Wednesday 19 December 2018

தொழிலில் ஜெயிக்கலாம் - பாரதிய யுவசக்தி டிரஸ்ட் (BYST) வழி காட்டுகிறது

'பாரதிய யுவசக்தி டிரஸ்ட்' நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரும், முன்னாள் ஜனாதிபதி, ஆர்.வெங்கட்ராமனின் மகளுமான, லட்சுமி வெங்கடேசன்: கடந்த, 1990ல், அப்பாவுடன், அமெரிக்கா போனபோது, ராணி எலிசபெத்தின் மூத்த மகனும், வேல்ஸ் இளவரசருமான சார்லசைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை தேடிக் கண்டுபிடித்து தொழிலதிபர்களாக்கும் அவருடைய முயற்சி, என்னை கவர்ந்தது. வேலையை விட்டு, அதே மாதிரியான திட்டத்தை ஆரம்பிக்க நினைத்தேன். என் யோசனையை, ஜே.ஆர்.டி., டாட்டாவிடம் கொடுத்தேன். வழிகாட்டியாகவும், நிறுவன தலைவராகவும் இருக்க அவர் சம்மதிக்க, 1992ல், Bharatiya Yuva Shakti Trust (BYST) ஆரம்பமானது.

அதாவது, 18 - 35 வயது இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும்போது, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போய்விடும். சிறுதொழில் ஆரம்பிக்கவும், வங்கியில் கடன் வாங்கவும் ஏகப்பட்ட கெடுபிடிகள்  உள்ளது. பெண்கள் நிலை இன்னும் மோசம். BYST  மூலமாக, கிராமம், சிறுநகரங்களுக்குச் சென்று, சிறுதொழில் செய்ய நினைப்பவர்களை கண்டுபிடிக்கிறோம். சாதாரண கைவினைப் பொருள் தயாரிப்போ, அதிநவீன தொழில்நுட்பம் தேவைப்படும் பிசினசோ செய்ய அவர்கள் முற்பட்டால், அவர்களுடைய யோசனைகளை வரவேற்கிறோம். சொத்து இருக்க வேண்டியதில்லை, செக்யூரிட்டி தேவையில்லை. பயிற்சி கொடுப்பதில் துவங்கி, வங்கிக் கடன் வாங்கித் தருவது, ஆலோசனை, வழிகாட்டுவது என, அனைத்தையும் செய்கிறோம்.  

தொழிலதிபர்களை உருவாக்கும் இத்திட்டத்தின் முதுகெலும்புகளே, வழிகாட்டிகள் தான். அப்படிப்பட்டவர்களை, பெரிய நிறுவனங்கள், தொழிற்பேட்டை, ரோட்டரி, லயன்ஸ் கிளப் அமைப்புகள் என, பல பின்னணியிலிருந்து தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவோம். வருங்கால தொழிலதிபர்களுக்கு வழிகாட்டப் போகும் அவர்களுக்கும், 'ட்ரெயினிங் ஆப் தி ட்ரெயினர்ஸ்' என்ற பெயரில், பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ தொழில் ஆரம்பித்த பிறகும், இரண்டு ஆண்டுகளுக்கு வழிகாட்டிகளின் ஆதரவு தொடரும்.

எங்கள் முயற்சியால், ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் உருவாகி, அவர்கள் வாயிலாக, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 42 நாடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். 'தொழிலில் ஜெயிக்க, பெரிய பின்புலம் தேவை' என்ற கருத்தை உடைப்பதே, எங்கள் நோக்கம். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வரும் ஆண், பெண் கூட, தொழிலதிபர் ஆகலாம்; அவர்கள், 1,000 பேருக்கு வேலை கொடுக்கலாம் என, நிரூபித்து வருகிறோம்.
--தினமலர் நாளிதழிலிருந்து

Thursday 13 December 2018

தலை குளியல் முறைகள்

தலை குளியல் முறை குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்:  தலைக்கு, எண்ணெய் மற்றும் சீயக்காய் பொடி தேய்த்த பின், சாதாரண தண்ணீரால் தலையை அலசலாம். அதைவிட, மூலிகைகள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரில் அலசினால் நல்லது. தலைக்கு சுடு தண்ணீர் பயன்படுத்தினால், முடிக்கும், கபாலத்திற்கும் கேடு விளைவிக்கும். அதனால், குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரிலேயே, தலை குளிக்க வேண்டும்.
  • நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், அதிமதுரம், நெருஞ்சில், சிறிதளவு தேயிலைப் பொடி ஆகியவற்றை கஷாயம் போல் கொதிக்க வைத்து, தலை அலசினால், முடி மிருதுவாவதுடன், உதிர்வது நிற்கும்; பொடுகுத் தொல்லையும் நீங்கும். 
  • மருதப்பட்டை, வாகை மரப்பட்டையை கஷாயம் போல் காய்ச்சி, முடியை அலசினால், தலை அரிப்பு குணமாகும். 
  • நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், வசம்பை தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து அலசினால், புழுவெட்டு குணமாகும்.
  • மருதோன்றி இலையை கஷாயம் வைத்து அலசினால், முடி கறுமை நிறமடையும்; இளநரை நீங்கும். 
  • படிகாரத்தை தண்ணீரில் கரைத்து அல்லது கருந்துளசி கஷாயத்தால் அலசினால், பேன் தொந்தரவு நீங்கும். 
  • கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், ரோஜா இலை சேர்த்து காய்ச்சிய கஷாயத்தால் தலையை அலசினால், முடி நன்றாக வளரும். 
  • தேக்கு மர இலையில் கஷாயம் வைத்து அலசினால், முடி உதிருவது நிற்கும்; நன்கு செழித்து வளரும்.

'ஸ்நானம்' என்பது, உச்சி முதல் உள்ளங்கால் வரை, உடலைக் குளிர்வித்தல். இதுவே, 'குளித்தல்' என்று மாறிவிட்டது. தவிர, தினமும் தாராளமாக, தலைக்குக் குளிக்கலாம். ஆனால், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. பெண்களுக்கு அதிக முடி இருப்பதால், சளி தொந்தரவு ஏற்படும் என்பதாலேயே, தினமும் தலைக்குக் குளிக்கக் கூடாது என்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி, தினமும் குளிப்பது தான் சிறந்தது. தலைக்கு குளிக்கும்போது, உடலுக்கு வெதுவெதுப்பான நீரும், தலைக்கு குளிர்ச்சியான நீரும் ஊற்றிக் குளிக்கக்கூடாது.

தற்போதைய இளைய தலைமுறையினர், சரியாக தலையைத் துவட்டுவதில்லை. இப்படிபட்டவர்கள், 'ஹெல்மெட்'டால் வியர்வை ஏற்படும் நிலையில் உள்ளவர்கள், தலை அதிகமாக வியர்ப்பவர்கள், தலையில் நீர்கோர்த்து இருப்பவர்கள், சாம்பிராணி புகை போடலாம். இது, தலையில் நீர் கோர்த்துக் கொள்வதைத் தடுக்கும்.தவிர, நம் முன்னோர், கோவில் குளம், நீர்நிலைகளில் குளித்த பின், நெற்றி நிறைய திருநீற்றால் பட்டை அடிப்பர். அந்த திருநீறானது, தலையில் உள்ள நீரை முற்றிலுமாக இறக்கிவிடும். இப்போதைய தலைமுறையினர், இந்த வழிமுறையைப் பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். அதனால், இதற்கு மாற்றாக, தலையை துவட்டிய பின், 'ராஸ்னாதிக்' என்ற பொடியை, உச்சியில் சிறிதளவு வைத்துக் கொண்டால், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது!
--தினமலர் நாளிதழிலிருந்து

Monday 3 December 2018

200 மரங்களை காப்பாற்ற காரணம் - துல்லியமான கணிப்பும், துணிச்சலான முடிவும்

 பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பறிகொடுத்த திருவாரூர் மாவட்ட கிராமம் ஒன்றில், வானிலை ஆய்வாளர் செல்வ குமாரின் துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும் சேர்ந்து, ஒரே ஒரு தோப்பில் உள்ள 200 தென்னை மரங்களைக் காப்பாற்றியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே உள்ளது இடும்பா வனம் கிராமம். கஜா புயலின் கோர தாண்டவத்தால் அதிக அளவில் தென்னை மரங்களை பறிகொடுத்த கிராமங்களில் இதுவும் ஒன்று. இந்த கிராமத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதே கிராமத்தில், சீனு என்ற விவசாயி மட்டும் குறைந்த சேதங்களோடு தப்பியுள்ளார். இதற்கு காரணமாக இருந்தது, ஆசிரியர் செல்வகுமார் கூறிய வானிலை முன்னறிவிப்பு.
தன்னார்வ அடிப்படையில் வானிலை நிகழ்வுகளைக் கணித்து கூறி வருபவர் ஆசிரியர் செல்வ குமார். கஜா புயல் வேதாரண்யம் அருகேதான் கரையைக் கடக் கும் என்று துல்லியமாகக் கணித்து கூறியிருந்தார். முன்பு தனுஷ் கோடியை அழித்த புயல் போலவே, கஜா புயலால் டெல்டா மாவட்டங்களுக்கு பேரழிவு ஏற்படக் கூடும் என்றும் எச்சரித்து வந்தார். அதைக் கேட்டதால்தான் தனது தென்னை மரங்களை கணிச மாக காப்பாற்ற முடிந்தது என் கிறார் இடும்பாவனம் விவசாயி சீனு.


 இதுபற்றி அவர் கூறியதாவது:
நான் ஒரு சாதாரண விவசாயி. 250 தென்னை மரங்களோட ஒரு தோப்பு இருக்கு. தோப்பிலேயே கூரை வீட்டில் குடியிருக்கோம். 10 மாடுகளும் வளர்க்கிறேன். கடந்த சில வருஷமாகவே பள்ளிக்கூட வாத்தியார் செல்வ குமார் சொல்ற வானிலை செய்தி களை கேட்டு, அதுக்கேத்தபடிதான் சாகுபடி செய்றேன். வேதாரண்யத் தில புயல் அடிக்கப் போவுதுன்னு ரொம்ப நாள் முன்னாடியே சொன் னாரு. தனுஷ்கோடிய அழிச்சது போல பயங்கரமா தாக்கப் போவு துன்னும் ஒரு வாரம் முன்னாடியே சொன்னாரு.
சேதத்தை எப்படி குறைக்க லாம்னு நிறைய ஆலோசனை களும் சொன்னாரு. தென்னை மரத்தோட தலைக்கனத்தைக் குறைச்சிட்டா மரங்களை ஓரளவு காப்பாத்த முடியும்னாரு.

பதினஞ்சாயிரம் ரூபா செலவாச்சு
அதனால, புயலுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஆள் வச்சு, ஒவ்வொரு மரத்திலயும் தலா 10 பச்சை மட்டைய வெட்டினேன். தேங்காய், இளநீர், குரும்பை எல்லாத்தையும் இறக்கிட்டேன். குரும்பை மட்டுமே 12 ஆயிரத் துக்கு மேல இருக்கும். இதெல் லாம் நல்லா தேறி, தேங்காயா பறிச்சா ஒன்னேகால் லட்சம் ரூபா வரை விலை கிடைக்கும். இப்போ அவ்வளவும் நஷ்டம்தான். இதுகள வெட்டி இறக்கவே பதினஞ்சாயிரம் ரூபா செலவாச்சு.
வாத்தியார் சொன்னதுபோல, எங்க கூரை வீட்டுலயும், மாட்டு கொட்டகை மேலேயும் பச்சை தென்னை மட்டைய அடுக்கி, கயித்தாலே நல்லா வரிஞ்சு கட்டினேன். வீட்டுக்கு பக்கத்துல நின்ன ஒரு புளிய மரத்தை மட்டும் வெட்ட முடியல. அதனால, அந்த மரம் விழுந்து வீட்டோட அடுப்படி பக்கம் மட்டும் கொஞ்சம் சேதமாயிட்டு. மத்தபடி வீட்டுக்கோ, மாட்டு கொட்டகைக்கோ எந்த பாதிப்பும் இல்ல. தென்னையில 30 மரம் மட்டும் விழுந்துட்டு. இருநூத்தி சொச்சம் மரங்களைக் காப்பாத்திட்டேன். வாத்தியாரோட நீண்டகால முன்னறிவிப்பை கேட்டு, நெல் வயல்ல முன்னாடியே நடவை முடிச்சுட்டேன். அதனாலே இப்போ பயிர் நல்லா வளர்ந்து, பாதிப்பு இல்லாம தப்பிச்சது.
இவ்வாறு அவர் கூறினார். ‘‘புயல் வர்றதுக்கு முன்னா டியே பச்சை மட்டைகளை வெட்டி னீங்களே, ஊர்ல யாரும் எதுவும் சொல்லலியா?’’ என்று கேட்டதற்கு, “ஊர் மக்களை விடுங்க. எங்க வீட்டுல என்ன பேச்சு பேசினாங்க தெரியுமா’’ என்று, மகளைப் பார்த்தார்.

எம்எஸ்சி படித்துள்ள அவரது மகள் சுபஸ்ரீ கூறும்போது, ‘‘பச்சை மட்டைகளை அப்பா வெட்டுறதை பார்த்து பதறிட்டோம். ‘நல்லா வளர்ந்துட்டு இருக்கிற மரத்தில் இப்படி வெட்டாதீங்க’ன்னு கெஞ்சி னோம். நாங்க சொன்னதால, சில மரங்களை மட்டும் விட்டுட்டாரு. அந்த மரங்கள்தான் இப்போ விழுந்து கிடக்குது. அப்பாவை அவர் போக்கிலேயே விட்டிருந்தா, இந்த மரங்களையும் காப்பாத்தி இருக்கலாம்னு இப்ப தோணுது” என்றார். தொடர்ந்து பேசிய விவசாயி சீனு, ‘‘ஒருவேளை புயல் வீசாமல் போயிருந்தால், பச்சை மட்டை களை வெட்டித் தள்ளிய நான் கிராமத்தில் பெரும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியிருப்பேன். அதை நான் பெரிய விஷயமா நினைக்கல. அந்த கிண்டல், கேலியைக்கூட நான் ஏத்துக்கு வேன். ஆனால், அந்த நஷ்டம் என்னோட போயிருக்கும். இப்ப புயல் அடிச்சு ஊரே அழிஞ்சு கிடக்கிற சூழ்நிலையில, என் மரத்தைக் காப்பாத்திட்டேன் என்று என்னால் சந்தோஷப்பட முடிய வில்லை...’’ என்று வேதனையோடு கூறினார் சீனு.

துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடி வும் சேரும்போது, ஆக்ரோஷமாக தாக்கும் பேரிடரையே எதிர் கொண்டு ஓரளவு பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதா ரணம். எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள பல ருக்கு இது வழிகாட்டியாக இருக் கும் என்பது மட்டும் நிச்சயம்!

--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து


மருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூ இயற்கை முறையில் சாகுபடி:

மருத்துவ தேவைக்காக பயன்படும் செம்பருத்திப்பூவை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வரும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி: கோவில்பட்டியைச் சேர்ந்தவன் நான். விவசாயத்துக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை. எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் முடித்து, சென்னையில், ஒரு, 'சாப்ட்வேர் கம்பெனி'யில், 10 ஆண்டுகள் வேலை செய்தேன்.ஒரு கட்டத்தில் வேலை மிகவும் போர் அடிக்கவும், 2015ல், குடும்பத்தோடு ஊர் திரும்பி விட்டேன். எங்களுக்கு சொந்தமான, 3.5 ஏக்கர், கரம்பை நிலம், 15 ஆண்டுகளாக விவசாயம் செய்யாமல், சீமைக்கருவேல மரங்களால் அடர்ந்து இருந்தது. அதையெல்லாம் சுத்தப்படுத்தி, செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, நிலத்தை தயார் செய்து, 4,000 செம்பருத்தி செடிகளை நடவு செய்தேன்.


அதில், 500 செடிகள் பட்டுப்போயின.மீத செடிகளில் இருந்து கிடைக்கும் பூக்களை, ஆறு மாதங்களாக, அறுவடை செய்து வருகிறேன். சென்னை, கோவை, டில்லி நகரங்களில் சித்த மருந்து தயாரிக்கும் கம்பெனிகள், ஆயுர்வேத மருந்து மற்றும் அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனங்களை தேடிப்பிடித்து, நேரடியாக பூக்களை விற்பனை செய்து வருகிறேன். உள்ளூரில் உள்ள சித்த மருத்துவர்கள், மணப்பாகு தயாரிக்க, தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனர்.உலராத பூக்களாகவும், மீதியை காய வைத்த பூக்களாகவும் விற்பனை செய்து வருகிறேன். 100 கிலோ பூவை காய வைத்தால், 20 கிலோ உலர்ந்த பூ கிடைக்கும். இதுவரையிலும் உலர வைக்காத, 200 கிலோ பூக்களை, கிலோ, 200 ரூபாய் என விற்று, 40 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது.

அதேபோல், 3,154 கிலோ பூக்களை உலர வைத்து, 616 கிலோ கிடைத்தது. இது, கிலோ, 490 - 750 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதன் மூலமாக, 3.08 லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. இதுவரை, நிலம் சீரமைப்பு, செடிகள், சொட்டுநீர் பாசனம், களை எடுப்பு, இடுபொருள் செலவு என, 2.71 லட்சம் ரூபாய் செலவு போக, 77 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இன்னும் போகப்போக மகசூல் அதிகரிக்கும்; பராமரிப்பு செலவு குறைந்து விடும் என்பதால், இனி, லாபம் அதிகரிக்கும். அத்துடன், செம்பருத்தியில் இருந்து தேநீர்ப் பொடி, இயற்கைக் கூந்தல் பொடி, செம்பருத்தி ஜாம் என, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் யோசனையும் உள்ளது. அப்படி விற்பனை செய்ய ஆரம்பித்தால், கூடுதல் லாபம் கிடைக்க ஆரம்பித்து விடும். தொடர்புக்கு: 99430 06666.
-- தினமலர் நாளிதழிலிருந்து
செம்பருத்தியல் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள்
செம்பருத்தி பூவினால் செழிக்கும் அழகு

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...