவந்து சேர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, இரண்டு நாட்களுக்கு முழுக்க முழுக்க இந்த மோர்ப் பானத்தை மட்டுமே அருந்திவந்தால், உடல் கழிவுகள் நீங்குவது மட்டுமில்லாமல், வேலை நாளில் சுறுசுறுப்புடன் பணியாற்றலாம். 

நெல்லியும் தேங்காயும் உடலில் நுண் சத்துகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதால், அடிக்கடி எதையேனும் உண்ண வேண்டும் என்ற பேராவல் தணிந்துவிடும். பசிக்கிறபோது மட்டுமே உரிய உணவை உண்பது என்ற பக்குவத்தைப் பெற்றுவிடுவோம். 

காலத்துக்கு ஏற்றவாறு எளிய முறையில் தேங்காயின் முழுப் பயனும் நம் உடலில் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்பதற்காகவே, இந்தத் தேங்காய்ப் பால் பரிந்துரை. 

சத்தும் சுவையும் மிகுந்த லஞ்ச் பாக்ஸ்
# ஒரு மூடித் தேங்காயைக் கீறிப் போட்டு, இரண்டு முறை மிக்ஸியில் சுற்றியெடுத்து 400 மில்லி தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும்.
# பச்சரிசி 200 கிராம் எடுத்து ஒருமுறை மட்டும் அலசி நீரை வடிக்கவும்.
# பச்சைப் பட்டாணி அல்லது முளை கட்டிய பச்சைப் பயறு ஒரு கோப்பை அளவு எடுத்துக்கொள்ளவும்.
# சிறிய கேரட்டைப் பொடிப் பொடி சதுரங்களாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்துபோட்டு இளஞ்சூட்டில் பொரிக்கவும். ஒரு அங்குல நீளப் பட்டை, நான்கு கிராம்பு, ஒரு அன்னாசி பூ ஆகியவற்றை உடன் சேர்த்து மூன்று நிமிடங்கள் புரட்டிய பின்னர், அரை அங்குல இஞ்சியைத் தட்டிப் போட்டு அது வதங்கும் முன்னரே பயறு, கேரட்டை தாளிப்புடன் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசம் போகும்வரை கிளறிவிட்டு, தேங்காய்ப் பாலை அதில் ஊற்றவும். இப்போது அரிசி, தேவையான அளவு உப்பு போட்டுக் குக்கரை மூடிவிடவும். இரண்டு விசில் வந்த பின்னர் இறக்கி, ஆவி அடங்கிய பின்னர் எடுத்துக் கிளறி ஆற விட்டு, புதினா சட்னி தொட்டுச் சாப்பிடலாம். இது எளிமையான சத்தும் சுவையும் நிறைந்த உணவு. சத்து நிறைந்தது என்பதால் குறைவாகச் சாப்பிட்டாலே போதும்.
இது வண்ணமயமாகத் தோற்ற மளிக்கும் என்பதால் பள்ளிப் பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸுக்கு மிகவும் ஏற்றது. சுவையாகவும் இருக்கும் என்பதால் டப்பா காலியாக வீடு திரும்பும். 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற