முதலீடு இல்லாமல்,
உழைப்பு, நேர்மையை பயன்படுத்தி இல்லத்தரசிகள், பணம் சம்பாதிக்க வழிகளை
கூறும், சுஹா தொண்டு நிறுவன தலைவியும், சுயதொழில் முனைவோருக்கான
பயிற்சியாளருமான உமா ராஜ்:
தினமலர் நாளிதழிலிருந்து
10க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள் செய்ய தெரிந்தால், வீட்டின் முன், அறிவிப்பு பலகை வைத்து, வகுப்புகள் எடுக்கலாம்.
படித்தவர்கள் என்றால், டியூஷன் சென்டர்ஆரம்பிக்கலாம்.
வீட்டில் தயார் செய்யும் சமையலை சற்று அதிகமாக செய்து, வயதானவர், பேச்சிலர்களுக்கு, 'ஆர்டர்' அடிப்படையில் வினியோகம் செய்யலாம். மாலை நேரத்தில் சப்பாத்தி, 'ஆர்டர்' வாங்கி வினியோகிக்கலாம்.
நிறைய வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால், 'குழந்தையின் புத்தகங்களுக்கு அட்டை போட்டு தரப்படும்' என, அறிவிப்பு வைத்தால், நிறைய பேர் வருவர்.
வீட்டில் பேப்பர் வாங்குபவர்களாக இருந்தால், அதில், 'லாண்டரி பேக்' தயாரித்து, அயர்ன் நிலையம், ஓட்டல்களுக்கு வினியோகிக்கலாம்.
வீட்டில் இடம் இருந்தால் கோதுமை புல் வளர்த்து, நடைபயிற்சி நடைபெறுகிற சாலையோரம், பூங்காக்களில் கோதுமை புல் ஜூஸ் விற்பனை செய்யலாம்; கோதுமை புல்லை உலர வைத்து, பவுடராக்கியும் விற்கலாம்.
அதிக வீடுகள் கொண்ட குடியிருப்பில் வசிப்பவர்களாக இருந்தால், 'காய்கறி கட்டிங் சென்டர்' என அறிவிப்பு வைத்து, குடியிருப்புகள், கேட்டரிங், ஓட்டல்களுக்கு காய்கறி நறுக்கிகொடுக்கலாம்.
சிறிய கடை வியாபாரிகளை அணுகி, அவர்கள் கடைகளை, 15 நாள் அல்லது மாதம் ஒரு முறை அழகுபடுத்தி தரலாம். வீட்டில் இணைய வசதி இருந்தால், ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ் செய்து பணம் ஈட்டலாம்; ஆன்லைனில் டெலிபோன், இ.பி., பில் கட்டி, சேவை கட்டணம் பெறலாம்; ரயில், பஸ், விமான டிக்கெட் பதிவு செய்தும் பணம் சம்பாதிக்கலாம்.
வீட்டில் இட வசதி இருந்தால், மாலை, 5:00 - 7:00 மணியளவில் குழந்தைகளுக்கு, பழைய விளையாட்டுகளான பல்லாங்குழி, ஏழாங்கல், தாயம் சொல்லிக் கொடுத்து, விளையாட்டு மையம் ஆரம்பிக்கலாம்.
ஆள் பலம் இருந்தால், பழைய வீட்டில் இருந்து, புது வீட்டுக்கு பொருள் முழுவதும் கொண்டு சேர்த்து, வீட்டை அலங்கரிக்கும், 'ஹவுஸ் ஷிப்டிங்' சேவை துவங்கலாம்.
தையல், எம்பிராய்டிங் தெரிந்திருந்தால், மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், ரெடிமேட், தையல் கடைகளை அணுகி, நைட்டி, பாவாடை வெட்டி வாங்கி தைத்தும், பட்டன், ஹூக், ஹெம்மிங் செய்தும் தரலாம்.
முறையான பரதநாட்டியம், குச்சுப்புடி, யோகா கற்றிருந்தால், மற்றவர்களுக்கு கற்றுத் தரலாம்.
விடுமுறை அல்லது வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்கிறவர்களின் தொட்டி செடிகளை பராமரித்து தரலாம்.
பேச்சு திறன் உள்ளவர்கள் எனில், தாம்பூலப்பை, தேங்காய், பழம் மலிவு விலையில் எங்கு கிடைக்கும் என்பதை அறிந்து, திருமண மண்டபத்தை அணுகி, யார் வீட்டு திருமணத்துக்கு தேவையோ அவர்களுக்கு கைமாற்றிவிட்டு பணம் பண்ணலாம். கேட்டரிங் செய்பவர்கள் கூட கமிஷன் முறையில் வாங்கிக் கொள்வர்.
பழமையான கோவில், புண்ணிய தலங்களை அறிந்து, 'டூர்' ஏற்பாடு செய்யலாம். சுற்றுலா தலங்கள் உள்ள இடத்தில் வசிப்பவராக இருந்தால், அதன் வரலாற்றை அறிந்து, கைடாக பணிபுரியலாம்.
தினமலர் நாளிதழிலிருந்து
No comments:
Post a Comment