Monday 4 July 2016

தண்ணீர் 3: ராஜஸ்தானின் தண்ணீர் மனிதன்

Dr. ராஜேந்திர சிங்: 1959ல் ராஜஸ்தானில் பிறந்து ஆயுர்வேத மருத்துவம் படித்து அரசு வேளையில் சேர்ந்த இவர் சில காரணங்களுக்காக அரசு வேலையை உதறிவிட்டு கிராம மக்களின் முன்னேற்றதிக்காக முதலில் சேவையாற்ற சென்ற இடம் ராஜஸ்தானில் அல்வார் மாவட்டத்தில் உள்ள கிஷோரி கிராமம். கல்வி, மருத்துவம் இவற்றின் அவசியத்தை வலியுறுத்தி மக்களிடம் பிரச்சாரங்கள் மேற்கொண்டிருந்த இவரிடம் கிராமத்து மக்கள் "எங்களுக்கான முதல் தேவை உணவு மற்றும் நீர் அதற்கு பிறகே அனைத்தும்" என்று கூறி இருக்கின்றனர்.




இவரோ மருத்துவம் படித்தவர் விவசாயம் பற்றி அறியாதவர் இருந்தும் மக்களின் அத்தியாவசிய தேவையை உணர்ந்து அவர்களுக்கு உதவ முன்வந்தார். வறண்டு பாலைவனமாய் காட்சியளித்த அந்த கிராமம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களால் நிறைந்திருந்தது, ஆண்கள் வேலைதேடி பக்கத்து நகரங்களுக்கு சென்று விட்டிருந்தனர். 

களப்பணி: சென்ற தண்ணீர் பதிவில் பார்த்த வரதராஜன் ஐயா போல இவரும் கையிலெடுத்த தீர்வு மழை நீர் சேகரிப்புதான். ஆனால் இருவரது அடிப்படை நோக்கமும் வேறுவேறு. கிராம மக்களை ஒன்று திரட்டி பிரச்சனை என்ன, அதற்கு தீர்வு என்ன, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் விவாதித்து, ஒரு சமூகமாக செயல்பட்டு நமக்கு நாமே உதவிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன்படி மொத்த நிலப்பரப்பு விபரம், மழை அளவு இவற்றை தெரிந்து கொண்டு தனது பணியை நண்பர்களுடன் துவங்கி மலை சரிவுகள், மேட்டு தரிசு நிலங்கள் இங்கெல்லாம் ஜொஹாட்ஸ (Johads) என்ற சிறு மணற் குன்றுகளை நீரின் ஓட்டத்தை தடுக்க அமைத்திருக்கிறார்.

இது மழை காலத்தில் நீரின் ஓட்டத்தை தடுத்து மண்ணிற்குள் இறக்க பயன்படுவதோடு, வெயில் காலங்களில் நிலத்தடி நீராதாரமாகவும் பயன்படுகிறது. "இந்த அமைப்பு இந்தியாவில் ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்ததுதான், ஆனால் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இவைகள் முற்றிலும் பராமரிக்கப்படாமல் அழிந்து போயின" என்கிறார். 

(The design of water johads. Source: Anupma Sharma, National Institute of Hydrology)

2015 STOCKHOLM WATER PRIZE : 1985ல் ஆரம்பித்த இவரது முயற்சியால் இன்றுவரை 2500 க்கும் மேற்பட்ட Johad கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன , இதனால் ஏரிகளில் நீர் பெருகியதுடன், முற்றிலுமாக வறண்டு போன 7 ஆறுகள் பல வருடங்கள் கழித்து -உயிரோட்டம் கண்டிருக்கின்றன. மக்களின் பங்களிப்புடன் அதிக செலவில்லாத, பெரிய தொழில்நுட்ப வசதிகள் எதுவும் தேவைப்படாத எளிய முறையை வடிவமைத்து கொடுத்திருக்கிறார். வறண்ட நிலம் இன்று பசுமையாய் காட்சியளிக்கிறது. இன்று பல குடும்பங்கள் விவசாயத்திற்கு திரும்பிஇருக்கின்றன, அதன் பலன், இவர் எதற்க்காக அங்கு சென்றாரோ அந்த கல்வி, மருத்துவ வசதிகளும் அவர்களுக்கு  செய்து கொடுத்துள்ளார். 

சர்வதேச அளவில் நீர் துறையில் செயற்கரிய சாதனைகள் புரிவோற்கு 1991 வருடத்திலிருந்து "STOCKHOLM WATER PRIZE" என்ற விருது வழங்கப்படுகிறது, இது நீர் துறையில் வழங்கப்படும் நோபெல் பரிசாக கருதப்படுகிறது. இந்த பரிசு ஒரு அழகிய சிலை மற்றும் $ 1,50,000 பணமும் உள்ளடக்கியது. 2015 ஆம் ஆண்டிற்க்கான STOCKHOLM WATER PRIZE இவருக்கு கிடைத்திருக்கிறது. தருண் பாரத் சங் (Tarun Bharat Sangh ) என்ற அரசு சாரா நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் ஆறுகளை மீட்டெடுக்கும் பணியையும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையும் செய்து வருகிறார்.  


ஆக மொத்தம் அரசாங்கம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை நம்மைப்போன்ற அடிப்படை மக்களின் தேவைக்கு உபயோகப்படுவதில்லை. நாம்தான் விழித்தெழுந்து நமக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். தனி மனித சக்தி அளவிடமுடியாதது!!!!!!!!!!

No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...