Thursday, 23 April 2020

வயலிலேயே மணம் வீசும் 'காலாபாத்!'

பிரியாணி தயாரித்தால், ஊரையே சாப்பிட அழைக்கும், 'காலாபாத்' அரிசியை விளைவித்துள்ள, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டம், சித்தையன் கோட்டை ரசூல் மைதீன்: 
 
இந்த பகுதியில் பிரசித்திபெற்ற நெல் ரகம், காலாபாத்; பிரியாணிக்காகவே சாகுபடி செய்யக் கூடிய ரகம். ஒரு காலத்தில், இந்தப் பகுதியில், அதிக அளவு சாகுபடி செய்யப்பட்ட ரகம் இது. 'தலப்பாகட்டி' பிரியாணி உணவகம், ஆரம்ப காலங்களில் இந்தப் பகுதியில், காலாபாத் ரக நெல்லைச் சாகுபடி செய்து, தங்கள் உணவகங்களில் பயன்படுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நெல், கதிர் முற்றிய பின், வயல் பகுதிக்குச் சென்றாலே, மணம் வீசும். வீரிய ரக நெல் வரவுக்குப் பின், இந்தப் பகுதியிலிருந்து, இந்த நெல் எப்படியோ காணாமல் போய்விட்டது. ஒரு காலத்தில், காலாபாத் நெல் என சொன்னாலே, எங்க பகுதியைத் தான் சொல்வர்; அந்தளவுக்கு, ஊரே அதைச் சாகுபடி செய்யும். அறுவடை காலங்களில், வயல் பக்கம் போனால், அருமையான மணம் வீசும்; அந்த மணத்துக்கே சாப்பிட வேண்டும் எனத் தோன்றும்.

ஆனால், காலப்போக்கில் இந்த ரகம் காணாமல் போய் விட்டது; யாரிடமும், விதை நெல் கூட இல்லை. இந்தப் பகுதியில் இருக்கும் வயதான, பழுத்த அனுபவமுள்ள விவசாயிகள் பலரும், காலாபாத்தைப் பற்றி பெருமையாகப் பேசுவர்.அவ்வளவு அருமையான நெல்லை, சாகுபடி செய்ய வேண்டும் என, முடிவு செய்தேன்.

விதை நெல்லைத் தேடி, பல இடங்களில் அலைந்தேன். ஒரு வழியாக, நண்பர் ஒருவர், அசாம் மாநிலத்தில் இருந்து, விதை நெல் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கி, நாற்று உருவாக்கி, 60 சென்ட் நிலத்தில் நடவு செய்து, அறுவடை செய்துள்ளேன்.

இந்த நெல்லின் தாள், மிகவும் மென்மையாக இருக்கிறது. அருகம்புல் கொஞ்சம் பெரியதாக இருந்தால் எப்படி இருக்குமோ, அதுபோல, புல் மாதிரி இருக்கிறது. மாடுகள் இந்த வைக்கோலை கழிக்காமல் சாப்பிடும். பல ஆண்டுகளுக்குப் பின், எங்கள் பகுதியில், இதைச் சாகுபடி செய்துள்ளேன்; மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த ரகத்தை மறுபடியும் விவசாயிகளிடம் கொடுத்து, சாகுபடி செய்யச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அதனால் இதை, கொஞ்சம் மட்டும் அரிசியாக்கி விட்டு, மற்றதை விதை நெல்லாகக் கொடுக்கப் போகிறேன். விருப்பமுள்ள விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம்.தொடர்புக்குரசூல் மைதீன், மொபைல் போன் எண்: 86678 45567

--தினமலர் நாளிதழிலிருந்து

 

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...