Sunday 17 December 2017

புத்தகங்கள் ஒரு முன்னுரை - 4

1) Dying to Be Me:
குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் தனது விருப்பு வெறுப்புகளை பொருட்படுத்தாமல் வாழ்ந்து, நடுத்தர வயதில் 4 வருடங்கள் புற்று நோயோடு போராடி மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு மரணானுபவத்தை (Near Death Experience) பெற்று புற்று நோயிலிருந்து மீண்டு வந்து தனது அனுபவங்களை இந்த நூலின் மூலம் பகிர்ந்து கொள்கிறார் ஹாங் காங்கில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த அனிதா மூர்ஜானி. இவரின் நோய், அதற்க்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி இவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் கூறும் விளக்கங்களும் தனி பகுதியாக இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


தனது உடலை விட்டு உயிராக, எங்கும் நிறை பொருளாக இருந்த கணங்களையம், தனது நோய்க்கான காரணம், அது குணமான விதம் மற்றும் வாழ்வின் அர்த்தம் பற்றி தான் உணர்ந்ததையம்  இப்புத்தகத்தில் ஆசிரியர் விவரித்துள்ளார். ஆசிரியர் சொல்லும் பல கருத்துகள் ரமண மகரிஷியின்  உபதேசங்களோடு ஒத்திருப்பதை பார்க்க முடிகிறது.

"மிகப்பெரிய ஒரு இருள் சூழ்ந்த மாளிகையில் சிறு விளக்குடன் நடந்து செல்வதற்கு ஒப்பானது நமது வாழ்க்கை பயணம்" என்கிறார் ஆசிரியர். "அதாவது உண்மையில் அளவுகடந்த, எல்லையற்ற, அன்பின் உருவான மஹாசக்தியின் அங்கமே நாம், ஆனால் இந்த உலகில் அதை மறந்து நமது சிறிய விழிப்புணர்வின் மூலம் முழுமையின் ஒரு மிகச்சிறிய பகுதியைத்தான் நாம் பார்க்கிறோம்" மேலும், முழுதும் வெளிச்சத்தில் நிரம்பியிருக்கும் பெரிய மாளிகை  எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட காட்சிக்கு ஒப்பானது தான் உடலிலிருந்து வெளியிருந்த கணத்தில் உணர்ந்தவை அதாவது முக்காலங்களையும் தாம் உணர்ந்ததாக கூறுகிறார் ஆசிரியர்.

2) தம்மபதம் - பாகம் 1:


அறியாதவன் உன்னை விடச் சிறந்தவனாக இருக்கிறான் அவனிடம் பாசாங்கு இல்லை மற்றவர்களையோ தன்னையோ அவன் ஏமாற்றுவதில்லை, அறியாமையில் ஒரு அழகு இருக்கிறது .என்று கூறும் ஓஷோ அவர்கள் இந்நூல் மூலம் புத்தரின் கருத்துகளை ஒத்த அவரின் அனுபவ கருத்துகளை சொல்லிச் செல்கிறார். போகிற போக்கில் அவர் சொல்லிய கருத்துகளைப் படித்தபின் அதைத் தாண்டி அடுத்த நிலைக்கு செல்லுவது. என்பது சுலபமாக இருக்கிறது .வாழ்கையை வேறு ஒரு கோணத்தில் நின்று அணுகிய அவரின் அனுபவம் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

3) 100 சிறந்த சிறுகதைகள்:


"இவை எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள். இந்த பட்டியலுக்கு வெளியிலும் சிறந்த கதைகள் உண்டு" என்ற விளக்கத்தோடு, ஒரு நூறு சிறுகதைகளை, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். யார் எங்கே பட்டியல் போட்டாலும் இடம்பெறும், புதுமைப்பித்தனின், ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’, மவுனியின் ’அழியாச் சுடர்’ போன்றவற்றோடு, எஸ்.ரா., ஐந்து முக்கிய வரையறைகளை வைத்து தேர்ந்தெடுத்த மற்ற கதைகளும், இடம்பெற்ற நூல் இது. 

4) ஆழ்மனத்தின் அற்புத சக்தி:


இதுவரை வெளிவந்துள்ள சுயமுன்னேற்ற புத்தகங்களிலேயே மிக பிரபலமாகப் பாராட்டப்படுகின்ற ஒரு புத்தகம் இது. உலகெங்குமுள்ள பல லட்சகணக்கான மக்கள் வெறுமனே தங்கள் சிந்தனை முறையை மாற்றிக் கொண்டதன் மூலம் நம்புதற்கரிய இலக்குகள் பலவற்றை அடைய இப்புத்தகம் உதவி உள்ளது. நீகள் எந்த ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி அதன்மீது ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மனத்திரையில் படமாக பதிய வைத்தால், உங்களால் உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதை சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தம்மிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளை உள்ளடக்கியுள்ளது இப்புத்தகம்.

5)  நல்ல தமிழில் எழுதுவோம்:
.பூ + சரம் = ஏன் பூச்சரம்? பொன் + கலசம் = ஏன் பொற்கலசம்?
· சின்ன குதிரை, சின்னக் குதிரை: இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? · ‘செமயா இருக்கு மச்சி’ என்கிறோமே, அதென்ன ‘செம’?
· அதிக சலுகை, அதிகச் சலுகை: எது சரி?
· ‘வேகமாகத் தட்டச்சினேன்’ என்று எழுதலாமா?
· திருவையாறில் தியாகராஜ ஆராதனை. சரி, ஆறிலா? ஆற்றிலா?
· வேட்பாளர் என்ற சொல் எப்படி வந்திருக்கும்?
· ஒருவன் சரி; இருவன் என்று சொல்லலாமா?
· ‘இல்லை’யும் ‘அல்ல’வும் ஒன்றுதானா?


வழக்கமான இலக்கண நூல் அல்ல இது. விதி மேல் விதி சொல்லி இம்சிக்காமல், பல்வேறு சூத்திரங்களைச் சொல்லி குழப்பாமல் மிக இயல்பான முறையில் மிக இனிமையான ஒரு புதிய வடிவில் அடிப்படை இலக்கணத்தைக் கற்றுக்கொடுக்கிறது என். சொக்கனின் இந்தப் புத்தகம்.

உங்களை செய்யுள் எழுத வைப்பதல்ல; ஃபேஸ்புக், ட்விட்டர் தொடங்கி அன்றாட வாழ்வில் இலக்கணச் சுத்தமாக நல்ல தமிழில் எழுத வைப்பதே இதன் நோக்கம். நன்னூல், தொல்காப்பிய சூத்திரங்கள், இலக்கிய உதாரணங்கள் ஆகியவற்றோடு சேர்த்து திரைப் பாடல்கள், டிவி விளம்பரங்கள், பட்டிமன்ற ஜோக்ஸ் ஆகியவற்றையும் சுவாரஸ்யமான உதாரணங்களாகப் பயன்படுத்தியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. இன்றைய தலைமுறைக்குத் தமிழை எளிதாக அறிமுகப்படுத்தும் நூல்.

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...