Wednesday 13 July 2016

தண்ணீர் 5: ஒரு ரூபாய் மனிதர்


Dr.அணில் ஜோஷி: மத்திய பிரதேசம் மாநிலம் மண்ட்சரை (Mandsaur) சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தண்ணீர்: 3 பதிவில் பார்த்த ராஜேந்திர சிங் அவர்களை போலவே விவசாயிகளின் வறுமையை பார்த்து அவர்களுக்கு உதவ எண்ணி ஒரு தடுப்பணையை சொந்த செலவில் கட்டி தனது சேவையை துவக்கியவர் இன்று 10 தடுப்பணைகளை ஆற்றிலும், கால்வாய்களிலும் கிராம மக்களின் உதவியுடன் கட்டி முடித்திருக்கிறார். 

பெரிய அணைகளை கட்டுவதை விட சிறு சிறு தடுப்பணைகளை கட்டுவதில் நிறைய நன்மைகள் உள்ளது அதாவது பொருட்செலவு குறைவு, இடம் கையகப்படுத்துதல் இல்லை, பராமரிப்பு எளிது, உள்ளூர் மக்களின் பங்களிப்பு கிடைக்கும் இப்படி நிறைய, என்ன ஒன்று நீரின் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியாது அது ஒன்றுதான் குறை.

சாதனை: 1994 ஆம் வருடம் முதல் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பதேகர் (Fatehgarh)  எனும் கிராமத்தில் தனது ஆயுர்வேத மருத்துவமனையை நடத்தி வரும் இவர் கிராம மக்களிடம் நன்கு பரிச்சயமானவர். 1999 ஆம் ஆண்டிலிருந்து மழை அளவு குறைய துவங்கிய பிறகு அந்த கிராமத்தில் மெல்ல மெல்ல வறட்சி அதிகமாகியிருக்கிறது 100, 200 குவிண்டால் சாகுபடி செய்தவர்கள் கூட இப்போது வெளியில் சென்று தானியங்களை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். மருத்துவ செலவிற்கு பணம் தர முடியாத அளவிற்கு விவசாயிகள் சென்றதை கண்ட ஜோஷி இவர்களுக்கு உதவ எண்ணி களத்தில் இறங்கியுள்ளார்.

2008 ஆம் வருடம் கடும் வறட்சி குடிநீருக்கே தட்டுப்பாடு, இந்த சமயத்தில் "அருகில்  ஓடும் சோமலி (Somli) ஆற்றின் நடுவே தடுப்பணை கட்ட்டினால் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கலாம்" என்று யோசனை கூறியிருக்கிறார் ஆனால் கிராம மக்கள் யாரும் அதை ஏற்க வில்லை. இருந்தும் தளராமல் நண்பர்களின் உதவியுடன் 1000 சிமெண்ட் மூட்டை சாக்குகளை வாங்கி அதில் மண்ணை நிரப்பி ஆற்றின் குறுக்கே போட்டு ஒரு சிறு தடுப்பை உருவாக்கியிருக்கிறார், 20 நாள் கழித்து பெய்த மழை சிறு தடுப்பணையை நிரப்பியிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது, சில வருடங்களாக தண்ணீர் வராமல் இருந்த அடி பம்பில் தண்ணீர் வர ஊர்மக்களுக்கு சந்தோசம், அந்த வருடம் ஒரு போக சாகுபடி எடுத்திருக்கிறார்கள். இவர் மீதிருந்த மரியாதை கூடிவிட்டது.


1 ரூபாய்:  முதல் தடுப்பணையை எப்படியோ கட்டி முடித்து அதன் பலனை பார்த்தவருக்கு அடுத்து ஒரு தடுப்பணை கட்டும் யோசனை, அதனால் மனைவியின் நகைகளை அடகு வைத்து அடுத்த அனையையும் கட்டியிருக்கிறார். 2010 ஆண்டு இவருக்கு ஒரு யோசனை வந்திருக்கிறது, அது தான் 1 இலட்சம் பேரிடம் 1 ரூபாய் வசூலித்து, அதாவது ஒவ்வொரு விவசாய குடும்பத்திலிருந்தும் 1 ரூபாய் வசூலித்து அதன் மூலம் அணை கட்டுவது. இவரது செயல்களைப் பற்றி செய்திதாள்களில் வர, மக்களும் உதவ முன்வந்தனர். நண்பர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் 3 மாதத்தில் 1,00,000 ரூபாய் வசூலித்து 92,000 ரூபாய் செலவில் மூன்றாவது அணையை கட்டியிருக்கிறார். அதில் ஒன்றுதான் மேலே படத்தில் இருப்பது.

விருது: இந்த முறையில் பணம் வசூலித்து மேலும் 8 அணைகளை கட்டி முடித்திருக்கிறார். இதோடு நில்லாமல் மேலும் 100 தடுப்பணைகளை கட்டும் திட்டத்துடன் பணியாற்றி வருகிறார், மருத்துவர் என்ற அடையாளம் போய் அணை கட்டுபவர் என்றே அனைவராலும் அறியப்படும் இவர் "என் சமுதாயப் பணியில் மனைவியின் பங்கு இன்றியமையாதது" என்கிறார், இவரது மகள்களும் தந்தையின் சேவையை எண்ணி பெருமைபடுகின்றனர். சென்னையை சேர்ந்த, இது போன்ற சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்  செய்திகளை வெளியிடுகின்ற, The Weekend Leader (www.theweekendleader.com) செய்தி  நிறுவனம் "சிறந்த மனிதர்-2012" (Person of The Year-2012) விருது வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது.

சில இணைப்புகள்:
1) http://www.theweekendleader.com/Heroism/919/dam-man.html
2)http://www.indiaunboundmag.com/anil-joshi-an-ayurveda-doctor-and-our-person-of-the-year/
3) http://www.newindianexpress.com/cities/chennai/article1428523.ece?


"Great minds have purposes, others have wishes"

                                                                                                  -WASHINGTON IRVING


No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...