Friday, 1 July 2016

1360 ஏக்கர் மொலாய் காடுகள் (Molai Forest):


பத்ம ஸ்ரீ ஜாதவ்  மொலாய் பாயேங்: இவர் அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் (Jorhat) மாவட்டத்தை சேர்ந்தவர். தனி ஒரு மனிதனாக முழு ஈடுபாட்டுடன் 30 வருடங்கள் பல வகையிலும் போராடி பிரம்மபுத்ரா ஆற்றின் ஒரு தீவில் 1360 ஏக்கர் நிலப்பரப்புள்ள காட்டை  உருவாக்கியிருக்கிறார். அவரின் பணியை கவுரவப்படுத்தும் விதமாக, அந்த காட்டிற்கு அவரது பேரையே வைத்திருக்கிறார்கள் "மொலாய் காடுகள் (Molai Forest)".

விதை: பிரம்மபுத்ரா ஆற்றின் நடுவே ஒரு தீவு இருக்கிறது, நமது ஸ்ரீ ரங்கம் போல, அதன் பெயர் மஜவ்லி(Majuli). உலகில் உள்ள மிகப்பெரிய நன்னீர் தீவுகளில் (River Island) இதுவும் ஒன்று. 30 வருடங்களுக்கு முன்பு ஒரு மழைக்காலத்தின் போது வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகள் அந்த தீவின் ஒரு பகுதியில் ஒதுங்கியிருந்திருக்கின்றன, வெள்ளம் வடிந்த பிறகு அனைத்து பாம்புகளும் வெயில் தாங்க முடியாமல் இறந்துவிட்டன.

இதனால் மிகுந்த வருத்தப்பட்ட பாயேங் அவர்கள், ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து செயல்பட தொடங்கியதன் விளைவே இந்த 1360 ஏக்கர் காடு. இன்று அந்த காட்டில் யானை, புலி, மான், முயல், காண்டாமிருகம், குரங்கு மற்றும் ஏராளமான பறவை இனங்கள் குறிப்பாக அழியும் நிலையில் இருந்த பெருங்கழுகு (Vulture) என்று  ஏராளமான உயிரினங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மரங்களும் உள்ளன.

 
விதை வளர்ந்த விதம்: மரங்கள் வளர்த்தால் இந்த உயிரினங்களை காப்பாற்றலாம் என்று வனத்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார், ஆற்று மண்ணில் மரங்களை வளர்க்க முடியாது இருந்தாலும் முயற்சி செய் என்று சொல்லி 20 மூங்கில் கன்றுகளை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள், விடா முயற்சியுடன் மரம் நடுவதில் இறங்கியிருக்கிறார், ஆரம்பத்தில் கன்றுகள் வளர்ப்பதில் சிரமப்பட்டிருக்கிறார்.

பின் செவ்வெறும்புகள் மண்ணின் தன்மையை மாற்றுகின்றன என்பதை அறிந்து ஆற்று மண்ணில் நிறைய எறும்புகளை விட்டிருக்கிறார், மண்ணின் தன்மை சிறிது சிறிதாக மாற ஆரம்பித்திருக்கிறது அப்படியே படிப்படியாக கன்றுகளின் எண்ணிக்கையை அதிகரித்து இன்று ஒரு காட்டையே உருவாக்கிவிட்டார்.

வேலி:  படிப்படியாக மரங்கள் வளர்ந்து காடு உருவாக ஆரம்பித்திருந்த சமயம் ஆபத்து மனித ரூபத்திலேயே வந்தது. யானைகள் இடம் பெயர்ந்து செல்லும் போது இவரது காட்டிற்கு வந்து,  காட்டை சுற்றி இருந்த வயல்களை நாசம் செய்திருக்கிறது, அதனால் கோபமடைந்த மக்கள் மரங்களை வெட்டும்படி சண்டையிட்டு இவரை அடித்தும் இருக்கிறார்களாம். ஒரு முறை அப்படி நடக்கும் போது "என்னை வெட்டி விட்டு மரத்தை வெட்டுங்கள்" என்று மரம் வெட்டுபவர்கள் முன்பு நின்றுவிட்டார், அவர்கள் இவரது தைரியத்தையும், நல்லெண்ணத்தையும் பார்த்து இவரையும், காட்டையும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அடுத்து வேட்டையாடுபவர்களிடமிருந்து, வனப்பாதுகாப்பு அதிகாரிகளுடன் சேர்ந்து உயிரினங்களையும் பாதுகாத்து வருகிறார்.

விருட்சம்: 20 வருடங்கள் யாருக்குமே, அந்த தீவு ஆட்களை தவிர, அந்த காட்டை பற்றி தெரியாமல் இருந்திருக்கிறது. ஒரு முறை ஊருக்குள் புகுந்த யானைகளை விரட்டி சென்ற வன அதிகாரிகள், யானைகள் காட்டிற்குள் செல்வதை பார்த்து, "இவ்வளவு பெரிய காடு இங்கெப்படி?" என்று தேடி போன பின் தான் காட்டின் கதை வெளியே தெரிய வந்திருக்கிறது. அதன் பிறகு படிப்படியாக கௌரவிப்புகள், பேட்டிகள், விருதுகள் என்று இன்று அனைவராலும் அறியப்பட்டிருக்கிறார். மத்திய அரசும் இவருக்கு பத்ம ஸ்ரீ வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...