Tuesday, 28 November 2017

வாழ்வியல் கலை விளையாட்டு!

காணாமல் போன மரபு விளையாட்டுக்களை கண்டுபிடித்து வரும் இனியன்:

இன்றைய குழந்தைகளை சொக்குப்பொடி போட்டு மயக்கி வைத்துள்ளது, கம்ப்யூட்டர் விளையாட்டு. இதைவிட எளிதாக, ஸ்மார்ட் போனின் பிளே ஸ்டோருக்குள், விளையாட்டு கொட்டிக் கிடக்கிறது.'ஓடி விளையாடு பாப்பா' என்று சொல்ல, எந்த பாரதியும் இன்று இல்லை. அப்படியே சொன்னாலும் அதை கேட்கும் மனநிலையிலும், இந்த தலைமுறை குழந்தைகள் இல்லை. இவர்கள் மாறி போனதற்கு, அன்னிய மோகமும் காரணம்.இதில் என்று மூழ்க ஆரம்பித்தோமோ அன்றே நம் அடையாளம், பாரம்பரியம் என பல விஷயங்களை, மறந்து போனோம் அல்லது மறைக்கப்பட்டன.


இப்படி தொலைக்கப்பட்டவற்றுள் ஒன்று, மரபு விளையாட்டு. இதற்காக, ஏழு கடல், மலை தாண்டிப் போகவில்லை. கிராமங்களில் உள்ள பாட்டிகளை சந்தித்து, தகவல் சேகரித்தேன். தற்போது தமிழகம் முழுவதும் பயணம் செய்து, ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். முதலில் மரபு விளையாட்டுக்களை பற்றி, 'டாக்குமென்டரி' படம் எடுக்க முடிவு செய்து, ஆரம்பித்தேன். பின், பத்தோடு பதினொன்றாக, ஒரு புத்தகம் படித்து மூடி வைப்பது போல் முடிந்துவிடும் என்பதால், அதை நிறுத்தி, பள்ளிக் குழந்தைகளை சந்திக்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள பள்ளிகளுக்கு போய் நேரத்துக்கும், இடத்துக்கும் தகுந்தாற்போல் இரண்டு அல்லது மூன்று விளையாட்டு சொல்லிக் கொடுப்பேன். நான் சந்தித்த வரையில், நம் மரபு விளையாட்டுக்களை ஆர்வத்துடன் குழந்தைகள் விளையாடுகின்றனர். தமிழர்களிடமிருந்து மறைந்துபோன விளையாட்டுக்கள், 180க்கும் மேல் இருக்கும். இதை உள் விளையாட்டு, வெளி விளையாட்டு என பிரித்து, இரண்டாவது வகையை மட்டும், குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறேன். விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு கிடையாது; இது ஒரு வாழ்வியல் கலை. காலப்போக்கில் இதை மாற்றி விட்டோம். எந்த விளையாட்டும் காரணத்தோடு தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான விடை தெரியவில்லை என்றாலும், அதில் இருக்கக் கூடிய உடலியலும், உளவியலும் புரிய ஆரம்பித்தது.

பள்ளியில் மதிய உணவு முடித்ததும், குழந்தைகளை அமர வைத்து, கதை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவேன். பின், விட்ட இடத்தில் இருந்து விளையாட்டை துவங்குவேன். பாயும் புலி, கோலெடுத்தான், ஆடு புலி ஆட்டம், வாள் எடுத்தான், கிளிப்பாரி என, ஏகப்பட்ட விளையாட்டுகளை வைத்து உள்ளேன்.

இவற்றை கற்க விரும்பும் குழந்தைகள், எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.தொடர்புக்கு: 81900 49738.

--தினமலர் நாளிதழிலிருந்து.

தொடர்புடைய பதிவுகள்:
தமிழர் வாழ்க்கை முறையை கற்றுத்தர ஒரு பள்ளி  
கண் குறைபாடு நிவர்த்தி மற்றும் குழந்தைகள் கல்வி, உளவியல் பற்றிய காணொளிகள் 
மரபு விளையாட்டுகளைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்!  
வழிகாட்டினால் போதும்; குழந்தைகள் கற்றுக் கொள்வர்!
பெற்றோர்களுக்காக


No comments:

Post a Comment

கடந்த ஏழு(7) நாட்களில்கவனம் பெற்றவை...

மின்னஞ்சலில் பெற