ஜெயதேவி: பீஹாரின் நக்ஸல்கள் அதிகமுள்ள முங்கேர் (Munger)
மாவட்டத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர், தனது போராட்ட மற்றும்
உதவும் குணத்தால் இன்று இந்தியாவே அறியும் அளவுக்கு வளர்த்திருக்கிறார்.
5ஆம் வகுப்பு வரை படித்த இவருக்கு, 12 வயதில் திருமணமாகிஇருக்கிறது 16
வயதில் குழந்தை பெற்றிருக்கிறார், அதன் பின்னரே அவரின் சமுதாயப்பணி
தொடங்கியிருக்கிறது.
சவால்களும் சாதனைகளும்: தனது வகுப்பை சேர்ந்த பெண்களும், பழங்குடி இன பெண்களும் கந்து வட்டிகாரர்களிடமும், மேற் வகுப்பினரிடமும் படும் கஷ்டங்களை பார்த்த பிறகே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. இந்த கஷ்டங்களை பகிர்ந்து கொண்ட போது, "தனி ஆளாக ஒன்றும் செய்ய முடியாது, குழுவாகத்தான் எதையும் சாதிக்க முடியும் அதனால் ஒரு குழு ஆரம்பித்து செயல்படுங்கள்" என்று சொல்லியிருக்கிறார் மருத்துவமனை பணிப்பெண் ஒருவர்.
அதன் பின் சுய உதவி குழு ஒன்றை தொடங்கி பல பெண்களை அதில் சேர்த்து, சிறிது சிறிதாக தனது கிராம மக்களை பண முதலைகளிடமிருந்து காத்திருக்கிறார். நிலையான அல்லது உருப்படியான வருமானம் இல்லாததுதான் கிராம மக்கள் துன்பத்திற்கு காரணம் என்றறிந்து அதை தீர்க்க வழிதேடியிருக்கிறார். அனைத்திற்கும் மூல காரணம் தண்ணீர் தட்டுப்பாடு என்று அறிந்து அதை தீர்க்க வழி தேடும் போது, டெல்லியை சேர்ந்த கிஷோர் ஜெய்ஸ்வால் என்ற சமூக, சுற்று சூழல் ஆர்வலரை 2003 ஆம் ஆண்டு சந்தித்ததுதான் இவரது வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை.
அவரின் வழிகாட்டுதலின் படி மழை நீர் சேகரிப்பு முறைகளை அறிந்து அதனை செயல்படுத்த முடிவெடுத்திருக்கிறார். மக்களை ஒன்று திரட்டி, "ஓவ்வொரு குடும்பமும் இலவச சேவை தர வேண்டும், அதன் மூலம் நாம் நமக்காக ஒரு தடுப்பணை கட்டிக்கொள்ளலாம்" என்று கூறி 6 மாதத்தில் ஒரு தடுப்பணையை கட்டியிருக்கிறார், மக்களின் உதவியுடன். அடுத்த மழை காலத்தில் நீர் தேங்கி அதில் விவசாயம் செய்து லாபம் பெற்ற விவசாயிகள் மேலும் உற்சாகமுடன் அடுத்த தடுப்பணை கட்ட தாராளமாக உதவ முன்வந்திருக்கின்றனர். NABARD வங்கியை அணுக அவர்களும் உதவிசெய்ய இன்று 6 தடுப்பணைகள் கட்டப்பட்டு அனைத்திலும் மழை நீர் சேகரிக்கப்பட்டு 5000 ஏக்கர் தரிசு நிலங்கள் இன்று விலை நிலங்களாக மாறியிருக்கின்றன, மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இதோடு நில்லாமல் காடுகள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு, மரம் நடுதல், அனைவருக்குமான கல்வி, குழந்தை திருமணம் ஒழிப்பு என்று அனைத்து சமூக முன்னேற்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். நக்ஸல்கள், கந்துவட்டிகாரர்கள் இவர்களிடமிருந்து ஏதாவது தொந்திரவு இருந்ததா? என்று கேட்டால், "மக்களுக்காக உண்மையாக உழைக்கும் போது நான் ஏன் பயப்படவேண்டும்" என்று கேட்டு தைரியத்தின் அடையாளமாய் விளங்குகிறார். இவரின் செயல் பல பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றி இருக்கிறது, வாழ்க்கையின் பக்கங்களை திரும்பிப்பார்க்க இதைவிட இனிமையான நிகழ்வு வேறென்ன வேண்டும்?
விருது: 2008-2009 ஆம் ஆண்டிற்கான "தேசிய இளைஞர் விருது (National Youth Award)" சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பில் சிறந்த பணியாற்றியதற்காக இவருக்கு தந்து மத்திய அரசு இவரை கெளரவித்திருக்கிறது. 1985 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வரும் இந்த விருது இளைஞர் முன்னேற்றத்திலும், சமுதாய முன்னேற்றத்திலும் செயற்கரிய செயல் புரிந்த தனி நபர் அல்லது தொண்டு நிறுவனதுக்கு வழங்கப்படுகிறது. ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் தனி நபர் எனில் 40,000 ரூபாய் அல்லது தொண்டு நிறுவனம் எனில் 2,00,000 ரூபாய் உள்ளடக்கியது இந்த பரிசு. சமீபத்தில் மழை நீர் சேகரிப்பு மற்றும் பயன்பாடு பற்றிய கருத்தரங்கிற்கு இந்தியா சார்பாக தென் கொரியா சென்று வந்துள்ளார்.
சில இணைப்புகள்:
No comments:
Post a Comment