Sunday, 24 December 2017

இல்லம் தேடிய சிகிச்சை

ழைய கறுப்பு - வெள்ளை படங்களில், கையில் ஒரு பெட்டியைத் தூக்கியபடி வீட்டுக்கே வந்து சிகிச்சை தரும் டாக்டர் கேரக்டர்களைப் பார்க்க முடியும். கறுப்பு-வெள்ளை படங்கள் போலவே, இப்படிப்பட்ட டாக்டர்களும் காணாமல் போய்விட்டார்கள். அந்த மரபை மீட்டுள்ளது, சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனின் முயற்சியில் உருவான ‘இல்லம் தேடிய சிகிச்சை’ என்ற அமைப்பு.

முதியவர்களை மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்ல முடியாத சூழல் இருக்கும் போது, அதனால் கூட அவர்கள் உயிரிழந்து விடுகின்றனர். இது பற்றி மருத்துவ நண்பர்கள், மாணவர்களிடம் கோரிக்கை வைத்ததற்கு, 'தாராளமாக செய்யலாம்' என முன்வந்தனர். சென்னையில், 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இந்த சேவையை செய்கின்றனர். எந்த நேரம் அழைத்தாலும், மறுப்புச் சொல்லாமல் முதியவர்களின் வீடுகளுக்கு சென்று, சிகிச்சை அளிக்கிறோம். வயதானவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு அழைத்து போவதால், கால தாமதம் ஆகும். அதை தவிர்க்கவே இந்த முறை.

 

இதுவரை, 6,000க்கும் மேற்பட்ட முதியவர்களை காப்பாற்றியுள்ளோம். வீடுகளுக்கு மட்டுமின்றி, முதியோர் இல்லங்களுக்கும் போய், சிகிச்சை அளித்து வருகிறோம். வீடுகளில் சென்று சிகிச்சை அளிக்கும்போது, அவர்கள் இலகுவாக உணர்வதால், பாதி பிரச்னை, அதிலேயே சரியாகி விடும். அலோபதி மருத்துவர்கள் மட்டுமின்றி, இயற்கை மருத்துவர்களும், ஹோமியோபதி மருத்துவர்களும் இந்த அமைப்பில் உள்ளனர். இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, ஆதரவில்லாத முதியவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு உணவு கொடுக்கலாம் என, முடிவு செய்து உள்ளோம்.

முதியவர்கள், அவர்கள் வயதுக்கேற்ற உணவுகளை சாப்பிடாததால், பல நோய்கள் வருகின்றன; அதை தவிர்க்கவே இந்த முயற்சி. தற்போது, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் உள்ள முதியவர்களுக்கும் இந்த அமைப்பின் கீழ் சிகிச்சை அளிக்கிறோம். இது போன்ற திட்டத்தை, அரசே எல்லா பகுதிகளிலும் துவங்க வேண்டும்.
தொடர்புக்கு: 98841 45189; 98413 71278.

--தினமலர் மற்றும் விகடனிலிருந்து.
 வாசலில் அந்நியர் ஜூனியர்: “ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றாங்க...”

Sunday, 17 December 2017

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 4

1) Dying to Be Me:
குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் தனது விருப்பு வெறுப்புகளை பொருட்படுத்தாமல் வாழ்ந்து, நடுத்தர வயதில் 4 வருடங்கள் புற்று நோயோடு போராடி மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு மரணானுபவத்தை (Near Death Experience) பெற்று புற்று நோயிலிருந்து மீண்டு வந்து தனது அனுபவங்களை இந்த நூலின் மூலம் பகிர்ந்து கொள்கிறார் ஹாங் காங்கில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த அனிதா மூர்ஜானி. இவரின் நோய், அதற்க்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி இவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் கூறும் விளக்கங்களும் தனி பகுதியாக இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


தனது உடலை விட்டு உயிராக, எங்கும் நிறை பொருளாக இருந்த கணங்களையம், தனது நோய்க்கான காரணம், அது குணமான விதம் மற்றும் வாழ்வின் அர்த்தம் பற்றி தான் உணர்ந்ததையம்  இப்புத்தகத்தில் ஆசிரியர் விவரித்துள்ளார். ஆசிரியர் சொல்லும் பல கருத்துகள் ரமண மகரிஷியின்  உபதேசங்களோடு ஒத்திருப்பதை பார்க்க முடிகிறது.

"மிகப்பெரிய ஒரு இருள் சூழ்ந்த மாளிகையில் சிறு விளக்குடன் நடந்து செல்வதற்கு ஒப்பானது நமது வாழ்க்கை பயணம்" என்கிறார் ஆசிரியர். "அதாவது உண்மையில் அளவுகடந்த, எல்லையற்ற, அன்பின் உருவான மஹாசக்தியின் அங்கமே நாம், ஆனால் இந்த உலகில் அதை மறந்து நமது சிறிய விழிப்புணர்வின் மூலம் முழுமையின் ஒரு மிகச்சிறிய பகுதியைத்தான் நாம் பார்க்கிறோம்" மேலும், முழுதும் வெளிச்சத்தில் நிரம்பியிருக்கும் பெரிய மாளிகை  எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட காட்சிக்கு ஒப்பானது தான் உடலிலிருந்து வெளியிருந்த கணத்தில் உணர்ந்தவை அதாவது முக்காலங்களையும் தாம் உணர்ந்ததாக கூறுகிறார் ஆசிரியர்.

2) தம்மபதம் - பாகம் 1:


அறியாதவன் உன்னை விடச் சிறந்தவனாக இருக்கிறான் அவனிடம் பாசாங்கு இல்லை மற்றவர்களையோ தன்னையோ அவன் ஏமாற்றுவதில்லை, அறியாமையில் ஒரு அழகு இருக்கிறது .என்று கூறும் ஓஷோ அவர்கள் இந்நூல் மூலம் புத்தரின் கருத்துகளை ஒத்த அவரின் அனுபவ கருத்துகளை சொல்லிச் செல்கிறார். போகிற போக்கில் அவர் சொல்லிய கருத்துகளைப் படித்தபின் அதைத் தாண்டி அடுத்த நிலைக்கு செல்லுவது. என்பது சுலபமாக இருக்கிறது .வாழ்கையை வேறு ஒரு கோணத்தில் நின்று அணுகிய அவரின் அனுபவம் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

3) 100 சிறந்த சிறுகதைகள்:


"இவை எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள். இந்த பட்டியலுக்கு வெளியிலும் சிறந்த கதைகள் உண்டு" என்ற விளக்கத்தோடு, ஒரு நூறு சிறுகதைகளை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். யார் எங்கே பட்டியல் போட்டாலும் இடம்பெறும், புதுமைப்பித்தனின், ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’, மவுனியின் ’அழியாச் சுடர்’ போன்றவற்றோடு, எஸ்.ரா., ஐந்து முக்கிய வரையறைகளை வைத்து தேர்ந்தெடுத்த மற்ற கதைகளும், இடம்பெற்ற நூல் இது. 

4) ஆழ்மனத்தின் அற்புத சக்தி:


இதுவரை வெளிவந்துள்ள சுயமுன்னேற்ற புத்தகங்களிலேயே மிக பிரபலமாகப் பாராட்டப்படுகின்ற ஒரு புத்தகம் இது. உலகெங்குமுள்ள பல லட்சகணக்கான மக்கள் வெறுமனே தங்கள் சிந்தனை முறையை மாற்றிக் கொண்டதன் மூலம் நம்புதற்கரிய இலக்குகள் பலவற்றை அடைய இப்புத்தகம் உதவி உள்ளது. நீகள் எந்த ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அதன்மீது ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மனத்திரையில் படமாக பதிய வைத்தால், உங்களால் உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதை சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தம்மிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளை உள்ளடக்கியுள்ளது இப்புத்தகம்.

5)  நல்ல தமிழில் எழுதுவோம்:
.பூ + சரம் = ஏன் பூச்சரம்? பொன் + கலசம் = ஏன் பொற்கலசம்?
· சின்ன குதிரை, சின்னக் குதிரை: இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? · ‘செமயா இருக்கு மச்சி’ என்கிறோமே, அதென்ன ‘செம’?
· அதிக சலுகை, அதிகச் சலுகை: எது சரி?
· ‘வேகமாகத் தட்டச்சினேன்’ என்று எழுதலாமா?
· திருவையாறில் தியாகராஜ ஆராதனை. சரி, ஆறிலா? ஆற்றிலா?
· வேட்பாளர் என்ற சொல் எப்படி வந்திருக்கும்?
· ஒருவன் சரி; இருவன் என்று சொல்லலாமா?
· ‘இல்லை’யும் ‘அல்ல’வும் ஒன்றுதானா?


வழக்கமான இலக்கண நூல் அல்ல இது. விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல் மிக இயல்பான முறையில் மிக இனிமையான ஒரு புதிய வடிவில் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம்.

உங்களை செய்யுள் எழுத வைப்பதல்ல; ஃபேஸ்புக், ட்விட்டர் தொடங்கி அன்றாட வாழ்வில் இலக்கணச் சுத்தமாக நல்ல தமிழில் எழுத வைப்பதே இதன் நோக்கம். நன்னூல், தொல்காப்பிய சூத்திரங்கள், இலக்கிய உதாரணங்கள் ஆகியவற்றோடு சேர்த்து திரைப் பாடல்கள், டிவி விளம்பரங்கள், பட்டிமன்ற ஜோக்ஸ் ஆகியவற்றையும் சுவாரஸ்யமான உதாரணங்களாகப் பயன்படுத்தியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. இன்றைய தலைமுறைக்குத் தமிழை எளிதாக அறிமுகப்படுத்தும் நூல்.

Wednesday, 13 December 2017

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 3

1) உழவுக்கும் உண்டு வரலாறு:

 கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடிய போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. தனது அனுபவங்களையும், பசுமை புரட்சிக்கு முன்னும் பின்னும் விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், லாபகரமான விவசாய முறைக்கு விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் நம்மாழ்வாரின் பார்வை வழியே விளக்குகிறது இந்தப்புத்தகம்.

2) ஒற்றை வைக்கோல் புரட்சி: 
நம்மாழ்வார் அவர்கள் மிகவும் மதித்த,இயற்க்கை விவசாய ஆசான்களுள் மசானபு ஃபுகோகாவும் ஒருவர். அவர் எழுதியதுதான் இந்த ஒற்றை வைக்கோல் புரட்சி. புதிதாய் வருபவர்கள் "இயற்கை வேளாண்மை" என்பதற்கு "இயற்கையானது வேளாண்மையைக் கவனித்துக் கொள்ளும் நாம் சற்றுத் தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம்" என்று பொருள் கொண்டால் ஃபுகோகா அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் பெருமளவில் உள்ளது என்பதைக் கற்றுக் கொடுப்பார்.
 சரியாகக்கூற வேண்டுமானால் வேட்டையாடி சேகரித்த காலம் ஒன்று தான்.இயற்கை வேளாண்மைக் காலம்.பயிர்களை வளர்க்கத் துவங்கியது கலாச்சாரக் கண்டு பிடிப்பாகும். அதனால் அதற்கு அறிவும் தொடர்ச்சியான முயற்சியும் தேவைப்படுகிறது.ஃபுகோகாவின் முறையில் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால் அது இயற்கையோடு ஒத்துழைப்பதில் இருக்கிறது. இயற்றையை ஆக்கிரமித்து அதை "மேம்படுத்து"வதில் அல்ல.

3) இந்தியன் ஆவது எப்படி?:
இந்தியாவுக்கு சுதந்தரம் 1947ல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காலனிய யுகம் மெள்ள முடிவுக்கு வந்தது. ஆனால், காலனிய சக்திகளின் தாக்கம் கலாசாரத்தளத்தில் இன்றும் நீடித்து வருகிறது. இன்றும் தாய் மொழியில் பேசத் தெரியாமல் இருப்பது பெருமிதமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம்தான் இருந்துவருகிறது. இன்றும் இந்திய கட்டடங்கள் மேற்கத்திய பாணியில்தான் கட்டப்பட்டு வருகின்றன. இன்றும் இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஹாலிவுட்டைக் காப்பி அடித்துத்தான் எடுக்கப்படுகின்றன. நாஜிக் கொடுமைகள் பற்றி எடுக்கப்படும் படங்களை வாய் பிளந்து ரசிக்கும் நம்மால், பிரிவினைக் கால சோகம் பற்றி உருப்படியாக ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை.


உஸ்தாத் அம்ஜத் அலிகானைப் பார்த்து நீங்கள் எந்த இசைக்கருவியை இசைக்கிறீர்கள்? என்று கேட்பவர்தான் பிரிட்டனின் கலாசார  உறவுகளுக்கான மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். இந்த வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது? இன்னும் சொல்லப்போனால், இந்த வீழ்ச்சி நம்மால் உண்மையில் உணரப்பட்டிருக்கிறதா? நேற்றைய காலனிய சுனாமியின் அடுத்த அலையாக உலகமயமாக்கல் இன்று நம்மை மூழ்கடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் இருந்து இந்தியா எப்படி மீள முடியும் என்பதை ஆசிரியர் கலை, கலாசாரத் துறையில் நாம் அடைந்த உச்சத்தையும்  இன்றைய நிலையையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். உலகத் தலைமையை ஏற்பது குறித்த நம் கனவுகள் நனவாகவேண்டுமென்றால், முதலில்  இந்தியனாக நாம் ஆகவேண்டும் என்ற முக்கியமான கடமையை ஆசிரியர் தெளிவாக இந்நூலில் விளக்கியிருக்கிறார்.

4) ஒரு யோகியின் சுயசரிதம்:

இப்புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகின்ற மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும். நவீனகால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த, உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர்.

5) சிவா முத்தொகுதி:
எந்த புத்தகத்தையும் தமிழில் படிக்கத்தான் பிடிக்கும், நண்பர் ஒருவர் பரிந்துரைத்ததன் பேரில் இதை ஆங்கிலத்தில் படித்தேன். மிகவும் நேர்த்தியான பாத்திர படைப்புகளுடன் விறுவிறுப்பான எழுத்து நடையில் எழுதப்பட்டுள்ள நாவல். பொன்னியின் செல்வன், யவண ராணிக்கு அடுத்ததாக விரும்பி படித்த நாவலிது.

அமீஷின் சிவா முத்தொகுதி, புராண கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து வரலாற்றில் உலவ விடும் புனைவிலக்கியம். திபெத்திய காட்டுவாசியாக மெலூஹாவுக்குள் நுழையும் சிவன், நீலகண்டராகி மெலூஹ மக்களான சூர்யவம்சிகளுக்கெதிராக செயல்படும் சந்திரவம்சிகளை, சூர்யவம்சி படையை வழிநடத்திச் சென்று துவம்சம் செய்வதோடு 'மெலூஹாவின் அமரர்கள்' நிறைவடைகிறது. சந்திரவம்சிகளுக்கும் நாகர்களுக்கும் என்ன சம்பந்தம்? மந்தரமலைத் தகர்ப்பின் பின்ணணி என்ன? சதியைக் குறி வைக்கும் நாகன் யார்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தேடி சிவன் நாகர்களின் தலைநகரான பஞ்சவடிக்கு மேற்கொள்ளும் பயணமே 'நாகர்களின் இரகசியம்'. ஒரு வழியாக தீமையைக் கண்டறிந்து, அதை அழிப்பதற்காக சிவன் புனிதப் போர் நடத்துவதே 'வாயுபுத்ரர் வாக்கு'. வரலாறு, புராணம், அறிவியல் என அமீஷ் கலந்து கட்டி அடித்திருப்பதால் விறுவிறுப்புக்கும், விஷயங்களுக்கும் பஞ்சமில்லை. 

காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்

தினமலர் இணையதளத்தில் எனக்கு பிடித்த இரண்டு பகுதிகள் இவை: (i) சொல்கிறார்கள் (ii) நிஜக்கதை. எனது பதிவுகளில் பாதி இதிலிருந்தோ அல்லது இந்த செய்தியை சார்ந்தோதான் இருக்கும். இந்த பதிவு நிஜக்கதை பகுதியிலிருந்து.

அதிகம் நெரிசல் இல்லாத அமைதியான காரைக்கால் கடற்கரையின் காலை வேளையில் ஒரு மாருதி கார் வந்து நிற்கிறது.காரை ஒட்டிவந்தவர் காரை நிறுத்திவிட்டு பின்பக்க கதவை திறக்கிறார் வரிசையாக பொருட்களை இறக்கிவைக்கிறார்.அடுத்த இருபதாவது நிமிடத்தில் இயற்கை மூலிகை பானங்கள் விற்கும் கடை ரெடி.
 • அருகம்புல், வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட், நெல்லிக்கனி சாறாகவும்(juice)
 • சுக்கு காபி, மூலிகை கீரை, முடக்கத்தான் கீரை ஆகியவை சூடான சூப்பாகவும்
 • கேழ்வரகு கஞ்சி, சிறுதானிய கஞ்சி, உளுந்தக்களி, முளைகட்டிய பயிறு ஆகியவை சாப்பிடவும் கிடைக்கிறது.
இவரது கடை எப்போது திறக்கும் என்று எதிர்பார்தவர்கள் போல கடற்கரையில் நடைப்பயிற்சி உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் கடையை சுற்றி கூடி தங்களுக்கு வேண்டியதை வாங்கி சாப்பிடுகின்றனர்.

  
சிவ நடராஜன் இவர்தான் இந்த இயற்கை உணவகத்தின் தொழிலாளி முதலாளி எல்லாம். நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு வேலையை விரும்பும் இளைஞர்களில் இவரும் ஒருவராகத்தான் இருந்தார். மலேசியா,சிங்கப்பூரில் சில ஆண்டுகள் வேலை பார்த்தவர் இவரது தந்தையும் இயற்கை மூலிகை உணவுப்பொருள் தயாரித்து விற்றுவந்தவருமான ஜெயச்சந்திரன் "கையில் நல்லதொரு ஆரோக்கியமான தொழில் இருக்கேப்பா இதை ஏன் செய்யக்கூடாது?" என்றதும் உடனே சரி என்று சொல்லி தொழிலில் இறங்கிவிட்டார். இவருக்கு பக்க பலமாக இருப்பது இவர் மனைவி லலிதா.

சுற்றுச்சுழல் ஆர்வலர் என்பதால் பிளாஸ்டிக் என்பது அறவே இல்லை.

ஓரு முறை வாடிக்கையாளர் உபயோகித்த ஸ்டீல் டம்ளரை மறுமுறை உபயோகிப்பது கிடையாது,வெந்நீரால் கழுவியபிறகு மறுநாள்தான் உபயோகிக்கிறார்.

காசு வருமே என்பதற்க்காக செயல்படுவதும் கிடையாது உதாரணமாக யாராவது அருகம்புல் சாப்பிட்டுவிட்டு உடனே கேப்பைக்கூழ் கேட்டால் அருகம்புல் சாறு சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது அப்போதுதான் அருகம்புல்லின் மருத்துவத்தன்மை உடம்புக்கு கிடைக்கும் என்று சொல்லி அவர் கேட்ட கேப்பைக்கூழை விற்கமாட்டார்.

வெளிநாடுகளில் வேலை பார்த்து பணம் சம்பாதித்தபோது இல்லாத மன நிறைவு இந்த இயற்கை உணவகத்தின் மூலம் கிடைக்கிறது, பண வரவு குறைவு ஆனால் மனநிறைவு அதிகம் எனக்கு மனநிறைவுதான் தேவை என்று சொல்லும் சிவ.நடராஜனுக்கு ஒரு கனவு உணடு, அது முழுக்க முழுக்க சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் இயற்கை உணவகம் ஒன்றை நடத்த வேண்டும் என்ற அவரது அந்தக்கனவு விரைவில் நனவாகட்டும்.

சிவ.நடராஜனுடன் பேசுவதற்கான எண்:9965970290.
காரைக்காலில் ஒரு இனிய இயற்கை உணவகம்

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 2

1) பொன்னியின் செல்வன்:


பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950-1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி.1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை  அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. 

2) யவண ராணி:

 சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று  யவண ராணி  என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப் பற்றிக் கூறுகிறது. தமிழர்களின் சிறப்பையும் வெளிநாட்டார் அவர்களிடம் கைக்கட்டி சேவகம் புரிந்ததையும் இந்நாவலின் வழி அறிய முடிகிறது. இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களாக, யவன ராணி, இளஞ்செழியன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, கரிகாலன் ஆகியோர் வருகின்றனர். ஏராளமான துணைக்கதாப்பாத்திரங்கள் காணப்படுகின்றன.
கதையோட்டம்:  ஒருநாள் கரையோரத்தில் படைத்தலைவனான இளஞ்செழியனின் கால்களில் யவன ராணி தட்டுப்படுகிறாள். அவள் தமிழகத்தில் கால் வைத்த அன்றே சோழ நாடு மன்னரை இழந்து குழப்பத்தில் ஆழ்கிறது. இளவரசர் கரிகாலன் தலைமறைவாகிறார். கொடியவனான இருங்கோவேள் ஆட்சிபீடத்தில் அமருகிறான். பூம்புகாரை யவனர்களுக்கு அளிக்க முடிவு செய்கிறான். இதனையறிந்த இளஞ்செழியன் பூம்புகாரையும் தமிழகத்தையும் காப்பாற்ற போராட இறுதி என்னாயிற்று என்பதே கதை. 

 3) எண்ணங்கள்:


எண்ணங்கள் எனும் இந்நூல் மனமே அனைத்திற்கும் அடிப்படை என்று சொல்கின்றது. மனம் எதை நம்புகிறதோ, எதை ஆசைப்படுகிறதோ அதை அடைந்து விடுகிறது என்றும், சின்னச்சின்ன நம்பக்கூடிய சம்பவங்களின் வழி மனதின் மகத்தான சக்தியைப் பற்றி விளக்கி உள்ளார் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி. இந்த நூல் விவரித்த உலகம் இதுவரை பார்த்திராதது. இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் புதிய உலகிற்கு இட்டுச் செல்லும். இதுவரை படித்திருந்த சரித்திர, சமூக நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் இந்த 'எண்ணங்கள்' எனும் நூல். 

4) எனது சிந்தனைகள்:

ரமாகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டிருக்கும் விவேகானந்தரின் சிந்தனைகளை போதிக்கும் ஒரு நல்ல நூல் எனது சிந்தனைகள்.

5) குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்:
மூன்று பாகங்களை கொண்ட குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நூலானது ராமகிருஷ்ணர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஆரம்பித்து அவர் வாழ்வில் அவருடன் பயணித்த முக்கிய நபர்களின் வரலாறு, காளி கோவில் உருவான விதம் மற்றும் ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகான மடத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி ஆகியவைப்பற்றி விரிவாகவும் தெளிவாகவும் சாரதானந்தர் என்ற சீடரின் பார்வையில் விளக்குகிறது. 

Monday, 11 December 2017

மியாவாக்கி... குறைந்த இடத்தில் அதிக மரங்கள்!-2 (புகைப்படங்கள்)

 நிசப்தம் தளத்திலிருந்து.....அடர்வனம்

ஒரே வருடத்தில் ஒரு வனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் அடங்கிய வனம். வெறும் பதினெட்டு செண்ட் இடத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அடர்வனம் இது.

அடர்வனம் ஒன்றை திருப்பூர் மாவட்டம் குள்ளே கவுண்டன் புதூர் என்ற ஊரில் செயல்படுத்தியிருக்கிறார்கள். அவிநாசியிலிருந்து கோவை செல்லும் வழியில் இந்த ஊர் இருக்கிறது. பதினெட்டு சென்ட் இடத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து இருநூறு மரங்கள். சற்றேறக்குறைய அறுபது வகையான மரங்கள் இவை. சரியாகத் திட்டமிட்டு ஒவ்வொரு வகை மரத்தையும் கலந்து வைத்திருக்கிறார்கள். பதினெட்டு செண்ட் இடத்துக்கும் கம்பிவேலி உண்டு. அதனால் விலங்குகள் நுழைவதில்லை. உள்ளூர் மக்கள் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள் என்பதால் அவர்களும் வனத்துக்குள் நுழைவதில்லை. அடர்வனம் அமைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஐம்பது செடிகள் பட்டுப் போய்விட்டன ஆயினும் இரண்டாயிரத்து நூறுக்கும் அதிகமான செடிகள் உயிர்பிடித்திருக்கின்றன.

(ஒரு வருடத்திற்கு முன்பு அடர்வனம்)

 
(ஒரு வருடத்திற்குப் பிறகு இப்பொழுது)

அகிரா மியவாக்கி என்னும் ஜப்பானிய நிபுணர் கண்டறிந்த மரவளர்ப்பு முறை இது. விதவிதமான மரங்களை வெகு நெருக்கமாக நட்டு வளர்க்கிறார்கள். தாவரங்கள் சற்றே வளர்ந்த பிறகு மனிதர்களாலேயே உள்ளே நுழைய முடியாதபடியான நெருக்கம். பறவைகளுக்கும், அணில், பாம்பு உள்ளிட்ட ஊர்வனவைகளுக்குமான வனமாக அது மாறிவிடும். விதைகள் திரும்பத் திரும்ப வனத்துக்குள் விழுந்து முளைக்கும் போது வனத்தின் நெருக்கம் பெருகிக் கொண்டேயிருக்கும்.

பொதுவாக, செடிகளை இடைவெளி விட்டு நட்டு அவற்றை ஆடு மாடுகள் மேய்ந்துவிடாமல் பார்த்து, மனிதர்கள் முறித்துவிடாமல் காத்து என சகல பிரயத்தனங்களையும் செய்து காப்பாற்றப்படும் மரங்களின் எண்ணிக்கை சதவீதம் மிகக் குறைவு. அடர்வனத்தில் ஆரம்ப முதலீடு சற்றே அதிகம் என்றாலும் தப்பித்து மேலே எழும்பக் கூடிய மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

அடர்வனம் அமைப்பது குறித்தான சந்தேகங்கள் இருப்பின் திரு.சதீஷைத் தொடர்பு கொள்ளலாம்- 98421 23457. Sunday, 3 December 2017

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 1

மணிப்பூரின் அன்னையர்கள் - உலகையே உலுக்கிய போராட்டம்!:
காஸ்வேதா தேவியின் முக்கியமான சிறுகதைகளுள் ஒன்று ‘திரௌபதி’ (1978). நக்ஸல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த திரெளபதி என்ற பெண்ணை, காவலர்கள் கைதுசெய்து, அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவதுதான் அந்தக் கதையின் சாராம்சம். அதில் வரும் திரெளபதி, ஆடைகள் களைந்து, ‘நான் வெட்கப்படுவதற்கு இங்கு எந்த ஆணும் இல்லை. ஆடையால் என்ன பயன்? நீங்கள் என்னை ஆடையிழக்கச் செய்ய முடியும். ஆனால், உங்களால் என்னை மீண்டும் உடுத்தச் செய்ய முடியாது. நீங்களெல்லாம் ஆணா?’ என்று கேட்க, அந்தக் கதை முடிகிறது. 

இந்தக் கதையை ஹீஸ்நம் கண்ஹைலால் என்ற மணிப்பூரைச் சேர்ந்த நாடக ஆசிரியர், 2000-ல், நாடகமாக அரங்கேற்றினார். அதில் அவரின் மனைவியும், ‘திரெளபதி’ கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவருமான ஹீஸ்நம் சாவித்ரி, மேடையில், நிர்வாணமாகத் தோன்றினார். இந்திய மேடை நாடக வரலாற்றிலேயே, ஒரு கதாபாத்திரம் ஆடையில்லாமல் தோன்றியது அதுதான் முதன்முறை. அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு சரியாக நான்கு வருடங்கள் கழித்து, அதாவது 2004-ல், மணிப்பூரில் தங்கள் ஆடைகளைக் களைந்து, ‘இந்திய ராணுவமே, எங்களை வன்கலவி செய்’, ‘எங்கள் சதையை எடுத்துக்கொள்’ என்று கோஷமிட்டனர் 12 நவீன திரெளபதிகள். எதற்காக அந்த 12 பெண்களும் அப்படிச் செய்தார்கள்?

தங்ஜம் மனோரமா

அஸாம் ரைஃபிள்ஸ் படையின் தலைமையகம் மணிப்பூரின் இம்பால் நகரத்தில் உள்ள கங்லா கோட்டையில் அமைந்திருந்தது. 2004-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி, பயங்கரவாதக் குழு ஒன்றுடன் தொடர்புகொண்டிருப்பதாகக் கூறி, தங்ஜம் மனோரமா எனும் 32 வயது பெண் கைதுசெய்யப்பட்டு, கங்லா கோட்டைக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்படுகிறார். அடுத்த நாள், இவரது உடல், தோட்டம் ஒன்றில் கண்டெடுக்கப்படுகிறது. பிறகுதான் தெரிந்தது, அவர் அஸாம் ரைஃபிள்ஸ் படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்களை அழிக்கும் முயற்சியாகத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள் அந்தப் படையினர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட சில பெண்கள், அங்குள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த மனோரமாவின் உடலைப் பார்க்கச் சென்றார்கள். அஸாம் ரைஃபிள்ஸ் படையின் இப்படியான தொடர் ஒடுக்குதல்களுக்கு எதிராக, மிகத் தனித்துவமான ஒரு போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர் அந்தப் பெண்கள். ஜூலை 15 அன்று, கங்லா கோட்டை முன்பு தங்கள் ஆடைகளைக் களைந்து அந்த 12 பெண்களும் கோஷமிட்டுப் போராட்டம் நடத்தினார்கள். மிகக் குறைந்த நேரமே நடைபெற்ற அந்தப் போராட்டம், உலகையே உலுக்கியது. அதன் விளையாக, மணிப்பூரின் ஏழு தொகுதிகளிலிருந்து அஸாம் ரைஃபிள்ஸ் படை நீக்கப்பட்டிருக்கிறது. கங்லா கோட்டையிலிருந்த அந்தப் படையின் தலைமையகம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சுமார் 50 வயதுக்கு மேலான அந்த 12 பெண்கள், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ‘இமா’க்கள் என்று அழைக்கப்படலாயினர். ‘இமா’ என்ற மணிப்பூரிச் சொல்லுக்கு ‘அன்னை’ என்று பொருள். மணிப்பூர் பெண்களின் மானம் காக்கப் போராடிய அவர்களை, அன்னை என்று அழைப்பதுதானே உத்தமம்?

12 அன்னையர்கள்

இந்திய சமகால வரலாற்றில் தழும்பாக அமைந்துவிட்ட அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற, அந்த 12 அன்னையரைத் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையை, உணர்வுகளை ‘தி மதர்ஸ் ஆஃப் மணிப்பூர்’ என்ற புத்தகத்தில் ஆவணமாக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் தெரசா ரஹ்மான். இதை ‘சுபான்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. வெறுமனே அந்தப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லாமல், மணிப்பூரின் கலாச்சாரம், இரண்டாம் உலகப் போரில் அதன் பங்கு, குடிப்பழக்கத்துக்கு எதிராக மணிப்பூர் பெண்களின் போராட்டம், பயங்கரவாதக் குழுக்களால் மணிப்பூர் சிறுவர்கள் கடத்தப்பட்டுக் குழந்தை பயங்கரவாதிகளாக ஆக்கப்படுவது, இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டுகால உண்ணாநிலைப் போராட்டம் உள்ளிட்ட மணிப்பூரின் நிகழ்கால வரலாற்றையும் இந்தப் புத்தகம் சொல்லிச் செல்வதால், இது தனித்துவம் பெறுகிறது.

தன்னுடைய உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொண்டு, திருமணம் செய்துகொண்டு, அரசியல்ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கத் தற்போது முயற்சித்துவருகிறார் இரோம் ஷர்மிளா. இந்த சந்தோஷமான தருணத்தில், இந்தப் புத்தகத்தை வாசிப்பது, ஆறிய புண்ணை மீண்டும் கிழித்துப் பார்க்கும் விஷயமல்ல; தழும்பாக மாறிவிட்ட வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் முயற்சி!

-ந.வினோத்குமார்,
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in
--தமிழ் ஹிந்து நாளிதழிலிருந்து 

Tuesday, 28 November 2017

மரபு விளையாட்டுகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!

நம் நாட்டில் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தாலும் வல்லவர்களை உருவாக்கும் வண்ணம் போதிய கருத்து செலுத்துவதில்லை. புதிய விளையாட்டுகளில் கருத்து செலுத்தும் நாம் மனத்திற்கும் உடலுக்கும் வலுவைச்சேர்க்கும் பரம்பரை விளையாட்டுகளைப் புறக்கணிக்கின்றோம். அவ்வாறில்லாமல் மரபு விளையாட்டுகளுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.


 சிறுவர், சிறுமி விளையாட்டுகள்,
மகளிர் விளையாட்டுகள்
ஆடுவர் விளையாட்டுகள்
இரு பாலர் விளையாட்டுகள்
முதியோர் விளையாட்டுகள்
நீர் விளையாட்டுகள்
மனையக வியைாட்டுகள்
வீர விளையாட்டுகள்
ஆடற்கலை சார்ந்த விளையாட்டுகள்
என விளையாட்டுகளை  பல வகைகளாகப் பிரிக்கலாம்.

பழந்தமிழர் விளையாட்டுகள் என்றால் எப்பொழுதோ விளையாடிய விளையாட்டு என்று எண்ண வேண்டாம்.  பழந்தமிழர் விளையாட்டுகள் என்றாலும் கடந்த நூற்றாண்டு தொடக்கத்திலும் விளையாடப்பட்ட விளையாட்டுகள் இவை.  செக்கிழுத்த செம்மல் தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்கள், தாம் ஆடிய விளையாட்டுகளாகப் பல விளையாட்டுகளைக் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு கடந்த நூற்றாண்டில் பள்ளியில் சிறாருக்கேற்ற மரபார்ந்த விளையாட்டுகள் பயிற்றுவிக்கப்பட்டன. காலங்காலமாக நாம்ஆடிவந்த விளையாட்டுகளில்  சிலவற்றைப் பார்க்கலாம்.


இவை மட்டுமல்ல, வீர விளையாட்டுகள் முதலான தலைப்புகளின் கீழ் நாம் பார்த்தால்  மேலும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகளை அறிய இயலும். 

இவற்றுள் இளஞ்சிறார் விளையாட்டுகளைத் தொடக்கத்தில் கற்றுத்தர வேண்டும். உச்சரிப்பு விளையாட்டு, வினா விடை விளையாட்டு முதலான மொழி சார்விளையாட்டுகள், மாணாக்கர்களின் அறிவுத்திறனையும் நிறைவாற்றலையும் வளர்ப்பன. அவற்றைத் தொடக்கப்பள்ளியிலேயே கற்றுத் தர வேண்டும். 

மாணாக்கர்களின் அகவைக்கேற்ற விளையாட்டுகளைப் பகுத்து விளையாட்டுப் பயிற்சி அளிக்கப் பள்ளிக்கல்வித்துறை ஆவன செய்ய வேண்டும்.  விளையாட்டு என்பது  உடற்பயிற்சிக்கானதும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமன்று. வாழ்நாள் முழுவதும் சிறப்பு  தரும் கல்வியுமாகும்.


தொடர்புடைய பதிவுகள்:
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி  
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள் 
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள் 
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS) 
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?  
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று 
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்  
WHAT AFTER 10 & 12?  

  

தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி

பரபரப்பும் அவசரமும் நிறைந்த வாழ்க்கையைச் சுமந்து கொண்டு, தங்கள் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் இழந்துவிட்டு எதை நோக்கியோ இலக்கற்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். கரகாட்டம், பறையாட்டம், கும்மி, காவடி, மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து போன்ற வண்ணமயமான கலைகளும், கபடி, சிலம்பம், வளரி (பூமராங்), வாள் சண்டை, வடம் இழுத்தல், ஈட்டி எறிதல், வழுக்கு மரம் ஏறுதல், வில் அம்பு எய்தல் போன்ற தமிழ் பண்பாடு மணக்கும் விளையாட்டுகளும் இன்றுள்ள பிள்ளைகளுக்கு அந்நியமாகிவிட்டன.

பாடப்புத்தகங்களின் அழுத்தத்தில் தவிக்கும் பிள்ளைகளுக்கு இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவோ, கற்றுக்கொள்ளவோ நேரமில்லை. கற்றுத்தரவும் யாருமில்லை. இந்தப் பேரவலத்தைப் போக்குவதற்காகவே டாக்டர் ப்ரீத்தா நிலா ‘கற்றல் இனிது’ வாழ்வியல் பள்ளியைத் தொடங்கியிருக்கிறார்.


"கற்றல் இனிது" பள்ளி செயல்பாடுகள்:
தேனி மாவட்டம், வீரபாண்டியில் செயல்படும் இந்தப் பள்ளியில் தமிழர் கலைகள், கதை சொல்லல், பாரம்பரிய வேளாண்மை, சிறுதானிய சமையல் முறை, பாரம்பரிய வைத்திய முறை என நம் மூதாதையர்கள் வாழ்ந்த அத்தனை வாழ்க்கை முறைகளையும் கற்றுத்தருகிறார்கள்.

கலைகள், விளையாட்டுகள் தவிர, விவசாயத்தின் அவசியம், விவசாயம் குறித்த விழிப்புணர்வு, இயற்கை விவசாய முறைகள், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைத்தல், உயிர் உரங்கள், மண்புழு உரம் போன்றவைகளைத் தயாரித்தல் போன்றவைகளும், நோய் வராமல் உடல் நலனைப் பாதுகாத்தல், இயற்கை மருந்துகளைப் பயன்படுத்தல், மன நலனுக்கான பல்வேறு கதைகளை மாணவர்களுக்குச் சொல்லுதல் போன்றவைகளும் இந்த பள்ளியில் கற்றுத்தரப்படுகின்றன.

‘கற்றல் இனிது’ பள்ளி இருக்கும் சூழலே ஈர்க்கிறது. தென்னந்தோப்புக்கு மத்தியில் ஒரு மைதானம். ஒருபுறம் அழகிய நதி ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் புல்வெளியால் நிரம்பியிருக்கிறது. “அண்மையில் கோடைகாலப் பயிற்சிகள் நிறைவடைந்தன.

"இப்போது சனி, ஞாயிறு களில் வகுப்புகள் நடக்கின்றன. தொடக்கத்தில் மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி என்று நிர்ணயித்தோம். ஆனால், நிறைய பெரியவர்கள் எங்களுக்கும் பயிற்சி தாருங்கள் என்றார்கள். அதனால் இப்போது அந்த விதிமுறையைத் தளர்த்தியிருக்கிறோம். தேர்ந்த கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பயிற்சிகளை வழங்குகிறார்கள். அவர்களுக்குத் தருவதற்காக மிகக்குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகுந்த சூழல் வாய்க்கும்போது இந்த பள்ளி முற்றிலும் இலவசப் பள்ளியாக இயங்கும்" என்கிறார் டாக்டர் ப்ரீத்தா.

மதிப்பெண்களைத் தேடி....
“இன்றைய பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் என்ன திறன் இருக்கிறது? அந்தத் திறனை எப்படி மேம்படுத்துவது? என்பதைப் பார்க்காமல் அதிக மதிப்பெண்களைத் தேடி ஓடும் பந்தயக் குதிரைகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். பணம் சேர்ப்பவர் தான் வெற்றியாளர்கள் எனும் தவறான சித்தாந்தம் உருவாகிவிட்டது.

மதிப்பெண் வேட்டைக்காக, அரசுப் பள்ளிகளிலிருந்து, ஆங்கிலவழிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைத் தள்ளுகிறார்கள். இதனால் புத்தகப்படிப்பு ஒன்றில் மட்டுமே தங்கள் முழுக்கவனத்தையும் செலுத்தும் மாணவர்கள் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான வேறு எந்தத் திறனையும் வளர்த்துக்கொள்ள முடிவதில்லை. பள்ளி, கல்லூரிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் கூட, தங்கள் வாழ்க்கையில் நல்லதொரு வெற்றியைப் பெறமுடிவதில்லை என்பதுதான் இன்றைய நிலை.  

பள்ளியும் கல்லூரியும் திணிப்பது என்ன?
வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான பல்வேறு திறன்களை பள்ளிக்கும், கல்லூரிக்கும் வெளியில்தான் கற்றுக்கொள்ள வேண்டி யிருக்கிறது. அனைவருடனும் இயல்பாகப் பழகும் திறன், சிந்திக்கும் திறன், தகவல் பரிமாற்றத் திறன், ஆளுமைத் திறன், தொழில்நுட்பத் திறன், எதையும் ஏற்றுக்கொள்ளும் திறன் என்று வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ அடிப்படைத் திறன்கள் இருக்கின்றன. இவைகளையெல்லாம், பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ கற்றுக் கொள்ளக்கூடிய சூழல் தற்போது இல்லை. 

மனப்பாடம் செய்து படிக்கும் வழிமுறையை மட்டுமே ஆசிரியர்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி அவதிப்படுன்றனர். எந்த ஒரு தோல்வியையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையோ, எதிர்கொள்ளும் துணிவோ சிறிதுகூட இருப்பதில்லை.

உடல், மன நலன்களுக்கு நாம் என்ன செய்கிறோம்?
இன்றைய மாணவர்களிடத்தில் உடல் நலனுக்கான விளையாட்டுகளோ, மன நலனுக்கான பயிற்சிகளோ இல்லாமல் போய்விட்டது. ஓடியாடி விளையாடுவதை விட்டுவிட்டு, ஒரே இடத்தில் அமர்ந்து கம்ப்யூட்டரிலும். மொபைல் போனிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டுகளில் பல வன்முறையான செயல்களை மையமாகக் கொண்டதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மின்னணுச் சாதன விளையாட்டுகளும் மாணவர்களை மன அழுத்தங்களுக்கே உள்ளாக்குகின்றன.  

- தேனி மு. சுப்பிரமணி

தொடர்புடைய பதிவுகள்:
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்! 
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள் 
நவோதயா பள்ளிகளின் சிறப்புகள் 
பள்ளிக்கு போகாமலே.......தேசிய திறந்த நிலை பள்ளிக்கல்வி (NIOS) 
கலந்தாய்வில் கல்லூரிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?  
நில், கவனி, செல்! கல்வியிலும் வேண்டும் 
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவைகளை கடைபிடித்தால் நன்று 
உயர்கல்விக்குப் பிறகான வேலை வாய்ப்புகள்  
WHAT AFTER 10 & 12? 


வாழ்வியல் கலை விளையாட்டு!

காணாமல் போன மரபு விளையாட்டுக்களை கண்டுபிடித்து வரும் இனியன்:

இன்றைய குழந்தைகளை சொக்குப்பொடி போட்டு மயக்கி வைத்துள்ளது, கம்ப்யூட்டர் விளையாட்டு. இதைவிட எளிதாக, ஸ்மார்ட் போனின் பிளே ஸ்டோருக்குள், விளையாட்டு கொட்டிக் கிடக்கிறது.'ஓடி விளையாடு பாப்பா' என்று சொல்ல, எந்த பாரதியும் இன்று இல்லை. அப்படியே சொன்னாலும் அதை கேட்கும் மனநிலையிலும், இந்த தலைமுறை குழந்தைகள் இல்லை. இவர்கள் மாறி போனதற்கு, அன்னிய மோகமும் காரணம்.இதில் என்று மூழ்க ஆரம்பித்தோமோ அன்றே நம் அடையாளம், பாரம்பரியம் என பல விஷயங்களை, மறந்து போனோம் அல்லது மறைக்கப்பட்டன.


இப்படி தொலைக்கப்பட்டவற்றுள் ஒன்று, மரபு விளையாட்டு. இதற்காக, ஏழு கடல், மலை தாண்டிப் போகவில்லை. கிராமங்களில் உள்ள பாட்டிகளை சந்தித்து, தகவல் சேகரித்தேன். தற்போது தமிழகம் முழுவதும் பயணம் செய்து, ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். முதலில் மரபு விளையாட்டுக்களை பற்றி, 'டாக்குமென்டரி' படம் எடுக்க முடிவு செய்து, ஆரம்பித்தேன். பின், பத்தோடு பதினொன்றாக, ஒரு புத்தகம் படித்து மூடி வைப்பது போல் முடிந்துவிடும் என்பதால், அதை நிறுத்தி, பள்ளிக் குழந்தைகளை சந்திக்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள பள்ளிகளுக்கு போய் நேரத்துக்கும், இடத்துக்கும் தகுந்தாற்போல் இரண்டு அல்லது மூன்று விளையாட்டு சொல்லிக் கொடுப்பேன். நான் சந்தித்த வரையில், நம் மரபு விளையாட்டுக்களை ஆர்வத்துடன் குழந்தைகள் விளையாடுகின்றனர். தமிழர்களிடமிருந்து மறைந்துபோன விளையாட்டுக்கள், 180க்கும் மேல் இருக்கும். இதை உள் விளையாட்டு, வெளி விளையாட்டு என பிரித்து, இரண்டாவது வகையை மட்டும், குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறேன். விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு கிடையாது; இது ஒரு வாழ்வியல் கலை. காலப்போக்கில் இதை மாற்றி விட்டோம். எந்த விளையாட்டும் காரணத்தோடு தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான விடை தெரியவில்லை என்றாலும், அதில் இருக்கக் கூடிய உடலியலும், உளவியலும் புரிய ஆரம்பித்தது.

பள்ளியில் மதிய உணவு முடித்ததும், குழந்தைகளை அமர வைத்து, கதை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவேன். பின், விட்ட இடத்தில் இருந்து விளையாட்டை துவங்குவேன். பாயும் புலி, கோலெடுத்தான், ஆடு புலி ஆட்டம், வாள் எடுத்தான், கிளிப்பாரி என, ஏகப்பட்ட விளையாட்டுகளை வைத்து உள்ளேன்.

இவற்றை கற்க விரும்பும் குழந்தைகள், எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.தொடர்புக்கு: 81900 49738.

--தினமலர் நாளிதழிலிருந்து.

தொடர்புடைய பதிவுகள்:
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி  
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள் 
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!  
வழிகாட்டினால் போதும்; குழந்தைகள் கற்றுக் கொள்வர்!
பெற்றோர்களுக்காக


Tuesday, 14 November 2017

கறிவேப்பிலையின் மருத்துவ நற்குணங்கள்:

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பயன் குறித்து கூறும், இயற்கை மருத்துவர், எஸ்.நந்தினி:

 

கருமுட்டை உற்பத்தி: கறிவேப்பிலையில் உள்ள, 'கார்பசோஸ்' என்ற ஆல்கலாய்டுகள், கருமுட்டை உற்பத்தியை துாண்டுகிறது.

பித்த மற்றும் கருப்பை சூடு: 20 கிராம் கறிவேப்பிலையுடன், 3 கிராம் சீரகம், 1 கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்து, காலையில், வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால், பித்த மற்றும் கருப்பை சூடு சரியாகும்.

கறிவேப்பிலை - 100 கிராம், மிளகு - 5 கிராம், சீரகம் - 5 கிராம், தோல் நீக்கிய சுக்கு - 2 கிராம், பெருங்காயம் - 2 கிராம் என, அனைத்து பொருட்களையும் தனித்தனியே இளம் வறுவலாக வறுத்து, உப்பு சேர்த்து அரைத்து துாள் செய்து கொள்ளவும்.
வயிற்றுப் பொருமல், மந்தம், அஜீரணம்:
தினமும் பகல், இரவு இரண்டு நேரமும் ஒரு தேக்கரண்டி அளவு உணவில் சேர்க்க, வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லை, பித்த வாயு, மந்தம், அஜீரணம் சரியாகும்.

 தழும்பு மறைய: சிறிதளவு கறிவேப்பிலையுடன் கஸ்துாரி மஞ்சள், கசகசா, பட்டை சேர்த்து அரைத்து, அம்மை நோயால் வந்த தழும்புகளில் தேய்த்து வந்தால், தழும்பு மறையும்.
 • இரும்பு சத்து, பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள கறிவேப்பிலை, ரத்த சோகையை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது.
 • முடி கொட்டுவதைத் தவிர்க்க, செரியாமையைப் போக்க, 'அமீபியாசிஸ் 3' எனப்படும் ஒரு வகை வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த, இன்றியமையாத மூலிகை, கறிவேப்பிலை.
 • வயோதிகத்தில் வரும், 'அல்சைமர்' எனும் ஞாபக மறதியைக் குறைக்கும். 
 • உடலில் உள்ள கொழுப்பு மற்றும் பித்தத்தின் அளவை சீர்படுத்தி, பித்தப்பைக் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. 
 • கல்லீரல் மற்றும் கணையத்தை பலப்படுத்துகிறது.  கறிவேப்பிலை சாறு அருந்தி வர, கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
 • ரத்த சர்க்கரை அளவை, 42 சதவீதமும், ரத்தக் கொழுப்பை, 30 சதவீதமும் கறிவேப்பிலை குறைப்பதாக, சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 
 • கறிவேப்பிலையில் சிறிது நீர் சேர்த்து, சங்கால் அரைத்து முகப்பருவில் தடவினால், பருக்கள் மறையும்.
 • இளநரையை கறிவேப்பிலை தடுக்கிறது.
 • கறிவேப்பிலை மற்றும் மிளகு சேர்த்து, தினமும் மூன்று மாதங்கள் பருகி வர, இடுப்பு மற்றும் வயிற்றை சுற்றியுள்ள தளர்ந்த உடலை குறைத்து, அழகை மேம்படுத்தும்.
 • கறிவேப்பிலை பொடியுடன் சிறிது சர்க்கரைப் பொடி கலந்து, காலை, மாலை, ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, நீர்க்கோவை, சூதக வாயு தீரும்.
கறிவேப்பிலையின் மகத்துவம் அறிந்து உபயோகிப்போம். உணவே மருந்து.

 --தினமலர்  நாளிதழிலிருந்து.

Sunday, 12 November 2017

வலசை வரும் பறவைகள் - சில தகவல்கள்:


 • பறவைகள் வலசை செல்வது குளிர்காலம் தொடங்கியதும் உலகெங்கும் நடக்கும் முக்கிய நிகழ்வு.
 • வலசை என்றால் இடம் விட்டு இடம் பெயருவது என்று பொருள்.
 • பொதுவாக உலகின் வடபகுதிலிருந்து தென் பகுதிக்கு பறவைகள் வலசை வருகின்றன. குளிர்காலத்தில் வடபகுதியிலுள்ள நீர்நிலைகள் பனியால் உறைந்து விடும். இதனால், அங்கு மீன், பூச்சி, பழங்கள் உள்ளிட்ட உணவுகள் பறவைகளுக்குக் கிடைக்காது. இதனால், காடுகள், சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளை சார்ந்து வாழும் பறவைகள் குளிர் காலத்தில் மிதவெப்பமண்டல நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன.

 • உலகெங்கும் பறவைகளின் வான்வழி வலசைப் பாதைகள் பன்னிரண்டுக்கும் மேல் உள்ளன. இந்தி யாவுக்கு வரும் பறவைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய ரஷ்யா, தென் சீனா, உஸ்பெகிஸ்தான், கசகிஸ்தான், மங்கோலியா வழியான மத்திய ஆசிய வான் வெளி வலசைப் பாதையையே தேர்ந்தெடுக்கின்றன.
 • அக்டோபர் தொடங்கி மார்ச் வரை வெளிநாட்டு பறவைகள் தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிகளில் தங்கி இருக்கும்.

 • வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர்களைக் கடந்து இந்தியாவுக்கு வருகின்றன. அப்படி வரும்போது வழியில் தேவையான உணவு கிடைக்காமல் போகலாம் என்பதால், வலசை கிளம்பும் போதே வழக்கத்தைவிட கூடுதலான உணவை உண்டு உடம்பில் கொழுப்பை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றன.

 • உள்ளான் இன பறவைகள், காட்டு வாத்துகள், சிலவகை குருவி இனங்கள், கொக்கு - நாரை இனங்கள் இவற்றோடு கழுகு இனங்களும் இந்தியாவுக்கு வலசை வருகின்றன.
 • சில பறவைகள் பகலில் இடம்பெயரும்; சில இரவில் பறக்கும். சூரிய வெப்பத்தால் சக்தி இழந்து சோர்ந்து விடாமல் இருக்கவே சில பறவைகள் இரவு நேரப் பயணம் மேற்கொள்கின்றன. இவைகள் இரவில் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து, தாங்கள் செல்ல வேண்டிய திசையை எளிதாக அறிகின்றன.

 • சில பறவைகள், ஒரு நாளைக்கு ஐம்பது கி.மீ தூரம் பறக்கும். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு மீண்டும் அடுத்த இலக்கை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கும். சிலவகை பறவைகள், எத்தனை ஆயிரம் கிலோ மீட்டரையும் தொடர்ச்சியாக பயணித்து இலக்கை அடைந்துவிடும்.

 • கோண மூக்கு உள்ளான் போன்ற பறவைகள் இரண்டு மூன்று நாள்கள்கூட தொடர்ச்சியாக பறக்கும் திறன் கொண்டவை. வாத்து இனங்கள் ஒரு நாளில் 150 கி.மீ பறந்தால் அடுத்த ஒருவாரத்துக்கு எங்காவது ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.
 வடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள் : ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்?  
இன்று வலசை பறவைகள் தினம் 
வலசை பறவைகள்


விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை''

மக்கள் பண பரிவர்த்தனைக்கு திறன் பேசிகளை (Smartphones) அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர், எனவே அடுத்த நான்கு ஆண்டுகளில் Credit card, Debit  card மற்றும் ATMகள் அவசியமில்லாததாகவும்  பயனற்றதாகவும் ஆகிவிடும். வங்கிகளில் விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு முடிவுகட்டப்பட்டு, செல்போன் மூலமே பரிவர்த்தனையை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்து நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் கூறியதாவது :
‛‛ மக்களின் மொபைல் தொலைபேசி மூலமே அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் செய்யப்படும்,  இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாக கற்றுக் கொள்ள முடிகிறது. படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும், வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அனைத்து பரிவர்த்தனைகளும் அதன் மூலமே நடைபெறும்.''
  
--தினமலர் நாளிதழிலிருந்து.


சமீபத்தில்வங்கி பணியில் உள்ள நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது சொன்ன தகவல் இது.

"அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் வந்துகொண்டிருக்கிறது, அதே போல வங்கியிலும் வரப்போகிறது. முதல் படியாக  வாடிக்கையாளரின் சந்தேகங்களை தீர்த்துவைக்கும் விதமாக ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டு City Union Bank ல் சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 125 விதமான செயல்பாடுகளின் கேள்விகளுக்கான பதில்களை அது தரும், இந்த ரோபோ வெற்றிபெற்றால் மேலும் பல பணிகளுக்கு பல ரோபோக்கள் வரும் அப்படி ஒரு சூழ்நிலையில் வங்கிப்பணியாளர்களின் தேவையும் மிகவும் குறைந்துவிடும். இன்னும் ஐந்து வருடங்களில் வங்கிப்பணியாளர்களின் வேலைக்கும் நிரந்தரமின்மையான தன்மை வந்துவிடும்" 

(சிட்டி யூனியன் வங்கியின் எந்திரன் லக்ஷ்மி)

திறன் பேசிகளும் பணபரிவர்தனையும்:

பணபரிவர்தனைக்கு உபயகமாக உள்ள செயலிகள் (Apps) 
 1. BHIM (மத்திய அரசின் UPI App)
 2. Paytm 
 3. PhonePe 
 4. Tez (Google ன் App)
திறன் பேசி பயன்படுத்தும் கடைகளில் பணத்தை செலுத்துவது மிக எளிதாக உள்ளது.  பணம் செலுத்த வேண்டியவருடைய தொலைபேசி எண் (அ) QR Code இருந்தால் போதும் இந்தச் செயலிகளை பயன்படுத்தி 2 நிமிடங்களில் பணம் செலுத்திவிடலாம்.

BHIM UPI (Unified Payments Interface) App:

நமது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் கொண்டுதான் இந்த செயலியை இயக்க முடியும். அந்த தொலைபேசி எண்ணுடன் எத்தனை வங்கிகளில் எத்தனை கணக்கு இருந்தாலும் அத்தனையையும் இந்த செயலியில் இணைத்து கொள்ளலாம். இதில் நமது வங்கி கணக்கில் இருந்து அடுத்தவரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்று விடும்.

இப்போது ஒரு கடைக்கு செல்கிறீர்கள் பொருள் வாங்கிவிட்டு இந்த செயலி மூலம் கடைக்காரரின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தி விடலாம். சேவை கட்டணம் எதுவும் கிடையாது. பணம் கொடுக்கவேண்டியவருடைய QR code வேண்டும் அல்லது அவரது வங்கி கணக்கை நமது செயலியில் சேர்க்க வேண்டும் அவ்வளவே.

PhonePe மற்றும் Tez செயலிகளும் BHIM போலவே செயல்படுபவை.

Paytm App:

இந்த செயலியில் நமது Paytm செயலியின் கணக்கில் பணம் போட்டு வைத்து அடுத்தவருக்கு அனுப்பலாம் அல்லது பணம் செலுத்த நேரிடும் போது இந்த செயலியின் உள் சென்று வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்து அனுப்பலாம்.


இந்த செயலியின் கணக்கில் உள்ள பணத்தை நமது வங்கி கணக்கிற்கும் மாற்றி கொள்ளலாம், இதற்க்கு 3% சேவை கட்டணம் உண்டு. வங்கியில் KYC விளக்கங்கள் கொடுத்து இருந்தால் இந்த சேவை கட்டணம் கிடையாது.

Whats App செயலியும் UPI வசதியை கொண்டுவர உள்ளதாக ஒரு செய்தி.

மேலும் செயலிகளை பயன்படுத்துவது பற்றிய தகவல்கள் மற்றும் Technology பற்றிய தகவல்களுக்கும் குறிப்பாக GOOGLE சேவைகள் பற்றி அறிய Giriblog என்ற இணைய தளத்தை பார்வையிடுங்கள்.

“மின்னணு” பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ
நன்கொடை பெறுபவர் கொடுப்பவர் கவனத்துக்கு!
மின்னணு பரிவர்த்தனையால் சரியும் வங்கிப்பணிகள்!


Wednesday, 8 November 2017

கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள்

கண்ணாடி அணிந்து துன்புறும் மக்களுக்கு எளிய பயிற்சி முறை மற்றும் மருத்துவம்.

கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய...Mudra for eye issues ..Ayya Pasukkanna


குழந்தைகளை ஜெயில் போல் ஸ்கூலில் அடைக்கலாமா?.....

 • துள்ளி விளையாடும் பிஞ்சு குழந்தைகளை ஜெயில் போல் ஸ்கூலில் அடைக்கலாமா?. 
 • நாம் என்னென்ன தவறு செய்கிறோம்? 
 • முதல் ஏழு வருடங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தருவது என்ன என்பதை பொறுத்துதான் அவர்களின் வாழ்க்கை அமையும்.
தெரிந்து கொள்ளுங்கள். -- காயத்ரி இளங்கோ (Child Psychologist) அவர்களின் 11 மற்றும் 13 நிமிட காணொளிகள்.

Gayatri Ilango - Child Psychologist  100% ORGANIC SCHOOL 

தொடர்புடைய பதிவுகள்:
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி  
வாழ்வியல் கலை விளையாட்டு!
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!  
வழிகாட்டினால் போதும்; குழந்தைகள் கற்றுக் கொள்வர்!
பெற்றோர்களுக்காக


Saturday, 28 October 2017

ஒரு லட்சம் வருவாய் ஈட்டித்தரப்போகும்... வேப்பந்தோப்பு!!

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லுாரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர், கருப்பையா: 
புதுக்கோட்டை, வெள்ளனுார் அருகே தக்கிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் நான். 2013, செப்டம்பரில், 2 ஏக்கர் நிலத்தில், வேப்பந்தோப்பு பணியை துவங்கினேன். அரிமளம் கார்டனில் இருந்து, 60 ரூபாய் வீதம், 500 கன்றுகளை, 30 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, தோட்டத்தில் நட்டேன். வேப்பங் கன்று நடுவதற்கு முன், நிலத்தில் சாணக் குப்பை கொட்டி உழுது, மண்ணை வளப்படுத்தினேன். அதன் பின் வேப்பங் கன்று நட்டு தண்ணீர் ஊற்றி வரவும், ஆறு மாதங்களில் மிக அருமையாக வளர ஆரம்பித்து, நான்கு ஆண்டுகளில் வேப்ப மரங்கள் நன்றாக வளர்ந்து விட்டன.

 • சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வேப்ப மரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.  
 • மனிதர்கள் சுவாசிக்கும் சுத்தமான காற்றுக்கு, நுாற் றுக்கு நுாறு மிகவும் உத்தரவாதமாக இருந்து வருவன, வேப்ப மரங்கள் தான். 
 • மேலும், மழைக் காலங்களில் இப்பகுதியில் அதிகமான மழைப் பொழிவையும் பெற்றுத் தருகிறது, இந்த வேப்பந் தோப்பு. வேப்பங் கன்றுகள் நன்றாக வளர்ந்துள்ள இப்பகுதியில், இரண்டு ஆண்டுகளாக இதை அனுபவப்பூர்வமாகவே உணர்ந்து வருகின்றனர், தக்கிரிப்பட்டி கிராம வாசிகள்.
 • இது, மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப எண்ணெயையும், நமக்கு வாரி வழங்குகிறது. 
 • வேப்பம் புண்ணாக்கு, கால்நடைகளுக்குச் சத்து மிக்க தீவனமாகப் பயன்பட்டு வருகிறது. 
 • வயல்களுக்கு மிகச்சிறந்த அடியுரமாக, வேப்பம் புண்ணாக்கு தான் போடுகிறோம். இதை விட நமக்கு வேறு என்ன வேண்டும்?
பொதுவாகவே வேப்ப மரங்கள், தை மாதம் பூ பூக்கும். வேப்பம் பூவை, ரசம் வைத்து அருந்துவது வழக்கம். அது நம் உடல் நலத்துக்கு நல்லது. மாசி மாதம் பிஞ்சு பிடித்து, பங்குனி மாதம் பழுக்கத் துவங்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் அந்த வேப்பம் பழங்கள் மரத்திலிருந்து கொட்டும். அந்த வேப்பங் கொட்டையை, கிராமத்தில் நாங்கள், 'வேப்பமுத்து' என்று தான் கூறுவோம். வேப்பெண்ணெய், வேப்பம் புண்ணாக்கு போன்றவை இதிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு சித்திரை, வைகாசி மாதங்களில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேப்பமுத்துக்களை, இந்த வேப்பந்தோப்பில் இருந்து எடுத்து விற்று, வருவாய் ஈட்டியுள்ளோம். வரும் ஆண்டில், ஒரு லட்ச ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் என்கின்றனர்.

வேப்ப மரங்களுக்கு ஆயுள் மிக அதிகம். அதன் வேப்பமுத்துக்களின் எண்ணிக்கையும், வருவாயும் ஒவ்வொரு ஆண்டிலும் கணிசமாக உயர்ந்து கொண்டே தான் இருக்கும். தினமும், காலையில் வேப்பங் கொழுந்து சாப்பிட்டு வர, வயிற்றுப் பூச்சி வராது; வயிறு தொடர்பான பிரச்னை இருக்காது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களில், சேரனுக்கு பனை மரம், சோழனுக்கு ஆத்தி மரம், பாண்டியனுக்கு வேப்ப மரம் போன்றவைகளே, இயற்கையின் அடையாளங்களாக இருந்து வந்துள்ளன.

இவற்றில் முதலில், வேப்ப மரங்கள் அடர்ந்த வேப்பந் தோப்பு உருவாக்க திட்டமிட்டு, அதில் எனக்கு வெற்றி. அடுத்து ஒரே இடத்தில், 1,000 பனை மரங்களை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அந்த எண்ணம் ஈடேறியதும், ஆத்தி மரங்கள் வளர்க்கும் பணியில் இறங்குவேன்.

--தினமலர் நாளிதழிலிருந்து.
 வேம்பு… தோப்பாக வளர்த்தால், தப்பாத வருமானம்!


கடந்த 30 நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற