இருட்டில் ஒரு மொட்டையான அடிமரம் நிற்கிறது. அந்த வழியே வந்த ஒரு திருடன் அதைப் பார்த்துவிட்டு, ஒரு போலீஸ்காரன் நிற்கிறான் என்று நினைத்தான். தனது காதலியையே நினைத்தவண்ணம் இருக்கும் ஒரு இளைஞன் அந்த மரத்தைக் கண்டு தனது காதலி நிற்கிறாள் என நினைக்கிறான். பேய்க் கதைகளைக் கேட்டிருந்த ஒரு குழந்தை, அதே மரத்தைப் பேயாகக் கண்டு பயத்தில் அலறுகிறது.
இருந்தது என்னவோ ஒரே அடிமரம்தான், ஆனால் அவர்கள் தங்கள் தங்கள்
நினைப்பிற்கேற்றபடி அதை வெவ்வேறாகக் கண்டார்கள்.
இதேபோல இன்னொரு உதாரணம். ஓர் அறையில் ஒரு குழந்தையும், பொற்காசுகள் நிறைந்த ஒரு பையும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். திருடன் ஒருவன் அங்கே வந்து பொற்காசுகளைத் திருடிச் செல்கிறான். பொற்காசுகள் திருட்டுப் போனது குழந்தைக்குத் தெரியுமா? குழந்தையின் உள்ளே திருடன் என்ற எண்ணமே கிடையாது. ஆகவே அது வெளியிலும் திருடனைக் காணவில்லை.
இந்த இரு உதாரணங்களையும் கூறி சுவாமி விவேகானந்தர் ஒரு மகத்தான உண்மையை நம்முன் வைக்கிறார். அதாவது நமது மனநிலைக்கு ஏற்றபடிதான் நாம் வெளியுலகைக் காண்கிறோம். அவர் கூறுகிறார்: பாவம், துன்பம் என்று நீங்கள் இங்கே காணும் எல்லாமே உங்கள் பலவீன மனத்தின் விளைவுகளே அல்லாமல் வேறு என்ன?..குழந்தைப் பருவத்திலிருந்தே மனிதர்களின் மனத்தில் நல்ல் ஆக்கப்பூர்வமான, உறுதியான, உதவுகின்ற எண்ணங்களே தோன்றட்டும். இப்படிப்பட்ட உறுதியான எண்ணங்களுக்கே உங்கள் மனத்தில் இடம் கொடுங்கள். உங்கள் சக்தியைப் பறித்து உங்களைப் பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு இடமே கொடாதீர்கள். உங்கள் மனத்தை மூடியிருக்கும் மூடநம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். உண்மையை அறியுங்கள், உண்மையையே கடைப்பிடியுங்கள். குறிக்கோள் தூரத்தில் இருக்கலாம். ஆனால் விழித்திருங்கள், எழுந்திருங்கள், லட்சியத்தை அடையும்வரை நிற்காதீர்கள். ‘நானே பரம்பொருள், நானே பரம்பொருள்’ என்று உங்கள் மனத்திற்கு எப்போதுக் சொல்லுங்கள். இரவு பகலாக உங்கள் மனத்தில் அந்த எண்னம் ஒரு பாடலாக ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். மரணத்தின் தருவாயில்கூட நானே பரம்பொருள் என்று முழங்குங்கள். அதுதான் உண்மை.