Tuesday 28 April 2020

காய்கறி இலவசம்!!!!!!

கிராமத்தில் புறம்போக்காக கிடந்த நிலத்தில், காய்கறி பயிரிட்டு, விளைச்சலை கிராம மக்களுக்கே இலவசமாக வழங்கி வரும், கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், வ.வேப்பங்குடி கிராமத்து இளைஞர், அமெரிக்காவில் வேலை பார்க்கும், நரேந்திரன் கந்தசாமி: கரூர் மாவட்டம், எப்போதுமே வறட்சியானது. அதிலும், எங்கள் ஊர், கடும் வறட்சி உடையது. எந்த அடிப்படை வசதியும் இல்லாத பின்தங்கிய கிராமம். கடந்த, 2010-ல், ஆஸ்திரேலியா நாட்டில், கணினி தொழில்நுட்ப ஆலோசகராக வேலை கிடைத்தது. தொடர்ந்து ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளுக்கும் சென்றேன்.சுவிட்சர்லாந்தில் நிலவிய இயற்கைச் சூழலை பார்த்து தான், 'நம்ம ஊரையும் இப்படி மாற்ற வேண்டும்' என்ற எண்ணம் தோன்றியது.

அதையடுத்து, கடந்த, 2017ல், பூவரசு, ஆலம், அரசு, வாகை, வாதாம், வாதநாராயண மரம், வேம்பு என, பல வகை மரங்களை, 10 அடி வளர்த்து, ஊர் முழுக்க நட்டோம். பொது இடங்களில், 500-க்கும் மேற்பட்ட மா, பலா, வாழை, கொய்யா மரக்கன்றுகளை வளர்த்தோம். போன வருஷம், இயற்கை காய்கறித் தோட்டத்தை அமைத்தோம். எங்கள் ஊர் மண்ணில் எதுவும் விளையாது; மண்ணை மாற்றிய பின், காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என்றனர். ஆனால், நாங்க அப்படிச் செய்யவில்லை. ஆடு, மாடு சாண எருவை மட்டுமே போட்டு, மண்ணை மாற்றினோம்.அந்த தோட்டத்துக்கு, 'சமுதாய காய்கறித் தோட்டம்' என, பெயர் வைத்தோம்.

கத்திரி, பீர்க்கங்காய், வெண்டை, துவரை, தக்காளி, மிளகாய், முருங்கை, அவரை, வெண் பூசணி, புடலங்காய், சுரைக்காய், பாகற்காய், பரங்கிக்காய், தண்டுக்கீரை, செங்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி, கேரட், பீட்ருட் என, எல்லா காய்கறி, கீரைகளும் காய்ப்புக்கு வந்து விட்டன.இப்போது, ஊர் மக்களே, தண்ணீர் பாய்ச்சுவது, களை பறிப்பது என, எல்லா வேலைகளையும் பார்க்கின்றனர்.

வாரம் இரண்டு தடவை, கிராமத்து இளைஞர்கள் வேல்முருகன், காளிமுத்து போன்றோர், எல்லா வீடுகளுக்கும் காய்கறிகளை கொடுப்பர். காய்கறி தேவைப்படுவோர், தேவையான காய்கறிகளை, தாங்களாக வந்து பறித்து செல்வர். இப்படி, இதுவரை, 3,000 கிலோ காய்கறிகளை இலவசமாக வழங்கியுள்ளோம். இதை பார்த்து, வெளியூர் மக்கள் சிலர், அவர்களின் ஊர்களிலும், இலவச, இயற்கை தோட்டத்தை போடத் துவங்கி விட்டனர்.

கொரோனா வைரஸ், உலகத்தையே உலுக்கிய போது, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஆனால், எங்கள் ஊர் மக்கள், எந்தக் கவலையும் இல்லாமல், சமுதாய காய்கறி தோட்டத்தில், காய்கறிகளைப் பறித்து, சமைத்து சாப்பிட்டு, ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்தனர்!

--தினமலர் நாளிதழிலிருந்து



Thursday 23 April 2020

வயலிலேயே மணம் வீசும் 'காலாபாத்!'

பிரியாணி தயாரித்தால், ஊரையே சாப்பிட அழைக்கும், 'காலாபாத்' அரிசியை விளைவித்துள்ள, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டம், சித்தையன் கோட்டை ரசூல் மைதீன்: 
 
இந்த பகுதியில் பிரசித்திபெற்ற நெல் ரகம், காலாபாத்; பிரியாணிக்காகவே சாகுபடி செய்யக் கூடிய ரகம். ஒரு காலத்தில், இந்தப் பகுதியில், அதிக அளவு சாகுபடி செய்யப்பட்ட ரகம் இது. 'தலப்பாகட்டி' பிரியாணி உணவகம், ஆரம்ப காலங்களில் இந்தப் பகுதியில், காலாபாத் ரக நெல்லைச் சாகுபடி செய்து, தங்கள் உணவகங்களில் பயன்படுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நெல், கதிர் முற்றிய பின், வயல் பகுதிக்குச் சென்றாலே, மணம் வீசும். வீரிய ரக நெல் வரவுக்குப் பின், இந்தப் பகுதியிலிருந்து, இந்த நெல் எப்படியோ காணாமல் போய்விட்டது. ஒரு காலத்தில், காலாபாத் நெல் என சொன்னாலே, எங்க பகுதியைத் தான் சொல்வர்; அந்தளவுக்கு, ஊரே அதைச் சாகுபடி செய்யும். அறுவடை காலங்களில், வயல் பக்கம் போனால், அருமையான மணம் வீசும்; அந்த மணத்துக்கே சாப்பிட வேண்டும் எனத் தோன்றும்.

ஆனால், காலப்போக்கில் இந்த ரகம் காணாமல் போய் விட்டது; யாரிடமும், விதை நெல் கூட இல்லை. இந்தப் பகுதியில் இருக்கும் வயதான, பழுத்த அனுபவமுள்ள விவசாயிகள் பலரும், காலாபாத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவர்.அவ்வளவு அருமையான நெல்லை, சாகுபடி செய்ய வேண்டும் என, முடிவு செய்தேன்.

விதை நெல்லைத் தேடி, பல இடங்களில் அலைந்தேன். ஒரு வழியாக, நண்பர் ஒருவர், அசாம் மாநிலத்தில் இருந்து, விதை நெல் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கி, நாற்று உருவாக்கி, 60 சென்ட் நிலத்தில் நடவு செய்து, அறுவடை செய்துள்ளேன்.

இந்த நெல்லின் தாள், மிகவும் மென்மையாக இருக்கிறது. அருகம்புல் கொஞ்சம் பெரியதாக இருந்தால் எப்படி இருக்குமோ, அதுபோல, புல் மாதிரி இருக்கிறது. மாடுகள் இந்த வைக்கோலை கழிக்காமல் சாப்பிடும். பல ஆண்டுகளுக்குப் பின், எங்கள் பகுதியில், இதைச் சாகுபடி செய்துள்ளேன்; மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த ரகத்தை மறுபடியும் விவசாயிகளிடம் கொடுத்து, சாகுபடி செய்யச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அதனால் இதை, கொஞ்சம் மட்டும் அரிசியாக்கி விட்டு, மற்றதை விதை நெல்லாகக் கொடுக்கப் போகிறேன். விருப்பமுள்ள விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம்.தொடர்புக்குரசூல் மைதீன், மொபைல் போன் எண்: 86678 45567

--தினமலர் நாளிதழிலிருந்து

 

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...